ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Wednesday 9 October 2013

இன்பச் சுற்றுலா - 6, 7 மற்றும் 8 ம் நாள் அக்டோபர் 2013

அன்பின் நண்பர்களே ! 

2013 அக்டோபர் 6, 7 நாட்களில் ஒரு இன்பச் சுற்றுலாவாக நானும் எனது அருமைத் துணைவியாரும் திருச்சி - பதிவர் சந்திப்பு -  மற்றும் தஞ்சை மாநகரில் உள்ள  கோவில்கள் - வைத்தீஸ்வரன் கோவில் மற்றும்  தஞ்சையில் நான் 1950ல் பிறந்து வளர்ந்து தவழ்ந்த வீட்டினையும், ஓடி விளையாண்ட சஙகர மடத்தினையும் மேல வீதியில் உள்ள சங்கர நாராயணர் கோவிலையும், காமாட்சி அம்மன் கோவிலையும், பெரிய கோவிலையையும்,  மாரியம்மன் கோவிலையும் கண்டு மகிழ்ந்தோம். 

மறு நாள் வைத்தீஸ்வரன் கோவில் சென்று சுவாமி தரிசனம் செய்து மகிழ்ச்சியோடு மதுரை திரும்பினோம். 

06.10.2013 : 

திருச்சியில் பதிவர் வை.கோபால கிருஷ்ணன் பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் எதிர் பாராத விதமாக நவராத்திரி கொலு வந்து விட்ட படியால் பெண் பதிவர்கள் பலரால் கலந்து கொள்ள இயலவில்லை. விடுவோமா நாங்கள் . நண்பர்கள் வை.கோவும் தமிழ் இளங்கோவும் நாங்கள் தங்கி இருந்த பெமினா ஹோட்டலுக்கே வந்து சேர்ந்தனர். மாலை 5 மணீ அளவில் பதிவர் சந்திப்பைத் துவக்கினோம். 

ஏறத்தாழ இரண்டு மணீ நேரம் அளவளாவி மகிழ்ந்தோம்.

புகைப் படங்கள் கீழ்க்கண்ட பதிவுகளில் உள்ளன்.

இருவரும் பதிவர் சந்திப்பினைப் பற்றி எழுதிய பதிவுகள் : 



பிறகு பெண் பதிவர்களைச் சந்திக்க அவர்கள் வீட்டிற்கே நாங்கள் வைகோவின் துணையோடு சென்று சந்தித்து பேசி மகிழ்ந்து திரும்பினோம்.  திருமதி கீதா சாம்பசிவம், திருமதி ஆதி இலட்சுமி மற்றும் ரிஷபன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இரவு நெடு நேரமாகி விட்டது. 

07.10.2013

அயர்ந்து தூங்கிய பின்னர் மறு நாள் காலை 8 மணி அளவில் தஞ்சை புறபட்டோம். தஞ்சையில் முதலில் சென்ற இடம் அகத்தியர் குடில். அங்கே அருள் வள்ளலார் வீற்றிருக்கிறார்.  அருட்பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை என்று நாம் அறிந்தோ அறியாமலோ அனைவரும் இத்தொடரை உச்சரித்து உள்ளோம். இந்த இடத்தில் அமர்ந்து அகத்தியர் குடிலின் தலைவரோடு உரையாடிய போது அதன் பொருளை உணர்ந்தோம். பிறர் துன்பம் போக்க மனம் கசிந்துருகலே கருணை என்று ஒரு ஒருமைப் பாட்டியக்கத்தைத் தோற்றுவித்த வள்ளலாரின் உருவச் சிலையோடு அந்த மடம் திகழ்கிறது. மடம் உண்மையில் நம் மடமை போக்குகின்ற இடம்தான் - அதை உணர்ந்தவற்கு !

