ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
Showing posts with label சக பதிவர். Show all posts
Showing posts with label சக பதிவர். Show all posts

Saturday, 6 September 2008

மதுரை மாநகரில் அன்பர்கள் - பதிவர்கள் சந்திப்பு

அன்பின் சக பதிவர்களே

கடந்த வியாழனன்று, செப்டம்பர்த் திங்கள் நான்காம் நாள், மதுரை மாநகரில், அண்ணா நகரில், ஒரு புதுமனை புகு விழாவில், நடை பெற்ற ஒரு மாபெறும் பதிவர் சந்திப்பு பற்றிய பதிவு இது.

மதுரையில் வசிக்கும் சீனா ( யாருப்பா அது ?) , செல்வி ஷங்கர் ( இது யாரு ?), புது வண்டு, நாடிக்கண்ணா, சிவமுருகன், நிலா, நந்து ஆகிய பதிவர்களும் மற்றும் நண்பர்களும் ( இவங்க எல்லாம் யாரு - பதிவர் ஆகப் போறாங்களா ? ) இனிய காலைப் பொழுதில் 11 மணி அளவில் சந்தித்தனர்.

சிவ முருகன் சற்றே தயக்கத்துடன் இருந்த படியாலும் (Reserved Type in first time meeting) - முன் அறிமுகம் இல்லாத படியாலும் அதிகம் பேசவில்லை. அவரது எழுத்துகள் பேசுமளவுக்கு அவர் பேச வில்லை. பொறுமையின் சிகரம். உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். அவர்து பதிவுகளைப் பற்றிய பேச்சு வந்த போது கலந்து கொண்டார்.

புது வண்டு, சீனா, செல்வி ஷங்கர், நந்து - இவர்கள் வழக்கம் போல் அதிகம் பேசினர். நந்து திறந்த வாய் மூட வில்லை. புகைப்படக் கருவியை இயக்குவது எப்படி என்று அவரது நிக்கான் கருவியினை இயக்கி - ஒரு சிறு பூவினை எப்படி படம் எடுக்க வேண்டுமென தரையில் முழங்காலிட்டு குனிந்து கருவியைத் தரையில் வைத்து நேரிடையாகவே கற்றுக் கொடுத்தார். ( பெரிய புகைப்பட நிபுனர் என நினைப்பு - ஒரு தடவை PIT ல் பரிசு வாங்கி விட்டார் என நினைக்கிறேன்)

புது வண்டின் மழலைகளுக்கான கதைகள் பற்றி நிலாவும் நந்துவும் பேசினர். குழந்தைகள் அதிகம் விரும்புவதாக அனைவரும் கூறினர்.

அருமையான மதிய விருந்துடன் சந்திப்பு இனிதே முடிந்தது.

ஆமா வலைப்பதிவர்கள் சந்திப்பு என்றால் என்ன ? அதைப்பற்றி எப்படிப் பதிவு போட வேண்டும் ? யாராவது சொல்லுங்களேன்.

நல்வாழ்த்துகளுடன் சீனா

Sunday, 27 January 2008

வலைப் பதிவர் மாநாடு.

மதுரையில் ஒரு பிரமாண்டமான வலைப் பதிவர் மாநாடு.

சர்வசித்து ஆண்டு தைத்திங்கள் 12 மற்றும் 13ம் நாட்களில் மதுரையில் ஆரப்பாளையம், டி.டி. சாலை, 69ம் எண்ணுள்ள சிவபாக்கியம் திருமண மகாலில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகள், மங்களூர் சிவாவின் தலைமையில், அவருடைய கடும் உழைப்பின் பேராலும், பெரும் முயற்சிகளாலும் அமர்க்களமாக, செய்யப்பட்டிருந்தன.

வலைப்பதிவர்கள் 5 பேர் ( 5000 பேருக்குச் சமம்) சந்தித்தனர். சீனா, அவரது மறு பாதி ( வேற யாருங்க என் துணைவி, மனைவி தானுங்க), மங்களூர் சிவா, நிலாக்குட்டி, நந்து ( இவரு நிலாக்குட்டியோட அப்பாங்க) சந்திச்சாங்க. முக்கிய பார்வையாளரா நிலா அம்மா, சசி வந்திருந்தாங்க. ( நந்துவுக்கு பாதுகாப்பு. அவரு மத்தவங்க ( அதாங்க பொண்ணுங்க) பின்னாடி ஜொள்ளு விட்டுட்டுப் போய்டாமெயும், அவரெ வேற யாரும் கடத்திட்டுப் போய்டாமெயும் பாத்துக்கறதுக்கு). டைட் செக்கூரிட்டிங்க. பாவம் நந்து.

