தமிழ் கற்றவனின் மலரும் நினைவுகள் ஞாபகம் வருதே !! ஞாபகம் வருதே !! ..........................
Saturday, 8 November 2014
வலைச்சர வரலாறு
அனைவருக்கும் வணக்கம்
நீங்கள் அனைவரும் வலைச்சரம் பற்றி அறிந்திருக்கலாம் !
இந்த வலைச்சரத்தின் வரலாற்றினை எழுதலாம் என நினைக்கிறேன்.
இதன் வரலாறு என்ன ?
இதனை முதன் முதலில் யார் தொடங்கினார்கள் ? எப்படி நடத்தினார்கள் ?
எப்பொழுது தொடங்கப் பட்டது இந்த வலைச்சரம் ?
வலைச்சரத்தின் நோக்கம் என்ன ?
நோக்கம் எப்படி நிறைவேறியது ?
வரவேற்பு எப்படி இருந்தது ?
இன்றைய வலைச்சரம் எவ்வாறு இயங்குகிறது ?
என இத்தனையையும் உள்ளடக்கி பல பதிவுகளாக - தொடரலாம் என எண்ணுகிறேன். என்னுடைய எண்ணத்தினை எழுத்தாக 10.11.2014 திங்கட்கிழமை முதல் நீங்கள் அனைவரும் காணலாம்.
பொறுத்திருங்கள் - வலைச்சரம் ஒரு வரலாறாகும்.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
Saturday, 28 December 2013
தேவை தேவை - அவசரத் தேவை - இன்னும் 36 மணி நேரத்தில் வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்க ந்ண்பர்கள் தேவை
தேவை தேவை - அவசரத் தேவை - இன்னும் 36 மணி நேரத்தில் வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்க நண்பர்கள் தேவை
Wednesday, 9 October 2013
இன்பச் சுற்றுலா - 6, 7 மற்றும் 8 ம் நாள் அக்டோபர் 2013
வகுப்பறையில் சென்று மாணவச் செல்வங்களைக் கண்டு - உரையாடி வந்தேன். இப்பள்ளியில் படித்துத் தான் வங்கியில் முதனமை மேலாளராகப் பணியாற்றும் அளவிற்கு நான் பண்பு பெற்றேன். நீங்களும் நன்றாகப் படித்து நல்ல பிள்ளைகளாக வளருங்கள் என்று வாழ்த்தினேன்.
அன்பால் மாணவச் செல்வங்கள் என்னிடம் கையொப்பம் கேட்டு வண்டுகளாய் என்னை மொய்த்துக் கொண்டனர். நானும் மட்டற்ற மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் அன்புடனும் வாழ்த்துகளுடனும் கூடிய கையொப்பம் இட்டேன்.
படித்தது வீரராகவ உயர்நிலைப் பள்ளி என்றாலும் விளையாடச் சென்றது எல்லாம் கல்யாண சுந்தரம் உயர் நிலைப் பள்ளி தான். ஆகவே அங்கும் சென்று ஆசிரியப் பெருமக்களைக் கண்டு பேசி மகிழ்ந்து வந்தோம்.
பிறகு நான் பிறந்த, மேல வீதியில் சங்கர மடத்திற்கு அருகில் உள்ள வான்மாமலை மடத்தின் வீட்டினைத் தேடிக் கண்டு பிடித்து வீட்டினில் உள்ளவர்களிடம் என் பிறந்த வீடு இது ( 1950 ) எனப் பெருமை பேசி வீட்டினைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தேன். அன்றைக்கு இருந்தது போலவே இன்றும் பழமை மாறாமல் உள்ளது.
அதே தெருவில் அருகில் உள்ள சங்கர நாராயணர் கோவில் அன்று அடிக்கடி நான் சென்று வந்த இடம். நான் சுற்றி வந்த கோயில் வளாகம் அப்படியே என் நினைவிற்கு வந்தது.
அதனால் தான் என்னையும் அந்த இறைவன் பெயரால் - வீட்டில் சங்கர் என்றே அழைத்தார்கள்.
