ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
Showing posts with label Madurai Readers Club. Show all posts
Showing posts with label Madurai Readers Club. Show all posts

Sunday, 9 November 2008

இனிய சொற்பொழிவு

அன்பின் நண்பர்களே !

இன்றைய தினம் நண்பர் தருமியின் தயவில், மதுரை ரீடர்ஸ் கிளப் என்ற ஒரு அமைப்பின் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு திரு மணி வண்ணன் என்ற வழக்கறிஞர் "The art of Reaching People" என்ற தலைப்பினில் ஏறத்தாழ 75 மணித்துளிகள் - மிகுந்த நகைச்சுவையுடன் பேசினார். அப்பேச்சின் சாராம்சம் எவ்வாறு சக மனிதர்களை அடைவது ? என்பதே !

பொதுவாக நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தீவாக வாழ்கிறோம். அடுத்தவருடன் பேசுவதே இல்லை. அறிமுகப்படுத்திக் கொள்வதே இல்லை. ஏன் வீட்டில் கூட, நாம் இப்படித்தான் இருக்கிறோம். இதிலிருந்து மாறி, நாம் எல்லோருடனும் நன்கு பழக வேண்டும் என்பதே அவரது பேச்சின் உட்கருத்து. அவரது பேச்சிலிருந்து சில பகுதிகள் - இங்கு பகுதிகளாகப் பதியப்படும்.

ஒரு சிறு கதை சொன்னார்.

ஒரு மனிதன் 30 ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டான். என்ன செய்வது. எப்படிப் பொழுதைப் போக்குவது என ஆராய்ந்தான். நான்கு சுவர்களுக்குள் ஒன்றுமே இல்லை. வெளி உலகம் காண முடியாது. ஊடகங்கள் இல்லை. ஒன்றுமே புரியவில்லை.

நள்ளிரவில் நறுக்கென்று ஒரு கடி. பார்த்தால் ஒரு எறும்பு. துள்ளிக் குதித்தான். ஆகா ஒரு நண்பன் கிடைத்துவிட்டானே என்று. எறும்பிற்கு ஜானி என்று பெயர் வைத்தான். அந்த நிமிடம் முதல் ஜானியுடன் பேச ஆரம்பித்தான். ஜானியும் என்ன வென்று புரியாமலேயே அவனிடமே இருந்தது. பேசிப்பேசி, பொழுதினைக் கழித்தான். ஜானிக்கு சிலவற்றைக் கற்றுக் கொடுத்தான்.

ஜானி இரண்டு கால்களில் நின்று இரண்டு கைகளால் வணக்கம் சொல்லும் அளவுக்குக் கற்றுக் கொடுத்து விட்டான். முப்பதாண்டுகள் கழிந்தன. விடுதலை ஆனான். ஜானியும் அவனும் வெளி உலகினிற்கு வந்தனர்.

ஒரு உணவு விடுதிக்குச் சென்று உணவு கொண்டு வரச் சொல்லி விட்டு, அங்கிருந்த ஊழியர் ஒருவரை அழைத்து ஜானியின் திறமையைக் காட்ட நினைத்தான். ஜானியை மேசையில் விட்டுவிட்டு, ஊழியரை அழைத்துக் காண்பித்தான்.

ஊழியரோ ஜானியை நசுக்கிக் கொன்று விட்டு மன்னிப்புக் கேட்டார். வருந்துகிறோம். இனிமேல் எங்கள் உணவகத்தின் மேசைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்கிறோம் என்றார்.

என்ன செய்வது ? முப்பதாண்டு உழைப்பு வீணாய்ப் போனது.

நீதி : ஒவ்வொரு மனிதனின் பார்வையும் ஒவ்வொரு விதம். எதிரில் இருப்பவனின் எண்ணமும் பார்வையும் எதிர்பாராததாக, வேறு கோணத்தில் இருக்கும். அவனிடம் பேசி அவனது எண்ணங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். பிறகே மனம் விட்டுப் பேச, இயல்பாகப் பேச ஏதுவாக இருக்கும். எதிரில் இருக்கும் பார்வையாளனைத் தயார் செய்ய வேண்டும். நமது மன நிலைக்குக் கொண்டு வர வேண்டும். முதன் முதலாகப் பார்ப்ப வனிடம், முகம் தெரி யாதவனிடம், பேசும் போது கொஞ்சம் சாக்கிரதையாக இருக்க வேண்டும்.

சரியா - ...............