ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Saturday 8 January 2011

ஈரோடு வலைப்பதிவர்கள் சங்கமம் 2010

ஈரோட்டினைச் சார்ந்த பதிவர்கள் குழுமம் சென்ற டிசம்பர் 26ம் நாள் ஞாயிறன்று - பதிவர்கள் வாசகர்கள் சங்கமம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அன்று ஏறத்தாழ நூறு பதிவர்கள் மற்றும் வாசகர்கள் வந்து கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் பொறுப்பாளர்கள் விருந்தினர்களை நன்கு கவனித்து, விருந்தோம்புதலை வெளிப்படுத்தினர். மதிய உணவு ஒன்றே போதும் அவர்களது விருந்தோம்புதுலக்கு. விழா நிகழ்ச்சிகளைப் பற்றிய ஒரு பார்வை :

ஈரோடு வலைப்பதிவர்கள் சங்கமம் ஒரு கலைப் பதிவாய்த் திகழ்ந்தது. கலை என்பது அறிவு - கலை என்பது ஆற்றல் - கலை என்பது கதை - க்லை என்பது காவியம் - கலை என்பது படைப்பு. அதுவும் அறிவாற்றலை வெளிப்படுத்தும் நுட்பம் என்றார்ப் போல் சிறுகதைகளை உருவாக்க எப்படிச் சிந்திக்க வேண்டும் - அந்த சிந்தனைக்கு ஏற்ற பயிற்சிகள் - அச்சிந்தனைத் துளிகள் எவ்வாறு கதை வடிவுக்குள் வரும் என்பதைத் தன் பயிற்சி வழிமுறைகளால் உரையில் வடித்தார் எழுத்தாளர் பெருமாள் முருகன். கேட்டவர்களுக்கு நிச்சயம் வலைப்பதிவில் சிறுகதைகள் படைக்கும் ஆர்வம் சற்றே எட்டிப் பார்த்திருக்கும்.

மொக்கைப்பதிவுகள் சிந்தனையின் சிகரத்தில் தோன்றுபவை. இயல்பான ஒன்றை அதன் நிலையிலேயே எடுத்துரைப்பது எல்லாராலும் இயலும். ஆனால் அதனைச் சற்று நகைச் சுவையோடு நற்கலைப்படுத்துவது என்பது சிறந்த முயற்சி உடையாருக்கே இயலும் என்பதை பாமரன் தன் கருத்தோட்டமாகப் பதிந்தார். செவி மடுத்தவர்கள் இதனைப் பற்றி சற்றே சிந்தித்திருப்பர்.

குறும்படங்கள் பற்றி அருணும் - திரைப்படங்கள் பற்றி சிதம்பரனும் - புகைப்படக் கலை பற்றி சுரேஷ்பாபுவும் - இன்றைக்கு நம் எல்லார் மனங்களிலும் இடம் பிடித்திருக்கும் இப்படக்கலை நுணுக்கங்களை எடுத்துரைக்கும் பொழுது வியப்பாய் இருந்தது. ஏதோ பொழுது போக்கு - அவர்களூக்குத் தெரிந்ததை தெரியாத நம்மிடம் கூறுகிறார்கள் என்ற எண்ணமே இன்றி படம் எடுத்துக் கொண்டிருப்பவர் களுக்கு வெளிச்சம் - தொலைவு - பொருள் - வடிவு என்ற எல்லைகளை எப்படி எப்படி எல்லாம் அமைத்தால் ஒரு நல்ல படத்தை எடுக்க முடியும் என்பதை இவர்கள் மிக நீளமாக, விளக்கமாக எடுத்துரைத்தார்கள் ! . ஏனென்றால் அவர்கள் `கூற வந்த எதையும் சுருக்க முடியாது. அதுவும் தொழில் நுட்ப விளக்கங்களோடு உரைத்தது படங்களை எடுக்க விரும்புபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது.

இணையமும் வலைப் பூக்களும், நிழற்படங்கள் வழி ஆவணப்படுத்துதல் என்று மாலைப் பொழுதில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு இக்காலை நிகழ்ச்சிகள் பக்க பலமாய் இருந்தன.

இறுதியாக ஒரு கல்ந்துரையாடல் - நோக்கம் நன்று - ஆனால் இடம் பெற்ற காலம் அதன் பயனை அவ்வளவாய்த் தரவில்லை. நடத்தியவர் சிறப்பாக்த் துவங்கினார். நேரமின்மை அதன் விளைவினை விளைவிக்க வில்லை.

பதிவுகளையே பார்த்த நமக்கு அதன் படைப்பாளிகளை நேரிலே பார்த்த போது மகிழ்வாய் இருந்தது. உண்மையில் படைப்பாளி ஆற்றல் மிக்கவன் தான் என்பது மனது பெறும் ஆறுதல் ! அதை அமைதியாய் நேரில் கண்ட போது கருத்தும் மகிழ்ந்தது - கண்களோடு !

விழாப் பொறுப்பாளர்களுக்கு - நல்வாழ்த்துகளுடன் கூடிய நன்றி உரித்தாகுக.

நட்புடன் சீனா

Friday 7 January 2011

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

புத்தாண்டு வாழ்த்துகள்
------------------------------

ஓட்டமும் நடையுமாய்
பயணிக்கும் வாழ்வில்...........

வயதுகள் கடந்தாலும்
விரல்கள் முடி கோத
தாயின் மடியில் தவழும்
ஒரு சுகம்...................

பதவிகளைக் கடந்து
ஆசிரியரைப் பார்த்ததும்
எழுந்து பணிந்து வணங்கும்
ஒரு கணம்................

பிரசவிக்கும் தாய்க்கு
பிரசவம் பார்க்கும் தாய்
பற்றக் கொடுக்கும்
ஒரு விரல் ................

நித்தமும் வெயிலில் காய்ந்து
ஒட்டிய வ்யிறோடு உலாவரும்
கட்டடத் தொழிலாளியின்
ஒரு கை...................

உள் வயிறு பசித்திருக்க
ஊர் வயிறு நிறைக்க
போராடும் விவசாயியின்
ஒரு பார்வை .............

இறப்பின் பொழுது
ஆதரவு இல்லாதவரை
அடக்கம் செய்ய முன்வரும்
ஒரு தோள்...............

சார்ந்த நிறுவனம்
சாதனை புரிவதில்
தான் உயர்ந்ததாய் நெகிழும்
ஒரு உணர்வு.............

என
நாதம் மீட்டும் நரம்புகளை
காலம் முழுவதும் சேர்ந்திசைப்போம்
மனிதம் என்பது வெளியில் இல்லை !
மனமே அதுவெனக் கொண்டாடுவோம் !!


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
---------------------------------------------

புத்தாண்டு தினத்தன்று அஞ்சலில் வந்த ஒரு வாழ்த்து இது.