முதல் நாள் மாலையில் நிலா, சசி மற்றும் நந்து வரலே. நாங்க மூணு பேரும் மாநாட்டை எப்படி வெற்றிகரமா நடத்தறதுன்னு ரூம் போட்டு, பேசித் தீர்மானிச்சோம். ராத்ரி ஹல்வா, வடை, கிச்சடி, காப்பியோட எல்லோருக்கும் அருமையான விருந்து.

இரண்டாம் நாள், வாண வேடிக்கைகளோடு, பாண்டு வாத்தியம் முழங்க மேள தாளத்துடன் மாநாடு தொடங்கியது. Full attendance ங்கோ! வாழை மரங்கள் வாசலிலே கட்டப் பட்டிருந்தன. திருமண மகால் முழுவதும் மாவிலைத் தோரணங்கள். பொதுவான வலைப் பதிவுகள், வலைப் பூக்கள், தமிழ் மணம், தேன்கூடு மற்றும் இணையம், இணையத்தில் பாதுகாப்பு பற்றி எல்லாம் விரிவாக விவாதித்தோம். சைடிலே, சிவா திருமணம் பற்றியும் பேசினோம். நாட்டிலே பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே போவது பற்றி வருத்தத்துடன் விவாதித்தோம். பாவம் சிவா இல்ல, பொண்ணு கிடைக்கணுமே அதான்.

சக வலைப் பதிவர்கள் ( தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் மட்டுமே) பற்றியெல்லாம் கலாச்சிட்டு, கிண்டல் பண்ணிட்டு இருந்தோம். சிவாவோட வீக் எண்டு ஜொள்ளு பற்றி ரொம்ப நேரம் விவாதிச்சோம். நிலாக்குட்டியோட சிரிச்சி சிரிச்சிப் பேசினோம். தோழி அனுராதாவைச் சந்திக்கணும்னு முடிவு பண்ணினோம். சந்தர்ப்ப சூழ்நிலை சரியா வரலே.

அப்புறம் என்னங்க - காலை டிபன், மதிய சாப்பாடு. அவ்ளோ தான். எல்லாம் மங்களூர்க்காரரு ஏற்பாடு. காலைலே அல்வா, இட்லி, வடை, ஊத்தப்பம், பொங்கல் ( அபி அப்பா பொங்கள் இல்லீங்க), காப்பி மற்றும் குடிக்க தண்ணி. (மினரல் வாட்டர் தானுங்க). மதியம், சாப்பாடு - பாயசம், பூந்தி, தயிர் பச்சடி, ஃப்ரூட் சாலட், ( சூடா இருந்திச்சி), பருப்பு உசிலி, முட்டக்கோஸ் துவட்டல், மொச்சைக் குழம்பு, மலையாள அவியல், பருப்பு, நெய், வடை, சாதம், சாம்பார், மோர்க் குழம்பு, ரசம், தயிர் etc etc etc. எல்லா ஏற்படுகளும் சூப்பரு போங்க.

மாநாட்டைப் பயன்படுத்தி, சிவா அவங்க அண்ணணோட கல்யாணத்தேயும் இந்த நாட்களில், இதெ மண்டபத்தில் நடத்திக்கிட்டாருங்க. மாநாட்டு வேலயோட வேலயா, இருக்கற பிஸியிலே, அந்தக் கல்யாணத்திலேயும் கலந்து கிட்டோம். கல்யாணத்துலே கொடுத்த தாம்பூலப் பை கொடுத்தாங்க. அந்த செலவெ எல்லாம் மாநாட்டுச் செலவு கணக்குலே எழுதலீங்கோ!

மத்தபடி வேற ஒண்ணும் செய்திகள் இல்லங்க.

மாநாட்டை வெற்றி கரமா நடத்திக் காட்டிய எங்களுக்கு நாங்களே நன்றி தெரிவிச்சிக் கிட்டு கலஞ்சு போனோமுங்க.

அம்புட்டுத்தானுங்கோ!!

Tuesday, 27 November 2007

மதுரைப் பதிவர்களின் கவனத்திற்கு

சகோதரி அனுராதாவுடன் ஒரு சந்திப்பு

அன்பார்ந்த சக வலைப் பதிவர்களே!!

