ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Sunday 18 November 2007

அசை போட்டு அனுபவித்து எழுதியது - குறிப்பு 5

நீண்ட நாட்களுக்குப் பிறகு, இடுகை இட வந்திருக்கிறேன். நேரமின்மையும், மலரும் நினைவுகளை அசை போட்டு ஆனந்திக்கும் சூழ்நிலையும் வரவில்லை. நண்பர் ஜீவியின் பதிவுகளைப் படித்த பின்னர் நானும் தொடர வேண்டும் என்று நினைத்தேன்.


என்னுடைய ஆரம்பப்பள்ளி வாழ்க்கை :


அக்காலத்தில் பள்ளியில் சேர்வதென்பது நவராத்திரி முடிந்து விஜயதசமி அன்று தான். எனவே ஒண்ணாங்கிளாஸ் என்பது குறைப்பிரசவம் தான். அக்டோபர் மாதம் தான் சேருவோம். முழு ஆண்டு படிக்காமலேயெ, அக்டோபர்-மார்ச்சு ஒண்ணாங்கிளாஸ் பாஸ்.


பள்ளியில் சேரும் வைபவம் மறக்க முடியாது. புதுச் சட்டை, புது டிராயர், புது சிலேட்டு, புது குச்சி ( இப்போ பல்பம்னு சொல்றானுங்க சென்னைலே), புதுப் பை (ஜமக்காளப் பை) எல்லாம் மொத நாளு எங்க தாத்தா வாங்கிக் கொடுப்பாங்க. எங்கம்மா, தலை, எண்ணே வழிய வழிய, அழுந்தச் சீவி விட்டு, புட்டாமா ( Powder) போட்டுவிட்டு, நெத்திலே விபூதி பூசி விட்டு என்னெத் தயார் பண்ணி, வீட்லெ ரெடியா இருப்போம். தஞ்சையிலே மேல ராஜ வீதியின் கோடியில் ஒரு சந்து - நாயணக்காரத் தெரு - அங்கு D.K.சுப்பையா நாயுடு தொடக்கப் பள்ளி - அங்கிருந்து அய்யங்கார் வாத்தியார் எங்க வீட்டுக்கு வந்து, என்னெக் கூட்டிட்டுப் போவார். (ராகு காலம், எம கண்டம், சுத்திப் போட்டு திட்டி கழிக்கறது - எல்லாம் உண்டு). அய்யங்கார் வாத்தியார் குடுமி வைச்சிருப்பார். முன் மண்டையிலே ஒன்னுமிருக்காது. தார்ப் பாய்ச்சி வேட்டி கட்டியிருப்பார். அவர் என்னெக் கூட்டிட்டுப் போகும் போது. எங்கப்பா, எங்கம்மா, எங்க தாத்தா, எங்க பாட்டினு ஒரு பட்டாளமே எங்கூட வரும். நான் அழுவாமெ பள்ளிக்கூடம் போவேனாம். எங்கண்ணன் ரெண்டு பேரு எனக்கு முன்னாடி அதே பள்ளியிலே படிச்சிட்டு இருந்தானுங்க ( மரியாதை இல்லையா - கேட்காதீர்கள் - இன்று கூட வா போ தான். பெயரெச் சொல்லித் தான் கூப்புடறது). பள்ளிக்கூடம் கூட்டிச் சென்று, அங்கு பெரிய சரஸ்வதி படத்துக்கு மாலை போட்டு, சுண்டல் பொறி மிட்டாய் எல்லாம் வைச்சு , படத்துக்கு முன்னாலே உக்காந்து சிலேட்லே கையப் பிடிச்சு "அ" பெரிசா எழுதி அகரமுதல எழுத்தெல்லாம் அறிய வைத்த தெய்வம் எங்க அய்யங்கார் வாத்தியார் தான். அன்னிக்கு அரை மணி நேரம் தான் பள்ளி. எங்க அம்மாவோட பாட்டி - புள்ளே பாவம் பசிக்கும், சாப்பிட வேண்டாமானு கூட்டிட்டு வந்துட்டாங்க. அன்னிக்கு பள்ளிக்கூடத்துலே இருந்த அத்தனை பேருக்கும் மிட்டாய் வழங்கி எங்க தாத்தா மகிழ்ச்சியைக் கொண்டாடினாங்க. சாயங்காலம் வாத்தியார் வீட்டுக்கு வந்து இன்னும் கொஞ்சம் எழுத்தெல்லாம் சொல்லிக் கொடுத்துட்டுப் போனார்.


