சகோதரி நானானி 2008ம் ஆண்டு சனவரித் திங்கள் ஆறாம் நாள், புத்தாண்டுச் சபதப் பதிவில், என்னைத் தொடர் பதிவிட அழைத்திருந்தார்.
அதன்படி இப்பதிவு சர்வசித்து ஆண்டு தைத்திங்கள் முதல் நாளில் ( புத்தாண்டு இது தான் எனச் சிலர் சொல்கின்றனர்) இடப்படுகிறது.
இது புத்தாண்டுச் சபதமோ பொங்கல் சபதமோ எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். பொதுவாக நான் என்றுமே சபதங்கள் எடுத்ததில்லை. ஏனெனில் அதைப் பற்றி இது வரை சிந்திக்க வில்லை. சில ஆண்டுத் தொடக்கங்களில் சிலவற்றைச் செய்ய வேண்டும் எனவும் சிலவற்றை செய்ய வேண்டாம் எனவும் நினைப்பது உண்டு.
செய்ய வேண்டும் என்பது ஆண்டு முழுவதும் அல்லது வாழ்வு முழுவதும் கடைப் பிடிக்க வேண்டிய செயலாக பொதுவாக இருக்காது.
ஒரு நிகழ்வினை நிகழ்த்த வேண்டும் எனவோ, ஒரு செயலைச் செய்ய வேண்டும் எனவோ, ஒரு முறை செய்யக் கூடிய செயலாகத்தான் இருக்கும். அதை நிச்சயம் முதல் மாதமே செய்து விடுவேன். ஆகவே அதைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை.
செய்ய வேண்டாம் என்பது உடனடியாக நிறுத்தப் பட வேண்டிய செயலாக இருக்கும். அதையும் உடனடியாக நிறுத்தி விடுவேன். அச் செயலை மறுபடியும் செய்ய வேண்டிய கட்டாயம் நிச்சயமாக வராது. தேவை எனில் மறு பரீசீலனைக்குப் பிறகு செய்வேன்.
ஆகவே இந்த சபதம் என்ற சொல்லெல்லாம் எனக்கு ஒத்து வராது. இருப்பினும் சகோதரி கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப சில சபதங்களை எடுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.
மங்களூர் சிவாவின் நண்பர் ரூபஸ் தன்னுடைய பதிவில் ( http://rufezarul.blogspot.com/2008/01/blog-post.html) ( கண்ணாடி) சில சபதங்கள் எடுத்திருந்தார். அப்பதிவினைப் படிக்கும் போது அவர் எடுத்த சபதங்கள் எனக்கும் ஒத்து வரும் போல ஒரு சிந்தனை தோன்றியது. இச்சிந்தனையை அப்பதிவினில் மறு மொழியாகவும் தெரிவித்தேன். அதன்படி அச் சபதங்களையே வாழ்வில் முதன் முறையாக எடுக்க விரும்புகிறேன். கடைப் பிடிக்கவும் ஆசைப் படுகிறேன்.
1. கடன்வாங்கி யாருக்கும் உதவி செய்யக்கூடாது. குறிப்பாக சொந்தக்காரர்களுக்கு. ( இது வரை கையைச் சுட்டுக் கொள்ளவில்லை)
2.போதும் என்ற மனம் சிறந்ததுதான். ஆனாலும் இறைவன் கொடுத்த திறமைகளை நன்றாகப் பயன்படுத்தி மேன்மேலும் உயரவேண்டும்.
(எனது தற்போதைய உயரம் 165 செ.மீ தான்)
3. அவ்வப்போது தோன்றும் கவிதைகள், கதைகள் மற்றும் சிறுசிறு எண்ணங்களை வலைப்பதிவில் எழுத வேண்டும். ( எதை எழுதினாலும் மறு மொழி தருவதற்கு ஏற்பாடு பண்ணிடலாம்). யார் வேண்டுமானாலும் படிக்கலாம் - அது அவர்கள் ஹெட் லெட்டர்.
4. படிப்பதற்கு சிரமப்படும் மாணவ, மாணவிகளுக்கு முடிந்த உதவியை செய்ய வேண்டும். ( மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இப்போது அதிகம் வருகிறது)
5. மற்றவர்க்கு விட்டுக் கொடுத்து, மற்றவர் மனமகிழ, நாமும் மகிழ வேண்டும்.
6. 2007ல் மறு மொழிகள் அதிகம் எழுதியாகி விட்டது. பதிவுகள் மிகக் குறைவாகவே எழுதி இருக்கிறேன். இக்குறையை களைய வேண்டும்.
7. தொலைபேசிக் கட்டணம் மாதம் 2000 வருகிறது ( இணையத்தில் அதிக நேரம் செலவிடுவதால்). சக பதிவர், எனது துணைவி, ( வலை மொழியில் தங்கமணி) இது அதிகம் எனவும், குறைக்க வேண்டும் எனவும் கூறி இருக்கிறார். கவனிப்போம்.
8. போதாதா ஏழு - சபதமில்லாமல் ஒன்று. துளசி தளம் முழுவதும் படித்து விட வேண்டும்.
பி.கு: சுட்டி கொடுக்கத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் தனி மடலில் உதவலாம்.
அப்பாடா - பதிவு போட்டாச்சு. நானானி மற்றும் ரூபஸ் படிக்கணும்.