ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Sunday, 18 January 2009

பதிவர் சந்திப்பு - பொங்கல் திருநாளன்று

அப்பாடா - இன்னிக்கு தேதி 19 - பொங்கல் முடிஞ்சு அஞ்சு நாள் ஆச்சு - எல்லாப் பதிவர்களும் பொங்கல் வாழ்த்து சொல்லி - மாடுகளுக்கெல்லாம் மாட்டுப் பொங்கல் வாழ்த்து சொல்லி - பொங்கலப் பத்தி - மாட்டுப் பொங்கலப் பத்தி பதிவெல்லாம் போட்டு மறுமொழியெல்லாம் கேட்டு வாங்கி - அதுக்கெல்லாம் பதில் பொட்டு - பொங்கல மறந்துட்டு அவங்க அவங்க - அவங்க அவங்க வேலையப் பாக்க ஆரம்பிச்சாச்ச்ச்ச்சு.

நான் இப்பத்தான் ஆற அமர ஒரு பதிவு போடலாம்னு வந்துருக்கேன். என்ன இவ்வளவு தாமதமாப் போட்டா படிப்பீங்களா ? படிக்கணும் ஆமா சொல்லிப்புட்டேன்.

இந்தப் பொங்கல்லே என்ன விசேசம்னா - ஒரு பாசக்காரப் பய - பதிவரு தானுங்க - மீரான் அன்வர்னு ஒரு பய - அன்புடன் குழுமத்திலும் எழுதறானுங்க - மதுரைல வேலை பாக்குறான் - சம்பன்குளத்தான் - வீட்டுக்கு வரேன் வரேன்னு சொல்லி கடசில பொங்கல் அன்னிக்கு வந்துட்டான்.

பொங்கல் அன்னிக்கு நாங்க வழக்கம் போல ரொம்ப பிஸி - எங்க தங்க்ஸெ பிடிச்சுக்க முடில - அன்னிக்கு என் தம்பி குடும்பத்தோட அன்போட சென்னைலேந்து வந்திட்டான். அவன் கூடப் படிச்ச நண்பன் ஒருத்தனும் குடும்பத்தோட வந்துட்டான். ஆக மொத்தத்தில் வூடு கலகலன்னு மகிழ்ச்சியா - ரொம்ப நாளைக்கப்புறம் - இருந்திச்சி.


இது நான் தாங்கோ - நம்புங்க - கூட நிக்கற சின்னப் பய என் தம்பியோட வாரிசு.

இது தாங்க சம்பன்குளத்தான் - அன்வர் மீரான் - என்ன ஜாலியா என் கணினிலே உக்காந்து போஸ் கொடுக்கறான் பாருங்க.

இது எங்க வூட்ல எங்க தங்க்ஸ் போட்ட பொங்கக் கோலமுங்க. பொங்கல் கோலத்துடன் துவங்கிய பொங்கல் திருவிழா. இந்தக் கோலம் சாமி ரூம்ல சாமிக்கு முன்னாடி பொங்கல் படைக்கறதுக்காக போட்ட கோலம்.

இது பொங்கப்பானை வைக்கறதுக்காகப் போட்ட கோலம். ரெண்டு சக்கரப் பொங்கல் மற்றும் ஒரு வெண்பொங்கல்.
மூணு பானைலேயும் பொங்கல் பொங்கற சமயமுங்கோ
ஆகா - பொங்கல் பொங்குதுங்கோ - பொங்கலோ பொங்கல் - பால் பொங்கிச்சா - பரஸ்பரம் விசாரிச்சிக்கிட்டோம்.

அடுத்து சாமிக்குப் படைக்கணும் - கரும்பு மஞ்சக்கொத்து கண்ணுப்பிள்ள ஆவாரம்பூ, பனக்கிழங்கு, சோளக்கருது, தேங்கா, பழம், வெத்தலைப்பாக்கு, பூ, விளக்கு, பிள்ளையார் இதெல்லாம் வச்சிச் சாமி கும்பிட்டாச்சு - படைச்சாச்சு - அடுத்து என்ன - சாப்பாடு தானே !
சாப்பாடு அமர்க்களமா இருந்திச்சி - சக்கரைப்பொங்கல் - கூட பச்சரிசிச் சாதம், பருப்பு நெய், பலகாய் குழம்பு, தயிர், குழம்புலே போட்ட பல காய்கறிகள், சக்கர வள்ளிக் கிழங்கு பொறியல், பலாக்காய்க் கூட்டு --ம்ம்ம்ம்ம்ம்
இந்தப் பலகாய்க் குழம்புலே என்னன்ன காயெல்லாம் போடுவாங்க தெரியுமா -கத்தரிக்காய், முருங்கைக்காய், வாழக்காய், பலாக்காய், அவரைக்காய், மாங்காய், தேங்காய், மொச்சைக்காய், கொத்தவரங்காய், பறங்கிக்காய், சுரைக்காய், சக்கரை வள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு, கருணைக் கிழங்கு, தக்காளி, வெங்காயம் எட்செட்ரா !!
இந்தக் குழம்பு மறு நா காலைப் பலகாரம் வரைக்கும் சூடு பண்ணிப் பண்ணி ஊத்திக்கலாம்.
ஆக பொங்கல் வாழ்த்துகள் சொல்லி மகிழ்ச்சியா அடுத்த பிளான் போட்டோம். சாயந்திரமா மீரான் கிளம்பிட்டான்.
சாயந்திரம் மதுரைலே இருந்து 20 கிலோமீட்டர் தூரத்துலே இருக்கற ஹவாவெளி ங்கற பிக்னிக் ஸ்பாட்டுக்குப் போனோம் - அதெப்பத்தி அடுத்த பதிவுலெ (???) சொல்ரேன்.
இப்ப வர்ட்டா ....... எல்லொர்ருக்கும் அஞ்சு நாள் கழிச்சு - பொங்கல் வாழ்த்து !!!!
நட்புடன் ..... சீனா




Friday, 9 January 2009

முடிவெடுங்கள்

அன்பர்களே !

திரு மாறன் என்பவர் எழுதிய வெற்றி மாலை என்ற நூலிலிருந்து .....

முடிவெடுங்கள் :
-----------------------
வெற்றியாளனாக வேண்டுமென்றால் இன்றே இப்பொழுதே முடிவெடுங்கள். எக்காரணத்தை முன்னிட்டும் முடிவெடுப்பதைத் தள்ளிப் போடாதீர்கள்.

தள்ளிப்போடும் எண்ணத்தைக் கிள்ளிப் போட்டு விடுங்கள். ஜப்பானியர்கள்
உயர் நிலையை அடைய முக்கிய காரணமாக அவர்கள் சொல்வது DO IT NOW - இப்பொழுதே செய்து முடி என்பதே !

நாம் பெரும்பாலும் காரியங்களைச் செய்வதில் தாமதம் செய்து, சாதாரணமாக முடிவெடுக்க வேண்டிய செயல்கள் தாமதமாகி, அவசரச் செயலாகவும், அவசரச் செயல்களை மீண்டும் தாமதம் செய்து, மிக மிக அவசரச் செயல்களாக, அரைகுறையாய்ச் செய்து முடிப்போம்.

எனவே முடிவெடுத்து விட்ட நிலையில் சிறிதும் தாமதிக்காமல் உங்கள் செயல்களைச் செய்யத் திட்டமிடுங்கள்.

காரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்வதில்லை. காரியங்கள் செய்பவர்கள் காரணங்கள் சொல்வதில்லை.

எனவே காரணங்களைத் தவிர்த்து காரியம் கைகூட இப்பொழுதே முடிவெடுங்கள்.

நட்புடன் ... சீனா

Wednesday, 7 January 2009

சமையல் குறிப்பு : அவல் கிண்டுவது எப்படி

சகோதரி நானானி அடுத்து என்ன கிண்டி, கிளறப் போறீங்கன்னு கேட்டிருந்தாங்க என்னோட மா உருண்டைப் பதிவுலே - அதன் தொடர்ச்சியா அவல் கிண்டப் போறேன்.

தேவையான பொருட்கள் :

அவல் : 200 கிராம்
வெல்லம் : 100 கிராம்
ஏலக்காய் : 3 அல்லது 4
முந்திரிப்பருப்பு : 5 அல்லது 6
திராட்சை : 7 அல்லது 8
நெய் : 2 ஸ்பூன்
தேங்காய் : அரை மூடி ( துருவி வச்சிக்கணூம்)


(அப்புறம் கேஸ், கேஸ் அடுப்பு, வாணலி, கரண்டி, மூடி கை துடைக்கத்துண்டு இதெல்லாம் எடுத்துக் கொடுக்க ஒரு ஆள் ( பொன்னா இருந்தா நல்லது) - இவ்வளவும் இருந்தா தான் அவல் நல்லா கிண்ட முடியும்)

முதலில் அவலை லேசா ஒரு கழுவு கழுவி ஒரு டம்ளர் தண்ணீலே ஊற வைக்கணும் ( 10 நிமிடம்). அப்புறம் எரியற அடுப்பிலே சட்டி வச்சி அதுலே முந்திரி, திராட்சையை நெய்யிலே நல்லா வறுத்துக்கணும். ரெண்டு டம்ளர் தன்ணியை அது மேலேயே ஊத்தி, வெல்லத்த தட்டி அதுல போட்டு நல்லா கொதிக்க வைக்கணும். நல்லா கொதிச்சதும் ஊற வச்ச அவலை அதுலே கொட்டி நன்றாகக் கிண்ட வேண்டும் - கிளற வேண்டும். அடிப்ப்டிக்க விட்டு விடக் கூடாது. நல்ல வாசனை வரும் போது கீழே இறக்கி வைத்து துருவிய தேங்காயை அதில் தூவி நன்றாகக் கிளறி ரெண்டு நிமிடம் மூடி வைக்க வேண்டும்.

அவ்ளோ தான் - இப்போ அவல் நல்லா சாப்பிடலாம் - ரெடி - உடம்புக்கும் நல்லது - ஆமா சொல்லிப்புட்டேன்.

நட்புடன் ...... சீனா

-----------------------

Tuesday, 6 January 2009

திருமண வாழ்த்துப்பா - உடன் பிறப்பின் வாழ்த்து

தமக்கையின் மண நாளன்று தங்கை படித்த நல்வாழ்த்துப் பா
---------------------------------------------------------------------------------
ஆடிப்பாடி அன்பாய் இருந்த நாட்கள் - நாம்
கூடிப்பேசி குலாவி மகிழ்ந்த பூக்கள் !

அறிவும் ஆற்றலும் நம் வாழ்க்கைப்படிகள்
ஆற்றலும் திறமையும் நம் பெற்றோர் மகிழ்ந்தபூக்கள் !

வளர்ந்த முல்லை ! வசந்த முல்லை ! வாழ்வின் செல்வி !
சேர்க்கும் தலைவன் சேதுராமன் செங்கரம் பிடிக்கின்றாய் !

அக்கா நீயும் அன்பாய் இரு ! அள்ளிக் கொடு !
ஆக்கிடும் இறைவன் அருள் புரிவான் !

வாழ்க வளமுடன் நீ !
வாழ்த்த வயதில்லை ! வணங்குகிறேன் !
நன்றே செய்து நலமுடன் வாழ்வாய் !

-----பிரி.

Monday, 5 January 2009

ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள்

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியிட்ட ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் என்ற புத்தகத்திலிருந்து சில பொன்மொழிகள்.
ஆங்கிலத்தில் இருக்கிறது - தமிழாக்கம் செய்ய வேண்டும்.

The happiness of the world is transitory. The less you become ataached to the world, the more you enjoy peace of mind.

Even the impossible becomes possible through devotion.

One who makes a habit of prayer will easily overcome all difficulties and remain calm and unruffled in the midst of the trials of life.

He who thinks of the LORD, in which way can evil come to him ?

படியுங்கள் - பயனடையுங்கள் - நன்றி





Sunday, 4 January 2009

புத்தாண்டு வாழ்த்துப் பா !!

அருமை நண்பர்களே !

எனது நண்பர் ஒருவர் புத்தாண்டு வாழ்த்தாக இக்கவிதையை எழுதி மடல் வரைந்திருந்தார். படித்தேன் - ரசித்தேன் - கடைப்பிடிக்க வேண்டுமென நினைத்தேன். நீங்களும் படியுங்களேன் !
---------------------------------------------------------
அழகாய் மௌனமாய் வீற்றிருக்கும்
பழகப் பழக
புதுப்புது செய்திகள் சொல்லும்
இரவைப் பகலாக்கும்
விடிந்தாலும் இரவாய் பயணிக்கும்
தூக்கம் கலைக்கும்
தொடர்ந்து நித்திரைக்கும்
தூது செல்லும்.

படர்ந்த சிந்தனைகளை
மெதுவாய் அசைபோடும்
புதியன தேடவைக்கும்
புதிராய் அலையவைக்கும்
தாயாய் - தாரமாய்
தலைமுறை போற்றும் சேயாய்
விரலைப் பற்றி
நிழலாய் வலம்வரும்..............

