ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Sunday 9 November 2008

இனிய சொற்பொழிவு

அன்பின் நண்பர்களே !

இன்றைய தினம் நண்பர் தருமியின் தயவில், மதுரை ரீடர்ஸ் கிளப் என்ற ஒரு அமைப்பின் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு திரு மணி வண்ணன் என்ற வழக்கறிஞர் "The art of Reaching People" என்ற தலைப்பினில் ஏறத்தாழ 75 மணித்துளிகள் - மிகுந்த நகைச்சுவையுடன் பேசினார். அப்பேச்சின் சாராம்சம் எவ்வாறு சக மனிதர்களை அடைவது ? என்பதே !

பொதுவாக நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தீவாக வாழ்கிறோம். அடுத்தவருடன் பேசுவதே இல்லை. அறிமுகப்படுத்திக் கொள்வதே இல்லை. ஏன் வீட்டில் கூட, நாம் இப்படித்தான் இருக்கிறோம். இதிலிருந்து மாறி, நாம் எல்லோருடனும் நன்கு பழக வேண்டும் என்பதே அவரது பேச்சின் உட்கருத்து. அவரது பேச்சிலிருந்து சில பகுதிகள் - இங்கு பகுதிகளாகப் பதியப்படும்.

ஒரு சிறு கதை சொன்னார்.

ஒரு மனிதன் 30 ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டான். என்ன செய்வது. எப்படிப் பொழுதைப் போக்குவது என ஆராய்ந்தான். நான்கு சுவர்களுக்குள் ஒன்றுமே இல்லை. வெளி உலகம் காண முடியாது. ஊடகங்கள் இல்லை. ஒன்றுமே புரியவில்லை.

நள்ளிரவில் நறுக்கென்று ஒரு கடி. பார்த்தால் ஒரு எறும்பு. துள்ளிக் குதித்தான். ஆகா ஒரு நண்பன் கிடைத்துவிட்டானே என்று. எறும்பிற்கு ஜானி என்று பெயர் வைத்தான். அந்த நிமிடம் முதல் ஜானியுடன் பேச ஆரம்பித்தான். ஜானியும் என்ன வென்று புரியாமலேயே அவனிடமே இருந்தது. பேசிப்பேசி, பொழுதினைக் கழித்தான். ஜானிக்கு சிலவற்றைக் கற்றுக் கொடுத்தான்.

ஜானி இரண்டு கால்களில் நின்று இரண்டு கைகளால் வணக்கம் சொல்லும் அளவுக்குக் கற்றுக் கொடுத்து விட்டான். முப்பதாண்டுகள் கழிந்தன. விடுதலை ஆனான். ஜானியும் அவனும் வெளி உலகினிற்கு வந்தனர்.

ஒரு உணவு விடுதிக்குச் சென்று உணவு கொண்டு வரச் சொல்லி விட்டு, அங்கிருந்த ஊழியர் ஒருவரை அழைத்து ஜானியின் திறமையைக் காட்ட நினைத்தான். ஜானியை மேசையில் விட்டுவிட்டு, ஊழியரை அழைத்துக் காண்பித்தான்.

ஊழியரோ ஜானியை நசுக்கிக் கொன்று விட்டு மன்னிப்புக் கேட்டார். வருந்துகிறோம். இனிமேல் எங்கள் உணவகத்தின் மேசைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்கிறோம் என்றார்.

என்ன செய்வது ? முப்பதாண்டு உழைப்பு வீணாய்ப் போனது.

நீதி : ஒவ்வொரு மனிதனின் பார்வையும் ஒவ்வொரு விதம். எதிரில் இருப்பவனின் எண்ணமும் பார்வையும் எதிர்பாராததாக, வேறு கோணத்தில் இருக்கும். அவனிடம் பேசி அவனது எண்ணங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். பிறகே மனம் விட்டுப் பேச, இயல்பாகப் பேச ஏதுவாக இருக்கும். எதிரில் இருக்கும் பார்வையாளனைத் தயார் செய்ய வேண்டும். நமது மன நிலைக்குக் கொண்டு வர வேண்டும். முதன் முதலாகப் பார்ப்ப வனிடம், முகம் தெரி யாதவனிடம், பேசும் போது கொஞ்சம் சாக்கிரதையாக இருக்க வேண்டும்.

சரியா - ...............

Sunday 26 October 2008

மலரும் தீபத் திருநாள் நினைவுகள்

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

என்னுடைய சிறு வயது ( 1963-66 - வயது : 13-16) தீபாவளியை, தமிழ்ச்சங்கம் வளர்ந்த தன்னிகரில்லா மதுரையில், கொண்டாடிய மலரும் நினைவுகளை வலை உலக அன்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

தீபாவளி என்பது சிறுவர்களுக்கு மகிழ்வைத் தரும் ஒரு விழா. அன்றைய தினம் அதிகாலை எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை உடுத்தி, சர வெடிகள் வெடித்து, பலகாரங்கள் உண்டு, கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுது, இன்பமாக இருக்க ஒரு வாய்ப்புக் கிடைக்கும்.

எங்கள் வீடு ஒரு கூட்டுக் குடும்பம். தாத்தா, பாட்டி, தாய், தந்தை, தமயன், தம்பியர், தங்கையர் எனப் பலரும் கூடி வாழ்ந்த ஒரு பெரிய குடும்பம். தீபாவளி அன்று, தாயும் பாட்டியும் அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் எழுந்து பலகாரம் செய்ய ஆரம்பிப்பார்கள். முடிப்பதற்கு மதியம் ஒரு மணி ஆகி விடும். நாங்கள் சிறுவர்கள் மெதுவாக ஒருவர் பின் ஒருவராக, காலை நான்கு மணியிலிருந்து, எழுந்து எண்ணெய் தேய்த்து, தூக்கக் கலக்கத்துடன் சுடு தண்ணீரில் குளித்து விட்டு துண்டைக் கட்டிக்கொண்டு காத்திருப்போம்.

எங்கள் அப்பா எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, மலை போல் குவிந்திருக்கும் புத்தாடைகளுக்கு, மஞ்சள் வைத்து, பூசை செய்து, பலகாரங்கள் படைத்து, இறை வணக்கம் செய்துவிட்டு ஒவ்வொருவராக கூப்பிட்டு புத்தாடைகள் கொடுப்பார்கள். காலில் விழுந்து வணங்கி பெருமையுடன், பொறுமையாக பெற்றுக் கொள்வோம். அவைகளை அணிந்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயார் ஆவோம்.

அப்பாவும் புத்தாடை அணிந்து, ஒரு பெரிய சரவெடியினைக் கொளுத்தி, வெடித்து கொண்டாட்டங்களை அடையாள பூர்வமாக ஆரம்பித்து வைப்பார்கள். பின் நாங்கள் அனைவரும் வெடிகளை வெடிப்போம். காலை ஆறு மணி வரை, முடிந்த வரை வெடிப்போம். பின் அனைவரும் அமர்ந்து பலகாரங்கள் சாப்பிட்டுவிட்டு, கோவிலுக்குச் செல்ல தயாராவோம். அப்பா அனைவரையும் அழைத்துக் கொண்டு ( தாயார், தாத்தா, பாட்டி நீங்கலாக) புதூரிலிருந்து சிம்மக்கல் வரை பேருந்தில் அழைத்துச் செல்வார்கள்.

பழைய சொக்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பிறகு மீனாட்சி அம்மன் கோவில் செல்வோம். அங்கு, விபூதிப் பிள்ளையாரை வழிபட்டுவிட்டு, முக்குறுணிப் பிள்ளளயாருக்கு துண்டு சார்த்தி, வழி பட்டு, அம்மன் சன்னதி சென்று அர்ச்சனை செய்வோம். இப்போதிருக்கும் கூட்டமெல்லாம் அப்போது இல்லை. அனவரின் சார்பிலும், அப்பா கம்பீரமாக, அர்ச்சனை சுவாமி பெயருக்கே செய்யச் சொல்வார்கள். பிற்காலத்தில் தான் தெரிந்தது அத்தனை பேரின் பெயர்களும் நட்சத்திரங்களும் நினைவில் வைத்துக் கொள்வதின் சிரமம் கருதித்தான் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்தோம் என்பது. ஆனால் அந்தப் பழக்கம், என் குடும்பம் அளவான குடும்பமாக இருப்பினும், இன்னும் தொடர்கிறது.

அடுத்து சுவாமி சன்னதி. வெளியில் வந்து சனீஸ்வரர், அனுமார், காலைத் தூக்கி ஆனந்த நடனம் புரியும் சிவ பெருமான், அன்னை உமையவள் அனைவரையும் வழி பட்டு திரும்புவோம். நடனம் புரியும் இறைத் தம்பதிகளின் மேல் வெண்ணை சாத்துவது என்பது எல்லோருக்கும் பிடித்த ஒன்று. சிலைகளின் உயரத்திற்கும் எங்கள் உயரத்திற்கும் சம்பந்தமே இருக்காது. வெண்ணையைத் தூக்கி சிலைகளின் மீது எறிவோம். அது எங்கு வேண்டுமானாலும் இலக்கின்றி பறந்து சென்று அமர்ந்து கொள்ளும். இன்று வரை சரியாக சிலைகளின் மீது எறிந்ததாக சரித்திரம் இல்லை. தற்போது வெண்ணை சாத்தும் பழக்கம் நிறுத்தப் பட்டு, நெய் விளக்கு ஏற்றும் பழக்கம் கடைப் பிடிக்கப் படுகிறது.

மீனாட்சி அம்மன் கோவில் பிரசாதம் வாங்கி அனைவரும் தலைக்கு கொஞ்சமாக உண்டு மகிழ்வோம். பின் அங்கிருந்து கிளம்பி நகரத் திரை அரங்கு ஒன்றில் காலைக் காட்சி (10 மணிக் காட்சி) அனைவரும் பார்த்துவிட்டு மதியம் சாப்பாட்டிற்கு வீடு திரும்புவோம். முன்பதிவு என்பதெல்லாம் இல்லாத காலமது. நினைவில் நிற்கும் திரை அரங்குகள் தங்கம் (மிகப் பெரிய அரங்கு), ரீகல் ( பகலினில் நூலகம் - இரவினில் திரை அரங்கம்), இம்பீரியல், கல்பனா, சிந்தாமணி, செண்ட்ரல், நியூ சினிமா, பரமேஸ்வரி முதலானவை.

இதில் பரமேஸ்வரியில் ஆங்கிலப் படங்கள் மட்டுமே திரை இடப்படும். தீபாவளி அன்று திரைப் படம் பார்க்கும் பழக்கம் பல ஆண்டுகளுக்கு நீடித்தது. எங்கள் அனைவருக்கும் புத்தாடை எடுப்பது என்பது ஒரு பெரிய நிகழ்வு. அப்பா, அம்மா, தமயன், நான், நால்வர் தான் செல்வோம். அக்கால ஜவுளிக் கடை - அல்ல - கடலில் ( ஹாஜிமூசா) தான் பெரும்பாலும் துணி எடுப்போம். ஆண்கள் அனைவருக்கும் ஒரே மாதிரி, சட்டைக்கும், அரை ட்ராயருக்கும் துணி எடுப்போம். பனியன் மற்றும் உள்ளாடைகள், பெண்களுக்கு சேலை, பாவாடை, தாவணி, மற்றும் உள்ளாடைகள் ஆகியவை வாங்குவோம்.

ஒரு மாத காலம் முன்பாகவே துணி வாங்கும் படலம் தொடங்கும். கடையில் இருந்து வீட்டிற்கு வருவதற்கு முன்னாலேயே, கோரிப்பாளையத்தில் கோல்டன் தையலகத்தில் தைக்கக் கொடுத்து விடுவோம். தைத்து வந்த பிறகு தான் மற்றவர்கள் பார்க்க முடியும். தீபாவளி அன்று மட்டும் தான் அத்துணிகள் அவரவர்க்குச் சொந்தம். பிறகு எந்தத் துணி யாருடையது என்று யாருக்குமெ தெரியாது. பொதுவாக அனைத்துமே ஒரே அளவில் தான் இருக்கும். யார் வேண்டுமானாலும் எதை வேண்டு மானாலும் போட்டுக் கொள்ளலாம்.

