ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Sunday 28 July 2013

எனது முதல் கணினி அனுபவம் - 1984 - 2010

அன்பின் நண்பர்களே ! 

அருமை நண்பர் தி.தமிழ் இளங்கோ என்னை எனது முதல் கணினி அனுபவம் என்ற தொடர் பதிவினில் எழுத அழைத்திருந்தார்.  ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆகி விட்டனவே - ஒன்றும் நினைவில் இல்லையே எனச் சிந்தித்தேன். பிறகு மலரும் நினைவுகளாக இருந்த நிகழ்வுகளை அசை போட்டு ஆனந்தித்து எழுதலாமெ என நினைத்தேன் . சிந்தித்து சிந்தித்து - தலையைச் சொறிந்து சொறிந்து எழுத ஆரம்பித்தேன். 

வங்கியில் 1974 - 2010 பணி புரிந்து 2010ல் பணி நிறைவு செய்து தற்போது ஓய்வாக, மதுரையில் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு இருக்கிறேன்.

வங்கியில் கணினி அறிமுகப் படுத்த வேண்டும் என்ற கொள்கையினை எடுத்து பல்வேறு கணினி நிபுணர்களிடம் ஆலோசித்து வங்கி ஒரு முக்கியமான முடிவினை எடுத்தது.  

எந்த ஒரு வங்கியிலும் இல்லாத புதிய கொள்கையினை எங்கள் வங்கி எடுத்தது. 1984ல் எடுத்த கொள்கை இன்று வரை கடைப் பிடிக்கப் படுகிறது. 

அக்கொள்கை என்னவெனில் - கணினியில் பயன் படுத்தப் படும், வங்கி கணினி மயமாக்கப்படத் தேவைப்படும்   மென்பொருட்களை  சந்தையில் கொடி கட்டிப் பறந்த பல் நிறுவனங்களிடம்  இருந்து, மற்ற வங்கிகளைப் போல, விலைக்கு வாங்கிப் பயன் படுத்துவது இல்லை என்ற முக்கியமான கொள்கை. 

அதற்குப் பதிலாக வங்கிக்குத் தேவைப்படும் மென்பொருட்களை, வங்கியில் பணியாற்றிக் கொண்டிருக்கும்  பணியாளர்களை வைத்துத் தயாரிப்பது என்ற முக்கியமான கொள்கையும் எடுக்கப் பட்டது.

அதன் படி வங்கியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பணியாளர்களை ஒரு தேர்வு வைத்துத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சியினை 90 நாட்களுக்கு அளித்து, பிறகு மென்பொருள் எழுதும் பொறுப்பினை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

அப்படித் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் 25 அலுவலர்களீல் நானும் ஒருவன். 
இந்த 25 அலுவலர்களில் ஒரிருவரைத் தவிர மற்றவர்களுக்கு கணினி பற்றிய ஸ்னானப்ராப்தி கூட கிடையாது. 

முதல் மூன்று மாதங்களுக்கு - சென்னையில் நடக்கும் கணினித்துறையின் மென்பொருள் / வன்பொருள் கண்காட்சிகள்,  கணினி நிறுவனங்கள் நடத்தும் கூட்டங்கள், கணினித்துறையில் பணியாற்றும் நிபுனர்கள் வங்கிக்கு வந்து நடத்தும் கூட்டங்கள், அததனையிலும் இந்த 25 அலுவலர்கள் கலந்து கொண்டு கணினி பற்றிய அறிவு பெற வங்கி ஏற்பாடு  செய்தது.

முதல் 90 நாட்களில் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட பயிற்சி - கோபால் புரொகிறாம் எழுதுவது எப்படி என்பது தான். அனைவருக்கும் கோபால் பற்றிய புத்தகம் வழங்கப் பட்டது - ராய் & தஸ்திதார் எழுதிய புத்தகம்.