புத்தகமே - நம்
புது அகம் !!
புத்தகமே - நம்
புது யுகம் !!

வாசிப்பே சுவாசிப்பு !
வாசிப்பவரே வசிப்பவர் !
வாசித்தல் நேசிப்போம் !!
வாழ்தலில் வசந்தம் சேர்ப்போம் !!
============================
நட்புடன் .... சீனா .......
--------------------------------------------

Saturday, 3 January 2009

மா உருண்டை

அருமை நண்பர் சதங்கா மா உருண்டை எப்படிச் செய்வதென்று ஒரு பதிவு அவரது செட்டி நாட்டுக் கிச்சன் என்ற வலைப்பூவினில் போட்டிருந்தார். நானும் மாஉருண்டை செய்வதில் எங்க அம்மாவுக்கு உதவி இருக்கேன். இப்ப என்ன பண்றது - எப்படிப் பண்றதுன்னு பாக்கலாமா

தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு - சீனி - நெய்

செய்முறை :

பாசிப்பருப்பையும் சீனியையும் மிஷினில் கொடுத்து அரைத்து வாங்கணும் - அப்பல்லாம் வீட்லெ மிக்ஸி எல்லாம் இல்லீங்கோ - மிஷின் காரன் சீனி பிளேட்ல ஒட்டிக்கும் - அதனாலே இப்ப அரைக்க முடியாது - கடசியா கட மூடும் போது அரைச்சுத் தரேன்னு சொல்லுவான் - சாயந்திரமா போய் காத்துக்கிட்டுருந்து அரைச்சுக்கிட்டு வரணும்.

அடுப்புலெ சட்டிய வச்சி - நெய் ஊத்தி காய வைக்கணும். இளஞ்சூடா இருக்கற நெய்யே எடுத்து அப்படியே மாவுலே ஒரு கரண்டி ஊத்தி - மாவையும் நெய்யெயும் சேத்து பதமா உருட்டி - மாவு உருண்டைக் கிண்ணம்னு ஒண்ணு இருக்கும் - சின்னதா அழகா - அதுலே வச்சி அமுக்கி - கிண்ணத்தெ தலை கீழா கவுத்தா மாவுறுண்டை ரெடி. அப்புறம் சாப்பிடலாம் . செய்யும் போதே மாவை அள்ளி அள்ளித் திங்கலாம்.

இப்படியே ஒவ்வொரு கரண்டியா நெய் விட்டு மாவுருண்டை பிடிச்சி - எல்லா மாவையும் உருண்டையாச் செய்யணும். ரொம்ப நல்லா இருக்கும்.

இப்பல்லாம் தங்க்ஸுக்கு இதுல எல்லாம் நான் உதவி செய்யறதே இல்லீங்கோ - அம்மாக்கு மட்டும் பட்டப்படிப்பு முதல் வருடம் படிச்சப்போ உதவி பண்ணுனதுங்கோ - ( அள்ளித் திண்ணது தான் ஜாஸ்தி - மெஷினுக்குப் போய் கால் கடுக்க நின்னு அரைச்சிட்டு வந்தேன்ல )

வர்ட்டா - நாளைக்குப் பாக்கலாம்

Friday, 2 January 2009

சென்ற பதிவின் தொடர்ச்சி

அன்பின் நண்பர்களே

சென்ற பதிவின் தொடர்ச்சியாக - சென்ற ஆண்டு எடுத்த சபதத்தினை ஆய்வு செய்ததின் விளைவாக இப்பதிவு. ஒவ்வொரு சபதமாகப் பார்ப்போம்.

1. கடன்வாங்கி யாருக்கும் உதவி செய்யக்கூடாது. குறிப்பாக சொந்தக்காரர்களுக்கு. ( இது வரை கையைச் சுட்டுக் கொள்ளவில்லை)

நண்பர்களே ! உதவி செய்வது சென்ற ஆண்டு தடைப்பட வில்லை. உறவினர்களுக்கும், நட்புக்கும், முன் பின் தெரியாதவர்களுக்கும் உதவி தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. சபதம் நிறைவேறியதாகக் கொள்ளலாம். கடன் வாங்கவில்லை. கையைச் சுட்டுக் கொள்ளவில்லை.

2.போதும் என்ற மனம் சிறந்ததுதான். ஆனாலும் இறைவன் கொடுத்த திறமைகளை நன்றாகப் பயன்படுத்தி மேன்மேலும் உயரவேண்டும்.(எனது தற்போதைய உயரம் 165 செ.மீ தான்).

