ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Sunday 29 May 2011

சீனா - ஒரு அறிமுகம்

அன்பு நண்பர்களே !

ஒரு குழும நண்பர்கள் சந்திப்பில் - சந்தித்தவர்கள் பற்றிய ஒரு இடுகை இட்ட போது - சீனா என்பவரைப் பற்றிய ஒரு அறிமுகமாக இது எழுதப்பட்டது.

சீனா .... சீனா

எப்போது இடி இடிக்கும் ?
இல்லை !
எப்போது மின்னல் மின்னும் ?
இல்லை !
எப்போது காற்றடித்து மழை பெய்யும் ?
இயற்கை யாருக்குத் தெரியும் ?
தெரிந்தாலே தேவ இரகசியம் இல்லை !

இதைப் போல சீனா !
அது என்ன சைனா
என்று அவ்வப்போது
கேட்கத் தோன்றும் !

சிரித்த முகம் - சிந்தும் புன்னகை - சிறப்பே !
இருந்தாலும் இந்தச் சினம்
அவ்வப்போது தலை காட்டும் !
அந்தி மலைச் சாரலாய் !
எவர்க்கும் தெரியாது
என்ன மனநிலை என்று !

செய்வதெல்லாம் செயலே ! ஆம்
செயல்களே வழி பாடாய் சீரிய வழியில் !
நான் படித்தேன் குறள் ! ஆனால்
அதன் பாதை எல்லாம் அவர் செயல் !

கொடுப்ப தென்றால் பிடிக்கும் !
கோபுரமாய் கொடுக்கவே
உள்ளம் இனிக்கும் !
இருந்தாலும் எவர்க்கும்
தெரியாது இயக்கம் !
மனதுக்கு மட்டுமே தெரியும் !

மலர்ந்து மணப்பதுவே பயன் !
சொல்லாமல் செய்கின்ற
சோர்வற்ற வேலைகள் பல !

சோதனையை சாதனையாக்கும்
தத்துவம் தெரியும் !
வளர் தொழிலில் வழி காட்டும் பாங்கு !
வருவார் முகத்தில் தெரிகின்ற நம்பிக்கை !
வாங்குகின்ற பெயரெல்லாம்
வலக்கரம் செய்கின்ற வலிமையால் !

இதற்கு இலக்கணம் இல்லை !
இலக்கியம் உண்டு !
ஊரறிந்த உவகையினை
உளமறிந்து உவந்ததுண்டு !
தூக்கி விட்டுத் துணையாகி !
எடுத்தியம்பி எளிமையாய் !
ஏற்றமுற போற்றுமொழி
சொல்லி எங்கும் இனிக்கவே
இதயம் விரும்பும் !

கடிதோச்சி மெல்ல நகும்
காரியந்தான் அனைத்தும் !
சொல்லச் சிறந்த வழி
எளிமை ! எதிலும் இயல்பு !
இனிப்பதுவோ இதய மொழி !

எப்படியும் செயலாற்றும் ஏகலைவன் !
ஏக்கங்கள் ! தூக்கங்கள்! எதிர்த்தாலும்
ஏணியை விடாத ஐங்கரன் துணை !
ஆளும் ஆனைமுகன் அன்பன் !
அனைத்திலுமே அடக்கி வாசிக்கின்ற ஆற்றல் !
இரக்கத்திற்கும் ! இதயத்திற்கும் !
இறைமைக்கும் ! இலகுகின்ற
இன்முகம் இந்தச் சீனா !


---------------------------------






Tuesday 3 May 2011

மாவட்ட ஆட்சியரின் உரை

01.05.2011 காலை 11 மணி அளவில் மதுரை படிப்பாளிகள் சங்கமத்தில் - மதுரை மாவட்ட ஆட்சியர் திரு சகாயம். IAS அவர்கள் "நல்ல குடிமகனை உருவாக்குவது" என்ற தலைப்பினில் ஆற்றிய உரையின் சுருக்கம்.

இவ்வுலகில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு முறையால் சிறப்புப் பெற்றிருக்கிறது. பொருளாதாராத்தில் சிறந்து விளங்குகிறது அமெரிக்கா. பொது உடைமைத் தத்துவத்தை உலகிற்குப் பரப்பியது இரஷ்யா. நிறைந்த மக்கட்தொகை கொண்ட மிகப் பெரிய நாடு சீனா. உழைப்பால் உயர்ந்து நிற்கும் உன்னத நாடு ஜப்பான். நம் இந்தியத் திருநாடோ மிகப் பெரிய மக்களாட்சி நடக்கும் நாடு. இதன் தேர்தல் முறையே இதற்குச் சான்று.

இந்த நாட்டிலே நல்ல குடி மக்களை உருவாக்குவது ஒவ்வொருவரின் கட்டாயக் கடமையாகும். பள்ளிகளில் கற்றுத் தரும் கல்வியோடு மாணவச் செல்வங்களுக்கு மனிதத் தன்மையினையும் கற்றுத் தர வேண்டும். கல்வி கற்பிப்பதோடு, நல்ல மனிதனை உருவாக்குவதும் ஆசிரியர்களின் பணிதான். நான் மருத்துவராவேன் - நான் பொறியியல் வல்லுனர் ஆவேன் - நான் இந்திய ஆட்சிப் பணியில் அமர்வேன் என்கின்ற இளம் உள்ளங்கள் நான் நல்ல மனிதனாவேன் என்று உணர்ந்து கூறுகின்ற அளவுக்கு ஆசிரியர்கள் அவர்களை உருவாக்க வேண்டும்.