வெடிகளும் இனிப்புப் பலகாரங்களும் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னரே அப்பா வாங்கி வருவார்கள். என்ன வாங்கி வந்தார்கள் என்பது பரம ரகசியம். தீவாவளிக்கு முந்தைய இரவு அனைவருக்கும் சமமாக வெடிகள் பிரித்துக் கொடுக்கப் படும். அவ்வெடிகளைப் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் ரகசியமாக பத்திரமாக பாதுகாப்போம். ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் கொள்ளை அடிப்பதும், சண்டை போடுவதும், களவு போனதா இல்லையா என்பது கூடத் தெரியாமல் அடித்துக் கொள்வதும், பின் சமாதான உடன்படிக்கை செய்வதும் நினைக்க நினைக்க இன்பம்.

ஒருவரை ஒருவர் நம்ப மாட்டோம். கணக்குத் தெரியாது. யார் தீபாவளி யன்று வெடி வெடித்தாலும் அனைவருமே அவ்வெடி தன்னுடைய பங்கிலிருந்து தான் திருடப்பட்டது என்று மனப்பூர்வமாக நம்புவோம். உடனே அடி தடி சண்டை தான். பெரியவர்கள் குறுக்கிட்டு இரண்டு போடு போட்டு இருவருமே அழத் தொடங்கி அவரவர்களுக்குப் பிடித்த பெரியவர்களிடம் சென்று ஆறுதல் பெற்று, அவர்களின் பங்கிலிருந்து (???), நிவாரணம் பெற்று மகிழ்ந்ததும் அக்காலமே.

மறு நாள் அனைவருமே அம்மஞ்சள் மாறாத புத்தாடைகளை பெருமையுடன் அணிந்து, ராஜ நடை போட்டு பள்ளிக்குச் சென்று நண்பர்களுக்குக் காண்பித்து, ஒப்பு நோக்கி, உயர்வு தாழ்வு கண்டு, மகிழ்ந்தது தற்கால மழலையர் முதல் இளஞர் வரை இழந்த ஒன்று. அக்காலத்தில், விழாக்களின் கொண்டாட்டங்கள், அதனால் விளையும் மகிழ்ச்சிகள், குதூகலமாக, கூட்டமாக திரைப் படம் பார்த்தது, ஒன்றாக உண்டது, ஒன்றாக விளையாடியது, ஒன்றாக உறங்கியது, அனைத்துமே இக்காலத்தின் கட்டாயத்தில் இழந்த நட்டங்கள்.

தீபாவளி அன்று வீட்டிற்கு வரும் உறவினர்களில் பெரியவர்கள் அனைவரின் காலிலும் விழுந்து கும்பிட்டு, ஆசிகள் பெற்று, அத்துடன் காசுகளும் பெற்றதும் உண்டு. காசுக்காகவே சும்மா சும்மா காலில் விழுவோம். பரிசுகளோ ஆசிகளோ பெரியவர்களிடம் பெறும் போது காலில் விழுந்து வணங்கும் நல்ல பழக்கம் இன்றும் தொடர்கிறது.

மலரும் நினைவுகளாக அசை போட்ட நிகழ்வுகள், திரும்ப இளமைப் பிராயத்திற்குச் செல்லும் வசதி இல்லையே என நினைக்கத் தூண்டுகிறது.

---------------------------------------------

Tuesday 21 October 2008

வள்ளுவம் வாழ்வின் வழி காட்டி


மாநில அளவில் ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் நடத்திய பாரதி - வள்ளுவர் விழாவின் தொடர்பாக நடந்த பேச்சுப் போட்டியில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ஆர்.வெங்கட்ராமன் அவர்களிடம், பள்ளிக்கான சுழற் கேடயமும், போட்டியாளர்க்கான பண முடிப்பும், பெற்ற என் செல்ல மகளின் பேச்சு.
( 1993)





-----------------------------------------------------------------------------------------------

நடுவர் உள்ளிட்ட அவையினரை வணங்கி மகிழ்கிறேன்.



இந்த உலகத்தில் எந்த ஒரு மனிதனும் எதையும் எளிதில் வேதம் என்று ஒத்துக் கொள்ள மாட்டான். ஆனால் உலகம் முழுவதும் ஒன்றை பொது மறையாக ஏற்றுக் கொண்டுள்ளதென்றால் உண்மையில் அந்த மனிதனின் சிந்தனை பாராட்டுக்குரியதே ! பாயில் படுத்து நோயில் விழும் மனித வாழ்க்கையில் இன்பங்கள் சேர்க்கவும் துன்பங்கள் நீக்கவும் துணை புரிவது வள்ளுவமே ஆகும். உண்மையில் அந்நூல் வாழ்வின் வழி காட்டியே !



மனிதனாகப் பிறந்தவன், அன்போடு வாழ வேண்டும் ! அறிவோடு திகழ வேண்டும் ! பகுத்தறிவோடு பழக வேண்டும் ! பண்பில் உயர வேண்டும் ! புனிதனாய் மாற வேண்டும் ! வாழ்வில் உயர்வதற்கு இவை மட்டும் போதாது - அவன் உண்மையைப் பேச வேண்டும் ; பொய்மையை நீக்க வேண்டும் ; நட்பில் உயர வேண்டும் ; நல்லதைக் கொள்ள வேண்டும் ; அல்லதைத் தவிர்க்க வேண்டும் ; வையத்து வாழ்வாங்கு வாழ வேண்டும் !



இன்றைய சமுதாயத்தில் மனிதன் அன்பின்றி, அறிவின்றி, நட்பின்றி, நேர்மையின்றி, நன்னெறியின்றி, வாழும் முறை தவறி, வழி காட்டும் துணையின்றித் தட்டுத் தடுமாறுகின்றான். அதற்கு வள்ளுவம் காட்டும் வழி தான் என்ன ?




அன்பாயிரு - அதற்காக நீ வருந்த வேண்டியதில்லை !

இன்சொல் பேசு - இதற்காக உன் நா துன்பப்படுவதில்லை !

பொறுமையாயிரு - அது உன்னைப் பொன் போல் உயர்த்தும் !

எதிரியை எளிதில் நம்பி விடாதே !

பகைவனின் கண்ணீரைப் பார்த்து பக்கம் சாய்ந்து விடாதே !

வணங்கும் கைகளுக்குள் வாளும் மறைந்திருக்கும் !

சொல் வேறு செயல் வேறு பட்டார் தொடர்பு கொள்ளாதே !

அது கனவிலும் இன்னாது !

வலிமை அறியாது வாள் வீசாதே -அது உன்னையே வீழ்த்தி விடும் !

கூற்றத்தைக் கைதட்டி அழைத்து ஆக்கத்தை இழக்காதே !

அன்பில் உயர்ந்து நில் !

என்பும் பிறர்க்கென்று சொல் !

வெற்றுடலாய் நடமாடி வேடிக்கைப் பொருளாகி விடாதே !


என்றெல்லாம் வள்ளுவம் காட்டும் வழி நாம் வாழ்வில் உயர

நல் வழியே !




அடுத்து அறிவு ! அது அற்றங்காக்கும் கருவி ! பகைவராலும் உள்ளழிக்கலாக அரண் என்று வள்ளுவர் அதற்குத் தரும் விளக்கம் அழகானது ! எப்பொருள் எத்தன்மைத் தாயினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு ! எதிரதாக் காக்கும் அறிவினார்க்கில்லை அதிர வருவதோர் நோய் - என்பதெல்லாம் அறிவிற்கு வள்ளுவர் தரும் முடிவு !




சிந்தித்துச் செயல்படு ! வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் ! அதனால் வெள்ளம் வருமுன் அணை போடு ! என்று அவர் நம் வாழ்க்கைக்குத் தரும் எச்சரிக்கை - நல்வாழ்வுப் பாதைக்கோர் பச்சை விளக்கு ! இன்னும் அவர் கூறும் வாழ்க்கை விளக்கங்கள் நம்மை எல்லாம் மெய் சில்ர்க்க வைக்கின்றன !



கற்றதைச் சொல்லாதவன் காகிதப்பூ ! அறிவில்லாதவனின் அழகு மண்ணால் செய்த மாண்புறு பாவை ! கற்றறிவின்றி ஆன்றோர் அவைபுகல் எல்லைக் கோடின்றி விளையாடும் விளையாட்டு ! கற்றிருந்தால் நீ மனிதன் ! இல்லையெனில் விலங்கு ! நெஞ்சுரம் இருந்தால் நீ மனிதன் ! இல்லையெனில் மரம். இப்படி அவர் அறியாமையைச் சாடி அறிவைப் புகட்டி வாழ்வுக்குத் தரும் விளக்கம் - அது மனித வாழ்க்கைக்கோர் கலங்கரை விளக்கம் !




அடுத்து அன்பு - அது வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவை. அந்த அன்பில்லாதாவன் என்புதோல் போர்த்திய விலங்கு ! அவனால் பயன் ஒன்றுமில்லை ! மனிதனின் அன்பு விருந்தினை மென்மையாக நோக்க வேண்டும் ! அது உலகத்தோடு ஒட்டி உறவாட உதவ வேண்டும் ! உள்ளத்தே பொங்கி எழும் சினத்தை அடக்க வேண்டும் ! இன்னா செய்தார்க்கும் இனியவே செய்தல் வேண்டும் ! இன்பத்துள் இன்பம் விழையாது துன்பத்துள் துன்பம் துடைக்க வேண்டும் ! அன்பால் ஆண்டவனைப் பணிய வேண்டும் ! அவன் ஆதி பகவன் ! அறவாழி அந்தணன் என்று அவர் ஆன்மீகத்திற்குத் தரும் விளக்கம் ஒன்றே போதும் அவர் சாதிச் சளுக்கறுக்கும் சான்றோர் என்பதற்கு ! சமயப் பிணக்கறுக்கும் ஆன்றோர் என்பதற்கு ! இதை விடச் சிறந்த வாழ்க்கை வழிகாட்டி வேறென்ன இருக்க முடியும் !




மனித வாழ்க்கையில் கொடுத்து வாழும் பண்பு உயர்வானது ! எனவே உன்னால் முடிந்தால் கொடு ! இல்லை எனில் அடுத்தவன் கொடுப்பதைத் தடுக்காதே ! அது பாவம் ! அந்தப் பாவம் தீர்க்க வழியே இல்லை !




சினம் கொள்ளாதே !

அது சேர்ந்தாரைக் கொல்லும் !

அறம் செய்ய நீ ஆன்றோனாக வேண்டாம் !

மனத்துக்கண் மாசிலனாகு - அது போதும் !

கொல்லா நலத்தது நோன்பு !

பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு !

எதையும் ஏற்றுக் கொள் !

தோல்விகள் இயற்கை !

எவரிடமும் கை ஏந்தாதே - அது இழிவு !

முடியாதென்று முடங்கிக் கிடக்காதே !

தக்க காலமும் இடமும் அறிந்து செயல்படு - இந்த உலகத்தையே உன்னால் பெற முடியும் !

இதனை இதனான் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடு !

தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் !

எனைவகையான் தேரியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் !




சிந்தித்துச் செயலாற்று !

ஒழுக்கம் தவறாதே !

சொன்ன சொல் பிறழாதே !

அன்பாயிரு !

அறிவாயிரு !

பண்பாயிரு !

வெற்றி கொள் !

வேடந்தவிர் !

செய்தொழில் போற்று !

சோம்பலை அகற்று !

கொடுத்து வாழ் !

கெடுத்து வாழாதே !

உண்மை பேசு !

உயர்ந்து வாழ் !