மனமும் மருந்தும் மலரும் நம் நோய் தீர்க்குமென்பதை அங்கு உரையாடிய அந்த நேரங்களில் உணர்ந்தோம். உள்ளத்தில் ஓர் இடத்தை ஏற்படுத்தி  - அங்கே உன் நினைவை இறைவனாக வீற்றிருக்கச் செய் என்ற தத்துவம் செய்முறை விளக்கம் போல் காட்சி தந்தது. ஓர் உயர்ந்த பீடம் அதன் மேல் ஓர் அழகிய சிம்மாசனம். அதன் நேர் மேல் ஓர் ஒளிவிளக்கு.  அந்த விளக்கொளியில் நம் மனத்தைக் கொண்டு போய் வீற்றிருக்கச் செய்தால் இறையன்பு தோன்றும். 

இதுதான் இரண்டாம் நாள் இன்பச் சுற்றுலாவில் நாங்கள் தஞ்சையில் முதலில் கண்ட இடம். 

உடனே எங்கள் உள்ளத்தில் காணும் இறைவனைக் காணத் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் ( பெரிய கோவில்) நோக்கிச் சென்றோம். காலால் நடந்து கைகளால் தவழ்ந்து தலையால் நகர்ந்து உடல் தேய்ந்து எலும்புவாய் உருண்டு பிரண்டு கைலாயம் சென்ற காரைக்கால் அம்மையாரின் காட்சியைக் கண்ணிலும் மனத்திலும் தேக்கி கால்கள் சுட்டெரிக்கும் உச்சிப் பொழுதிலே ஓடிச் சென்று பெருவுடையாரைக் கண்ட காட்சி பெரிதும் மகிழ்வினைத் தந்தது. ( பெரிய கோவிலைக் காண காலையிலும் மாலையிலும் செல்லுதல் வேண்டும் )

அடுத்து மதிய உணவிற்குப் பின் நான்  - 1 முதல் 5 வரை படித்த நாயணக்காரத் தெருவில் உள்ள டி.கே.சுப்பையா நாயுடு துவக்கப் பள்ளி சென்று தலைமை ஆசிரியை மற்ற ஆசிரியர்களுடன் கலந்துரையாடி என்னுடைய 1955 ஏப்ரல் முதல் -1960 மார்ச் வரை   எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களை நினைவு கூர்ந்து மகிழ்ந்தோம். 

பள்ளியினைச் சுற்றிப் பார்த்து பழைய நினைவினை மனதிற்குக் கொண்டு வந்தேன்.  

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆண்டு விழாவிற்கு அவசியம் வந்து கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொண்டனர். அழைப்பு அனுப்புக - வருகிறோம் எனக் கூறி அலைபேசி எண், முகவரி, ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டோம்.  

1960 ஏப்ரல் முதல் 1963 மார்ச் வரை - 6,7 மற்றும் 8ம் வகுப்பு வரை படித்த - தஞ்சை தெற்கு வீதியில் உள்ள வீரராகவ உயர் நிலைப் பள்ளி இயங்கிக் கொண்டிருக்கும் மங்கள விலாஸ் கட்டிடத்திற்குச் சென்று ஆசிரியப் பெருமக்களைக் கண்டு அறிமுகப் படுத்திக் கொண்டு வகுப்பறைகளுக்கும் சென்று மகிழ்ந்தோம். 

வகுப்பறையில் சென்று மாணவச் செல்வங்களைக் கண்டு - உரையாடி வந்தேன். இப்பள்ளியில் படித்துத் தான் வங்கியில் முதனமை மேலாளராகப் பணியாற்றும் அளவிற்கு நான் பண்பு பெற்றேன். நீங்களும் நன்றாகப் படித்து நல்ல பிள்ளைகளாக வளருங்கள் என்று வாழ்த்தினேன். 

அன்பால் மாணவச் செல்வங்கள் என்னிடம் கையொப்பம் கேட்டு வண்டுகளாய் என்னை மொய்த்துக் கொண்டனர். நானும் மட்டற்ற மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் அன்புடனும் வாழ்த்துகளுடனும் கூடிய கையொப்பம் இட்டேன். 

படித்தது வீரராகவ உயர்நிலைப் பள்ளி என்றாலும் விளையாடச் சென்றது எல்லாம் கல்யாண சுந்தரம் உயர் நிலைப் பள்ளி தான். ஆகவே அங்கும் சென்று ஆசிரியப் பெருமக்களைக் கண்டு பேசி மகிழ்ந்து வந்தோம். 

