ஜோதிஜியின் டாலர் நகரம் :
ஒரு தனிமனிதனின் வாழ்க்கைப் போராட்டமும் முன்னேற்றமும் எப்படி இருக்குமென்பதை இந்நூல் வெளிப்படுத்தி உள்ளது. அதில் ஆங்காங்கே சமுதாயப் பார்வையும் சற்றே தலை தூக்குகிறது. பொதுவாக திருப்பூரில் வாழ்பவர்களுக்கு இந்நூலில் கூறப்பட்டிருப்பவை இயல்பானதாக இருக்கலாம். ஆனால் திருப்பூரைப் பற்றி புதிதாக அறிபவர்களுக்கு வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கலாம்.
ஒரு வளர்ந்து வருகின்ற ஊர் - ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை செய்கின்ற ஒரு ஊர் - உழைப்பையும் உழைப்பின் பயனையும் அடுத்த மாநிலத்திற்கும் அயல் நாட்டிற்கும் தருகின்ற ஒரு ஊர் - வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்வதற்குத் தயங்காத மக்களைப் பெற்றிருக்கின்ற ஒரு ஊர் - முன்னேற்றமடைவதற்கு முட்டுக் கட்டையாக இருக்கின்ற சூழ்நிலைகள் உழைப்பாளிகளை வெறுப்படையச் செய்கின்றன எனபதை ஆதங்கத்தோடு எடுத்துரைத் திருக்கின்றார் ஆசிரியர்.
அயல் நாட்டின் வளர்ச்சிக்கும் பொருள் வரும் வழிக்கும் வழி வகுத்துக் கொடுக்கத் தயாராக இருக்கின்ற நாட்டாமைகள், உழைக்கின்ற ஊருக்கு உதவி வரத் தடுக்கின்ற வழி முறைகளை உள்ளத்தின் நெருடலோடு ஆங்காங்கே உணர்த்துகிறது இந்நூல்.
இயற்கை வளத்தை அழிக்கின்றது சாயக் கழிவுகள் என்றால் அதை நீக்கித் தொழில்வளம் பெறுவதற்கும், தனி ஒரு மனிதனுக்கும், அதனையே தொழிலாய்க் கொண்ட ஊருக்கும் வழி வகைகளைச் செய்வதற்கு ஆளுகின்ற அரசு உதவ வேண்டுமே என்ற ஆதங்கம் கருத்துக்களாய் வெடிக்கின்றது இந்நூலில்.
நூலின் துவக்கத்தில் வேலையின் அடிப்படை நிலையில் எல்லாம் தன் திறமையை மட்டுமே ஊன்றுகோலாய்க் கொண்டு உழைப்பில் போராடி
முன்னேறிய வரலாற்றைச் சோர்வின்றி ஒரு எழுத்தாளனின் பார்வையில் கொண்டு சென்றிருப்பது ஆசிரியரின் எழுத்தாற்றலை வெளீப்ப்டுத்துகிறது. தொழில் - வளர்ச்சி - போராட்டம் - பொருள் - வாழ்க்கை என்ற நிலைகளை எல்லாம் சொல்லும் போது ஆசிரியர் பாரம்பரியம் - கலாச்சாரம் - தாய் மொழிப் பற்று என்பதனை எல்லாம் ஆங்காங்கே சொல்லி இருப்பதும் நமமை எல்லாம் சிந்திக்க வைக்கிறது.
ஒரு ஊருக்கு உயிர் கொடுக்கின்ற தொழிலை, வளர்வதற்கு வழி வகை செய்ய வேண்டும். செய்தால் அது நாட்டின் நலத்திற்குத் துணை செய்யும் வளர்ச்சி தானே ! என்பதனை நூல் சொல்லாமல் சொல்கிறது.
எண்ணங்களை எழுத்தாக்குவதென்பது எல்லாராலும் இயலாது. ஆனால் அது ஜோதிஜிக்கு கை வந்த கலையாக வாய்த்திருப்பது நிச்சயம் பாராட்டப் பட வேண்டிய ஒன்று. பாராட்டும் தகுந்த நேரத்தில் இருப்பது அதற்கு இன்னும் மேன்மை சேர்க்கும்.
நல்வாழ்த்துகள் ஜோதிஜி
நல்ல சிந்தனைகளை இன்னும் தாருங்கள்.
ஆக்கம் செல்வி ஷங்கர்.
அன்புடன் சீனா