அச்சமே கீழ்களது ஆசாரம் !

தன்மானம் இழக்காதே !

தன்னிலையில் தாழாதே !

தாழ்வு வந்துழி உயிர் வாழாதே !

வறுமையை நினைத்து துவளாதே !

வாய்ப்புகள் இருக்கு தயங்காதே !




இப்படி எல்லாம் வள்ளுவன் காட்டும் என்னை எங்கேயோ இழுத்துச் செல்கின்றது !




நீ ஒராண்டு திட்டமிட்டால் தானியங்களை விதை !

நீ பத்தாண்டுகள் திட்டமிட்டால் மரங்களை நடு !

நீ நூறாண்டுகள் திட்டமிட்டால் மனிதர்களை உருவாக்கு - என்றான் ஓர் அறிஞன். ஆனால் வள்ளுவனோ ஆயிரம் ஆண்டுகள் திட்டமிட்டு ஆன்றோர்களை அல்லவா உருவாக்கி உள்ளான். அதனால் தான் அவன் தெய்வப்புலவன் திருவள்ளுவன். அவன் வள்ளுவமும் குன்றின் மேலிட்ட விளக்கு ! இந்தக் குன்றின் மேலிட்ட விளக்குக்கு நம் குவலயமே சாட்சி ! இந்த ஒரு மாட்சிமை போதாதா தெய்வப் புலவரின் திருவள்ளுவத்திற்கு !




வாருங்கள் தீபத்தை ஏற்றுவோம் ! திருக்குறள் போற்றுவோம் ! உள்ளிருள் நீக்குவோம் !




வருகிறேன் !

வாய்ப்பிற்கு நன்றி !

வணக்கம் !


--------------------------------------------------------

ஆக்கம் : செல்வி ஷங்கர்


ஒலிவடிவம் :





------------------------------------------------------

Sunday 19 October 2008

உதவும் நல்ல உள்ளங்கள் உதவலாம்.

அன்பினிற்குரிய நண்பர்களே !!

எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலை இத்துடன் இணைத்திருக்கிறேன் சென்னையில் உள்ள நண்பர்களை உதவுமாறு வேண்டுகிறேன்.

நன்றி

மின்னஞ்சல் :

Dear Friends,

Greetings from S. Mathew, Loyola College. Loyola College supports the education of 65 visually challenged students. I would kindly invite you to join hands with us to help the students with their 1st Semester exams which are due by November.

Exam Dates:

3rd – Nov to 18th Nov, 08. (Except on Sunday, 9th and 16th Nov.) Exam Time:

1st Secession 9.00 to 12.30pm 2nd Secession 1.00 to 4.30pm Exam Papers:

TL & FC – TAMIL PAPER
EL, SO, HT & EC – ENGLISH PAPER
CO & BU – COMMERCE PAPER
LH – Hindi Paper

Exam Venue:

Loyola College, MF – 01, Main Building 1st Floor, Nungambakkam, Chennai – 34

For any further clarifications, please contact

S. Mathew, Coordinator 9444223141
Email:
smathew27@gmail.com

NOTE: SUBJECT TITLE AND CODE NUMBER SEND VERY SOON.

Thanks & regards
S. Mathew

-- S. Mathew
Loyola College
Chennai – 600 034.
Ph: 9444 22 3141
ForwardSourceID:NT00003616
--------------------------------------------------------------------------
அன்புடன் ..... சீனா
http://cheenakay.blogspot.com/

Saturday 6 September 2008

மதுரை மாநகரில் அன்பர்கள் - பதிவர்கள் சந்திப்பு

அன்பின் சக பதிவர்களே

கடந்த வியாழனன்று, செப்டம்பர்த் திங்கள் நான்காம் நாள், மதுரை மாநகரில், அண்ணா நகரில், ஒரு புதுமனை புகு விழாவில், நடை பெற்ற ஒரு மாபெறும் பதிவர் சந்திப்பு பற்றிய பதிவு இது.

மதுரையில் வசிக்கும் சீனா ( யாருப்பா அது ?) , செல்வி ஷங்கர் ( இது யாரு ?), புது வண்டு, நாடிக்கண்ணா, சிவமுருகன், நிலா, நந்து ஆகிய பதிவர்களும் மற்றும் நண்பர்களும் ( இவங்க எல்லாம் யாரு - பதிவர் ஆகப் போறாங்களா ? ) இனிய காலைப் பொழுதில் 11 மணி அளவில் சந்தித்தனர்.

சிவ முருகன் சற்றே தயக்கத்துடன் இருந்த படியாலும் (Reserved Type in first time meeting) - முன் அறிமுகம் இல்லாத படியாலும் அதிகம் பேசவில்லை. அவரது எழுத்துகள் பேசுமளவுக்கு அவர் பேச வில்லை. பொறுமையின் சிகரம். உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். அவர்து பதிவுகளைப் பற்றிய பேச்சு வந்த போது கலந்து கொண்டார்.

புது வண்டு, சீனா, செல்வி ஷங்கர், நந்து - இவர்கள் வழக்கம் போல் அதிகம் பேசினர். நந்து திறந்த வாய் மூட வில்லை. புகைப்படக் கருவியை இயக்குவது எப்படி என்று அவரது நிக்கான் கருவியினை இயக்கி - ஒரு சிறு பூவினை எப்படி படம் எடுக்க வேண்டுமென தரையில் முழங்காலிட்டு குனிந்து கருவியைத் தரையில் வைத்து நேரிடையாகவே கற்றுக் கொடுத்தார். ( பெரிய புகைப்பட நிபுனர் என நினைப்பு - ஒரு தடவை PIT ல் பரிசு வாங்கி விட்டார் என நினைக்கிறேன்)

புது வண்டின் மழலைகளுக்கான கதைகள் பற்றி நிலாவும் நந்துவும் பேசினர். குழந்தைகள் அதிகம் விரும்புவதாக அனைவரும் கூறினர்.

அருமையான மதிய விருந்துடன் சந்திப்பு இனிதே முடிந்தது.

ஆமா வலைப்பதிவர்கள் சந்திப்பு என்றால் என்ன ? அதைப்பற்றி எப்படிப் பதிவு போட வேண்டும் ? யாராவது சொல்லுங்களேன்.

நல்வாழ்த்துகளுடன் சீனா

Thursday 28 August 2008

ஒரு துயரச் செய்தி

அன்புச் சகோதரி அனுராதா சில காலமாக உடல் நலம் சரியில்லாமல் இருந்ததும், அவரது மன வலிமையும் , அவரது அன்பான கணவரின் கவனிப்பும், அருமையான மக்களின் அன்பும் அனைவரும் அறிந்ததே !

இச்சகோதரி இன்றைய தினம் ( 28.08.2008) வியாழக்கிழமை காலை 09:52 மணிக்கு நம்மை எல்லாம் விட்டுப் பிரிந்து விட்டார் என்பதனை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பிரிவினால் வாடும் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரின் துயரத்தில் நாமும் பங்கு கொள்கிறோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

இறுதிச் சடங்குகள் நாளை காலை 8 மணி அளவில் நடைபெறும்.

Tuesday 12 August 2008

இறைவனின் குழந்தைக்கு நாற்காலி

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.



அன்பின் சக பதிவர்களே !

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் வலைச்சரத்தில் ஒரு பதிவு இட்டிருந்தேன். கடவுளின் குழந்தைக்கு கருணை காட்டுங்கள் என்று வேண்டி இருந்தேன். பிறகு சில திங்களாக பணிச்சுமை காரணமாக மனம் இதில் முழுவதுமாக ஈடுபட்டிருந்தாலும் அன்பர்களைத் தொடர்பு கொள்வதில் சற்றே தாமதம் ஏற்பட்டது.

சூலைத்திங்கள் தொடக்கத்தில் அருமை நண்பர் பாலாவிடம் கேட்ட பொழுது - ரூபாய் 20000 உதவி வந்துள்ளது எனவும் இன்னும் 45000 வேண்டுமெனக் கூறினார். நான்கு சக்கர, மின்சாரத்தினால் இயங்கும் நாற்காலியின் தற்போதைய விலை 65000 ஆகிறது எனவும் கூறினார்.



சூலைத்திங்கள் இறுதிக்குள் எப்படியும் வாங்கி விட வேண்டுமென்று இறைவனைத் தொழுது பணியினைத் துவக்கினேன். அன்பர்களைத் தொடர்பு கொண்டேன். வலைப்பதிவர்கள் மட்டுமின்றி அன்புடன் குழுமத்தின் உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டேன். முன் பின் பார்த்திராத, தொடர்பே இல்லாத அன்பர்கள் சிலரும் நேசக்கரம் நீட்டினர்.

வலக்கை கொடுப்பது இடக்கைக்குத் தெரிய வேண்டாமென, அதிகம் விளம்பரம் வேண்டாமென விரும்பிய நண்பர்கள் அதிகம் கொடுத்தனர். தேவைக்கு அதிகமாகவே உதவிகள் குவிந்தன. கடைசி 24 மணி நேரத்தில் 50 விழுக்காடு உதவி பெறப்பட்டது.


ஏறத்தாழ ரூபாய் 36000 உதவி பெறப்பட்டு அருமை நண்பர் பாலாவிடம் சேர்க்கப்பட்டு, அந்தோணிக்கு ஆகஸ்டுத் திங்கள் 7ம் நாள் அன்று அந்தோணியின் கனவு நாற்காலி வழங்கப்பட்டது.


ஆகஸ்டுத் திங்கள் 10ம் நாள் இலண்டனில் வசிக்கும் அருமை நண்பர் சக்திதாசனும் அவரது மனைவியும் நானும் சென்னையில் உள்ள அந்தோணியின் இல்லம் சென்று நாற்காலியில் மகிழ்வுடன் உலா வரும் அந்தோணியைக் கண்டு மகிழ்ந்தோம். உரையாடினோம். மன மகிழ்வுடன் திரும்பினோம்.


அந்தோணியின் உடல்நிலையைக் கண்டு மனம் வருந்தினோம். இப்பொழுது மன மகிழ்வுடன் வீதிகளில் உலா வரும் அந்தோணியின் உதவி பெறுவதில் உள்ள வலியினையும், என்றாவது ஒருநாள் வாங்கியவற்றைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற வைராக்கியத்தினையும், உறுதியினையும் கண்டு மனம் மகிழ்ந்தோம்.


அன்பர்களே ! இறைவன் மனது வைத்தால் முடியாதது ஒன்றுமில்லை. ஒரே திங்களில் தேவைக்கதிகமாகவே உதவி மழை பொழிந்தது இறைவனின் கருணையால் தான். சில பதிவர்களின் உதவிகளை, பிற்காலத்தில் தேவைப்படும் பொழுது வாங்கிக் கொள்கிறோம் என்று மென்மையாக மறுத்தோம்.


நண்பர்களே ! உதவிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், இச்செயலினை முன் நின்று ஒருங்கிணைத்த நண்பர்கள் சுரேஷ் மற்றும் பாலாவிற்கும் உளங்கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். உதவிய நண்பர்களின் பெயர்கள் வெளியிட அனுமதி இல்லாத காரணத்தினால் வெளியிட இயலவில்லை.


மனம் மகிழ்கிறது நண்பர்களே !


மனமுவந்து உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல இறைவன் எல்லா நலனையும் அளிக்க வேண்டுதலுடன் கூடிய நல்வாழ்த்துகள்.

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Wednesday 2 July 2008

நானானியிடம் தாமரையின் வேண்டுகோள் - பானைக்கதை


அன்பின் பதிவர்களே !

சகோதரி நானானி யானைக்கதை, பூனைக்கதை என எழுதினாலும் எழுதினார். தாமரை என்ற பதிவர் பானைக்கதை வேண்டுமென மறு மொழியில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ராமலக்ஷ்மியோ நானானிக்குத் தெரியாத கதையா - எந்தப் பொருளைக் கொடுத்தாலும் கதை எழுதும் திறமை படைத்தவர் எனச் சான்றிதழ் வழங்கி உசுப்பேத்தி விட்டிருக்கிறார். நானானி எழுதும் முன்னர் நான் எழுதி விடலாம் என ஒரு விருப்பம்.

