ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Monday 25 January 2010

ஒரு விழிப்புணர்வு நிகழ்வு - மதுரைப் பதிவர்கள்


அன்பின் சக பதிவர்களே !

மதுரையில் உள்ள தமிழ்ப் பதிவர்கள் ஒன்று கூடி ஒரு விழிப்புணர்வு - பொது நல நிகழ்வு ஒன்றை நிகழ்த்த விரும்பினர். அதனைச் செயலாக்க ஒரு கருததரங்கத்தைக் கூட்டி உள்ளனர்.

வளரும் தலை முறையினரை நல்வழிப் படுத்த, பெற்றோர்க்கும் ஆசிரியர்க்கும் பயனுள்ள கூட்டத்தை நடத்த இருக்கின்றனர்.

இதில் மனநல மருத்துவர் ஷாலினி அவர்கள் கலந்து கொண்டு கருத்துகளை பரிமாற உள்ளார். குழந்தைகளுக்கு நல்ல தொடுகை - அல்லாத தொடுகை - எவை என்பதை உணர்த்தும் படியாக பாதுகாவலராகிய பெற்றோர்க்கும் ஆசிரியர்க்கும் இக்கருத்தரங்கம் பயனளிக்கும்.

எனவே விருப்பமுள்ளவர்களை கலந்து கொள்ள மதுரைப் பதிவர்கள் அழைக்கின்றோம். மற்றும் நிறுவனங்களிலிருந்தும் தங்களது ஆர்வலர்களை அனுப்பலாம். இவர்கள் அனைவரும் சமூக நலம் கருதி நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற 29.01.2010 க்கு முன்னதாக விருப்பத்தினைத் தெரிவித்தால் நலமாக இருக்கும்.

அனுமதி இலவசம் !

நாள் : 31.01.2010 ஞாயிறு
காலம் : மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை
இடம் : அமெரிக்கன் கல்லூரி ( செமினார் ஹால் )
கருத்தரங்க ஆய்வர் : மன நல மருத்துவர் ஷாலினி
M.B.B.S., Ph.D., F.R.P.S.
Consultant Psychiatrist
"MIND FOCUS"
Psychiatric Services and Research Foundation

தகவலுக்கும் முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ள :

தருமி : 9952116112
சீனா : 9840624293
கார்த்திகைப் பாண்டியன் : 9842171138
ஸ்ரீ : 9360688993

நல்வாழ்த்துகள்.
நட்புடன் சீனா.
மதுரை தமிழ்ப் பதிவர்கள் .

Sunday 3 January 2010

அன்ன தான மகிமை

அன்பின் பதிவர்களே

கர்ணனைப் பற்றி பல கதைகள் கேட்டிருக்கலாம் - படித்திருக்கலாம்

இதோ ஒன்று

அன்னதான மகிமையை விளக்கும் கதை

கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட - தான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்தவன். தானத்திற்கே பெயர் பெற்றவன். தானம் என்றால் என்ன என்பதை உலகிற்குக் காட்டியவன். அவன் இறந்ததும் கண்ணனால் சுவர்க்கத்துக்கு அனுப்பப்பட்டவன்.

அங்கு சென்று சகல வசதிகளுடன் இருந்தும் அவனுக்கு ஏனோ பசி அடங்கவில்லை. எப்பொழுதும் வயிற்றுப்பசி இருந்து கொண்டே இருந்தது. அவனும் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போனான். பிறகு சுவர்க்கத்தின தலைவனிடம் சென்று கேட்டான். நான் எவ்வளவு தான தருமங்கள் செய்திருக்கிறேன் - எனக்கு ஏன் இக்கொடிய தண்டனை - எனக்கு ஏன் இப்படிப் பசிக்கிறது எனக் கேட்டான்.

தலைவனோ - கர்ணா நீ பூவுலகில் வாழ்ந்த காலத்தில் பொன்னும் பொருளும் மனியும் ஏன் உன்னுயிரும் தானமாகக் கொடுத்து பெரும் புகழ் பெற்றவன். ஆனால் சிந்தித்துச் சொல் - எப்போழுதாவது யாருக்காகவாது அன்ன தானம் செய்திருக்கிறாயா - எனக் கேட்டான்.

கர்ணனுக்கு அன்ன தான செய்ததாக நினைவு இல்லை. அன்ன தானம் செய்யாததால் தான் இப்பொழுது வயிற்றுப்பசி அடங்க வில்லை எனவும் கூறக் கேட்டான். அப்படியானால் இதற்கு என்ன தான் வழி எனக் கேட்ட போது - தலைவன் கூறினான் - உனது வலது கை ஆள் காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் - பசி அடங்கி விடும் என்றான்.

கர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. விரலைச் சப்பினால் பசி அடங்குமா - என்ன இது என ஐயப்பாடு இருந்தாலும் - வேறு வழி இல்லை என வலது கை ஆள் காட்டி விரலை வாயில் வைத்து சப்ப - பசி உடனே அடங்கிற்று.

ஒன்றும் புரியாத கர்ணன் - இது எப்படி மாய மந்திரம் எனக் கேட்க - தலைவன் கூறினான் - அன்பின் கர்ணா - நீ பூவுலகில் வாழும் போது உன்னிடம் ஒரு வறியவன் பசியுடன் வந்து எங்கு அன்னதானச் சத்திரம் இருக்கிறதென்று கேட்க - நீயும் உனது வலது கை ஆள்காட்டி விரலால் இதோ இப்பக்கம் செல்க என வழி காட்டினாய். அந்த புண்ணியச் செயல் - நற்செயல் உனக்கு இப்பொழுது உதவுகிறது எனக் கூற -கர்ணனும் அன்ன தான மகிமையை உணர்ந்தான்.

பதிவர்களே - நாமும் பிறந்த நாள் - திருமண நாள் - என்று கொண்டாடும் போதெல்லாம் - முதியோர் இல்லங்களில் வாழ்பவர்கள் - அனாதை இல்லங்களில் வாழ்பவர்கள் - வறியோர் இவர்களுக்கெல்லாம் அன்ன தானம் செய்தால் அவர்கள் பெறும் மகிழ்ச்சியானது நமக்கும் மகிழ்ச்சியினையும் புண்ணியத்தைனையும் தரும் .

வாருங்கள் அன்ன தானம் செய்வோம் - இனிய புத்தாண்டில் இச்செயலைச் செய்வோம்

அனைவருக்கும் இனிய இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்

அன்புடன் - நட்புடன் சீனா