மதிய உணவிற்குப் பின் சென்ற இடம் தஞ்சையில் சிறப்பு வாய்ந்த அரண்மனையில் உள்ள பெரியதொரு பழம் பெருமை வாய்ந்த நூலகம்.
இதன் வரலாற்றைக் கேட்ட பொழுதினிலேயே நாமறிந்த வரலாற்றில் எத்த்னை இடைச் செருகல்கள் என்பதனை அறிந்து பெருமூச்செறிந்தோம்.
வரலாறு எப்படிக் காக்கப் பட வேண்டுமென்ற அரசு நடை முறைகள் -. எத்தனை செயல்முறைகள் - அத்தனைக்கும் செப்பேடுகள் - ஓலைச் சுவடிகள் - கையெழுத்துச் சுவடிகள் - ஆவணங்கள் - அறிவியல் மருத்துவம் ஓவியம் அரசியல் வரலாறு என்று வகை வகையாய் எண்ணற்ற நூற் பதிவுகள் . இவற்றை பாதுகாத்த அறிஞர்கள்.
அடுத்து நாங்கள் சென்று வந்த காமாட்சி அம்மன் கோவில் தெருக்கோடியில் அமைந்த பெரிய கோவில். அக்கோவிலுக்கும் சென்று அம்மனை நவராத்ரிக் கோலத்தில் கண்டு மகிழ்ந்தோம்.
தஞ்சையைச் சார்ந்த மிகவும் சிறப்பு வாய்ந்த மாரியம்மன் கோவிலுக்கும் சென்று வந்தோம். பெரியதென்றால் மிகவும் பெரியதாய் இருந்தது.
08.10.2013
அடுத்த நாள் வைத்தீஸ்வரன் கோவில் சென்று திவ்ய தரிசனம் கண்டு இறை யருள் பெற்று மகிழ்வுடன் மதுரை திரும்பினோம்.
தஞ்சையில் எங்களீன் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அழைத்துச் சென்று இடங்களைப் பார்த்து மகிழ அன்புடன் வந்து உதவிய பண்பாளர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள். இவர் கரந்தைத் தமிழ்ச் சங்கம் நடத்தும் உமா மகேசுவரனார் மேல் நிலைப் பள்ளியில் முதுநிலைக் கணித ஆசிரியராகப் பணியாற்றுபவர். தஞ்சையில் நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் இவர் அறிமுகமானவராக இருந்தது எங்களுக்கு மிகவும் உதவியாய் இருந்தது.
கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன் முதலிய மூன்று நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர். தமிழ்ப் பொழில் இதழில் கரந்தைத் தமிழ்ச் சங்கப் பணிகள், சாதனைகள் குறித்து கட்டுரைகள் எழுதி வருகின்றார்.
அவர் இல்லத்திலேயே எங்களைத் தங்க வைத்து விருந்தோம்பிய அவரின் அன்பு எங்களைத் திக்கு முக்காட வைத்தது. அவர் பெற்றோரும் துணவியாரும பிள்ளைகளும் அருமையாய் எங்களை வரவேற்றனர்.
அனைவருக்கும் நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
Sunday, 14 February 2010
வணக்கம் ..... ! சொல்லுங்க ....... !
நம்மை விட்டுப் பிரியாமல் இருப்பது இப்போது எல்லாம் அலைபேசிதான் ! ஒன்று கையின் அணைப்பில் இருக்கும் இல்லை எனில் நெஞ்சின் அணைப்பில் இருக்கும். அலைபேசியின் அழைப்பு நடக்கும் போதும் நம்மைத் தட்டி எழுப்பும் ! பின்னால் வருவது துணையே ஆயினும், அருகில் வருவது அயலாரே ஆயினும் அதற்கு வேறுபாடு கிடையாது !