பானையைப் பற்றி கதை எழுத வேண்டுமெனில் - கதையில் பானை வர வேண்டுமா, பானையைப் பற்றி வரவேண்டுமா, பானையைப் பயன்படுத்தி எழுத வேண்டுமா, பானை தான் கதாநாயகனாக ( நாயகியாகவும் ??) இருக்க வேண்டுமா என பலப்பல ஐயப்பாடுகள் மனத்திலே வந்தன. தாமரை என்ன எதிர்பார்க்கிறார் - ராமலக்ஷ்மி என்ன பரிந்துரைக்கிறார் - நானானி என்ன எழுதப் போகீறார் - எனப் பலப்பல எண்ணங்கள்

அப்புறம் கதை எழுதுவதென்பது அவ்வளவு எளிதா என்ன ? இது வரை ஒரூ கதை கூட எழுதியதில்லையே ( கதை விட்டிருக்கிறேன்) - என்ன செய்வது ? மனம் தடுமாறுகையில், எனதருமைப் பெயர்த்திக்கு, அவள் உறங்கச் செல்லும் முன், நான் வழக்கமாகச் சொல்லும் கதையினை, அவளுக்கு மிகவும் பிடித்த, ரசித்த, திரும்பத் திரும்பக் கூறச் சொல்லி, நான் கூறிய கதையினை இங்கு அப்படியே எழுதி விடலாமென எழுதி விட்டேன்.

சொந்தக்கதையா - சொந்தக்கற்பனையா - படித்ததா - கேட்டதா - சுட்டதா - தெரியாது - நினைவில்லை. ( பரிசு கொடுக்கணும்னு நினைச்சீங்கன்னா இதெல்லாம் நினைக்காதீங்க - எனக்கு, கதை சொன்ன எனக்கு பரிசு கொடுங்க).

அய்யா அய்யா கதெ சொல்லுங்க

அடப் போடி - தூக்கம் தூக்கமா வருது

அம்மம்மா கிட்டே சொல்லிடுவேன் - நீங்க கதெ சொல்ல மாட்டேங்கறீங்கன்னு !

அம்மம்மா கிட்டே எனக்கென்ன பயமா ? போய்ச் சொல்லேன் !

ஏங்க கதெ தானே கேக்குறா - சொல்லுங்களேன் ( தங்க்ஸின் அன்புக் கட்டளை)

ம்ம்ம்ம்ம் - வா வா - இங்கே உக்காரு இப்படி

நானும் நானும் ( அடுத்த பெயர்த்தி)

ஆக படுக்கையில் இரு பக்கமும் இருவரையும் அமர்த்தி கதை சொல்ல ஆரம்பிப்பேன்.

அந்தக் காலத்துலே கிருஷ்ண தேவ ராயர்னு ஒரு ராசா இருந்தாராம். அவர் கிட்டே தெனாலி ராமன்னு ஒரு விகடகவி இருந்தாராம். ஒரு நா அரசவையிலே தெனாலி ராமன் சோகமா இருந்தாராம். ராசா கேட்டாராம் - என்ன சோகம்னு ? - இவரு சொன்னாராம் - என் மக சின்னப்பொண்ணு- குழந்தை - அழுது கிட்டே இருக்கா ன்னாராம் - ராசா உடனே இங்கே அழச்சிட்டு வா - நான் அவளைச் சிரிக்க வைக்கிறேன் அப்படின்னாராம்.

மறு நாள், அரசவைக்கு தெனாலி ராமன் தன் சிறு குழந்தையை அழைத்து வந்தாராம்.

ராசாவிற்கும் குழந்தைக்கும் இடையே நடந்த உரையாடல் :

பாப்பா பாப்பா - ஏம்மா சோகமா இருக்கறே - இங்க பாரு - எப்பவுமே சிரிச்சிக்கிட்டே இருக்கணும் தெரியுமா

ராசா ராசா எனக்கு ஒண்ணு வேணும் அப்பா வாங்கித்தர மாட்டேங்குறார்.

அப்படியா - என்ன வேண்டும் சொல் - பொன்னா ? பொருளா ? நாடா ? நகரமா ? யானையா ? குதிரையா ? விளையாடும் பொருளா ? சொல் சொல்
ம்ம்ம்ம்ம்ம் அதெல்லாம் ஒண்ணுமில்ல - எனக்கு எனக்கு எனக்கு

தயங்காமல் கேள் குழந்தாய்

ஒரே ஓரே ஒரு ஆனை வேணும் .....ம்ம்ம்ம்ம்ம்.......

ஹா ஹா ஹா ஹா இவ்வளவுதானா ? இதற்கென்ன மறுப்பு ? இதோ வருகிறது யானை. யாரங்கே !! ( கை தட்டி) உடனே பட்டத்து யானையை அழைத்து வா !

அய்யா அயயா - ஜாலி ஜாலி - ஆனை வந்துடுச்சி ஆனை வந்துடுச்சி -
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

மறு படி ஏன் அழுகிறாய் குழந்தாய்

எனக்கு எனக்கு எனக்கு எனக்கு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அழாமல் தயங்காமல் கேள் குழந்தாய்

எனக்கு எனக்கு ஒரு பானை வேணும் ....... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஹா ஹா ஹா ஹா இதென்ன கூத்து - யாரங்கே - உடனே உடனே உடனே ஒரு அழகான புதுப் பானை கொண்டு வா !!

பானையும் வந்தது

அய்யா அய்யா அய்யா ஜாலி ஜாலி ஜாலி பானை ஆனை ரெண்டும் வந்துடுச்சி - ஹெ ஹெ ஹெ ஹெ - ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

மறு படி ஏனம்மா அழுகிறாய்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சொல்லி விட்டு அழம்மா - என்ன வேண்டும் கேளம்மா !

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ( அழுகை பெரிதாகிறது)

யாரங்கே இக்குழந்தையின் அழுகையை நிறுத்துபவர்களுக்கு ஆயிரம் பொற்காசு பரிசாகத் தரப்படும்.

( திருவிளையாடல் - தருமி - எவ்வளவு ? ஆயிரமா ஆயிரமாச்சே ஆயிரமாச்சே - எனக்கு இல்லே - இல்லே - இலே - இனி உங்கள் கற்பனைக் குதிரையை இவ்விடத்தில் தட்டி விட்டு உங்கள் மகன் மகள் பேரன் பேத்திக்கு கதை சொல்லும் போது கதை விடுங்கள்)

கடைசியில் யாரும் முன் வராத காரணத்தினாலும், குழந்தை அழுகையை நிறுத்தாத காரணத்தினாலும், மன்னவனே மண்டியிட்டு, குழந்தாய் - கேளம்மா கேள் -என்ன வேண்டும் சொல்லம்மா சொல் எனக் கேட்க,

எனக்கு எனக்கு ----------------- எனக்கு எனக்கு

இப்பவே இப்பவே - இந்த ஆனையெ இந்தப் பானைக்குள்ளே போச்சொல்லு - போகணும் - ஆமா - பானைக்குள்ளே ஆனை வேணும் - ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் - அழுகை தொடர - அனைவரும் அவையை விட்டு தப்பித்து ஓட, மன்னவனோ மயங்கி விழ ...........

அப்புறமென்ன - கதெ முடிஞ்சிடுச்சி - எல்லோரும் வீட்டுக்குப் போங்க
அவ்ளோ தான் !

சீனா ... 02.07.2008

Monday 9 June 2008

சிவாஜி வாயிலே ஜிலேபி

சி வா ஜி
வா யி லே
ஜி லே பி

இது நாங்க ஆரம்பப் பள்ளியிலே படிச்சது
எப்படிப் படித்தாலும் ROW ROW வாகப் படித்தாலும் சரி
COLUMN COLUMN ஆகப் படித்தாலும் சரி
சிவாஜி வாயிலே ஜிலேபி தான்

ஜிலேபி சிவாஜி வாய்க்கு எப்படிப் போனது ?
யாருக்குத் தெரியும் ? அவரே மறுபடி வந்து சொன்னாத்தான் தெரியும். நாங்களும் இந்தக் கேள்விய 50 வருசமாக் கேக்குறோம் - ஒரு பாவியும் பதில் சொல்ல மாட்டேங்குறான். என்ன செய்வது ?

சிவாஜிலே ஜி இருக்கு
ஜிலேபிலே ஜி இருக்கு
அதனாலே சிவாஜிக்கும் ஜிலேபிக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கணும். சிவாஜிலே கடைசிலே இருக்கற ஜி - ஜிலேபில்லே மொதல்லே வந்துடுச்சு - எப்படி - எவனுக்குத் தெரியும்.

பின்னாலே இருந்தது முன்னாலே போனா அது பின்னவீனத்துவமா ? இல்ல முன்னாலே இருந்தது பின்னாலே போன அது பின்னவீனத்துவமா ? இந்தக் கேள்விக்கும் ஒருத்தனும் பதில் சொல்ல மாட்டேங்குறானுங்கய்யா .

சிவாஜி நடிச்ச படத்துலே எத்தனை படத்துலே ஜிலேபி நடிச்சுது ?
ஜிலேபி செய்யுற ஓட்டல்லே எத்தனை ஓட்டல்லெ சிவாஜி படம் இருந்திச்சி ? இது இன்னொரு பதில் தெரியாத கேள்வி .

நம்ம மங்களூர் சிவாவை ஒருத்தன் வட இந்தியாவிலே மரியாதை நிமித்தம் சிவா ஜீ ன்னு சொல்லிட்டான்யா - அவ்ளோ தான் - சிவாவுக்கு தானும் நடிகர் திலகம்னு ஒரு நெனப்பு வந்துடுச்சி. எங்கே ஹோட்டலுக்குப் போனாலும் ஜிலேபி தான் மொத ஆர்டராம்.

நெசமா நல்லவன்னு ஒருத்தன் இருக்கான்யா - சிவாவோட பதிவ அப்படியே சுட்டுப் போட்டுட்டான்யா ஒரு பதிவு - ஜிலேபிலேந்து ஜி யைச் சுட்டு சிவாஜி போட்டுக்கிட்ட மாதிரி - ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வர்ட்டா - நான் யாரையும் கூப்பிடலேப்பா - இதெல்லாம் தொடர வேணாம்

Tuesday 3 June 2008

வைகையில் வந்திறங்கிய வள்ளல் அழகர்

ஐயிரண்டு அவதாரம் அவணியில் எடுத்த

அழகரவர் ஆடிவருவார் !

அரிதாரம் பூசிவரும் அன்பர்களின்

கூட்டத்திலே அழகரவர் ஆடிவருவார் !



நான்மாடக் கூடலிலே திருமணமாம் !

நாள்தோறும் வீதியிலே தேர்வருமாம் !

அழகர்மலை அழகனவன் சீர்வருமாம் !

அதைக்காண கோடிசனம் ஊர்வருமாம் !



வாராறு வாராறு மலையை விட்டு

வாராறு வாராறு அழகரவர் வாராறு !



தங்கையவள் திருமணத்தை

தமையனவர் நடத்திவைக்க

தங்கக்குதிரையிலே வாராறு !

அடவாராறு அழகரவர் ! வாராறு !



சித்திரையில் வைகறையில்

வைகைநதி பொன்கரையில்

பொற்பாதம் நனைக்க வாராறு !

அடவாராறு அழகரவர் ! வாராறு !



தீவினைகள் அத்தனையும்

தீர்த்துவைக்க அழகரவர்

தீர்த்தங்கள் கொண்டு வாராறு !

அடவாராறு அழகரவர் !

