அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
என்னுடைய சிறு வயது ( 1963-66 - வயது : 13-16) தீபாவளியை, தமிழ்ச்சங்கம் வளர்ந்த தன்னிகரில்லா மதுரையில், கொண்டாடிய மலரும் நினைவுகளை வலை உலக அன்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
தீபாவளி என்பது சிறுவர்களுக்கு மகிழ்வைத் தரும் ஒரு விழா. அன்றைய தினம் அதிகாலை எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை உடுத்தி, சர வெடிகள் வெடித்து, பலகாரங்கள் உண்டு, கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுது, இன்பமாக இருக்க ஒரு வாய்ப்புக் கிடைக்கும்.
எங்கள் வீடு ஒரு கூட்டுக் குடும்பம். தாத்தா, பாட்டி, தாய், தந்தை, தமயன், தம்பியர், தங்கையர் எனப் பலரும் கூடி வாழ்ந்த ஒரு பெரிய குடும்பம். தீபாவளி அன்று, தாயும் பாட்டியும் அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் எழுந்து பலகாரம் செய்ய ஆரம்பிப்பார்கள். முடிப்பதற்கு மதியம் ஒரு மணி ஆகி விடும். நாங்கள் சிறுவர்கள் மெதுவாக ஒருவர் பின் ஒருவராக, காலை நான்கு மணியிலிருந்து, எழுந்து எண்ணெய் தேய்த்து, தூக்கக் கலக்கத்துடன் சுடு தண்ணீரில் குளித்து விட்டு துண்டைக் கட்டிக்கொண்டு காத்திருப்போம்.
எங்கள் அப்பா எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, மலை போல் குவிந்திருக்கும் புத்தாடைகளுக்கு, மஞ்சள் வைத்து, பூசை செய்து, பலகாரங்கள் படைத்து, இறை வணக்கம் செய்துவிட்டு ஒவ்வொருவராக கூப்பிட்டு புத்தாடைகள் கொடுப்பார்கள். காலில் விழுந்து வணங்கி பெருமையுடன், பொறுமையாக பெற்றுக் கொள்வோம். அவைகளை அணிந்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயார் ஆவோம்.
அப்பாவும் புத்தாடை அணிந்து, ஒரு பெரிய சரவெடியினைக் கொளுத்தி, வெடித்து கொண்டாட்டங்களை அடையாள பூர்வமாக ஆரம்பித்து வைப்பார்கள். பின் நாங்கள் அனைவரும் வெடிகளை வெடிப்போம். காலை ஆறு மணி வரை, முடிந்த வரை வெடிப்போம். பின் அனைவரும் அமர்ந்து பலகாரங்கள் சாப்பிட்டுவிட்டு, கோவிலுக்குச் செல்ல தயாராவோம். அப்பா அனைவரையும் அழைத்துக் கொண்டு ( தாயார், தாத்தா, பாட்டி நீங்கலாக) புதூரிலிருந்து சிம்மக்கல் வரை பேருந்தில் அழைத்துச் செல்வார்கள்.
பழைய சொக்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பிறகு மீனாட்சி அம்மன் கோவில் செல்வோம். அங்கு, விபூதிப் பிள்ளையாரை வழிபட்டுவிட்டு, முக்குறுணிப் பிள்ளளயாருக்கு துண்டு சார்த்தி, வழி பட்டு, அம்மன் சன்னதி சென்று அர்ச்சனை செய்வோம். இப்போதிருக்கும் கூட்டமெல்லாம் அப்போது இல்லை. அனவரின் சார்பிலும், அப்பா கம்பீரமாக, அர்ச்சனை சுவாமி பெயருக்கே செய்யச் சொல்வார்கள். பிற்காலத்தில் தான் தெரிந்தது அத்தனை பேரின் பெயர்களும் நட்சத்திரங்களும் நினைவில் வைத்துக் கொள்வதின் சிரமம் கருதித்தான் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்தோம் என்பது. ஆனால் அந்தப் பழக்கம், என் குடும்பம் அளவான குடும்பமாக இருப்பினும், இன்னும் தொடர்கிறது.