அப்போ அய்யங்கார் வாத்தியாருக்கு எங்க வீட்லே பயங்கர மரியாதை. நல்லது கெட்டது எல்லாத்துக்குமே அவர் தான். எங்கப்பா எங்க தாத்தா எல்லோருமே அவர் கிட்டெ மரியாதையா நடந்துப்பாங்க. அவரும் செட்டியாரையா ன்னு ரொம்ப மரியாதையா நடந்துப்பார். அன்னிக்குப் பொழுது அப்படிக் கழிஞ்சுதா - மறு நா காலைலே எந்திரிச்சி பள்ளிக்கூடம் போவனும்னு அடம் புடிச்சி ( எங்கண்ணனுங்கெல்லாம் தூங்கிட்டு இருக்கறப்போவே நான் எந்திரிச்சிடுவேனாம்) பள்ளிக்கூடம் போவேன். எங்க அம்மாவொட பாட்டி தான் என்னெத் தெனமும் பள்ளிக்குடம் கூட்டிட்டுப் போய் வகுப்பறைலே விட்டுட்டு, மத்யானம் சப்பாட்டுக்குக் கூட்டிட்டுப் போய், திரும்பக் கொண்டாந்து விட்டு, சாயங்காலம் வீட்டுக்குக் கூட்டிட்டு வருவாங்க. திங்கறதுக்கு எல்லாம் அவங்களே வாங்கித் தந்துடுவாங்க. வஞ்சனை இல்லாம எந்தக் கவலையும் இல்லாம ஆரம்பப் பள்ளி வாழ்க்கை அமைந்தது.


படிப்பெல்லாம் நான் சூரப் புலி - கணக்கெல்லாம் சூப்பராப் போடுவேன். எங்கண்ணன் வேற ரெண்டாம் கிளாஸ் லேந்து டபுள் பிரமோசன் வாங்கி நாலாவது போய்ட்டான் ( இப்பொ கனடாலெ இருக்கான்)- அப்பவே நான் ட்ரிப்ள் பிரமோசன் வாங்கி ரெண்டுல்லேந்து அஞ்சு போகனுன்னு ஒரே லச்சியம். நிறைவேறலேன்னு வைச்சிக்கங்க.


ஒண்ணாங்கிளாஸ்லே அரையடி ஒயரத்துலே ஒரு பெஞ்சு போட்டிருப் பாங்க. நீளமான மனெப் பலகை. அவ்ளோ தான். அஞ்சு பேரு உக்காந்துருப்பொம். சுவத்துலே சாஞ்சுப்போம். ஒரு 25 பேரு இருந்திருப்போம். அந்த சுகம் இப்போ வருமா ?


வாத்தியாரெல்லாம் வேட்டி சட்டை தான். கைலே எப்பவும் பிரம்பு இருக்கும். போர்டுலே சாக்பீசால எழுதித் தான் பாடம் நடத்துவாங்க. நாங்க ஆனா ஆவன்னா இனா ஈயன்னானு உயிரெழுத்துப் பூரா சத்தம் போட்டு கோரசா கத்துவோம். தெருவே அதிரும்ல. எனக்காக காத்துட்டு இருக்கற எங்க பாட்டி பேரப்புள்ளே நல்லா படிக்குறான்னு எங்க வீட்லே சொல்லி, எனக்கு தனிச் செல்லம் எங்க வீட்லே.


அஞ்சு வருசம் அங்கே தான் படிச்சேன். ஒரு நாளைக்கு நான்கு தடவை பள்ளிக்கும் வீட்டுக்குமா நடந்து போய் படிச்ச காலமது. பாட்டி கதெ சொல்லிக்கிட்டே பையைத் தூக்கிக்கிட்டு கூடவே வருவாங்க. பாதி தூரம் கால் வலிக்குதுன்னு அழுகுணி ஆட்டம் ஆடி தூக்கச் சொல்லி, பாட்டி தூக்கிகிட்டு வருவாங்க. அந்தச் சுகம் இப்ப பேத்திய, பேரனைத் தூக்கிக் கிட்டு வெளியே போறதுலே இருக்கு.


ஒரு கோனார் வீட்டுப் பையன் (அப்பல்லாம் யாதவர்னு சொல்றது இல்ல) தான் எனக்கு ரொம்ப பிரண்டு. ரெண்டு பேருமா கொட்டம் அடிப்போம். பாட்டியெ ஏமாத்திட்டு அழ வைச்சிட்டு பக்கத்துலே பார்க்குலே போய் விளையாடுவோம். அப்புறம் அவங்களும் எங்களெப் பத்தி தெரிஞ்சுக்கிட்டாங்க. வாத்தியார் கிட்டெ கோள் மூட்டுவாங்க. மணி அடிக்கற பையனெ காக்கா பிடிச்சி கரெக்டா மணி அடிக்கும் போது கிளாஸ் வாசல்லே நின்னு கோழி அமுக்கற மாதிரி அமுக்கிக் கூட்டிட்டுப் போய்டுவாங்க. அவங்க இந்த கோனார் வூட்டுப் பய தான் நம்ம புள்ளெயேக் கெடுக்குறான்னு ஸ்கூல் பூரா ஒரே கம்ப்ளைண்ட். அந்தப் பய அம்மா வந்து எங்க பாட்டி கிட்டே சண்டை போடுவாங்க. ஆனா நாங்க பிரெண்ட்ஸ் தான்.