வணக்கம் ! சொல்லுங்க ..... ! என்று கணீர்க் குரல் - வந்த அலைபேசி அழைப்புக்குப் பதில் கூறும் முகமாகப் பேசிய சொற்கள். இக்குரலைக் கேட்டதும் அருகே வந்த பெரியவர் சற்றே வியப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த பார்வையைச் செலுத்தி புன்னகை பூத்தார் ! தடுமாறி நடந்த பெரியவர் சற்றே கையமர்த்தி நின்று " இப்பொழுது எல்லாம் நல்ல தமிழில் யார் பேசுகிறார்கள் ? உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ் ! உலகின் முதன்மையான 108 மொழிகளில் முதன்மையானது தமிழ் ! இக்காலத்தில அதை மறந்து விட்டனர் இத்தலைமுறையினர். எங்கே தமிழ் ? அதைக் கேட்பதே அரிதாக உள்ளது " என்றார் அப்பெரியவர்.
அவர் யார் என்பது எங்களுக்குத் தெரியாது ! நாங்கள் யார் என்பது அவருக்குத் தெரியாது ! இவ்வளவு நன்றாகத் தமிழ் பேசுகிறீர்களே ! நான் ஒரு தமிழ்க் கூட்டத்திற்குத் தான் சென்று கொண்டிருக்கிறேன் என்றார்.
அவருக்கு வயது 82 ! தள்ளாமை நடையில் தெரிந்தது ! ஆனாலும் தூயமையான வெள்ளுடையில் கையில் ஒரு பையுடன் நடந்தார் ! சற்றே உயரமான தோற்றமுடையவர் ! இப்பொழுதெல்லாம் எதுவும் நினைவில் நிற்பது இல்லை - மறந்து போய் விடுகிறது எனக்கூறி எங்கள் பெயரை இரண்டு மூன்று முறை கேட்டு நினைவு படுத்திக் கொண்டார். தன் பெயர் சண்முகக் கனி என்றார். எங்கள் அடுக்ககத்தில் புதிதாகக் குடி வந்திருப்பதாகவும் கூறினார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நேர நடைப்பயிற்சியில் தான் அவரைச் சந்தித்தோம். தமிழறிஞர்களின் மாலை நேரக் கூட்டத்திற்கு தனியே சென்று கொண்டிருந்தார். வணக்கம் , சொல்லுங்க ! என்ற அலைபேசியில் பேசிய தமிழ்ச் சொற்களுக்கே அவர் மயங்கி விட்டார்.
அங்கேயே ஒரு ஓரமாக நின்று எங்களுடன் சில மணித்துளிகளைச் செலவிட்டு உரையாடி மகிழ்ந்தார். பல தமிழறிஞர்கள் பெயரை எல்லாம் கூறி அவருக்கு உள்ள தொடர்பினைப் பகிர்ந்து கொண்டார். பேராசிரியர் சக்திவேல் என்பவரைக் குறிப்பிட்டு அவர் பேசிய போது - நான் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள நாடார் மகாஜன சங்கம் எஸ் வெள்ளைச்சாமி நாடார் கல்லுரியில் நான் படித்த காலத்தில் முதல்வராக இருந்த பேராசிரியர் சக்திவேலை நினைவு கூர்ந்தேன். அவரைத்தான் அவரும் குறிப்பிட்டதாகக் கூறி மகிழ்ந்தார். அங்கு தமிழாசிரியராக இருந்த பேராசிரியர் சொல்விளங்கும் பெருமாள் - அவரது துணைவியார் பேராசிரியை சக்தி பெருமாள் பற்றிப் பல செய்திகளை பகிர்ந்து கொண்டோம்.
துணவியை - ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியை என அறிமுகப் படுத்தியதும் அவர் முகத்தில் மலர்ந்த சிரிப்பும் அடைந்த மகிழ்ச்சியும் சொல்ல இயலாது.
மதுரைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் மற்றும் பல தமிழ் அறிஞர்களைப் பற்றிப் பேசினார்.