வாராறு ! வாராறு !


http://www.imeem.com/people/opAOIMP/music/Epo8etQv/cheena3wave/

சீனா .... (Cheena)----------------------



Thursday 29 May 2008

அசை போட்டு அனுபவித்து எழுதியது - குறிப்பு 6

நான் தஞ்சையிலிருந்து Third form படித்து விட்டு மதுரைக்கு மாற்றலாகி (??) Nineth standard படிப்பதற்கு வந்து சேர்ந்தேன். 1963ம் ஆண்டு மதுரையில் அடி எடுத்து வைத்தேன். 1972ம் ஆண்டு வரை மதுரையில் படித்தேன்.

கோசாகுளம் புதூர் எனப்படும் கே.புதூரில், 3, மாரியம்மன் கோயில் தெரு என்னும் முகவரியில் வசித்தோம். ஒரு சிறிய வீடு. முன் பக்கம் நல்ல திறந்த வெளி. மண் ரோடு. அமைதியான சூழ்நிலை. வீட்டின் முன்புறம் ஒரு வேப்ப மரம். அதனில் கட்டப்பட்டிருக்கும் கன்றுடன் கூடிய பசு. பின்புறம் ஒரு தோட்டம் எனச் சொல்லப்பட்ட வெற்றிடம். ஹைஜம்ப், லாங்ஜம்ப், சடுகுடு, கிட்டிப்புள், எனப் பல விளையாட்டுகள் விளையாடிய இடம்.

வீட்டின் முன்பக்க அறையில் ஒரு சிறு மளிகைக் கடை வைத்திருந்தோம். அது காய்கறிக் கடையோடு இணைந்த மளிகைக்கடை. வியாபாரம் நன்றாகவே நடந்தது. காலை 4 மணிக்கு நானும் என் தந்தையும் சைக்கிளில் சென்று மீனாட்சி அம்மன் கோவில் அருகே இருந்த சென்ட்ரல் மார்க்கெட்டில் இருந்து அனைத்துக் காய்கறிகளையும் மொத்த விலையில் வாங்கிக் கொண்டு வருவோம். கீழ மாசி வீதியிலும் வீதி முழுவதும் உள்ள தேங்காய்க் கடைகள், பழக்கடைகள், அனைத்திலும் கொள்முதல் செய்து, புதூர் வரும் போது காலை 6 மணி ஆகிவிடும். காலையிலேயே தினந்தினம் புதுசு புதுசா காய்கறிகள் வியாபாரம் களை கட்டும். ஏழு ஏழரைக்கெல்லாம் முடிச்சிட்டு மளிகைக் கடையில் உக்காந்தா எட்டரை வரைக்கும் இருப்பேன். அப்புறம் அவசர அவசரமா எல்லா வேலையும் முடிச்சிட்டு பள்ளி செல்லும் பாலகன் நானே - பள்ளிக்கூடம் போகனும்.

வீட்டிலே இருந்து நாங்க நண்பர்கள் புடை சூழ நடந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்தேதேதேதே தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகே இருக்கும் அமெரிக்கன் கல்லூரி உயர் நிலைப்பள்ளிக்குச் செல்வோம். பள்ளிக்குச் செல்லும் வழி இரண்டு உண்டு. புதூர் பஸ் ஸ்டாண்டில் அனைவரும் கூடி அரட்டை அடித்துவிட்டு அழகர் கோயில் மெயின் ரோட்டிலேயே நடந்து ஐடிஐ, ரேஸ்கோர்ஸ், அவுட்போஸ்ட், தல்லாகுளம் என நடந்து செல்வதற்குள், வீடு, பள்ளி, ஊர், மாவட்டம், மாநிலம், தேசம், உலகம் என அத்தனை இடங்களைப் பற்றியும், நிகழ்வுகள் பற்றியும், பேசிப் பேசி, விவாதித்து, ஆமோதிக்கும் கட்சி, மறுக்கும் கட்சி எனப் பட்டி மன்றம் நடத்தி ( அதில் சில நண்பர்கள் பார்வையாளர்களே) - பள்ளி சென்ற நாட்கள் - இன்பமாகக் கவலையின்றி கழிந்த நாட்கள் - வாழ்க்கையின் சுவையான நாட்கள் - திரும்பக் கிடைக்காத நாட்கள் - அசை போட்டு ஆனந்திக்கும் நாட்கள். கவலைப் படுகின்ற சில நாட்களில் ஆறுதலுக்கு நட்பே கை கொடுக்கும். மேலும் பெருமாள் கோவிலுக்கு எதிரில் உள்ள இரட்டைப் பிள்ளளயாரிடம் சொல்லி விட்டால் கவலைகள் பறந்து போகும் - மறந்து போகும்.

பள்ளிக்குச் சென்ற மற்ற வழி - வீட்டிற்குப் பின்புறம் இருந்த பெரிய கம்மாக்கரை வழியா நடந்து போனது. கம்மாயிலே இடுப்பளவு தண்ணி இருந்த காலத்திலே குளிக்கிறோம்னு சொல்லி கூத்தடிச்ச காலங்கள் உண்டு. தண்ணிக்குள்ளே வந்து கோமணத்தே உருவிட்டுப் போய்டுவானுங்க! . காலைலே சுகமா கம்மாக் கரையிலே பசங்களோட அப்பிடியே வெளீயே போய்ட்டு கம்மாலெயெ காலைக் கழுவிட்டு வந்த சுகம் இப்போ பெரிய வீட்லே WC டாய்லெட்லே கிடைக்குறதா ??

தற்போதைய DRO காலனி, சர்வேயர் காலனி ன்னு கம்மா பூரா வீடுகளா மாறிடிச்சி. கம்மாக்கரையிலேயே நடந்து நத்தம் ரோட்டைப் பிடிச்சா - கலக்டர் பங்களா, ரிசர்வ் லைன், எஸ்பி பங்களா, பிடபுள்யூடி ஈஈ பங்களா, கெஸ்டவுசுன்னு பல பங்களாக்கள் கடந்து அவுட்போஸ்ட் வந்து மெயின் ரோட்லே ஜாயின் பண்ணுவோம்.

அப்பல்லாம் ஏதாவது அதிக ஆசைப்பட்டு வீட்லே கேட்டா, அப்பா வந்து "பெரிய சேஷய்யன்னு மனசிலே நினைப்பா" ன்னு திட்டுவாங்க. யாரந்த சேஷய்யன்னு ரொம்ப நாள் தெரியாம இருந்திச்சி. அப்புறம் தான் ஒரு நா அவர் தான் பெரிய, மதுர ஜில்லாக் கலெக்டர்னு தெரிஞ்சுது. (T.N.Seshan).

சில சமயம் பேச்சிலே சண்டை வந்து காய் விட்டுட்டு பசங்களெப் பிரிஞ்சு நாங்க ரெண்டு மூணு பேரு நத்தம் ரோட்லெந்து பிரிஞ்சு சொக்கிகுளம், பீபீகுளம், லேடி டோக் காலேஜ், ஓசிபிஎம் வழியா தல்லாகுளம் போவோம். சொக்கிகுளத்திலே வடமலையான் பங்களா, பிடிஆர் பங்களா, டிவிஎஸ் பங்களான்னு பெரீஈஈஈஈஈஈய வீடெல்லாம் வேடிக்கை பாத்துட்டே போவோம். பள்ளிக்கூடம் போனாப் போவோம் இல்லேன்னா தமுக்கம் மைதானம் சுவர் ஏறிக் குதிச்சுப் போய் சாயந்திரம் வரைக்கும் அங்கேயே இருப்போம். சாயந்திரம் அப்பிடியே வந்தோம்னா, பசங்க எல்லாம் காலைலேந்து காணோமேன்னு அலை பாஞ்சுகிட்டுருப்பானுங்க. அப்பிடி கெத்தா வந்து, சேந்து வீடு போவோம். திட்றவன் திட்டுவான். அழுவறவன் அழுவான். அப்புறம் பழம் விட்டுடுவோம்.

நண்பர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த - சிவானந்தம், பவானந்தம், நித்யானந்தம், பரமானந்தம் ஆகியோர் நல்ல நண்பர்கள். மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்திலும், மீன் வளத்துறையிலும், கனரா வங்கியிலுமாக பணிக்குச் சென்றவர்கள். நீண்ட காலமாக தொடர்பு விட்டுப் போய் விட்டது. மற்ற நண்பர்கள் மின்வாரியத்திலும் பொதுப்பணித்துறையிலுமாக பணிக்குச் சென்றார்கள்.

மூன்றாண்டு காலம் பள்ளி வாழ்க்கை இன்பமயமாகச் சென்றது. XIth standard வரை அங்கு படித்தேன். அக்காலக் கட்டத்தில் தான் பாண்டியன் ஹோட்டல் அஸ்திவாரம் போட்டு செங்கல் செங்கலாக உயர்ந்தது. அதற்கு முன்னால் சர்க்கியூட் ஹவுஸ் மட்டும் தான் இருந்தது.

பள்ளியில் தலைமையாசிரியராக அந்தக் காலத்தில் அமெரிக்கா சென்று வந்த திரு சுந்தர்ராஜ் இருந்தார். எங்களுக்கு ஆங்கிலப் பாடம் நடத்துவார். பொறுமையின் திலகம். கணித ஆசிரியராக திரு நரசிம்மன் ஒன்பதாம் வகுப்பிலே முழு ஆண்டுத்தேர்விலே 100 மதிப்பெண் கொடுத்து பத்தாம் வகுப்பினிலே அல்ஜீப்ரா கணிதம் எடுக்க வைத்து கணிதத்தின் மேல் ஒரு காதலை ஏற்படுத்தியவர். தமிழாசான்களாக, திரு நடராஜன், கோவிந்தன், அலங்காரம் என்னும் பெருமக்கள் கற்றுத்தந்த தமிழ்தான் இன்றைக்கும் சிறிதளவாவது தமிழ் பேச வைக்கிறது. திரு அலங்காரம் அவர்கள் நடத்திய ந-சூ (நன்னூல் சூத்திரம்) மறக்க முடியுமா - தமிழிலக்கணத்தை கரைத்துக் குடிக்க வைத்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் வித்வான் பட்டம் பெற்றவர்கள். விஞ்ஞான ஆசிரியர் திரு ஜான்சன் சுவாமிப் பிள்ளை. பாடம் நடத்தும் பொழுது திடீரென "பள்ளிதனில் தூங்கியவன் கல்வி இழந்தான்" என்று கூறினாரென்றால் - எவனோ ஒரு மாணவன் தூங்கிக்கொண்டிருக்கிறான் என்று பொருள். சக மாணவர்கள் அக்கம் பக்கம் பார்த்து அவனை எழுப்பி விடுவர். ஆசிரியரோ கவலைப் படாமல் தொடர்ந்து பாடம் நடத்துவார். சமூக இயல் ஆசிரியர் திரு Eddie. உடற் பயிற்சி ஆசிரியர் திரு டெய்லர். ஹிந்தி ஆசிரியர் திரு சீனிவாசன்.

அக்கால கட்டத்தில் தான் இந்தி எதிர்ப்பு பலமாக இருந்த காலம். காளிமுத்து, சீனிவாசன் போன்றவர்கள் கல்லூரிகளில் படித்த காலம் - சட்ட எரிப்பு நடத்திய காலம். பக்தவக்சலம் முதல்வராகவும் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராகவும் இருந்த காலம். இன்றும் இந்தி தெரியாமல் துயரப் படுவதற்கு வழி வகுத்த காலம். முதல் மந்திரியையும், பிரதம மந்திரியையும் எதிர்த்து எழுப்பிய கோஷங்கள் இன்றும் நினைவிலிருக்கின்றன.

தமுக்கம் மைதானம், அடுத்துள்ள பூங்கா, காந்தி மியூசியம், ரேஸ்கோர்ஸ் மைதானம் இவை தான் எங்களது பொழுதுபோக்கும் இடங்கள்.