உயரவில்லை. இன்னும் அதே உயரம் தான் இருக்கிறேன். திறமைகளைப் பயன் படுத்த சந்தர்ப்பம் கிடைக்க வில்லை. செக்கு மாடு மாதிரி அலுவல் பணி ஆளை சுற்ற வைத்து விட்டது. சிறந்த கொள்கையான போதும் என்ற மனம் என்னை அறியாமலேயே வந்து விட்டது.

3. அவ்வப்போது தோன்றும் கவிதைகள், கதைகள் மற்றும் சிறுசிறு எண்ணங்களை வலைப்பதிவில் எழுத வேண்டும். ( எதை எழுதினாலும் மறு மொழி தருவதற்கு ஏற்பாடு பண்ணிடலாம்). யார் வேண்டுமானாலும் படிக்கலாம் - அது அவர்கள் ஹெட் லெட்டர்.

கவிதைகள், கதைகள் எழுத வில்லை - மர மண்டையில் உதிக்க வில்லை. பனியும் ( மார்கழி ) பணியும் உதிப்பதற்கு உதவ வில்லை. பின்னூட்டங்களுக்கு குறைவில்லை. கவிதைகளை ரசித்ததிலும் குறைவில்லை. அன்புடன் என்ற குழுமத்தில் அநேக கவிதைகளை ரசித்து மறு மொழி இட்டதுண்டு. யாருடைய ஹெட் லெட்டரையும் மாற்ற வில்லை ( நான் என்ன கடவுளா - மாற்றுவதற்கு).

4. படிப்பதற்கு சிரமப்படும் மாணவ, மாணவிகளுக்கு முடிந்த உதவியை செய்ய வேண்டும். ( மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இப்போது அதிகம் வருகிறது).

யாரும் என்னை அணுக வில்லை. யாரையும் நானும் தேடிப்போக வில்லை. இருப்பினும் சென்னையில் உள்ள மென்பொருளாளர்களால் நடத்தப்படும் தொண்டு நிறுவனத்தின் மூலமாக ஒரு பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்க உதவினேன். வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல் செய்து வந்த உதவிகள் இப்பொழுது வலைப்பதிவுகள் மூலமாக வெளி வருவது வருந்தத் தக்கதே. பெருமை அடித்துக் கொள்வதாய் நினைக்க வேண்டாம். ஆணடவன் அருளினால் முடிந்தவற்றைச் செய்கிறேன். கொடுப்பதும் அவனே ! கொடுக்க வைப்பதும் அவனே !

5. மற்றவர்க்கு விட்டுக் கொடுத்து, மற்றவர் மனமகிழ, நாமும் மகிழ வேண்டும்.

இது ஓரளவிற்கு நிறைவேறியது. இன்னும் பூரண சரணாகதி அடைய வில்லை. விட்டுக் கொடுத்திருக்கிறேன். மற்றவர் மனம் மகிழ, நானும் மகிழ்ந்திருக்கிறேன். விட்டுக் கொடுத்தவர் கெட்டுப் போவதில்லை என அலுவலக நண்பர் ராஜூ அடிக்கடி கூறுவார்.

6. 2007ல் மறு மொழிகள் அதிகம் எழுதியாகி விட்டது. பதிவுகள் மிகக் குறைவாகவே எழுதி இருக்கிறேன். இக்குறையை களைய வேண்டும்.

களைந்த மாதிரி தான். மறு மொழிகள் குறையவில்லை. அன்புடன் குழுமத்திலும் வலைப்பூக்களிலும் மறு மொழிகளுக்குப் பஞ்சமில்லை. வஞ்சனை இல்லாது மறு மொழிகள் இட்டிருக்கிறேன். பதிவுகள் குறைவுதான். ஆனாலும் சபதம் நிறைவேறியது. 2007ல் இட்ட பதிவுகளை விட 2008 ல் அதிகப் பதிவுகள் வெளியாயிற்று.

7. தொலைபேசிக் கட்டணம் மாதம் 2000 வருகிறது ( இணையத்தில் அதிக நேரம் செலவிடுவதால்). சக பதிவர், எனது துணைவி, ( வலை மொழியில் தங்கமணி) இது அதிகம் எனவும், குறைக்க வேண்டும் எனவும் கூறி இருக்கிறார். கவனிப்போம்.