துணைவி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் பயின்றவர் என அறிமுகப் படுத்தியதும் அவர் அடைந்த மகிழ்ச்சி எழுத்தில் வடிக்க இயலாது. வெள்ளை வாரணர் உள்ளிட்ட பல தமிழ்ப் பேராசிரியர்களைப் பற்றி நினைவு கூர்ந்தார். முனைவர் வ.சுப. மாணிக்கனார் மற்றும் பல துணைவேந்தர்களைப் பற்றிப் பேசினார்.
பயின்றது தமிழ் ! பயிற்றுவித்தது தமிழ் ! என்றதும் வாழ்க வளமுடன் ! என வாழ்த்தினார். எங்களுக்கோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி !
நட்புடன் சீனா
-------------------
Friday, 2 January 2009
சென்ற பதிவின் தொடர்ச்சி
சென்ற பதிவின் தொடர்ச்சியாக - சென்ற ஆண்டு எடுத்த சபதத்தினை ஆய்வு செய்ததின் விளைவாக இப்பதிவு. ஒவ்வொரு சபதமாகப் பார்ப்போம்.
1. கடன்வாங்கி யாருக்கும் உதவி செய்யக்கூடாது. குறிப்பாக சொந்தக்காரர்களுக்கு. ( இது வரை கையைச் சுட்டுக் கொள்ளவில்லை)
நண்பர்களே ! உதவி செய்வது சென்ற ஆண்டு தடைப்பட வில்லை. உறவினர்களுக்கும், நட்புக்கும், முன் பின் தெரியாதவர்களுக்கும் உதவி தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. சபதம் நிறைவேறியதாகக் கொள்ளலாம். கடன் வாங்கவில்லை. கையைச் சுட்டுக் கொள்ளவில்லை.
2.போதும் என்ற மனம் சிறந்ததுதான். ஆனாலும் இறைவன் கொடுத்த திறமைகளை நன்றாகப் பயன்படுத்தி மேன்மேலும் உயரவேண்டும்.(எனது தற்போதைய உயரம் 165 செ.மீ தான்).
உயரவில்லை. இன்னும் அதே உயரம் தான் இருக்கிறேன். திறமைகளைப் பயன் படுத்த சந்தர்ப்பம் கிடைக்க வில்லை. செக்கு மாடு மாதிரி அலுவல் பணி ஆளை சுற்ற வைத்து விட்டது. சிறந்த கொள்கையான போதும் என்ற மனம் என்னை அறியாமலேயே வந்து விட்டது.
3. அவ்வப்போது தோன்றும் கவிதைகள், கதைகள் மற்றும் சிறுசிறு எண்ணங்களை வலைப்பதிவில் எழுத வேண்டும். ( எதை எழுதினாலும் மறு மொழி தருவதற்கு ஏற்பாடு பண்ணிடலாம்). யார் வேண்டுமானாலும் படிக்கலாம் - அது அவர்கள் ஹெட் லெட்டர்.
கவிதைகள், கதைகள் எழுத வில்லை - மர மண்டையில் உதிக்க வில்லை. பனியும் ( மார்கழி ) பணியும் உதிப்பதற்கு உதவ வில்லை. பின்னூட்டங்களுக்கு குறைவில்லை. கவிதைகளை ரசித்ததிலும் குறைவில்லை. அன்புடன் என்ற குழுமத்தில் அநேக கவிதைகளை ரசித்து மறு மொழி இட்டதுண்டு. யாருடைய ஹெட் லெட்டரையும் மாற்ற வில்லை ( நான் என்ன கடவுளா - மாற்றுவதற்கு).
4. படிப்பதற்கு சிரமப்படும் மாணவ, மாணவிகளுக்கு முடிந்த உதவியை செய்ய வேண்டும். ( மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இப்போது அதிகம் வருகிறது).
யாரும் என்னை அணுக வில்லை. யாரையும் நானும் தேடிப்போக வில்லை. இருப்பினும் சென்னையில் உள்ள மென்பொருளாளர்களால் நடத்தப்படும் தொண்டு நிறுவனத்தின் மூலமாக ஒரு பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்க உதவினேன். வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல் செய்து வந்த உதவிகள் இப்பொழுது வலைப்பதிவுகள் மூலமாக வெளி வருவது வருந்தத் தக்கதே. பெருமை அடித்துக் கொள்வதாய் நினைக்க வேண்டாம். ஆணடவன் அருளினால் முடிந்தவற்றைச் செய்கிறேன். கொடுப்பதும் அவனே ! கொடுக்க வைப்பதும் அவனே !
