ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Tuesday 27 November 2007

மதுரைப் பதிவர்களின் கவனத்திற்கு

சகோதரி அனுராதாவுடன் ஒரு சந்திப்பு

அன்பார்ந்த சக வலைப் பதிவர்களே!!

அன்பர் ஓசை செல்லாவின் பதிவின் மூலமாக சகோதரி அனுராதா சென்னையிலிருந்து மதுரை வந்து விட்டதாகவும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் சேர்ந்திருப்பதாகவும் அறிந்தேன்.

இடுகையைப் படித்த உடன் அவரது அலை பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். அவரது அன்புக் கணவர் அலை பேசியில் அழைத்து விபரங்கள் கூறினார். அறை எண் 313ல் இருப்பதாகவும் கூறினார்.

26ம் தேதி, திங்கட்கிழமை காலை மருத்துவ மனைக்குச் சென்று நானும் எனது மனைவியும் சகோதரி அனுராதாவைச் சந்தித்தோம்.

சமீப காலப் பின்னடைவுக்குப் பின்னர் சற்றே தேறியுள்ளார். சர்க்கரை பாடாய்ப் படுத்துகிறது. தற்போது நோய் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது என்றும் அறிந்தோம். இங்கு ரேடியேஷன் மற்றும் கீமோதெரபி சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

சகோதரி இப்போது நடக்கவும் கை கால்கள் அசைக்கவும் பேசவும் செய்கிறார். உடல் நலம் தேறி இருக்கிறார். மன வலிமை கூடி இருக்கிறது.

அன்புக் கணவர் அருகிலேயே இருந்து கவனமுடன் கவனித்துக் கொள்கிறார். ஒரு மகள் சென்னையிலும், மற்றொரு மகளும், மகனும் சிங்கப்பூரிலும் வசிக்கிறார்கள் என அறிந்தோம். சென்னையை விட்டு நிரந்தரமாக சொந்த ஊரான மதுரைக்கு வந்து விட்டதாகவும், வில்லாபுரம் பகுதியில் குடியேறப் போவதாகவும் கூறினார்கள்.

கடந்த 4/5 ஆண்டுகளாக புற்று நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் சகோதரி, அதனைப் பற்றியும், அதனால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றியும் விரிவாக அவரது பதிவினில் எளிமையாக எழுதி உள்ளார். படித்தது பள்ளிப் படிப்பு மட்டும் தான் என்றாலும், எண்ணங்கள், கருத்துகள், மொழி நடை அனைத்தும் எளிமையாக எல்லா மகளிருக்கும், ஒரு விழிப்புணர்வைத் தூண்டுவதாக அமையும் வண்ணம் எழுதி இருக்கிறார்.

மகளிர் மார்பகப் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு மகளிரிடம் கொஞ்சமும் இல்லையே என்ற வருத்தம் அவரிடம் மேலோங்கி நிற்கிறது. படித்த மக்களிடம் கூட இவ்வுணர்வு இல்லையே என்றும், அரசு இவ்வுணர்வைத் தூண்ட எவ்வித முயற்சியும் செய்ய வில்லையே என்றும் மனங்கலங்குகிறார்.

இக்கொடிய நோயைப் பற்றிய அத்தனை செய்திகளையும் அனைத்து மகளிரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் - அதற்கு ஏதாவது திட்ட வட்டமாகச் செய்ய வேண்டும் என ஒரு தீவிர சிந்தனையில் இருக்கிறார். அன்புக் கணவரும் அருமை மக்களும் அன்பு செலுத்தி பக்க பலமாக இருந்து அவரது எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்கின்றனர்.

சக வலைப் பதிவர்கள் காட்டும் அன்பினையும், அவருக்காகச் செய்யும் பிரார்த்தனைகளையும், மழலைச் செல்வங்களின் மாசற்ற ஆதரவினையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

மதுரைப் பதிவர்கள் அனைவரையும், ஒரு முறை அவரைச் சென்று சந்தித்து, உடல் நலம் விசாரித்து, நோயை எதிர்த்துப் போராடும் மனத் துணிவினைப் பாராட்டி, அவரது எண்ணங்களைச் செயல் படுத்த - தேவைப் படின், ஆலோசனைகள் கூறி, மன ஆறுதல் அளித்து வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.

எல்லாம் வல்ல இறைவனை, அவரது எண்ணங்களைச் செயல் படுத்த, அவருக்குத் தேவையான கூடுதல் மனவலிமையையும், பூரண உடல் நலத்தையும் அளிக்க, மனங்கசிந்து வேண்டுகிறோம்.

அலை பேசி எண் : 98404 56066

அன்புடன் சீனா - செல்வி ஷங்கர்.

26.11.2007

Sunday 18 November 2007

அசை போட்டு அனுபவித்து எழுதியது - குறிப்பு 5

நீண்ட நாட்களுக்குப் பிறகு, இடுகை இட வந்திருக்கிறேன். நேரமின்மையும், மலரும் நினைவுகளை அசை போட்டு ஆனந்திக்கும் சூழ்நிலையும் வரவில்லை. நண்பர் ஜீவியின் பதிவுகளைப் படித்த பின்னர் நானும் தொடர வேண்டும் என்று நினைத்தேன்.


என்னுடைய ஆரம்பப்பள்ளி வாழ்க்கை :


அக்காலத்தில் பள்ளியில் சேர்வதென்பது நவராத்திரி முடிந்து விஜயதசமி அன்று தான். எனவே ஒண்ணாங்கிளாஸ் என்பது குறைப்பிரசவம் தான். அக்டோபர் மாதம் தான் சேருவோம். முழு ஆண்டு படிக்காமலேயெ, அக்டோபர்-மார்ச்சு ஒண்ணாங்கிளாஸ் பாஸ்.