அரசு ஊழியர்கள் - உழைத்தால் ஊதியம் வருகிறது. இது என் தொழில் - இது அதற்குரிய ஊதியம் என்பதை விட அத்தொழிலை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். மனம் உழைப்பதைக் கடமையாகக் கொண்டால் மட்டும் போதாது. கருணையோடு உழைக்க வேண்டும். இருட்டில் வெளிச்சத்தைத் தேடுவதைப் போல பகலிலும் இருண்ட வாழ்க்கை நடத்துவோருக்கிடையே உண்மையானவரைத் தேட வேண்டும்.

திரு சகாயம் ஒரு அரசு உயர் அதிகாரியாக இருந்த போதும், அவர் செயலில் இருக்கின்ற மனிதத் தனமை நம்மை மனம் நெகிழச் செய்கிறது. ஏற்றமிகு செயல் - எடுப்பான பேச்சு - நேர்மையான உழைப்பு - இவை அவரை உயர்ந்த மனிதராக்குகிறது. ஊழலும் கையூட்டும் மலிந்து விட்ட சமுதாயத்தைச் சட்டத்தால் திருத்த நினைக்கின்ற, இந்திய ஆட்சித்துறையினைச் சார்ந்த ஒரு அதிகாரி மனிதத் தன்மையோடு செயலாற்றுவது அவருக்கு ஒரு உயர்ந்த தோற்றத்தினை அளிக்கிறது.

தமிழ் எப்படி வளர்கிறது என்பதற்கு ஒரு அருமையான செய்தியைக் கூறினார். அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி கற்கும் ஏழை மாணவர்கள் தான் எதிர் காலத்தில் தமிழ் மொழியினை எல்லோரிடமும் கொண்டு சேர்க்கும் தொண்டினைச் செய்பவர்கள் என்ற செய்தியினைத் தெளிவாகக் கூறினார்.அதனால் தான் இவர், மற்ற பள்ளிகளை விட இப்பள்ளிகளின் மீது அதிக அக்கறை காட்டுவதாகக் கூறினார். நடக்கப் பழகுகின்ற குழந்தைகளைத் தானே கையைப் பிடித்து அழைத்துச் செல்வோம். நன்றாக நடப்பவர்களை அல்லவே !

சட்டடத்தினை உருவாக்கும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் அதை மீறுபவர்களாக இருக்கக் கூடாது. சட்டத்தினைக் கையில் வைத்துக் கொண்டு அதன் எதிர்ப் பக்கத்திற்குத் துணை போகக் கூடாது. நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும் என்று எப்படி இளநிலை இள வயது அதிகாரியாக இருக்கும் போது நினைத்தோமோ - அதனை பதவி உயர்வினிலும் நினைத்துப் பணியாற்ற வேண்டும். அப்படி ஒரு மன நிலையில் அரசு உயர் அதிகாரிகளைக் காண்பதரிது. "இலஞ்சம் தவிர்த்து - நெஞ்சம் நிமிர்த்து " என்ற செய்திப் பலகையினை தன் அறையில் தன் இருக்கைக்கு மேலே மாட்டி வைத்திருக்கும் இவரைப் பாராட்டச் சொற்களே இல்லை. எந்நிலையிலும் மனச் சாட்சிப்படிப் பணியாற்ற வேண்டும் என்ற வேகம் அவரது புயல் வேகப் பேச்சிலிருந்தது. அவரது எளிய தோற்றம் மற்றும் மிடுக்கான ஆற்றல் திறன் அவரை ஒரு வரலாறு படைக்கும் மனிதராக ஆக்குகிறது. அத்தகைய மனிதரின் நெஞ்சில் ஈரம் உள்ளது என்பது எவ்வளவு இனிமையான நினைவு !

பேச்சுக்குச் சொல்வதுண்டு - "நீ என்ன பெரிய கலெக்டரா ? " என்று. ஆம் ! கலெக்டர் என்றால் எதையும் சாதிக்க முடியும். அதனால் தான் "படிப்பாளிகளாகிய நீங்கள் ஒரு நல்ல சமுதாயத்தினை உருவாக்குங்கள்" என்றார். பயிற்சி பெற்றவர்களாகத்தான் பலர் இருக்கிறார்கள். ஆனால் படித்துணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். நல்ல சமுதாயத்தை உருவாக்குங்கள் என்றார்.

அவர் நாமக்கல் மாவட்ட ஆட்சியராகப் பணி புரிந்த போது அவர் செய்த நல்ல செயல்களை எடுத்துரைத்தார். உழைப்பாளர் தினத்தன்று ஒரு நல்ல உழைப்பாளியினைக் கண்ட நிறைவு எல்லோருடைய கண்களிலும் தெரிந்தது.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா