ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
Showing posts with label பேச்சுக்கலை. Show all posts
Showing posts with label பேச்சுக்கலை. Show all posts

Thursday, 29 May 2008

அவை அடக்கம் - நா அடக்கம்

அன்பர்களே !!

அவை அடக்கம் என்பது நமக்கெல்லாம் தெரியாத / தெரிந்த ஒன்று. தெரிந்திருப்பின் அதைக் கடைப்பிடிக்கிறோமா என்பது விடையில்லாத வினா.

அவையினிலே, அது அலுவலகமாய் இருக்கட்டும் - உறவின் கூட்டமாக இருக்கட்டும் அல்லது நட்பின் கூட்டமாக இருக்கட்டும் - அவையறிந்து பேச வேண்டும். மற்றவர்கள் மனங்கோணாமல் பேச வேண்டும். மனம் மட்டுமல்ல சற்றே முகம் சுளிக்கும் வண்ணம் கூடப் பேசக் கூடாது. இதைக் கடைப்பிடிப்பது ஒரு கலை. நட்பின் மத்தியிலே ஒரு நண்பனைக் கிண்டல் செய்யும் வண்ணம் - அவன் மனது புண்படுமா என்ற கவலை சிறிதேனுமின்றிப் பேசுவது தவறல்லவா. அவன் செய்த சிறு தவறைக்கூட மற்றவர்கள் முன்னிலையில் சுட்டிக்காட்டுவது நாகரிகமில்லை அல்லவா. எபோழுதும் தவறுகளைச் சுட்டிக் காட்டுவது தனிப்பட்ட முறையில் இருப்பின் தவறுகள் வருந்தவும்/திருந்தவும் வாய்ப்புண்டு. அவையிலே சுட்டினால், அத்தவறு மேன்மேலும் வளரவும் வழியுண்டு.

குறாளாசான் கூறுவான்

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு

இக்குறள் அவை அடக்கத்திற்கும் பொருந்தும். எதை எங்கு பேசுவது எப்படிப்பேசுவது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும். ஒரு பாராட்டுக் கூட்டத்தில், பாராட்டப்படுபவனைப் பற்றி ஒரு பேச்சாளர் பேசும் போது, சிறு வயது முதலே அவனைப் பற்றி அறிந்தவராக, அதிக உரிமை உடையவராக எண்ணிக் கொண்டு, அவன் சிறு வயதில் செய்த தவறுகளைப் பெரிது படுத்திப் பேசுவது எவ்வளவு தவறான செயல் என்பதை எண்ணிப் பாருங்கள். அவன் மனது எவ்வளவு புண்படுமென்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா ?

நண்பர்களே ! காக்க வேண்டியவற்றில் எவற்றைக் காக்காவிட்டாலும் நாவை மட்டுமாவது அடக்கியாளக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நா காக்க !

அன்புடன் ..... சீனா

-------------------------

Tuesday, 27 May 2008

சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்

நண்பர்களே, பேசும் பொழுது சிறிது நேரம் மட்டுமே பேசி, அதற்குள் சில கருத்துகளையோ, எண்ணங்களையோ மற்றவர்க்குப் புரியும் வண்ணம் எடுத்துரைப்பது எவ்வளவு கடினம் தெரியுமா ?

ஒரு புகழ் பெற்ற பேச்சாளர் ஒரு பொதுக்கூட்டத்துக்குச் சென்றார். அங்கு அவர் பேச்சாளராக அழைக்கப் படவில்லை. பார்வையாளராகத் தான் சென்றிருந்தார். கூட்ட மேடை நெருங்கிய உடன், அங்கு குழுமியிருந்த மக்கள் இவரை அடையாளம் கண்டு, இவரைப் பேசுமாறு வேண்ட, மேடை ஏறி, தாம் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என வினவினார். மக்களோ எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுங்கள் எனக் கூற, பேச்சாளரோ, அதிக நேரம் பேச அழைத்தீர்கள் என்றால் நான் எளிதாகப் பேசி விடுவேன். ஒரு பிரச்னையுமில்லை. ஆனால் பத்து மணித்துளிகள் மட்டுமே பேசவேண்டுமெனில், அதற்கு நான் ஒரு மாத காலம் சிந்தித்து, பிறகு தான் மேடை ஏற வேண்டும் எனக் கூறினார். காரணம் என்ன வெனில், என்ன வேண்டுமானாலும் பேசலாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம் என்றால் அது எளிது. கை வந்த கலை. ஆனால் குறிப்பிட்ட நேரமே, அதுவும் குறைந்த நேரமே பேச வேண்டுமெனில், அது கடினமான செயல்.

ஏனெனில் குறைந்த நேரத்தில் ஒரு கருத்தினை, ஒரு எண்ணத்தை, ஒரு பொருளினைப் பற்றிப் பேச வேண்டுமெனில், அதற்கு அதிகம் பயிற்சி வேண்டும். குறித்த காலத்தில், பேச வேண்டியவைகளை எல்லாம் பேச வேண்டும். பொருள் புரியப் பேச வேண்டும். கேட்பவர் மனதில் தைக்குமாறு பேச வேண்டும். அது அனுபவத்தில் தான் வரும். திட்டமிட்டால் தான் வரும்.

நண்பர்களே !! பேசிப்பழகுக !! பொருள் புரியப் பேசுக !!

அன்புடன் ..... சீனா
------------------------