பள்ளியில் சேரும் வைபவம் மறக்க முடியாது. புதுச் சட்டை, புது டிராயர், புது சிலேட்டு, புது குச்சி ( இப்போ பல்பம்னு சொல்றானுங்க சென்னைலே), புதுப் பை (ஜமக்காளப் பை) எல்லாம் மொத நாளு எங்க தாத்தா வாங்கிக் கொடுப்பாங்க. எங்கம்மா, தலை, எண்ணே வழிய வழிய, அழுந்தச் சீவி விட்டு, புட்டாமா ( Powder) போட்டுவிட்டு, நெத்திலே விபூதி பூசி விட்டு என்னெத் தயார் பண்ணி, வீட்லெ ரெடியா இருப்போம். தஞ்சையிலே மேல ராஜ வீதியின் கோடியில் ஒரு சந்து - நாயணக்காரத் தெரு - அங்கு D.K.சுப்பையா நாயுடு தொடக்கப் பள்ளி - அங்கிருந்து அய்யங்கார் வாத்தியார் எங்க வீட்டுக்கு வந்து, என்னெக் கூட்டிட்டுப் போவார். (ராகு காலம், எம கண்டம், சுத்திப் போட்டு திட்டி கழிக்கறது - எல்லாம் உண்டு). அய்யங்கார் வாத்தியார் குடுமி வைச்சிருப்பார். முன் மண்டையிலே ஒன்னுமிருக்காது. தார்ப் பாய்ச்சி வேட்டி கட்டியிருப்பார். அவர் என்னெக் கூட்டிட்டுப் போகும் போது. எங்கப்பா, எங்கம்மா, எங்க தாத்தா, எங்க பாட்டினு ஒரு பட்டாளமே எங்கூட வரும். நான் அழுவாமெ பள்ளிக்கூடம் போவேனாம். எங்கண்ணன் ரெண்டு பேரு எனக்கு முன்னாடி அதே பள்ளியிலே படிச்சிட்டு இருந்தானுங்க ( மரியாதை இல்லையா - கேட்காதீர்கள் - இன்று கூட வா போ தான். பெயரெச் சொல்லித் தான் கூப்புடறது). பள்ளிக்கூடம் கூட்டிச் சென்று, அங்கு பெரிய சரஸ்வதி படத்துக்கு மாலை போட்டு, சுண்டல் பொறி மிட்டாய் எல்லாம் வைச்சு , படத்துக்கு முன்னாலே உக்காந்து சிலேட்லே கையப் பிடிச்சு "அ" பெரிசா எழுதி அகரமுதல எழுத்தெல்லாம் அறிய வைத்த தெய்வம் எங்க அய்யங்கார் வாத்தியார் தான். அன்னிக்கு அரை மணி நேரம் தான் பள்ளி. எங்க அம்மாவோட பாட்டி - புள்ளே பாவம் பசிக்கும், சாப்பிட வேண்டாமானு கூட்டிட்டு வந்துட்டாங்க. அன்னிக்கு பள்ளிக்கூடத்துலே இருந்த அத்தனை பேருக்கும் மிட்டாய் வழங்கி எங்க தாத்தா மகிழ்ச்சியைக் கொண்டாடினாங்க. சாயங்காலம் வாத்தியார் வீட்டுக்கு வந்து இன்னும் கொஞ்சம் எழுத்தெல்லாம் சொல்லிக் கொடுத்துட்டுப் போனார்.


அப்போ அய்யங்கார் வாத்தியாருக்கு எங்க வீட்லே பயங்கர மரியாதை. நல்லது கெட்டது எல்லாத்துக்குமே அவர் தான். எங்கப்பா எங்க தாத்தா எல்லோருமே அவர் கிட்டெ மரியாதையா நடந்துப்பாங்க. அவரும் செட்டியாரையா ன்னு ரொம்ப மரியாதையா நடந்துப்பார். அன்னிக்குப் பொழுது அப்படிக் கழிஞ்சுதா - மறு நா காலைலே எந்திரிச்சி பள்ளிக்கூடம் போவனும்னு அடம் புடிச்சி ( எங்கண்ணனுங்கெல்லாம் தூங்கிட்டு இருக்கறப்போவே நான் எந்திரிச்சிடுவேனாம்) பள்ளிக்கூடம் போவேன். எங்க அம்மாவொட பாட்டி தான் என்னெத் தெனமும் பள்ளிக்குடம் கூட்டிட்டுப் போய் வகுப்பறைலே விட்டுட்டு, மத்யானம் சப்பாட்டுக்குக் கூட்டிட்டுப் போய், திரும்பக் கொண்டாந்து விட்டு, சாயங்காலம் வீட்டுக்குக் கூட்டிட்டு வருவாங்க. திங்கறதுக்கு எல்லாம் அவங்களே வாங்கித் தந்துடுவாங்க. வஞ்சனை இல்லாம எந்தக் கவலையும் இல்லாம ஆரம்பப் பள்ளி வாழ்க்கை அமைந்தது.


படிப்பெல்லாம் நான் சூரப் புலி - கணக்கெல்லாம் சூப்பராப் போடுவேன். எங்கண்ணன் வேற ரெண்டாம் கிளாஸ் லேந்து டபுள் பிரமோசன் வாங்கி நாலாவது போய்ட்டான் ( இப்பொ கனடாலெ இருக்கான்)- அப்பவே நான் ட்ரிப்ள் பிரமோசன் வாங்கி ரெண்டுல்லேந்து அஞ்சு போகனுன்னு ஒரே லச்சியம். நிறைவேறலேன்னு வைச்சிக்கங்க.


ஒண்ணாங்கிளாஸ்லே அரையடி ஒயரத்துலே ஒரு பெஞ்சு போட்டிருப் பாங்க. நீளமான மனெப் பலகை. அவ்ளோ தான். அஞ்சு பேரு உக்காந்துருப்பொம். சுவத்துலே சாஞ்சுப்போம். ஒரு 25 பேரு இருந்திருப்போம். அந்த சுகம் இப்போ வருமா ?


வாத்தியாரெல்லாம் வேட்டி சட்டை தான். கைலே எப்பவும் பிரம்பு இருக்கும். போர்டுலே சாக்பீசால எழுதித் தான் பாடம் நடத்துவாங்க. நாங்க ஆனா ஆவன்னா இனா ஈயன்னானு உயிரெழுத்துப் பூரா சத்தம் போட்டு கோரசா கத்துவோம். தெருவே அதிரும்ல. எனக்காக காத்துட்டு இருக்கற எங்க பாட்டி பேரப்புள்ளே நல்லா படிக்குறான்னு எங்க வீட்லே சொல்லி, எனக்கு தனிச் செல்லம் எங்க வீட்லே.


அஞ்சு வருசம் அங்கே தான் படிச்சேன். ஒரு நாளைக்கு நான்கு தடவை பள்ளிக்கும் வீட்டுக்குமா நடந்து போய் படிச்ச காலமது. பாட்டி கதெ சொல்லிக்கிட்டே பையைத் தூக்கிக்கிட்டு கூடவே வருவாங்க. பாதி தூரம் கால் வலிக்குதுன்னு அழுகுணி ஆட்டம் ஆடி தூக்கச் சொல்லி, பாட்டி தூக்கிகிட்டு வருவாங்க. அந்தச் சுகம் இப்ப பேத்திய, பேரனைத் தூக்கிக் கிட்டு வெளியே போறதுலே இருக்கு.


ஒரு கோனார் வீட்டுப் பையன் (அப்பல்லாம் யாதவர்னு சொல்றது இல்ல) தான் எனக்கு ரொம்ப பிரண்டு. ரெண்டு பேருமா கொட்டம் அடிப்போம். பாட்டியெ ஏமாத்திட்டு அழ வைச்சிட்டு பக்கத்துலே பார்க்குலே போய் விளையாடுவோம். அப்புறம் அவங்களும் எங்களெப் பத்தி தெரிஞ்சுக்கிட்டாங்க. வாத்தியார் கிட்டெ கோள் மூட்டுவாங்க. மணி அடிக்கற பையனெ காக்கா பிடிச்சி கரெக்டா மணி அடிக்கும் போது கிளாஸ் வாசல்லே நின்னு கோழி அமுக்கற மாதிரி அமுக்கிக் கூட்டிட்டுப் போய்டுவாங்க. அவங்க இந்த கோனார் வூட்டுப் பய தான் நம்ம புள்ளெயேக் கெடுக்குறான்னு ஸ்கூல் பூரா ஒரே கம்ப்ளைண்ட். அந்தப் பய அம்மா வந்து எங்க பாட்டி கிட்டே சண்டை போடுவாங்க. ஆனா நாங்க பிரெண்ட்ஸ் தான்.


ரெண்டாம் கிளாஸ் வாத்யார் ராசமாணிக்கம்னு இருந்தாரு. அதுந்து பேச மாட்டார். அவர் அளவாப் பேசுறது வகுப்புக்கு மட்டும் தான் கேக்கும். எல்லாப் பாடமும் ( தமிழ், கணக்கு- வேற என்னா ?? அவ்ளோ தான்) அவர் தான் எடுப்பாரு.


மூனாங்கிளாஸ்லேயும் நாலாங்கிளாஸ்லேயும் சின்ன அமல்தாஸ், பெரிய அமல்தாஸ் னு ரெண்டு வாத்யாருங்க. ரெண்டு பேரோட பேரும் அமல்தாஸ்ங்கறதாலே சின்ன அமல்தாஸ் பெரிய அமல்தாஸ்னு சொன்னாங்க.


அஞ்சாம் கிளாஸ்லே பாட்டு வாத்யார். அவர் பேரு தெரிலே . அவர் பாட்டு வாத்யார் அவ்ளோ தான்.


ஹெட் மாஸ்டர் சுந்தர் ராஜுன்னு இருந்தார். அவர் சைடு பிசினஸ் கெடிகார ரிப்பெர் கடை வைச்சிருந்தார். ஆரம்பப் பள்ளியில் கற்ற கல்வி தான் அஸ்திவாரம். அங்கு கற்ற கல்வியும், கடமைகளும், ஒழுக்கமும், பாடல்களும் ஒரு நல்ல வாழ்க்கை அமைய உதவின என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.


அஞ்சாம் கிளாஸ்லே மருது பாண்டியர் என்று ஒரு நாடகம் போட்டோம். சின்ன மருதுவாக, நண்பன் பாலசுப்பிர மணியன், பெரிய மருதுவாக நண்பன் சண்முக சுந்தரம், ராஜா முத்துவிஜய ரகுநாதராக நண்பன் முகுந்தன், ராணி வேலு நாச்சியாராக நண்பன் ............ ( நினைவில்லையே) நடித்து பள்ளி ஆண்டு விழாவில் அரங்கேற்றப்பட்ட நாடகம். தஞ்சை அரண்மனை அரங்கத்திலே நாடகம். நான் என்ன வேசமுன்னு கேக்குறீங்களா ?? சொல்ற மாதிரி இல்ல - அவைக் காவலன் ( வாழ்க வாழ்க - சொல்லணும்), மக்களில் ஒருவன் ( மகராஜா காப்பாத்துங்க, காப்பாத்துங்க), கள்வர் கூட்டத்தில் ஒருவன் ( கத்தியெல்லாம் வைச்சிக்கிட்டு, மீசை யெல்லாம் வரைஞ்சிக்கிட்டு, முண்டாசு கட்டி, மூக்குலே ஒரு பெரிய மச்சம் வைச்சிக்கிட்டு ( டேய் கழட்டுடா எல்லா நகையெயும், பணமெல்லாம் குடுடா), போர் வீரன் ( போர் போர்) - வேற என்ன பண்ணேன் - நினனவில்லே.


பள்ளியிலேயே விளையாட்டுத் திடல், அந்த வயதுக்கு உரிய அத்தனை விளையாட்டுகளையும் விளையாடியது, ராட்டையிலே பஞ்சு வைத்து நூல் நூற்றது, தக்ளியிலே நூல் நூற்றது, சிட்டம் போட்டது, மாலை யாக்கினது, இன்ஸ்பெக்டர் வந்த போது ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம், அறஞ்செய விரும்பு என அத்தனை மனப்பாடப் பாடல்களையும் ஒப்பித்து, வகுப்பிலே நல்ல மாணவனெனப் பேரெடுத்தது, குறளிலே 65ம் அத்தியாயம் சொல் வன்மை - பத்துப் பாடல்களையும் மனனம் செய்து ஒப்புவித்து போட்டியில் முதல் பரிசு ( பிளாஸ்டிக் சோப் டப்பா) வாங்கியது இதெல்லாம் இன்னும் மனதிலே மலரும் நினைவுகளாக அசை போடுவதற்கு இன்பமாக இருக்கிறது.

ஆக ஆரம்பப் பள்ளி வாழ்க்கை அடிப்படைக் கல்வியை கற்றுத்தந்தது. ஆசிரியப் பணியே அறப்பணி - அரும்பணி எனத் தங்களை அதற்கே அர்ப்பணித்துக் கொண்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியப் பெருமக்களை மறக்க இயலாது.