5. மற்றவர்க்கு விட்டுக் கொடுத்து, மற்றவர் மனமகிழ, நாமும் மகிழ வேண்டும்.
இது ஓரளவிற்கு நிறைவேறியது. இன்னும் பூரண சரணாகதி அடைய வில்லை. விட்டுக் கொடுத்திருக்கிறேன். மற்றவர் மனம் மகிழ, நானும் மகிழ்ந்திருக்கிறேன். விட்டுக் கொடுத்தவர் கெட்டுப் போவதில்லை என அலுவலக நண்பர் ராஜூ அடிக்கடி கூறுவார்.
6. 2007ல் மறு மொழிகள் அதிகம் எழுதியாகி விட்டது. பதிவுகள் மிகக் குறைவாகவே எழுதி இருக்கிறேன். இக்குறையை களைய வேண்டும்.
களைந்த மாதிரி தான். மறு மொழிகள் குறையவில்லை. அன்புடன் குழுமத்திலும் வலைப்பூக்களிலும் மறு மொழிகளுக்குப் பஞ்சமில்லை. வஞ்சனை இல்லாது மறு மொழிகள் இட்டிருக்கிறேன். பதிவுகள் குறைவுதான். ஆனாலும் சபதம் நிறைவேறியது. 2007ல் இட்ட பதிவுகளை விட 2008 ல் அதிகப் பதிவுகள் வெளியாயிற்று.
7. தொலைபேசிக் கட்டணம் மாதம் 2000 வருகிறது ( இணையத்தில் அதிக நேரம் செலவிடுவதால்). சக பதிவர், எனது துணைவி, ( வலை மொழியில் தங்கமணி) இது அதிகம் எனவும், குறைக்க வேண்டும் எனவும் கூறி இருக்கிறார். கவனிப்போம்.
சகபதிவர்களின் ஆலோசனைப்படி இணையக் கற்றையில் நல்ல திட்டத்தினைத் தேர்ந்தெடுத்து பயன் படுத்துகிறேன். மாதம் 500 ரூபாய்க்குள் அடக்கி விட்டேன். ஆக நிறைவேறிய பட்டியலில் இதைச் சேர்க்கலாம்.
8. போதாதா ஏழு - சபதமில்லாமல் ஒன்று. துளசி தளம் முழுவதும் படித்து விட வேண்டும்.
இது சபதமில்லை. எனவே கவலை இல்லை. ஆனாலும் துளசி தளத்தில் அதிகப் பதிவுகள் படித்தேன். மறு மொழிகள் இட்டேன். துளசி தான் கூற வேண்டும். சரியா தவறா என்று.
சரி - சுய பரிசோதனை முடிந்தது. ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ( அப்ரைசல் இப்படித்தான் பூசி மெழுகி எழுதுவோம்).
இதைச் செய்தேன் அதைச் செய்தேன் என சுய தம்பட்டமமடித்து, தலைக்கனம் அதிகமாகி விட்டதாக உணர்கிறேன். தவறு தான். ஆனால் அப்ரைசல் செய்ததை எழுத வேண்டும் இல்லையா.
சரி சரி ரொம்பப் போரடிக்காமாப் போய்யான்னு என் இளவட்ட பதிவுலக நண்பர்கள் கூவுறாங்க..... 2009 சபதங்கள் யாருமே எனக்குத் தெரிந்து பதிவு போடலே ! அதனாலே நானும் போடலே !
நாளைக்குப் பாப்போமா - வரட்டா
நட்புடன் சீனா
Saturday, 6 September 2008
மதுரை மாநகரில் அன்பர்கள் - பதிவர்கள் சந்திப்பு
கடந்த வியாழனன்று, செப்டம்பர்த் திங்கள் நான்காம் நாள், மதுரை மாநகரில், அண்ணா நகரில், ஒரு புதுமனை புகு விழாவில், நடை பெற்ற ஒரு மாபெறும் பதிவர் சந்திப்பு பற்றிய பதிவு இது.