பிறகு கப்யூட்டர் வாங்கும் பணி நடந்தது - அதுவும் இந்த முதல் மூன்று மாதங்களீலேயே நடந்தது. 25 பேருக்கு முதல் மாதம் 4 அல்லது 5 கம்ப்யூட்டர் வழங்கப்பட்டது. போட்டா போட்டி.  CPM - ஆபரேட்டிங்க் சிஸ்டம், கறுப்பு வெள்ளை மானிட்டர் ஸ்கிரீன், எட்டு இன்ச் ஃப்ளாப்பி ட்ரைவ், தோசைக்கல் மாதிரி ஃப்ளாப்பி, இத்துடன் இருவிரல் மட்டுமே பயன் படுத்தி அக்கணினியினைப் பயன் படுத்தி ப்ரொகிராம் எழுதினோம்.
10 விரலும் பயன்படுத்த தட்டச்சு தெரியாது - இப்பல்லாம் புகுந்து வெளயாடுவோம்ல. 

கோபாலில் புரொகிறாம்,  லோட்டஸ் தற்போதைய எக்செல் ஷீட்டின் முன்னோடி, டிபேஸ் தற்போதைய டேட்டா பேஸ்களீன் முன்னோடி, இப்பொழுது நினைத்துப் பார்த்தால் கூட சிரிப்பு வருகிறது. செக்ரட்டரி என்றொரு வேர்ட் பிராஸஸர். ஸ்விட்ச் தட்டிய உடன் 5 நிமிடங்களுக்கு   " லோடிங் செக்ரட்டரி - பிளீஸ் வெயிட் " அப்படின்னு ஒரு மெசேஜ் ஸ்கீரின்ல நிக்கும் - நாம பொறுமையாக் காத்துக் கிட்டு இருக்கணூம். 

 இப்ப இருக்கற மெயின் ஃப்ரேம் கம்பியூட்டர் அக்காலத்தில் எப்படி இருந்தது தெரியுமா ?  9 / 10 அடி உயரம் 3 /4 அடி அகலம் - டேப் ட்ரைவ் - கார்ட் ரீடர்..... இப்படி என்னவெல்லாமோ இருக்கும் - முழுவதும் குளிரூட்டப் பட்ட பெரிய அறையில் இருக்கும். 

அனைத்துப் புரொகிராம்களும் கார்டில் எழுதப்படும். கார்ட் பஞ்சிங் மெஷினில் ப்ரொகிராம் எல்லாம் கட்டளை கட்டளையாக பஞ்ச் செய்யப்பட்டு - கார்ட் ரீடரில் படிக்கப் பட்டு மெயின் ஃப்ரேம் கம்பியூட்டருக்கு அனுப்பப் படும். கணினி அறை கர்ப்பக் கிரகம் மாதிரி - குறிப்பீட்ட 3 அல்லது 4 அலுவலர்கள் தான் உள்ளே செல்லும் தகுதி பெற்றவர்கள்.  பல வண்ண விளக்குகள் மின்சாரத்தின் உதவியால் மின்னிக் கொண்டு இருக்கும்.

இது போதும்னு நினைக்கிறேன். போரடிக்கக் கூடாது. 

இந்தியாவிலேயே எங்கள் ஒரு வங்கிதான் துணிந்து முடிவெடுத்து - கணினியின் மென்பொருள்  -  வங்கியின் அலுவலர்களால் எழுதப்பட்டு - 2650 கிளைகள் முழுவதையும் கணினி மயமாக்கி - அவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து  எந்தக் கிளையில் வேண்டுமானாலும் - மற்ற ஒரு கிளையில் கணக்கு வைத்திருப்பவர் இங்கு பரிமாற்றம் செய்து கொள்ள வசதி செய்து வாடிக்கையளர்களுக்குப் பல வித வசதிகள் செய்து கொடுத்திருக்கிறது. 

எங்கள் வங்கி கணினி மயமானதில் - இன்றைய முன்னேற்றத்திற்குக் காரணமானவர்களீல் நானும் ஒருவன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.

விடை பெறுகிறேன் நண்பர்களே !

நல்வாழ்த்துகள் 
நட்புடன் சீனா