Friday 19 October 2007

மனத்தில் தோன்றிய எண்ணங்கள்

உன்னையே நீ அறிந்து கொள் !
உன்னால் முடியும் தம்பி !!
நம்மால் முடியாதது என்று ஒன்று உண்டா என்ன ??
அகந்தையா ?
நம்முடைய பலம் என்ன ?
நம்முடைய பலவீனம் என்ன ?
பலவீனத்தை பலமாக மாற்றுவது எப்படி ?
குடும்பம்-அலுவலகம்-சமுதாயம்-
சந்திக்கும் மனிதர்கள் எத்தனை பேர் ?
எததனை விதமான எண்ணங்கள் கொண்டவர்கள் ?
மாற்றுக் கருத்தை சந்திக்க மன வலிமை வேண்டும் !
மாற்றுக் கருத்தை சந்திக்க மறுக்காதே !
ஆய்ந்து பார்த்து முரண்படு !
நல்ல கருத்தெனில் நழுவாமல் ஏற்றுக்கொள் !
ஏற்கத் தக்கதல்ல எனில் தள்ளிப் போடு !
காலம் மாறினால் கருத்துகள் மாறும் !
காய் கனியாகும் ! அல்லது வெம்பிப் போகும் !
சுய சோதனை செய் ! சத்திய சோதனை செய் !
செய்வது எல்லாம் பயன் தரும் செயல்கள் தானா ?
நட்ட விதைகள் அனைத்தும் முளைப்பதில்லை !
அதனால் நடாமலேயே இருக்கலாமா ?
முயற்சிகள் தவறலாம் ! முயல்வது தவறலாமா ?
விரும்பியது கிடைக்க வில்லை !
கிடைத்ததை விரும்பலாமா ?
வேண்டியது வேண்டிய நேரத்தில் கிடைப்பதில்லை !
மற்ற நேரத்தில் கிடைத்தால்
மறுக்கலாமா ?? வெறுக்கலாமா ?
கடமையைச் செய் ! பலனை எதிர்பாராதே !
பலனில்லாத கடமை செய்யத்தான் வேண்டுமா ?
எல்லாக் கடமைகளுக்கும் பலன் உண்டு !
நேரிடையாக மற்றும் மறை முகமாக !
நாம் இன்று மரம் நட்டால்
நாளை மற்றொறுவன் அனுபவிப்பான் !
அதனால் மரம் நடாமலேயே இருக்கலாமா ?
நாம் அனுபவிக்கும் இன்பம் நம்மால் விளைந்ததா ?
யார் நட்ட மரத்தில் யார் பழம் சாப்பிடுவது ?
நடுவதற்கே பிறந்தவர்கள் பலர் !
அனுபவிப்பதற்கே பிறந்தவர்கள் சிலர் !
விழுக்காடு வித்தியாசம் பார்ப்பது அழகல்ல !
நட்டுக்கொண்டே இருப்போம் !
அனுபவித்துக் கொண்டே இருப்போம் !
மனம் மகிழ, பிறர் மகிழ வேண்டும் !
ஒவ்வோர் அரிசியிலும்
பெயர் எழுதப் பட்டிருக்கிறதாம் !
தேட வேண்டும் ! அதுவாக வாராது !

-----------------------------------------------------------------
மனதில் எழுந்த எண்ணங்களை கிறுக்கி விட்டேன்
தொடர்புடைய எண்ணங்களா ??
தொடர்பில்லாத எண்ணங்களா ??
தெரிய வில்லை !!!!!
சுற்றிச் சுற்றிப் பார்த்தால் தலை சுற்றும்.
-----------------------------------------------------------------

Sunday 23 September 2007

சிறிய விடுமுறை

நண்பர்களே !

ஒரு சிறிய விடுமுறைக்குப் பிறகு - நாளை முதல் மறுபடியும் தொடர ஆவல்

Tuesday 28 August 2007

அசை போட்டு அனுபவித்து எழுதியது - குறிப்பு 4

திலகர் திடலை அடுத்து தஞ்சையின் புகை வண்டி நிலையம் இருந்தது. அது தஞ்சை சந்திப்பு என அழைக்கப் பட்டாலும் அங்கு வந்து போகும் புகை வண்டிகளின் எண்ணிக்கை அக்காலத்தில் குறைவு தான். நான் தஞ்சையில் இருந்த வரை புகை வண்டியில் சென்றதாக நினைவு இல்லை.


நகரில் நகரப் பேருந்துகளும், ஒற்றை மாட்டு வண்டிகளும் நகர் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும். நகரில் எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கு வசதியாக இருக்கும். அம் மாட்டு வண்டியில் வைக்கோல் விரித்து அதன் மேல் ஒரு விரிப்பும் போடப்பட்டிருக்கும். எத்தனை பேர் வேண்டுமானாலும் செல்லலாம். பின் புறம் அமர்ந்து காலைத் தொங்க விட்டுக் கொண்டு பயணம் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும்.


நகரின் அரசு பொது மருத்துவ மனையின் விபத்து மற்றும் அவசரப் பிரிவு இருந்த கட்டடத்தின் பெயர் தாமஸ் ஹால். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் தஞ்சையை விட்டு செல்லும் வரை அதனை நானும் மற்றவர்கள் சொல்லிக் கொடுத்தபடி தாஜ் மகால் என்று தான் அழைத்தேன். அங்கு பல தடவை சென்ற அனுபவம் உண்டு. அடிக்கடி எங்கள் வீட்டில் யாரையாவது ஏதாவது பூச்சி அல்லது தேள் கடித்துவிடும். உடனே தாஜ் மகாலுக்குத் தூக்கிக்கொண்டு ஓடுவார்கள். அந்த மருத்துவ மனையைச் சார்ந்த மருத்துவர்களின் நட்புடன் கூடிய மருத்துவ சிகிச்சை முறை எனக்குப் பிடித்த ஒன்று. தற்கால பொது மருத்துவ மனைகளைச் சார்ந்த மருத்துவர்கள் மருத்துவம் செய்யும் முறை தற்காலச் சூழ்னிலைக்கேற்ப பல மாற்றங்களை அடைந்து விட்டது.


நகரின் பேருந்து நிலையம் நகரின் மையப் பகுதியில் இருந்தது. நகரப் பேருந்துகளும் மற்ற வெளி இடங்களுக்குச் செல்லும் பேருந்துகளும் ஒரே நிலையத்தில் தான் வந்து சென்றன. சில தடவைகள் தஞ்சையில் இருந்து மதுரைக்குப் பேருந்தில் தனியாகச் சென்றதுண்டு. மதுரையின் புகழ் வாய்ந்த பேருந்து டிவிஎஸ் தஞ்சை-மதுரைக்கு 5 மணி நேரத்தில் செல்லும். தஞ்சை - கந்தர்வகோட்டை - புதுக்கோட்டை - திருப்பத்தூர் - மேலூர் - மதுரை என அப் பேருந்து செல்லும். கந்தர்வ கோட்டையில் முந்திரிப் பருப்பு வாங்கிச் சாப்பிடவதற்கென்றே எங்கள் வீட்டில் தனியாக காசு கொடுப்பார்கள். முந்திரிப் பருப்பைத் தவிர வேறு ஒன்றும் வாங்கிச் சாப்பிட மாட்டேன்.

