அன்பின் சக பதிவர்களே
கடந்த வியாழனன்று, செப்டம்பர்த் திங்கள் நான்காம் நாள், மதுரை மாநகரில், அண்ணா நகரில், ஒரு புதுமனை புகு விழாவில், நடை பெற்ற ஒரு மாபெறும் பதிவர் சந்திப்பு பற்றிய பதிவு இது.
மதுரையில் வசிக்கும் சீனா ( யாருப்பா அது ?) , செல்வி ஷங்கர் ( இது யாரு ?), புது வண்டு, நாடிக்கண்ணா, சிவமுருகன், நிலா, நந்து ஆகிய பதிவர்களும் மற்றும் நண்பர்களும் ( இவங்க எல்லாம் யாரு - பதிவர் ஆகப் போறாங்களா ? ) இனிய காலைப் பொழுதில் 11 மணி அளவில் சந்தித்தனர்.
சிவ முருகன் சற்றே தயக்கத்துடன் இருந்த படியாலும் (Reserved Type in first time meeting) - முன் அறிமுகம் இல்லாத படியாலும் அதிகம் பேசவில்லை. அவரது எழுத்துகள் பேசுமளவுக்கு அவர் பேச வில்லை. பொறுமையின் சிகரம். உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். அவர்து பதிவுகளைப் பற்றிய பேச்சு வந்த போது கலந்து கொண்டார்.
புது வண்டு, சீனா, செல்வி ஷங்கர், நந்து - இவர்கள் வழக்கம் போல் அதிகம் பேசினர். நந்து திறந்த வாய் மூட வில்லை. புகைப்படக் கருவியை இயக்குவது எப்படி என்று அவரது நிக்கான் கருவியினை இயக்கி - ஒரு சிறு பூவினை எப்படி படம் எடுக்க வேண்டுமென தரையில் முழங்காலிட்டு குனிந்து கருவியைத் தரையில் வைத்து நேரிடையாகவே கற்றுக் கொடுத்தார். ( பெரிய புகைப்பட நிபுனர் என நினைப்பு - ஒரு தடவை PIT ல் பரிசு வாங்கி விட்டார் என நினைக்கிறேன்)
புது வண்டின் மழலைகளுக்கான கதைகள் பற்றி நிலாவும் நந்துவும் பேசினர். குழந்தைகள் அதிகம் விரும்புவதாக அனைவரும் கூறினர்.
அருமையான மதிய விருந்துடன் சந்திப்பு இனிதே முடிந்தது.
ஆமா வலைப்பதிவர்கள் சந்திப்பு என்றால் என்ன ? அதைப்பற்றி எப்படிப் பதிவு போட வேண்டும் ? யாராவது சொல்லுங்களேன்.
நல்வாழ்த்துகளுடன் சீனா