முழங்கால் வரை நீண்ட டிரவ்சர்( வளர்ற புள்ளே - நல்லாத் தையுங்க) - காமராஜர் மாதிரி முழங்கை வரை தொள தொள சட்டை - ஒரு கையில் பை நிறைய புத்தகங்கள் - நோட்டுகள் - எப்போதும் கசியும் ஒரு பவுண்டன் பேனா - ஜாமெட்ரி பாக்ஸ் - இத்துடன் ஒரு பெரிய அலுமினிய / எவெர்சில்வர் தூக்குச் சட்டி. அதனுள் தயிர் சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம், புளி சாதம் என வகை வகையாக தினத்துக்கொன்று என பலவகை சாதங்கள் - உடன் துவையல் ஊறுகாய் வெஞ்சனம் என - படிக்குற புள்ளே - பாவம்னு - அம்மா ஆசை ஆசையாக கட்டிக்குடுக்கும் மதிய சாப்பாடு - மறுபடி சிறு பையனாக மாறி பள்ளி செல்ல வேண்டும்.

பள்ளியின் அருகிலேயே தமுக்கம் மைதானத்தின் சுற்றுச் சுவர் இருந்தது. ஏறிக் குதித்து சாப்பிட அங்கு செல்வோம் - அனைத்து தூக்குச் சட்டிகளும் திறக்கப்பட்டு கூட்டாஞ்சோறு உண்ணுவோம். வெள்ளைச் சாமி உதயணன் என்ற வகுப்புத் தோழர்களுடன் அடித்த கூத்துகள் மறக்க முடியாதவை.

தொடர்கிறேன் அடுத்த இடுகையாக

அன்புடன் ..... சீனா
-----------------------------------------

அவை அடக்கம் - நா அடக்கம்

அன்பர்களே !!

அவை அடக்கம் என்பது நமக்கெல்லாம் தெரியாத / தெரிந்த ஒன்று. தெரிந்திருப்பின் அதைக் கடைப்பிடிக்கிறோமா என்பது விடையில்லாத வினா.

அவையினிலே, அது அலுவலகமாய் இருக்கட்டும் - உறவின் கூட்டமாக இருக்கட்டும் அல்லது நட்பின் கூட்டமாக இருக்கட்டும் - அவையறிந்து பேச வேண்டும். மற்றவர்கள் மனங்கோணாமல் பேச வேண்டும். மனம் மட்டுமல்ல சற்றே முகம் சுளிக்கும் வண்ணம் கூடப் பேசக் கூடாது. இதைக் கடைப்பிடிப்பது ஒரு கலை. நட்பின் மத்தியிலே ஒரு நண்பனைக் கிண்டல் செய்யும் வண்ணம் - அவன் மனது புண்படுமா என்ற கவலை சிறிதேனுமின்றிப் பேசுவது தவறல்லவா. அவன் செய்த சிறு தவறைக்கூட மற்றவர்கள் முன்னிலையில் சுட்டிக்காட்டுவது நாகரிகமில்லை அல்லவா. எபோழுதும் தவறுகளைச் சுட்டிக் காட்டுவது தனிப்பட்ட முறையில் இருப்பின் தவறுகள் வருந்தவும்/திருந்தவும் வாய்ப்புண்டு. அவையிலே சுட்டினால், அத்தவறு மேன்மேலும் வளரவும் வழியுண்டு.

குறாளாசான் கூறுவான்

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு

இக்குறள் அவை அடக்கத்திற்கும் பொருந்தும். எதை எங்கு பேசுவது எப்படிப்பேசுவது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும். ஒரு பாராட்டுக் கூட்டத்தில், பாராட்டப்படுபவனைப் பற்றி ஒரு பேச்சாளர் பேசும் போது, சிறு வயது முதலே அவனைப் பற்றி அறிந்தவராக, அதிக உரிமை உடையவராக எண்ணிக் கொண்டு, அவன் சிறு வயதில் செய்த தவறுகளைப் பெரிது படுத்திப் பேசுவது எவ்வளவு தவறான செயல் என்பதை எண்ணிப் பாருங்கள். அவன் மனது எவ்வளவு புண்படுமென்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா ?

நண்பர்களே ! காக்க வேண்டியவற்றில் எவற்றைக் காக்காவிட்டாலும் நாவை மட்டுமாவது அடக்கியாளக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நா காக்க !

அன்புடன் ..... சீனா

-------------------------

Tuesday 27 May 2008

சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்

நண்பர்களே, பேசும் பொழுது சிறிது நேரம் மட்டுமே பேசி, அதற்குள் சில கருத்துகளையோ, எண்ணங்களையோ மற்றவர்க்குப் புரியும் வண்ணம் எடுத்துரைப்பது எவ்வளவு கடினம் தெரியுமா ?

ஒரு புகழ் பெற்ற பேச்சாளர் ஒரு பொதுக்கூட்டத்துக்குச் சென்றார். அங்கு அவர் பேச்சாளராக அழைக்கப் படவில்லை. பார்வையாளராகத் தான் சென்றிருந்தார். கூட்ட மேடை நெருங்கிய உடன், அங்கு குழுமியிருந்த மக்கள் இவரை அடையாளம் கண்டு, இவரைப் பேசுமாறு வேண்ட, மேடை ஏறி, தாம் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என வினவினார். மக்களோ எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுங்கள் எனக் கூற, பேச்சாளரோ, அதிக நேரம் பேச அழைத்தீர்கள் என்றால் நான் எளிதாகப் பேசி விடுவேன். ஒரு பிரச்னையுமில்லை. ஆனால் பத்து மணித்துளிகள் மட்டுமே பேசவேண்டுமெனில், அதற்கு நான் ஒரு மாத காலம் சிந்தித்து, பிறகு தான் மேடை ஏற வேண்டும் எனக் கூறினார். காரணம் என்ன வெனில், என்ன வேண்டுமானாலும் பேசலாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம் என்றால் அது எளிது. கை வந்த கலை. ஆனால் குறிப்பிட்ட நேரமே, அதுவும் குறைந்த நேரமே பேச வேண்டுமெனில், அது கடினமான செயல்.

ஏனெனில் குறைந்த நேரத்தில் ஒரு கருத்தினை, ஒரு எண்ணத்தை, ஒரு பொருளினைப் பற்றிப் பேச வேண்டுமெனில், அதற்கு அதிகம் பயிற்சி வேண்டும். குறித்த காலத்தில், பேச வேண்டியவைகளை எல்லாம் பேச வேண்டும். பொருள் புரியப் பேச வேண்டும். கேட்பவர் மனதில் தைக்குமாறு பேச வேண்டும். அது அனுபவத்தில் தான் வரும். திட்டமிட்டால் தான் வரும்.

நண்பர்களே !! பேசிப்பழகுக !! பொருள் புரியப் பேசுக !!

அன்புடன் ..... சீனா
------------------------

Sunday 9 March 2008

தந்தையர் தின வாழ்த்து - அசை போட்டது

இது எனது அருமைச் செல்வம் - அயலகத்தில் இருந்து எனக்கு அனுப்பிய தந்தையர் தின வாழ்த்து. பழைய கோப்பிலிருந்து தற்செயலாகக் கண்ணில் பட்டது. படித்து ரசித்து அசை போட்டது.

--------------------------------------------------------------------------

அன்பில் பண்பில் ஆற்றலில் என்றும்
அமைதிப் பெருங்கடல் எங்கள் அப்பா !
அலைகடல் ஒலிக்கும் ஆயினும் அமைதியாய் !
வந்தார் மகிழ வழங்கி மகிழ்வார் !
வழித்துணை இருந்து வாழ்த்தி மகிழ்வார் !
சென்றார் சிந்தனை சிறிதும் வேண்டார் !
சிறந்தார் என்றும் சேர்ந்தே இருப்பார் !
சொல்லில் செயலில் சோர்ந்தார் இல்லை !
செய்தொழில் சிறந்தே செழித்தவர் என்றும் !
அவர்துணை ஆனார் என்றும் அம்மா !
சொன்னது செய்தது சேர்த்தது சிறந்தது
எதிலும் என்றும் இசைந்தே நின்று
ஏற்றம் தேடி இணைந்தே இருந்து
போற்றும் பெயரோடு பொருந்தி வாழும்
அம்மா அப்பா என்றும் சிறக்க
எல்லாம் வல்ல இறையடி தொழும்
தந்தையர் தினத்தில் தலைமகள் வாழ்த்திது !
--------------------------------------------------------------------------------

Sunday 27 January 2008

வலைப் பதிவர் மாநாடு.

மதுரையில் ஒரு பிரமாண்டமான வலைப் பதிவர் மாநாடு.

சர்வசித்து ஆண்டு தைத்திங்கள் 12 மற்றும் 13ம் நாட்களில் மதுரையில் ஆரப்பாளையம், டி.டி. சாலை, 69ம் எண்ணுள்ள சிவபாக்கியம் திருமண மகாலில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகள், மங்களூர் சிவாவின் தலைமையில், அவருடைய கடும் உழைப்பின் பேராலும், பெரும் முயற்சிகளாலும் அமர்க்களமாக, செய்யப்பட்டிருந்தன.

வலைப்பதிவர்கள் 5 பேர் ( 5000 பேருக்குச் சமம்) சந்தித்தனர். சீனா, அவரது மறு பாதி ( வேற யாருங்க என் துணைவி, மனைவி தானுங்க), மங்களூர் சிவா, நிலாக்குட்டி, நந்து ( இவரு நிலாக்குட்டியோட அப்பாங்க) சந்திச்சாங்க. முக்கிய பார்வையாளரா நிலா அம்மா, சசி வந்திருந்தாங்க. ( நந்துவுக்கு பாதுகாப்பு. அவரு மத்தவங்க ( அதாங்க பொண்ணுங்க) பின்னாடி ஜொள்ளு விட்டுட்டுப் போய்டாமெயும், அவரெ வேற யாரும் கடத்திட்டுப் போய்டாமெயும் பாத்துக்கறதுக்கு). டைட் செக்கூரிட்டிங்க. பாவம் நந்து.

முதல் நாள் மாலையில் நிலா, சசி மற்றும் நந்து வரலே. நாங்க மூணு பேரும் மாநாட்டை எப்படி வெற்றிகரமா நடத்தறதுன்னு ரூம் போட்டு, பேசித் தீர்மானிச்சோம். ராத்ரி ஹல்வா, வடை, கிச்சடி, காப்பியோட எல்லோருக்கும் அருமையான விருந்து.

இரண்டாம் நாள், வாண வேடிக்கைகளோடு, பாண்டு வாத்தியம் முழங்க மேள தாளத்துடன் மாநாடு தொடங்கியது. Full attendance ங்கோ! வாழை மரங்கள் வாசலிலே கட்டப் பட்டிருந்தன. திருமண மகால் முழுவதும் மாவிலைத் தோரணங்கள். பொதுவான வலைப் பதிவுகள், வலைப் பூக்கள், தமிழ் மணம், தேன்கூடு மற்றும் இணையம், இணையத்தில் பாதுகாப்பு பற்றி எல்லாம் விரிவாக விவாதித்தோம். சைடிலே, சிவா திருமணம் பற்றியும் பேசினோம். நாட்டிலே பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே போவது பற்றி வருத்தத்துடன் விவாதித்தோம். பாவம் சிவா இல்ல, பொண்ணு கிடைக்கணுமே அதான்.

சக வலைப் பதிவர்கள் ( தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் மட்டுமே) பற்றியெல்லாம் கலாச்சிட்டு, கிண்டல் பண்ணிட்டு இருந்தோம். சிவாவோட வீக் எண்டு ஜொள்ளு பற்றி ரொம்ப நேரம் விவாதிச்சோம். நிலாக்குட்டியோட சிரிச்சி சிரிச்சிப் பேசினோம். தோழி அனுராதாவைச் சந்திக்கணும்னு முடிவு பண்ணினோம். சந்தர்ப்ப சூழ்நிலை சரியா வரலே.