நகரில் காய்கறி அங்காடிகள் பழ அங்காடிகள் மற்ற அங்காடிகள் நிறைந்த பகுதியும் உண்டு. வாரம் ஒரு முறை வீட்டில் உள்ள பெரியவர்களுடன் அவ்வங்காடிகளுக்குச் சென்று தேவையானவற்றை வாங்கி வருவதுண்டு.


நகரில் திரைப்படங்கள் பார்ப்பதற்கு யாகப்பா தியேட்டர் மற்றும் ஞானம் தியேட்டர் சென்றதுண்டு. சம்பூர்ண ராமாயணம் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பரதனாக நடித்த படம். என் டி ராமாராவ் அமைதியாக அழகாக அருமையாக இராமபிரானாக நடித்த படம். பாடல்கள் நிறைந்த படம்.

அக்காலத்தில் கல்கண்டு மறைந்த தமிழ்வாணன் ஆசிரியராக இருந்து வெளியிட்ட வார இதழ். பல துணுக்குகள் நிறைந்த இதழ். மிகக் குறைவான பக்கங்கள் கொண்ட மிக மலிவான இதழ். வாரம் தவறாமல் படிப்பதுண்டு. தமிழ் வாணண் எழுதிய சங்கர்லால் என்ற துப்பறியும் நாவல் மற்றும் சில நாடகங்கள், மற்ற துப்பறியும் நாவல்கள், சிறுகதைகள் என நிறையப் படித்ததுண்டு.


துப்பறியும் நிபுனர் சங்கர்லால் மற்றும் அவரது உதவியாளர் கத்தரிக்காய் ஆகியோர் சங்கர்லாலின் மனைவியுடன் சேர்ந்து துப்பறியும் கதைகள் பல தடவைகள் படித்ததுண்டு. அக்காலத்தில் தமிழிலும் ஆசிரியர்கள் பலர் எழுதிய துப்பறியும் கதைகள் படிப்பதுண்டு. தெருவிளக்கு என்ற மர்மங்கள் நிறைந்த தொடர் கதை ஒரு வார இதழில் தொடர்ந்து படித்ததுண்டு.


வைகுண்ட ஏகாதசி மற்றும் சிவராத்திரி அன்று பரமபத சோபனம், தாயக்கட்டம், ஆடு புலி ஆட்டங்கள் ஆடி மகிழ்ந்ததுண்டு.


அக்காலத்தில் தான் ஆங்கில முறையைப் பின்பற்றி அளவு முறைகள் மாற்றப்பட்டன. அங்குலம், அடி, கஜம், பர்லாங், மைல் என்ற அளவு முறைகள் மில்லி மீட்டர், சென்டி மீட்டர், மீட்டர், கிலோ மீட்டர் என்று தசம முறைக்கு மாறி அந்த இடைப்பட்ட காலத்தில் மக்கள் பட்ட பாடு - புதிய முறைக்கு மாறுவதற்கு மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.


நாணயங்கள் பைசா அணா ரூபாய் என்பது நயா பைசா ரூபாய் என தசம முறைக்கு மாறியதும் அந்த கால கட்டம் தான். ஒரூ ரூபாய் என்பது 100 நயாபைசா என்றும் கால் ரூபாய் என்பது 25 பைசா என்றும் ஒரு அணா என்பது 6 பைசாவாகவும் மாறியது. கால் ரூபாய் எனில் 25 பைசா கொடுக்க வேண்டும். ஆனால் அதே கால் ரூபாய்க்கு நிகரான 4 அணா என்பது 24 பைசா வாகவும் ஒரு குழப்பம் நிலவியதும் அக்காலத்தில் தான். அக் காலத்தில் ஒரு பைசா இரண்டு பைசா அய்ந்து பைசா பத்து பைசா இருபத்துஅய்ந்து பைசா அய்ம்பது பைசா ஒரு ரூபாய் என நாணயங்கள் புதியதாக வந்து பழைய நாணயங்களான காலணா (அதிலும் இரண்டு வகை - ஓட்டைக்காலனா என்பது மிகப் பிரசித்தம்) அரையணா ஒரு அணா இரண்டணா நாலணா எட்டணா ஒரு ரூபாய் ஆகியனவற்றை மாற்றம் செய்தன.


தொடரும்


சீனா - 28082007

Friday 24 August 2007

அசை போட்டு அனுபவித்து எழுதியது - குறிப்பு 3

மேல வீதியின் கோடியில், ராமகிருஷ்னா பவனுக்கு அடுத்து ஒரு பிள்ளையார் கோவிலும் உண்டு. சற்றே பெரிய கோவில் தான். எனக்கு மிகவும் பிடித்த கடவுள் பிள்ளையார் தான். காண்பதற்கு எளியவர். வணங்குவதற்கும் எளியவர். உலகின் எல்லா இடங்களிலும், அரச மரத்தடியிலும் ஆற்றங்கரையிலும் கூட அமர்ந்திருப்பவர். கோரிக்கைகளை எளிதில் நிறைவேற்றுபவர். "பிள்ளையாரே !! கவனிச்சுக்க !! " இது போதும்.

இக்கோவிலை அடுத்து புகழ் வாய்ந்த சிவகங்கைப் பூங்கா இருந்தது. பொழுது போக்குவதற்கு சிறந்த இடம். மிகப் பெரிய பூங்கா. பசுமையான இடம். பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இடம். குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் ஏற்ற இடம். அனைத்து வசதிகளும் நிறைந்த இடம். தினமும் மாலை நான்கு மணி முதல் பூங்கா காவலர் வந்து வெளியே அனுப்பும் வரை விளையாடுவோம். கூட்டம் எப்போதும் அதிகமிருக்கும். விடுமுறை தினங்களில் இன்னும் அதிகமிருக்கும்.

அப் பூங்காவில் நடை பயிலுவதற்கும், இளைஞர்கள் தங்கள் நண்பர்களுடன்(நண்பிகளுடன்) இனிய பொழுதை மகிழ்வுடன் களிப்பதற்கும் ஏற்ற இடங்கள் நிறைய இருந்தன. மலர்ச்செடிகள், அரிய தாவரங்கள், அரிய மரங்கள், சிறிய நீர்நிலைகள் என தோட்டத் துறையால் பராமரிக்கப் பட்ட அப்பூங்கா சிறந்த பூங்காக்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. ஒரு சிறிய உடற் பயிற்சி நிலையம் இருந்ததாகவும் நினைவு.

அறிவியல் நிகழ்வுகள் விளக்கமாக விவரிக்கப் பட்டிருக்கும். அறிவியல் வினா விடை விளக்கப் பலகையும் உண்டு. ஒரு சிறிய மிருகக் காட்சிச்சாலையும் இருந்தது.