பிறகு நான் பிறந்த, மேல வீதியில் சங்கர மடத்திற்கு அருகில் உள்ள வான்மாமலை மடத்தின் வீட்டினைத் தேடிக் கண்டு பிடித்து வீட்டினில் உள்ளவர்களிடம் என் பிறந்த வீடு இது ( 1950 ) எனப் பெருமை பேசி வீட்டினைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தேன். அன்றைக்கு இருந்தது போலவே இன்றும் பழமை மாறாமல் உள்ளது. 

அதே தெருவில் அருகில் உள்ள சங்கர நாராயணர் கோவில் அன்று அடிக்கடி நான் சென்று வந்த இடம். நான் சுற்றி வந்த கோயில் வளாகம் அப்படியே என் நினைவிற்கு வந்தது. 

அதனால் தான் என்னையும் அந்த இறைவன் பெயரால் - வீட்டில் சங்கர் என்றே அழைத்தார்கள். 

மதிய உணவிற்குப் பின் சென்ற இடம் தஞ்சையில் சிறப்பு வாய்ந்த அரண்மனையில் உள்ள பெரியதொரு பழம் பெருமை வாய்ந்த நூலகம்.
இதன் வரலாற்றைக் கேட்ட பொழுதினிலேயே நாமறிந்த வரலாற்றில் எத்த்னை இடைச் செருகல்கள் என்பதனை அறிந்து பெருமூச்செறிந்தோம். 

வரலாறு எப்படிக் காக்கப் பட வேண்டுமென்ற அரசு நடை முறைகள் -. எத்தனை செயல்முறைகள் - அத்தனைக்கும் செப்பேடுகள் - ஓலைச் சுவடிகள் - கையெழுத்துச் சுவடிகள் - ஆவணங்கள் - அறிவியல் மருத்துவம் ஓவியம் அரசியல் வரலாறு என்று வகை வகையாய் எண்ணற்ற நூற் பதிவுகள் . இவற்றை பாதுகாத்த அறிஞர்கள்.
   
அடுத்து நாங்கள் சென்று வந்த காமாட்சி அம்மன் கோவில் தெருக்கோடியில் அமைந்த பெரிய கோவில். அக்கோவிலுக்கும் சென்று அம்மனை நவராத்ரிக் கோலத்தில் கண்டு மகிழ்ந்தோம்.

தஞ்சையைச் சார்ந்த மிகவும் சிறப்பு வாய்ந்த மாரியம்மன் கோவிலுக்கும் சென்று வந்தோம். பெரியதென்றால் மிகவும் பெரியதாய் இருந்தது. 

08.10.2013

அடுத்த நாள் வைத்தீஸ்வரன் கோவில் சென்று திவ்ய தரிசனம் கண்டு இறை யருள் பெற்று மகிழ்வுடன் மதுரை திரும்பினோம். 

தஞ்சையில் எங்களீன் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அழைத்துச் சென்று இடங்களைப் பார்த்து மகிழ அன்புடன் வந்து உதவிய பண்பாளர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள். இவர் கரந்தைத் தமிழ்ச் சங்கம் நடத்தும் உமா மகேசுவரனார் மேல் நிலைப் பள்ளியில் முதுநிலைக் கணித ஆசிரியராகப் பணியாற்றுபவர். தஞ்சையில் நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் இவர் அறிமுகமானவராக இருந்தது எங்களுக்கு மிகவும் உதவியாய் இருந்தது. 

கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன் முதலிய மூன்று நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர். தமிழ்ப் பொழில் இதழில் கரந்தைத் தமிழ்ச் சங்கப் பணிகள், சாதனைகள் குறித்து கட்டுரைகள் எழுதி வருகின்றார்.

அவர் இல்லத்திலேயே எங்களைத் தங்க வைத்து விருந்தோம்பிய அவரின் அன்பு எங்களைத் திக்கு முக்காட வைத்தது. அவர் பெற்றோரும் துணவியாரும பிள்ளைகளும் அருமையாய் எங்களை வரவேற்றனர்.   

அனைவருக்கும் நல்வாழ்த்துகள் 
நட்புடன் சீனா