மதுரையில் வசிக்கும் சீனா ( யாருப்பா அது ?) , செல்வி ஷங்கர் ( இது யாரு ?), புது வண்டு, நாடிக்கண்ணா, சிவமுருகன், நிலா, நந்து ஆகிய பதிவர்களும் மற்றும் நண்பர்களும் ( இவங்க எல்லாம் யாரு - பதிவர் ஆகப் போறாங்களா ? ) இனிய காலைப் பொழுதில் 11 மணி அளவில் சந்தித்தனர்.
சிவ முருகன் சற்றே தயக்கத்துடன் இருந்த படியாலும் (Reserved Type in first time meeting) - முன் அறிமுகம் இல்லாத படியாலும் அதிகம் பேசவில்லை. அவரது எழுத்துகள் பேசுமளவுக்கு அவர் பேச வில்லை. பொறுமையின் சிகரம். உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். அவர்து பதிவுகளைப் பற்றிய பேச்சு வந்த போது கலந்து கொண்டார்.
புது வண்டு, சீனா, செல்வி ஷங்கர், நந்து - இவர்கள் வழக்கம் போல் அதிகம் பேசினர். நந்து திறந்த வாய் மூட வில்லை. புகைப்படக் கருவியை இயக்குவது எப்படி என்று அவரது நிக்கான் கருவியினை இயக்கி - ஒரு சிறு பூவினை எப்படி படம் எடுக்க வேண்டுமென தரையில் முழங்காலிட்டு குனிந்து கருவியைத் தரையில் வைத்து நேரிடையாகவே கற்றுக் கொடுத்தார். ( பெரிய புகைப்பட நிபுனர் என நினைப்பு - ஒரு தடவை PIT ல் பரிசு வாங்கி விட்டார் என நினைக்கிறேன்)
புது வண்டின் மழலைகளுக்கான கதைகள் பற்றி நிலாவும் நந்துவும் பேசினர். குழந்தைகள் அதிகம் விரும்புவதாக அனைவரும் கூறினர்.
அருமையான மதிய விருந்துடன் சந்திப்பு இனிதே முடிந்தது.
ஆமா வலைப்பதிவர்கள் சந்திப்பு என்றால் என்ன ? அதைப்பற்றி எப்படிப் பதிவு போட வேண்டும் ? யாராவது சொல்லுங்களேன்.
நல்வாழ்த்துகளுடன் சீனா
Sunday, 9 March 2008
தந்தையர் தின வாழ்த்து - அசை போட்டது
--------------------------------------------------------------------------
அன்பில் பண்பில் ஆற்றலில் என்றும்
அமைதிப் பெருங்கடல் எங்கள் அப்பா !
அலைகடல் ஒலிக்கும் ஆயினும் அமைதியாய் !
வந்தார் மகிழ வழங்கி மகிழ்வார் !
வழித்துணை இருந்து வாழ்த்தி மகிழ்வார் !
சென்றார் சிந்தனை சிறிதும் வேண்டார் !
சிறந்தார் என்றும் சேர்ந்தே இருப்பார் !
சொல்லில் செயலில் சோர்ந்தார் இல்லை !
செய்தொழில் சிறந்தே செழித்தவர் என்றும் !
அவர்துணை ஆனார் என்றும் அம்மா !
சொன்னது செய்தது சேர்த்தது சிறந்தது
எதிலும் என்றும் இசைந்தே நின்று
ஏற்றம் தேடி இணைந்தே இருந்து
போற்றும் பெயரோடு பொருந்தி வாழும்
அம்மா அப்பா என்றும் சிறக்க
எல்லாம் வல்ல இறையடி தொழும்
தந்தையர் தினத்தில் தலைமகள் வாழ்த்திது !
--------------------------------------------------------------------------------