அப்பூங்காவினுள் ஒரு அழகிய குளம் இருந்தது. சிவகங்கைக் குளம் என்ற பெயரில். அக்குளத்தின் நடுவினில் ஒரு சிறிய மண்டபம் இருந்தது. அம்மண்டபத்திற்கும், பூங்காவின் சற்றே உயரமான ஒரு இடத்திற்கும் விஞ்ச் எனப்படும் தொங்கு வண்டி ஓடிக் கொண்டிருந்தது. வாரம் தவறாமல் அவ்வண்டியில் சென்று மகிழ்ந்ததுண்டு. அக்குளத்தினில் எப்போதும் நீர் நிரம்ப இருக்கும்.

காவல் துறையின் தலைவராக அருள் என்ற பெருமகனார் இருந்த காலத்தில் அத்துறையின் சார்பில் உங்கள் நண்பன் என்ற ஒரு குறும் படம் தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு இலவசமாக காட்டப் பட்டது. அப் படம் காவல் துறையைப் பற்றியும், பொதுமக்கள் - காவல் துறை உறவு பற்றியும், பொதுமக்கள் - காவலர்கள் கடமை மற்றும் உரிமைகள் பற்றியும் எடுக்கப் பட்ட பொதுமக்களுக்கான ஒரு விளக்கப் படம். அக்காலத் திரைப் பட பிரபலங்கள் நடித்த படம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சந்திர பாபு மற்றும் பலர் நடித்த படம். அப்படம் ஒவ்வொரு ஞாயிறன்றும் தவறாது பூங்காவில் திரையிடப் படும். முதல் வரிசையில் மணலில் அமர்ந்து ரசித்துப் பார்த்த படம் - அனைத்து ஞாயிறுகளிலும். காவல் துறையில் சேர வேண்டும் என ஆசைப் பட வைத்த படம்.

தஞ்சையில் அரசியல் கூட்டங்கள், மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு திறந்த வெளித் திடல் நகரின் மத்தியில் திலகர் திடல் என்ற பெயரில் இருந்தது. அத்திடலில் மிகுந்த அரசியல் பொதுக் கூட்டங்கள் நடை பெறும். அக் கூட்டங்களுக்குத் தவறாமல் செல்வதுண்டு. கட்சி பேதம் பாராமல் அனைத்துக் கூட்டங்களுக்கும் செல்வதுண்டு.

நிகழ்ச்சிகள் இல்லாத நேரத்தில், சிறுவர்களும் இளைஞர்களும் விளையாடும் விளையாட்டுத் திடலும் அது தான். பட்டம் விடுவதில் போட்டா போட்டி. வித விதமான வண்ண மயமான சிறியதும் பெரியதுமான பட்டங்கள் பலப்பல வானில் பறந்து கொண்டே இருக்கும். அதற்கான நூலைத் தயாரிப்பது என்பது ஒரு பெரிய கலை. மற்ற பட்டத்தின் நூலுக்குச் சற்றேனும் குறைவில்லாமல் அந்த நூலை அறுக்கக் கூடிய வகையில் தொழில் நுட்பத்துடன் மாஞ்சா எனச் சொல்லப் பட்ட பசையுடன் நூல் தயாரிக்கப் படும். பட்டம் விடுவதில் போட்டிகளும் உண்டு - பரிசுகளும் உண்டு - நடுவர் தீர்ப்புகளும் உண்டு - தீர்ப்புகளுக்கு மேல் முறையீடுகளும் உண்டு - திருப்திஅடையாத குழுவினர் ஜன்மப் பகை பாராட்டி வம்சத்தையே திட்டித் தீர்ப்பதும் உண்டு. மறு நாள் தோளில் கை போட்டு நட்புடன் பழகுவதும் உண்டு.

மற்றும் அங்கு ஆங்கிலப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கிரிக்கெட் ஆடுவதும் உண்டு. கை கால்களில் மட்டை கட்டிக் கொண்டு, கைகளில் உறையும் அணிந்து வெள்ளை நிற உடைகளில் அரிச்சுவடி கூட தெரியாமல் கிரிக்கெட் விளையாடி பந்தா காட்டுவதுமுண்டு. அவர்களின் எதிரிகளாகக் கருதப்படும் தமிழ் படிக்கும் நண்பர்கள் கிரிக்கெட்டுக்கு எதிராக கிட்டிப் புள் விளையாடுவார்கள். கிட்டியும், புள்ளும் தயாரிக்கும் விதமே தனி. இவ் விளையாட்டிற்கு, மதிப்புப் புள்ளிகளும் நேரடி வர்ணணைகளும் கூடஉண்டு. கிட்டிப்புள் கிரிக்கெட்டிற்குச் சற்றும் சளைத்தது அல்ல என நிரூபிப்பதில் அதிக கவனம் செலுத்துவர். சண்டை கருத்து வேற்பாடு எல்லாம் திடலில் மட்டும் தான் - திடலை விட்டு வெளியேறி பூங்காவிற்குச் சென்றால் அங்கு அனைவரும் நண்பர்கள் தான்.

கிரிக்கெட் கிட்டிப்புள் தவிர சிறுவர்கள் ஆடுவது சடுகுடு மற்றும் கோலிக்குண்டு ஆட்டம். பெண்களோடு சேர்ந்து பாண்டி ஆடுவதும் உண்டு.


தொடரும்

சீனா - 24082007

Thursday 23 August 2007

அசை போட்டு அனுபவித்து எழுதியது - குறிப்பு 2

தஞ்சைத் தரணியில் எங்கள் இல்லம் அமைந்த மேலவீதியின் ஒரு கோடியில் உள்ள சங்கர நாராயணர் கோவிலுக்கு அடுத்து ஒரு உணவகம் ராமகிருஷ்ணா பவன் என்ற பெயரில் இருந்தது. அதன் உரிமையாளர் மகாதேவ அய்யர். அவருக்கு சங்கர நாராயணன், மகாலெட்சுமி, ரமணி என மூன்று மழலைச் செல்வங்கள். அதில் கடைக்குட்டி ரமணி எனது வகுப்புத் தோழன். மற்றுமொரு வகுப்புத் தோழனான தெற்கு வீதியில் இருந்த சந்திரசேகரனோடு சேர்ந்து நாங்கள் பழகிய அந்த இனிய நாட்களை மறக்கவே முடியாது.