சகபதிவர்களின் ஆலோசனைப்படி இணையக் கற்றையில் நல்ல திட்டத்தினைத் தேர்ந்தெடுத்து பயன் படுத்துகிறேன். மாதம் 500 ரூபாய்க்குள் அடக்கி விட்டேன். ஆக நிறைவேறிய பட்டியலில் இதைச் சேர்க்கலாம்.

8. போதாதா ஏழு - சபதமில்லாமல் ஒன்று. துளசி தளம் முழுவதும் படித்து விட வேண்டும்.

இது சபதமில்லை. எனவே கவலை இல்லை. ஆனாலும் துளசி தளத்தில் அதிகப் பதிவுகள் படித்தேன். மறு மொழிகள் இட்டேன். துளசி தான் கூற வேண்டும். சரியா தவறா என்று.

சரி - சுய பரிசோதனை முடிந்தது. ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ( அப்ரைசல் இப்படித்தான் பூசி மெழுகி எழுதுவோம்).

இதைச் செய்தேன் அதைச் செய்தேன் என சுய தம்பட்டமமடித்து, தலைக்கனம் அதிகமாகி விட்டதாக உணர்கிறேன். தவறு தான். ஆனால் அப்ரைசல் செய்ததை எழுத வேண்டும் இல்லையா.

சரி சரி ரொம்பப் போரடிக்காமாப் போய்யான்னு என் இளவட்ட பதிவுலக நண்பர்கள் கூவுறாங்க..... 2009 சபதங்கள் யாருமே எனக்குத் தெரிந்து பதிவு போடலே ! அதனாலே நானும் போடலே !

நாளைக்குப் பாப்போமா - வரட்டா

நட்புடன் சீனா

Thursday, 1 January 2009

சென்ற ஆண்டின் சபதமும் இந்த ஆண்டின் சபதமும்

அன்பின் சக பதிவர்களே !

சென்ற ஆண்டு - சர்வசித்து ஆண்டு தைத்திங்கள் முதல் நாள் - இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு சனவரித் திங்கள் பதினைந்தாம் நாள் - செவ்வாய்க்கிழமை மாலை 17:17 மணி அளவில் 2008ம் ஆண்டின் புத்தாண்டு சபதமாக என்ன எல்லாம் 2008ம் ஆண்டு செய்ய வேண்டும் என ஒரு பதிவு போடிருந்தேன். முப்பத்து ஒரு மறு மொழிகள் வந்திருந்தன. அப்பதிவினை தற்செயலாக ( நம்புங்க அய்யா !!! ) படித்ததில் ஒரு சுய பரிசோனை - ஒரு ஆய்வு செய்தாலென்ன என ஒரு எண்ணம் தோன்றியதன் விளைவு இப்பதிவு.

முதலில் அச்சபதம் எடுக்கக் காரணமாயிருந்த சகோதரி
நானானிக்கும், நண்பர் ரூபஸ் அருளுக்கும் நன்றி தெரிவித்து, அவர்களுக்கு என்னுடைய சபதத்தின் இன்றைய நிலை என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டிய கடமை - கட்டாயத்தில் இருப்பதினால் இப்பதிவினை இங்கு இடுகிறேன்.

மேலும் அப்பதிவினில் என்னை 2009ம் ஆண்டு, சபதம் நிறைவேறியதா இல்லையா எனச் சோதித்துப் பார்ப்பேன் எனப் பயமுறுத்திய கண்மணி அவர்களுக்கும் இப்பதிவினில், நிலை என்ன என்பதை அறிவிக்க வேண்டி இருப்பதால் இப்பதிவினை இங்கு இடுகிறேன்.

மேலும் அப்பதிவினில் எனக்கு அன்புக் கட்டளை ...ட்டளை ......டளை .........ளை இட்ட மங்களூர் சிவாவினிற்கும் இப்பதிவினில் நிலை என்ன என்பதை அறிவிக்க வேண்டி இருப்பதால் இப்பதிவினை இங்கு இடுகிறேன்.

பில்டப் போதுமா - பதிவைத் தொடரலாமா வேணாமா ( எல்லோரும் வேணும் வேணும்னு கேக்கறது எனக்குக் கேக்குது ) - கட்டாயம் தொடர்வேன் - நாளைக்குப் பாக்கலாமா .......

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நினைத்தவை நடக்கவும், விரும்பியது கிடைக்கவும், மகிழ்வுடன் இருக்கவும், சிறப்புடன் வாழவும் நல்வாழ்த்துகள்.

நட்புடன் ....... சீனா