அன்பர் ஓசை செல்லாவின் பதிவின் மூலமாக சகோதரி அனுராதா சென்னையிலிருந்து மதுரை வந்து விட்டதாகவும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் சேர்ந்திருப்பதாகவும் அறிந்தேன்.

இடுகையைப் படித்த உடன் அவரது அலை பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். அவரது அன்புக் கணவர் அலை பேசியில் அழைத்து விபரங்கள் கூறினார். அறை எண் 313ல் இருப்பதாகவும் கூறினார்.

26ம் தேதி, திங்கட்கிழமை காலை மருத்துவ மனைக்குச் சென்று நானும் எனது மனைவியும் சகோதரி அனுராதாவைச் சந்தித்தோம்.

சமீப காலப் பின்னடைவுக்குப் பின்னர் சற்றே தேறியுள்ளார். சர்க்கரை பாடாய்ப் படுத்துகிறது. தற்போது நோய் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது என்றும் அறிந்தோம். இங்கு ரேடியேஷன் மற்றும் கீமோதெரபி சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

சகோதரி இப்போது நடக்கவும் கை கால்கள் அசைக்கவும் பேசவும் செய்கிறார். உடல் நலம் தேறி இருக்கிறார். மன வலிமை கூடி இருக்கிறது.

அன்புக் கணவர் அருகிலேயே இருந்து கவனமுடன் கவனித்துக் கொள்கிறார். ஒரு மகள் சென்னையிலும், மற்றொரு மகளும், மகனும் சிங்கப்பூரிலும் வசிக்கிறார்கள் என அறிந்தோம். சென்னையை விட்டு நிரந்தரமாக சொந்த ஊரான மதுரைக்கு வந்து விட்டதாகவும், வில்லாபுரம் பகுதியில் குடியேறப் போவதாகவும் கூறினார்கள்.

கடந்த 4/5 ஆண்டுகளாக புற்று நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் சகோதரி, அதனைப் பற்றியும், அதனால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றியும் விரிவாக அவரது பதிவினில் எளிமையாக எழுதி உள்ளார். படித்தது பள்ளிப் படிப்பு மட்டும் தான் என்றாலும், எண்ணங்கள், கருத்துகள், மொழி நடை அனைத்தும் எளிமையாக எல்லா மகளிருக்கும், ஒரு விழிப்புணர்வைத் தூண்டுவதாக அமையும் வண்ணம் எழுதி இருக்கிறார்.

மகளிர் மார்பகப் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு மகளிரிடம் கொஞ்சமும் இல்லையே என்ற வருத்தம் அவரிடம் மேலோங்கி நிற்கிறது. படித்த மக்களிடம் கூட இவ்வுணர்வு இல்லையே என்றும், அரசு இவ்வுணர்வைத் தூண்ட எவ்வித முயற்சியும் செய்ய வில்லையே என்றும் மனங்கலங்குகிறார்.

இக்கொடிய நோயைப் பற்றிய அத்தனை செய்திகளையும் அனைத்து மகளிரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் - அதற்கு ஏதாவது திட்ட வட்டமாகச் செய்ய வேண்டும் என ஒரு தீவிர சிந்தனையில் இருக்கிறார். அன்புக் கணவரும் அருமை மக்களும் அன்பு செலுத்தி பக்க பலமாக இருந்து அவரது எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்கின்றனர்.

சக வலைப் பதிவர்கள் காட்டும் அன்பினையும், அவருக்காகச் செய்யும் பிரார்த்தனைகளையும், மழலைச் செல்வங்களின் மாசற்ற ஆதரவினையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

மதுரைப் பதிவர்கள் அனைவரையும், ஒரு முறை அவரைச் சென்று சந்தித்து, உடல் நலம் விசாரித்து, நோயை எதிர்த்துப் போராடும் மனத் துணிவினைப் பாராட்டி, அவரது எண்ணங்களைச் செயல் படுத்த - தேவைப் படின், ஆலோசனைகள் கூறி, மன ஆறுதல் அளித்து வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.

எல்லாம் வல்ல இறைவனை, அவரது எண்ணங்களைச் செயல் படுத்த, அவருக்குத் தேவையான கூடுதல் மனவலிமையையும், பூரண உடல் நலத்தையும் அளிக்க, மனங்கசிந்து வேண்டுகிறோம்.

அலை பேசி எண் : 98404 56066

அன்புடன் சீனா - செல்வி ஷங்கர்.

26.11.2007