மேலவீதியில் எங்கள் இல்லத்திற்கு 4 இல்லம் தள்ளி தோழன் ரமணி இல்லம். அவனது இல்லத்திற்கு அடுத்து குமர கான சபா என்ற பெயரில் ஒரு அரங்கம் இருந்தது. அதில் வாரம் ஒரு நாடகம் நடக்கும். நாடகம் தவிர பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். மிகுந்த நிகழ்ச்சிகள் இலவசமாக நடைபெறும். அவற்றை எல்லாம் தவறாமல் தோழர்களோடு கண்டு மகிழ்ந்ததுண்டு. கட்டண நிகழ்ச்சிகளை தோழன் ரமணி இல்ல மொட்டை மாடியில் இருந்து அரங்கத்தின் மேற்கூரையை ஒட்டிய இடைவெளியில் பார்த்து மகிழ்ந்தது உண்டு. அப்போது கிட்டும் சிறு (பெரு?) மகிழ்ச்சியை இப்போது நினைத்தாலும் மகிழ்வாக இருக்கிறது.

அரங்கத்தினை அடுத்து தஞ்சை மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைமையகம் இருந்தது. அக்கட்டிடத்தில் ஒரு பெரிய தோட்டமும் இருந்தது. அதில் ஒரு வயதான குண்டுமணி மரமும் இருந்தது. காலையில் எழுந்து தோட்டத்தில் கொட்டிக் கிடக்கும் குண்டுமணி களைப் பொறுக்கி வீடு முழுவதும் வைத்திருந்தோம். பல்லாங்குழி விளையாடுவதற்கும் மற்றும் பல வகையில் பயன்படுத்துவோம். எனது தங்கை இரு குண்டுமணிகளை இரு மூக்கிலும் அடைத்துக்கொண்டு, மறு நாள் அவை பழுத்து மூச்சு விட முடியாமல் திணறி, வங்கிக்கு எதிரில் இருந்த குடும்ப மருத்துவரிடம் சென்று அவைகளை சிரமப்பட்டு எடுத்தது நினைவில் இருக்கிறது. அம்மருத்துவர் புற்று நோயால் மரணம் அடைந்ததும் வருத்தமடைய வைக்கிறது.

நாங்கள் தாயார் வழித் தாத்தா, பாட்டி, தாய், தந்தை, இருஅண்ணன்கள், இரு தங்கைகள், மற்றும் இரு தம்பிகளுடன்கூட்டுக் குடும்பமாக இருந்தோம். கூட்டுக்குடும்பம் தற்காலத்தில் இயலாது. இல்லம் முழுவதும் எங்கள் வயலில் இருந்து வந்த நெல் மூட்டைகளும், தேங்காய்களும், புளியம்பழங்களும் நிறைந்திருக்கும். நெல் மூட்டைகளை அவிழ்த்து குதிரில் கொட்டிவைப்பார்கள். பிறகு குதிரின் கீழே உள்ள சிறு கதவு வழியாக எடுத்து பெரிய பெரிய அடுப்பில் உள்ள பெரிய பெரியஅண்டாவில் அவிப்பார்கள். அவித்த நெல்லை நடை முழுவதும் பரத்தி காயப் போடுவார்கள். அவித்த நெல்லின் மணம் நம்மைச் சுற்றி சுற்றி வரும். புளியம்பழங்களை உடைத்து புளியங் கொட்டைகளை மலை போல குவித்து வைப்போம். யார் எத்தனை கொட்டைகள் எடுத்தோம் என்பதில் போட்டா போட்டி போடுவோம்.

தோட்டத்தில் இரு அழகான பசுக்களும் - அவற்றின் இரு கன்றுகளும் இருக்கும். அவைகளுடன் விளையாடி மகிழ்ந்த காலம் பசுமையாக நினைவில் நிற்கிறது. பசுக்கள் கன்றுகள் ஈனும் போது கதறும் கதறல்கள் மனதை வருத்தும். அவ்வருத்தத்தை மறந்து சீம்பால் குடிக்கப் போட்டி போடுவோம். தோட்டத்தில் ஒரு பெரிய கிணறு உண்டு. அது வற்றிப் பார்த்ததே இல்லை. அதில் நீர் இறைத்து குளிக்கும் சுகமே சுகம். அவ்வப்போது வாளி உள்ளே விழுந்து விடும். அக்கம் பக்கம் சென்று செம்பை அடகு வைத்து பாதள கரண்டி வாங்கி வந்து வாளி வெளியே எடுக்கும் வைபவம் அடிக்கடி நடக்கும்.

இல்லத்தின் நடுவினில் ஒரு பெரிய திறந்த வெளி முற்றம் ஒன்றுஇருக்கும். அதன் நாலு மூலைகளிலும் மழைத் தண்ணீர் பிடிப்பதற்கு பெரிய அண்டாக்கள் இருக்கும். சில அறைகளை அடுத்து சமையலறை இருக்கும். அங்கு எப்போது போனாலும் உண்ணுவதற்கு ஏதேனும் இருந்து கொண்டே இருக்கும். குடிப்பதற்கு எப்போதும் மோர் உண்டு.

பழைய இனிய நினைவுகளை அசை போடுவதில் உள்ள இன்பம் வேறு எதிலும் கிடைக்காது.

தொடரும்

சீனா - 23082007

Wednesday 22 August 2007

அசை போட்டு அனுபவித்து எழுதியது - குறிப்பு 1

ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பதாம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 16ம்நாள் (அலுவலக குறிப்புகளின் படி) புகழ் வாய்ந்த தஞ்சை மாவட்டத்தின் தலைநகராம் தஞ்சைத் தரணியின் முக்கிய வீதியான மேல வீதியில் உள்ளதிருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த நாங்குனேரியில் உள்ள வானமாமலை மடத்துக்குச் சொந்தமான ஒரு சிறு வீட்டில் அடியேன் இம்மண்ணில்அவதரித்தேன்.

அங்கு அறுபத்து மூன்றாம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் வரை ஒடி விளையாடி படித்து பின்னர் மதுரைக்குச் சென்றேன். அங்கு தஞ்சையில் எங்கள்வீட்டிற்க்கு இரண்டாம் இடத்தில் புகழ் வாய்ந்த காஞ்சி சங்கரமடம் இருந்தது. அம்மடத்தில் காலை மாலை வேத பாராயண வகுப்புகள் நடக்கும் - சிறு வயதில் - 10 வயது வரை என நினைக்கிறேன் - அவ்வகுப்பில் அனைத்துநண்பர்களும் படித்த காரணத்தால் - வகுப்பிற்கு வெளியே விளையாண்டு கொண்டிருப்பேன். காதில் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர என மந்திரங்கள் தொடங்கி அனைத்து பாராயணங்களும் காதில் விழும்.நண்பர்கள் உரத்த குரலில் முழு ஈடுபாட்டுடன் கூறும் வேதச் சொற்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.