ரெண்டாம் கிளாஸ் வாத்யார் ராசமாணிக்கம்னு இருந்தாரு. அதுந்து பேச மாட்டார். அவர் அளவாப் பேசுறது வகுப்புக்கு மட்டும் தான் கேக்கும். எல்லாப் பாடமும் ( தமிழ், கணக்கு- வேற என்னா ?? அவ்ளோ தான்) அவர் தான் எடுப்பாரு.


மூனாங்கிளாஸ்லேயும் நாலாங்கிளாஸ்லேயும் சின்ன அமல்தாஸ், பெரிய அமல்தாஸ் னு ரெண்டு வாத்யாருங்க. ரெண்டு பேரோட பேரும் அமல்தாஸ்ங்கறதாலே சின்ன அமல்தாஸ் பெரிய அமல்தாஸ்னு சொன்னாங்க.


அஞ்சாம் கிளாஸ்லே பாட்டு வாத்யார். அவர் பேரு தெரிலே . அவர் பாட்டு வாத்யார் அவ்ளோ தான்.


ஹெட் மாஸ்டர் சுந்தர் ராஜுன்னு இருந்தார். அவர் சைடு பிசினஸ் கெடிகார ரிப்பெர் கடை வைச்சிருந்தார். ஆரம்பப் பள்ளியில் கற்ற கல்வி தான் அஸ்திவாரம். அங்கு கற்ற கல்வியும், கடமைகளும், ஒழுக்கமும், பாடல்களும் ஒரு நல்ல வாழ்க்கை அமைய உதவின என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.


அஞ்சாம் கிளாஸ்லே மருது பாண்டியர் என்று ஒரு நாடகம் போட்டோம். சின்ன மருதுவாக, நண்பன் பாலசுப்பிர மணியன், பெரிய மருதுவாக நண்பன் சண்முக சுந்தரம், ராஜா முத்துவிஜய ரகுநாதராக நண்பன் முகுந்தன், ராணி வேலு நாச்சியாராக நண்பன் ............ ( நினைவில்லையே) நடித்து பள்ளி ஆண்டு விழாவில் அரங்கேற்றப்பட்ட நாடகம். தஞ்சை அரண்மனை அரங்கத்திலே நாடகம். நான் என்ன வேசமுன்னு கேக்குறீங்களா ?? சொல்ற மாதிரி இல்ல - அவைக் காவலன் ( வாழ்க வாழ்க - சொல்லணும்), மக்களில் ஒருவன் ( மகராஜா காப்பாத்துங்க, காப்பாத்துங்க), கள்வர் கூட்டத்தில் ஒருவன் ( கத்தியெல்லாம் வைச்சிக்கிட்டு, மீசை யெல்லாம் வரைஞ்சிக்கிட்டு, முண்டாசு கட்டி, மூக்குலே ஒரு பெரிய மச்சம் வைச்சிக்கிட்டு ( டேய் கழட்டுடா எல்லா நகையெயும், பணமெல்லாம் குடுடா), போர் வீரன் ( போர் போர்) - வேற என்ன பண்ணேன் - நினனவில்லே.


பள்ளியிலேயே விளையாட்டுத் திடல், அந்த வயதுக்கு உரிய அத்தனை விளையாட்டுகளையும் விளையாடியது, ராட்டையிலே பஞ்சு வைத்து நூல் நூற்றது, தக்ளியிலே நூல் நூற்றது, சிட்டம் போட்டது, மாலை யாக்கினது, இன்ஸ்பெக்டர் வந்த போது ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம், அறஞ்செய விரும்பு என அத்தனை மனப்பாடப் பாடல்களையும் ஒப்பித்து, வகுப்பிலே நல்ல மாணவனெனப் பேரெடுத்தது, குறளிலே 65ம் அத்தியாயம் சொல் வன்மை - பத்துப் பாடல்களையும் மனனம் செய்து ஒப்புவித்து போட்டியில் முதல் பரிசு ( பிளாஸ்டிக் சோப் டப்பா) வாங்கியது இதெல்லாம் இன்னும் மனதிலே மலரும் நினைவுகளாக அசை போடுவதற்கு இன்பமாக இருக்கிறது.

ஆக ஆரம்பப் பள்ளி வாழ்க்கை அடிப்படைக் கல்வியை கற்றுத்தந்தது. ஆசிரியப் பணியே அறப்பணி - அரும்பணி எனத் தங்களை அதற்கே அர்ப்பணித்துக் கொண்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியப் பெருமக்களை மறக்க இயலாது.