அப்புறம் என்னங்க - காலை டிபன், மதிய சாப்பாடு. அவ்ளோ தான். எல்லாம் மங்களூர்க்காரரு ஏற்பாடு. காலைலே அல்வா, இட்லி, வடை, ஊத்தப்பம், பொங்கல் ( அபி அப்பா பொங்கள் இல்லீங்க), காப்பி மற்றும் குடிக்க தண்ணி. (மினரல் வாட்டர் தானுங்க). மதியம், சாப்பாடு - பாயசம், பூந்தி, தயிர் பச்சடி, ஃப்ரூட் சாலட், ( சூடா இருந்திச்சி), பருப்பு உசிலி, முட்டக்கோஸ் துவட்டல், மொச்சைக் குழம்பு, மலையாள அவியல், பருப்பு, நெய், வடை, சாதம், சாம்பார், மோர்க் குழம்பு, ரசம், தயிர் etc etc etc. எல்லா ஏற்படுகளும் சூப்பரு போங்க.

மாநாட்டைப் பயன்படுத்தி, சிவா அவங்க அண்ணணோட கல்யாணத்தேயும் இந்த நாட்களில், இதெ மண்டபத்தில் நடத்திக்கிட்டாருங்க. மாநாட்டு வேலயோட வேலயா, இருக்கற பிஸியிலே, அந்தக் கல்யாணத்திலேயும் கலந்து கிட்டோம். கல்யாணத்துலே கொடுத்த தாம்பூலப் பை கொடுத்தாங்க. அந்த செலவெ எல்லாம் மாநாட்டுச் செலவு கணக்குலே எழுதலீங்கோ!

மத்தபடி வேற ஒண்ணும் செய்திகள் இல்லங்க.

மாநாட்டை வெற்றி கரமா நடத்திக் காட்டிய எங்களுக்கு நாங்களே நன்றி தெரிவிச்சிக் கிட்டு கலஞ்சு போனோமுங்க.

அம்புட்டுத்தானுங்கோ!!

Thursday 24 January 2008

இது மொக்கையா - இல்லை

வாழ்க்கை :
------------

வாழ்க்கை ஒரு கடமை என்றால் அதை நீ நிறைவேற்று
வாழ்க்கை ஒரு விளையாட்டென்றால் அதை நீ விளையாடு
வாழ்க்கை ஒரு ஆனந்தம் என்றால் அதை நீ அனுபவி
வாழ்க்கை ஒரு சோதனை என்றால் அதை நீ சமாளி
வாழ்க்கை ஒரு சோகம் என்றால் அதை நீ எதிர்த்து நில்
வாழ்க்கை ஒரு புதிர் என்றால் அதை நீ விடுவி
வாழ்க்கை ஒரு போராட்டம் என்றால் அதனுடன் நீ போராடு
வாழ்க்கை ஒரு சவால் என்றால் அதை நீ சந்தி
வாழ்க்கை ஒரு அன்பு என்றால் அதில் நீ இன்பம் காண்
வாழ்க்கை ஒரு கனவென்றால் அதை நீ நனவாக்கு
வாழ்க்கை ஒரு அழகென்றால் அதை நீ ரசி
வாழ்க்கை ஒரு சத்தியம் என்றால் அதை நீ கடைப்பிடி
வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் என்றால் அதை நீ பயன்படுத்து
வாழ்க்கை என்பது கற்றுக்கொடுத்து வருபதல்ல
வாழ்க்கை என்பது வாழ்ந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்

Friday 18 January 2008

எழுதுனதுலே பிடிச்சது (யாருக்கு)

எல்லோருக்கும் வணக்கம்.

நம்ம கண்மணி பெஸ்ட் கண்ணா பெஸ்ட் னு ஒரு பதிவுலே - எல்லாப் பதிவர்களையும் அழைச்சு எழுதுனதிலேயே சிறந்தது எதுன்னு கேட்டிருந்தாங்க. சர்வேசன் வேற அந்தப் பதிவெல்லாம் கட்டம் கட்டிப் போடப் போறாராம். இருக்கட்டும்.

நான் 2007 ஆகஸ்டு மாசம் தான் வலைப்பூக்கள் பக்கமே வந்தேன். என்னுடைய இளமைக்கால மலரும் நினைவுகளை அசைபோடுவது என்று ஆரம்பித்தேன். ஆரம்பித்ததில் இருந்த வேகம் பின்னர் இல்லை. இன்னும் எழுத நினைத்தது ஏராளம் இருக்கிறது.

அடுத்து படித்ததில் பிடித்தது என ஒரு பதிவு ஆரம்பித்து நான் படித்தவைகளில் என் மனதுக்குப் பிடித்தவைகளை அப்படியே எழுதி வந்தேன். அதிலும் படித்தவை ஏராளம் - பிடித்தவை ஏராளம். எழுதியதோ கொஞ்சம் தான்.

நண்பர் தருமியின் தயவால் நண்பர் ராம் தலைமையில் மதுரை மாநகரம் என்ற குழுப்பதிவிலும் எழுதி வந்தேன்.

ஏனோ தெரியவில்லை. எழுதுவதில் இருந்த விருப்பம் பதிவுகளைப் படித்து மறுமொழி இடுவதற்கு மாறியது. அதிக மறுமொழி இட்டவர்கள் பட்டியலில் முதலில் எனது பெயர் தொடர்ந்து இருந்த வண்ணம் அதிகப் பதிவுகளைப் படித்தேன். அதிக மறுமொழிகள் இட்டேன். ஒரு சமயம் அனானிமஸ்ஸையும் தாண்டி எனது பெயர் முதலில் இருந்தது.

எனக்கு எழுதியதில் இருந்த இன்பத்தை விட பதிவுகளைப் படித்ததிலும், பொருள் பொதிந்த மறு மொழிகள் எழுதியதிலும் அதிக இன்பம் பெற்றேன். அதிக நேரம் செலவிட்டேன். அதிக நண்பர்களைப் பெற்றென்.

இப்போது கண்மணி கேட்டதால், எழுதியதைத் திரும்பப் படித்தேன். எழுதியதே குறைவு. அதில் சிறந்தது எது ? தாய்க்கு எல்லாக் குழந்தைகளையுமே சமமாகப் பாவித்துத் தான் பழக்கம். இருப்பினும் ஒரு குழந்தையிடம் சற்றே அன்பு அதிகம் இருக்கத்தானெ செய்யும்.

அதைப்போல , நான் மதுரை மாநகரத்தில் எழுதிய " மலரும் தீபத் திருவிழா நினைவுகள் " என்ற பதிவு மனதுக்குப் பிடித்த பதிவும் அதிக மறுமொழிகள் பெற்ற பதிவுமாகும். எனவே அப்பதிவினையே எனக்குப் பிடித்த - நான் எழுதியதில் சிறந்த - பதிவாகத் தேர்ந்தெடுக்கிறென்.

அழைத்த கண்மணிக்கு நன்றி. சர்வேசனுக்கும் நன்றி.

Tuesday 15 January 2008

புத்தாண்டு ( தை முதல் தேதி ) சபதம்.

சகோதரி நானானி 2008ம் ஆண்டு சனவரித் திங்கள் ஆறாம் நாள், புத்தாண்டுச் சபதப் பதிவில், என்னைத் தொடர் பதிவிட அழைத்திருந்தார்.
அதன்படி இப்பதிவு சர்வசித்து ஆண்டு தைத்திங்கள் முதல் நாளில் ( புத்தாண்டு இது தான் எனச் சிலர் சொல்கின்றனர்) இடப்படுகிறது.

இது புத்தாண்டுச் சபதமோ பொங்கல் சபதமோ எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். பொதுவாக நான் என்றுமே சபதங்கள் எடுத்ததில்லை. ஏனெனில் அதைப் பற்றி இது வரை சிந்திக்க வில்லை. சில ஆண்டுத் தொடக்கங்களில் சிலவற்றைச் செய்ய வேண்டும் எனவும் சிலவற்றை செய்ய வேண்டாம் எனவும் நினைப்பது உண்டு.

செய்ய வேண்டும் என்பது ஆண்டு முழுவதும் அல்லது வாழ்வு முழுவதும் கடைப் பிடிக்க வேண்டிய செயலாக பொதுவாக இருக்காது.
ஒரு நிகழ்வினை நிகழ்த்த வேண்டும் எனவோ, ஒரு செயலைச் செய்ய வேண்டும் எனவோ, ஒரு முறை செய்யக் கூடிய செயலாகத்தான் இருக்கும். அதை நிச்சயம் முதல் மாதமே செய்து விடுவேன். ஆகவே அதைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை.

செய்ய வேண்டாம் என்பது உடனடியாக நிறுத்தப் பட வேண்டிய செயலாக இருக்கும். அதையும் உடனடியாக நிறுத்தி விடுவேன். அச் செயலை மறுபடியும் செய்ய வேண்டிய கட்டாயம் நிச்சயமாக வராது. தேவை எனில் மறு பரீசீலனைக்குப் பிறகு செய்வேன்.

ஆகவே இந்த சபதம் என்ற சொல்லெல்லாம் எனக்கு ஒத்து வராது. இருப்பினும் சகோதரி கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப சில சபதங்களை எடுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

மங்களூர் சிவாவின் நண்பர் ரூபஸ் தன்னுடைய பதிவில் ( http://rufezarul.blogspot.com/2008/01/blog-post.html) ( கண்ணாடி) சில சபதங்கள் எடுத்திருந்தார். அப்பதிவினைப் படிக்கும் போது அவர் எடுத்த சபதங்கள் எனக்கும் ஒத்து வரும் போல ஒரு சிந்தனை தோன்றியது. இச்சிந்தனையை அப்பதிவினில் மறு மொழியாகவும் தெரிவித்தேன். அதன்படி அச் சபதங்களையே வாழ்வில் முதன் முறையாக எடுக்க விரும்புகிறேன். கடைப் பிடிக்கவும் ஆசைப் படுகிறேன்.

1. கடன்வாங்கி யாருக்கும் உதவி செய்யக்கூடாது. குறிப்பாக சொந்தக்காரர்களுக்கு. ( இது வரை கையைச் சுட்டுக் கொள்ளவில்லை)

2.போதும் என்ற மனம் சிறந்ததுதான். ஆனாலும் இறைவன் கொடுத்த திறமைகளை நன்றாகப் பயன்படுத்தி மேன்மேலும் உயரவேண்டும்.
(எனது தற்போதைய உயரம் 165 செ.மீ தான்)

3. அவ்வப்போது தோன்றும் கவிதைகள், கதைகள் மற்றும் சிறுசிறு எண்ணங்களை வலைப்பதிவில் எழுத வேண்டும். ( எதை எழுதினாலும் மறு மொழி தருவதற்கு ஏற்பாடு பண்ணிடலாம்). யார் வேண்டுமானாலும் படிக்கலாம் - அது அவர்கள் ஹெட் லெட்டர்.

4. படிப்பதற்கு சிரமப்படும் மாணவ, மாணவிகளுக்கு முடிந்த உதவியை செய்ய வேண்டும். ( மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இப்போது அதிகம் வருகிறது)

5. மற்றவர்க்கு விட்டுக் கொடுத்து, மற்றவர் மனமகிழ, நாமும் மகிழ வேண்டும்.

6. 2007ல் மறு மொழிகள் அதிகம் எழுதியாகி விட்டது. பதிவுகள் மிகக் குறைவாகவே எழுதி இருக்கிறேன். இக்குறையை களைய வேண்டும்.

7. தொலைபேசிக் கட்டணம் மாதம் 2000 வருகிறது ( இணையத்தில் அதிக நேரம் செலவிடுவதால்). சக பதிவர், எனது துணைவி, ( வலை மொழியில் தங்கமணி) இது அதிகம் எனவும், குறைக்க வேண்டும் எனவும் கூறி இருக்கிறார். கவனிப்போம்.

8. போதாதா ஏழு - சபதமில்லாமல் ஒன்று. துளசி தளம் முழுவதும் படித்து விட வேண்டும்.