காஞ்சி மடாதிபதி பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சுவாமிகள் பட்டணப் பிரவேசம் அடிக்கடி செய்வார்கள். பசு, ஒட்டகம், குதிரை, யானை என மிகஅதிக எண்ணிக்கையில் பின் தொடரும் பிராணிகளும் - முன்னே பாராயணங்களுடனும் இசையுடனும் வேத விற்பன்னர்களும் மற்றவர்களும் அணிவகுக்க நடுவினிலே பல்லக்கிலே சுவாமிகள் வருவது காணக் கண் கோடி வேண்டும்.


தற்போதைய மடாதிபதி பட்டத்திற்கு வந்த உடன் இங்கு பெரியவருடன்பட்டணப் பிரவேசம் செய்த காட்சியும் நினைவுக்கு வருகிறது. ஸ்ரீ ராம ஜயம்எனும் அரிய மந்திரத்தை 1008 தடவைகள் எழுதி சமர்ப்பித்து பெரியவரிடம் ஆசி பெற்றதும் உண்டு. ஒரு ஆரஞ்சு அல்லது சாத்துக்குடி மற்றும் ஒரு துளசி மாலை பரிசாக பெற்றதுமுண்டு. பெரியவரின் படம் எங்கள் பூஜை அறையில் நிரந்தரமாக இருக்கும்.


பெரியவர் செய்யும் சந்திர மொளீஸ்வரர் பூஜை மிகப் பெரிய அளவில் 15 தினங்களுக்கு அதி விமரிசையாக நடக்கும் - அனைத்து நாட்களிலும் முடிந்தவரை கலந்து கொண்டது உண்டு. அப்போது அங்கு காவலுக்கு வரும் காவல் துறையைச் சார்ந்த காவலர்களிடம் நட்பு கொண்டு அவர்களுக்கு வேண்டிய சிறு சிறு உதவிகள் செய்து மடத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லும் உரிமை பெற்றதும் உண்டு. 15/30 தினத் திருவிழா கொண்டாடும் மட்டற்ற மகிழ்ச்சி இன்று யாருக்கும் கிடைக்காது.

ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு முறை இம்மகிழ்ச்சி கிட்டும். மற்ற நாட்களில் மடத்திற்கு ஒருவரும் வர மாட்டார்கள். மடத்துக் செயலாளர் எங்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் தான் குடி இருந்தார். மடத்துக்கும் எங்கள் வீட்டிற்கும் நடுவில் அவரது வீடு.

மடத்தின் முன் கதவுகள் மற்ற நாட்களில் அடைத்திருக்கும். அவரது வீட்டின் உட்புறமாகச் சென்று தோட்டத்தின் வழியாக சென்று மடத்தின் பெரிய -உண்மையிலேயே மிகப் பெரிய - இடங்கள் முழுவதும் நானும் என்நண்பர்களும் ஓடி விளையாடி மகிழ்ந்த காலங்கள் இன்னும் பசுமையாகநினைவிலே நிற்கின்றன.

பல ஆண்டுகளுக்கு அம்மந்திரங்கள் மனதில் இருந்து அகலவில்லை - காலப்போக்கிலே பல்வேறு காரணங்களினால் - பல்வேறு சூழ் நிலைகளினால் தற்போது சுத்தமாக நினைவில் இல்லை - பெரியவர்களிடம் அபிவாதெயே கூறி ஆசி பெற்றதெல்லாம் நினைவில் இன்னும் நிற்கின்றன.
தஞ்சையில் மேல வீதியில் வீட்டிற்கு எதிரே கணேஷ் பவன் - அய்யர் கடை - சிற்றுண்டிச் சாலை - நல்ல நட்பு - அக்காலத்தில் அய்யர் என்பது மிக மரியாதையான சொல் -கல்லாவில் அமர்வது முதல் சமையல் கட்டு வரைசெல்லும் உரிமை பெற்றவன் நான்.

மேல வீதியின் ஒரு கோடியில் சங்கரநாராயணர் கோவில் - அரணும் அரியும் ஒன்றாகக் காட்சி அளிக்கும்கோவில் - மற்ற கோடியில் காமாட்சி அம்மன் கோவில். ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் - கோவிலுக்குச் செல்லாத நாளே கிடையாது. தற்போது கோவிலுக்குச் செல்லும் நாளே கிடையாது - ஆண்டின் சில முக்கியதினங்கள் தவிர.

தஞ்சையில் ஆண்டு முழுவதும் திருவிழா தான். கொண்டாட்டம் தான்.முக்கியத் திருவிழாக்கள் -தேர்த்திருவிழா - பல்லக்கு - திருவையாரின் முத்துப்பல்லக்கு பிரசித்தம் - தஞ்சைத் தெருக்களிலே சிறுவர்களின் சப்பரங்கள் புடை சூழ அசைந்து அசைந்து அது வரும் அழகே அழகு - மற்றும் பச்சைக் காளி பவளக்காளி திருவிழா - பசுமையான நினைவுகள் - அசை போட ஆனந்தம்.

நவராத்திரி ஒன்பது தினமும் பல்வேறு வீடுகளுக்கு நண்பர் படை சூழ சென்று பல்வேறு வகையான கொலுவினைக் கண்டு களித்து அவர்கள் தரும் தின்பண்டங்களுக்காவே சென்று - அக்காலம் பொற்காலம் - எவ்வளவு பொம்மைகள் - எவ்வளவு விதமான கொலுக்கள் - தெற்கு வீதியில் உள்ள ஒரு பெரிய வீட்டில் தத்ரூபமாக பெரிய அளவில் சரித்திர நிகழ்வுகள்உயிரோட்டத்துடன் சித்தரிக்கப் பட்டிருக்கும். இலண்டன் மாநகர மெழுகு -(Madame Tussot) - கண்காட்சிப் பொம்மைகள் எல்லாம் பிச்சை வாங்க வேண்டும் - அப்போதிருந்த வசதிக்கேற்ப நிஜ மனிதர்களைப் போலவே தேசிங்கு ராஜன் - செஞ்சிக்கோட்டை - மாவீரன் சிவாஜி - ப்ரித்வி ராஜன் சம்யுக்தையைக் கவர்ந்து செல்லும் காட்சி - தத்ரூபமாகச் சித்தரிக்கப் பட்டிருக்கும். அக்குதிரையின் முகத்தில் கண்களில் உள்ள கோபம் வீரம் - ராஜனின் பலவேறு உணர்ச்சிகள் - சம்யுக்தையின் பயங்கலந்த மகிழ்ச்சி-காணக் கண் கோடி வேண்டும் - அம்மகிழ்ச்சி தற்போதைய சிறுவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.


தொடரும்

சீனா - 22082007