பி.கு: சுட்டி கொடுக்கத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் தனி மடலில் உதவலாம்.

அப்பாடா - பதிவு போட்டாச்சு. நானானி மற்றும் ரூபஸ் படிக்கணும்.

Tuesday 8 January 2008

ரசிகனின் வேண்டுகோள் - புதிய பதிவு

சில காரணங்களினால் இப்பதிவு மதுரைக் குழுப் பதிவிலிருந்து இத்தனிப் பதிவிற்கு மாற்றப் பட்டிருக்கிறது
-----------------------------------------------------------------------------------------------

அருமை நன்பர் ரசிகன் என்னை TAG செய்து விட்டார். ஏதெனும் எழுத வேண்டுமாம். என்ன எழுதுவது. மொக்கையாக இருக்க வேண்டுமாம். மொக்கன்னா என்னா ? தெரியாதே ? பாக்கலாம். (மொக்கச்சாமி ன்னு பேரு வைக்கணுமாம் பதிவுலே யாருக்காச்சும் )

பொதுவா நான் ஒரு கொள்கை ( அப்டின்னா என்னன்னு தெரியாதவங்க தனி மடல்லே வாங்க - அருமையா விளக்கம் தரேன்) வச்சிருக்கேங்க. அதாவது இணைய நண்பர்கள் யாராச்சும் மதுரைக்கு வந்தா அவங்களெ தம்பதி சமேதரா சந்திச்சுடறதுன்னு.

நான் மொத மொத பதிவு ஆரம்பிச்சு கொஞ்ச நாள்ளேயே நண்பர் தருமியைச் சந்தித்தேனுங்க. அலுவலகம் வந்திருந்தார். பார்த்தோம் - பேசினோம் - அடிக்கடி சந்திக்கலாம்னு சொல்லி விடை பெற்றார். அப்புறம் சில முறைகள் அலை பேசியில் பேசினேன் / பேசினார். ஆ.வி யிலே வந்த அவரது வலைப்பூவினைப் பற்றிய செய்தியெ நான் தான் மொத மொதல்லே அவருக்குச் சொன்னேன். ( மீ த பர்ஸ்டு). அப்புறம் சந்திக்கும் வாய்ப்பு வரலே. ஒரே ஊர்லே தாங்க இருக்கோம்.

அருமை நண்பர் தருமிக்கு இதுமூலமா வாழ்த்து சொல்லலாமில்லையா.

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

ம்ம்ம் அப்புறம் நண்பர் ஓசை செல்லா இடுகையைப் பாத்துட்டு சகோதரி அனுராதாவை ம.பா வோடு சென்று பார்த்தேன். பேசிக்கிட்டு இருந்துட்டு நலம் விசாரித்து விட்டு வந்தோம். நாளை சண்டே தானே - போய்ப் பார்க்கலாமான்னு ம.பா கிட்டே கேட்டேன். நீங்க சொன்னா அப்பீல் உண்டான்னு சொல்லிட்டாங்க. நாளைக்கு அலுவல் நிமித்தம் தடை ஏதும் இல்லையெனில் நிச்சயம் சந்திப்போம். ( அதென்ன அலுவல் நிமித்தம் தடைன்னு உடனே யாராச்சும் கேக்குறீங்களா - அது ஒண்ணும் இல்லீங்க - எங்கேயாச்சும் ஏதேனும் நடக்கும் - நான் பாத்து ஒழுங்கு பண்ணணும் - இதான். நடக்குறதெ ஒழுங்கு பண்ற டிராபிக் கான்ஸ்டபிள் இல்லீங்கோ)

பாத்துட்டு வந்து பதிவு போடுறேன்.

ம்ம்ம் அடுத்து யாருங்க வரிசையிலே ? அடடா நம்ம களவாணிப் பொண்ணு - மதுரை வழியா பெரியகுளம் போகுது - பாத்துடலாம்னா என்ன காரணமோ சொல்லாம போய்டிச்சி பெரியகுளத்துக்கு - ம்ம்ம் வெய்ட்டீஸிங்க் To see her.......

சன் டிவீலே அசத்தப் போறது யாருலே மதன் பாப் இப்போ இப்போ சொல்றாரு. OPPERTUNITY and PREPARATION தான் லக்குண்றதுன்னு. இது சும்மா இங்கே தேமேன்னு எழுதிக்கிட்டு இருக்கும் போது காதுலே லேசா விழுந்தது.

ம்ம்ம் அப்புறம் நம்ம பாசமலர் மலர் சபாபதி. அயல் நாட்டுலேந்து ஒரு வாரம் வந்துட்டுப் போனாங்க - குடும்ப சகிதமா. திருநகர்லே அவங்க வூட்லே நானும் வழக்கம் போல குடும்ப சகிதமா போய் பாத்துட்டு வந்தேனுங்க. ஒரு 45 நிமிடம் பேசிட்டு வந்தோம். நல்லா பேசினாங்க - நல்லா பழகினாங்க - ரொம்ப நாளா நண்பர்கள் போல பேசினோமுங்க. அவரது கணவர் சபாபதி, மகள், மாமனார், மாமியார், மச்சினப் புள்ளே எல்லோரெயும் அறிமுகப் படுத்தி வைச்சாங்க. ஆங்கிலத் துறையில் புகழ் பெற்ற கல்லூரியில் ஆசிரியராக வேலை செஞ்சிட்டு இப்ப தமிழ்லே இணையத்துலே கலக்கிகிட்டு இருக்காங்க.

ம்ம்ம்ம்ம் - அப்புறம் - வரிசையிலே சந்திரமௌளி கணபதி நிக்குறாரு. யாருங்க இது - யாருக்காச்சும் தெரியுமா - அட நம்ம மதுரையம்பதிங்க. இப்ப நேரம் சரியில்ல - பொங்கல் வரைக்கும் இருக்கார். சந்திச்சுடுவோம்ல.

அப்புறம் நம்ம சிவாங்க - மதுரைக்கு வரேன்னு சொல்லி இருக்காரு. சனவரி 27ம் தேதி சந்திக்க அனுமதி கொடுத்துருக்காரு. ( கொடுத்தாரா - கொடுத்தேனா - தெரில). சந்திச்சுருவோம்.

இன்னும் யாரெல்லாம் மதுரைக்கு வரீங்க - சொல்லுங்க - சிவப்புக் கம்பளமெல்லாம் ஆர்டர் பண்ணணும் - சொல்லிட்டு வாங்க. சந்திக்கலாம். பழகிப் பாக்கலாம். என்ன நான் சொல்றது.

நம்ம கீதா சாம்பு மாமாவோட மதுரைக்கு வந்துட்டுப் போய் இருக்காங்க - தெரியாமப் போச்சுங்க - பாக்க முடிலே - அதனால் என்ன - சென்னைலே போய் பாத்துடுவோம். அவ்ளோ தான்

ஆமா இடுகைன்னா நீள, அகல, உயர, கன பரிமான அளவுகள் எல்லாம் இருக்கா - தெரியாதுங்க - சரக்கு இருக்கற வரைக்கும் எழுதலாம். இடுகை சைஸ் எல்லாம் தெரிஞ்சுக்கணுமா என்ன. ( சிவா சைஸ் எல்லாம் நான் சொல்றென் நான் சொல்றேன்னு குதிக்கிறாரு)

aamaa நானு நாலு பேர மாட்டி வுடணுமாமே - யாரெ மாட்டலாம்

1. தருமி
2. துளசி கோபால்
3. கேயாரெஸ்
4. பாசமலர்

ரசிகன் போதுமா - இன்னும் வேணுமா

அன்புடன் சீனா

Monday 7 January 2008

இம்சையின் இம்சை தாங்க முடியாமல் இப்பதிவு

அன்பர்களே!
நண்பர்களே!
வலை உலக மொக்கையர்களே!
கும்மி அடிக்கும் கும்மியர்களே!
மொக்கை போடாத மொக்கையர்களே!
பெண் பதிவர்களே!
குழந்தைகளே!

வேற யாராச்சும் விட்டுப் போயிருந்தா பின்னூட்டத்திலாவது அல்லது தனி மடலிலாவது அல்லது தொலை பேசியிலாவது அல்லது சாட்டிங்கிலாவது நினைவுறுத்தினால் அவர்களது கோரிக்கை கனிவுடன் கன்சிடர் செய்யப் படும்.

என்னா இந்த பில்டப்பு ?? எதுக்கு இதெல்லாம் ?? யாருக்குத் தெரியும். இதெல்லாம் இப்படிச் சொன்னாத்தான் இதெ மொக்கன்னு ஒத்துக்குவாங்களாம் - சிவா, கேயாரெஸ், ரசிகன் எல்லாம்.

இவங்க எல்லாம் ஒத்துக்கலேன்னு யார் அழுதாங்களாம். இதென்ன ISO 9999 certificate - aaaa ????? ம்ம்ம்ம் - இவங்க தான் இதெக் கொடுக்குறதுக்கு அத்தாரிட்டீயா ?? என்ன கொடும இது சரவணன் ??

ஆமா என்னன்னவோ எழுதுறோமே - இதே எழுத மாட்டோமா ?

ஒரு கவுதெ ஞாபகத்துக்கு வந்துச்சி

நீயும் நானும் ஒண்ணு !
காந்தி பொறந்த மண்ணு !
டீக்கடையிலே நின்னு !
தின்னு பாரு பன்னு !

என்னெ அருமையா எழுதி இருக்கான்யா - சும்மாவா சொன்னாங்க யார் வேணா கவுத எழுதலாம்னு ! மரபுக் கவிதை - புதுக் கவிதை - வரிக்கவிதை - எழுத்துக் கவிதை -தூள் கெளப்புறாய்ங்கய்யா நம்ம ஆளுங்க!

ஒருத்தன் எஸெமெஸ் அனுப்புறான் - கீழே பாருங்கய்யா

: quote

ரஜனியே புரிஞ்சுக்கவே முடிலே

பாட்ஷாவிலே சொல்றாரு : எனக்குப் பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு
சிவாஜிலே சொல்றாரு : பன்னிங்க தான் கூட்டமா வரும்

: Un quote

நான் சொல்லலெப்பா - யாராச்சும் ஆட்டோவுக்கு அட்வான்ஸ் கொடுக்காதீங்க - ஆமா சொல்லிப்புட்டேன்

என்ன கொடுமை சரவணன் இது

one more SMS :

Hai ! I am puppuk kutty - studying LKG "B" in dubakur school. I lost my "Rubber vaichcha pencil" - The pencil costs Rs 3/- I dont know who you are; But if you forward this message, i will get one paise from the world bank. If you have heart or lungs or kidney or whatever, Please FORWARD this mail to atleast TEN people .... Do not break this chain ... Do not send this to me .. Do not try to contact world bank ....

சேம் பிளட்

ம்ம்ம் வங்கிக்கு ஓரு கஸ்டமர் கிட்டே இருந்து ஒரு லெட்டர் வந்துச்சாம் - டேமேஜர் படிச்சிட்டு கமெண்டு ( மறுமொழி ன்னு சொல்லலாமா) எழுதுனாராம் அந்த லெட்டர்லே

"ரசிகா - பிளீஸ் ஃபாலோ அப் வெரி குலோஸ்லி"

மறு நாளிலேந்து ரசிகன் அவர் பின்னாலேயே போனாராம் - அவர் எங்கே போனாலும் - ஏன்னு இன்னிக்கு வரை யாருக்குமே தெரில.

ம்ம்ம்ம்

போரடிக்குதாய்யா !! நிறுத்திடலாமா !! வேணாம் - மத்த மொக்கை யரெல்லாம் நிறுத்தச் சொல்லு - நானும் நிறுத்திடறேன்.

இது http://iimsai.blogspot.com/2008/01/2000.html லே இம்சை என்ன எழுதச் சொன்ன பதிவு.

வர்ட்டா ......