அடுத்து சுவாமி சன்னதி. வெளியில் வந்து சனீஸ்வரர், அனுமார், காலைத் தூக்கி ஆனந்த நடனம் புரியும் சிவ பெருமான், அன்னை உமையவள் அனைவரையும் வழி பட்டு திரும்புவோம். நடனம் புரியும் இறைத் தம்பதிகளின் மேல் வெண்ணை சாத்துவது என்பது எல்லோருக்கும் பிடித்த ஒன்று. சிலைகளின் உயரத்திற்கும் எங்கள் உயரத்திற்கும் சம்பந்தமே இருக்காது. வெண்ணையைத் தூக்கி சிலைகளின் மீது எறிவோம். அது எங்கு வேண்டுமானாலும் இலக்கின்றி பறந்து சென்று அமர்ந்து கொள்ளும். இன்று வரை சரியாக சிலைகளின் மீது எறிந்ததாக சரித்திரம் இல்லை. தற்போது வெண்ணை சாத்தும் பழக்கம் நிறுத்தப் பட்டு, நெய் விளக்கு ஏற்றும் பழக்கம் கடைப் பிடிக்கப் படுகிறது.
மீனாட்சி அம்மன் கோவில் பிரசாதம் வாங்கி அனைவரும் தலைக்கு கொஞ்சமாக உண்டு மகிழ்வோம். பின் அங்கிருந்து கிளம்பி நகரத் திரை அரங்கு ஒன்றில் காலைக் காட்சி (10 மணிக் காட்சி) அனைவரும் பார்த்துவிட்டு மதியம் சாப்பாட்டிற்கு வீடு திரும்புவோம். முன்பதிவு என்பதெல்லாம் இல்லாத காலமது. நினைவில் நிற்கும் திரை அரங்குகள் தங்கம் (மிகப் பெரிய அரங்கு), ரீகல் ( பகலினில் நூலகம் - இரவினில் திரை அரங்கம்), இம்பீரியல், கல்பனா, சிந்தாமணி, செண்ட்ரல், நியூ சினிமா, பரமேஸ்வரி முதலானவை.
இதில் பரமேஸ்வரியில் ஆங்கிலப் படங்கள் மட்டுமே திரை இடப்படும். தீபாவளி அன்று திரைப் படம் பார்க்கும் பழக்கம் பல ஆண்டுகளுக்கு நீடித்தது. எங்கள் அனைவருக்கும் புத்தாடை எடுப்பது என்பது ஒரு பெரிய நிகழ்வு. அப்பா, அம்மா, தமயன், நான், நால்வர் தான் செல்வோம். அக்கால ஜவுளிக் கடை - அல்ல - கடலில் ( ஹாஜிமூசா) தான் பெரும்பாலும் துணி எடுப்போம். ஆண்கள் அனைவருக்கும் ஒரே மாதிரி, சட்டைக்கும், அரை ட்ராயருக்கும் துணி எடுப்போம். பனியன் மற்றும் உள்ளாடைகள், பெண்களுக்கு சேலை, பாவாடை, தாவணி, மற்றும் உள்ளாடைகள் ஆகியவை வாங்குவோம்.
ஒரு மாத காலம் முன்பாகவே துணி வாங்கும் படலம் தொடங்கும். கடையில் இருந்து வீட்டிற்கு வருவதற்கு முன்னாலேயே, கோரிப்பாளையத்தில் கோல்டன் தையலகத்தில் தைக்கக் கொடுத்து விடுவோம். தைத்து வந்த பிறகு தான் மற்றவர்கள் பார்க்க முடியும். தீபாவளி அன்று மட்டும் தான் அத்துணிகள் அவரவர்க்குச் சொந்தம். பிறகு எந்தத் துணி யாருடையது என்று யாருக்குமெ தெரியாது. பொதுவாக அனைத்துமே ஒரே அளவில் தான் இருக்கும். யார் வேண்டுமானாலும் எதை வேண்டு மானாலும் போட்டுக் கொள்ளலாம்.
வெடிகளும் இனிப்புப் பலகாரங்களும் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னரே அப்பா வாங்கி வருவார்கள். என்ன வாங்கி வந்தார்கள் என்பது பரம ரகசியம். தீவாவளிக்கு முந்தைய இரவு அனைவருக்கும் சமமாக வெடிகள் பிரித்துக் கொடுக்கப் படும். அவ்வெடிகளைப் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் ரகசியமாக பத்திரமாக பாதுகாப்போம். ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் கொள்ளை அடிப்பதும், சண்டை போடுவதும், களவு போனதா இல்லையா என்பது கூடத் தெரியாமல் அடித்துக் கொள்வதும், பின் சமாதான உடன்படிக்கை செய்வதும் நினைக்க நினைக்க இன்பம்.
ஒருவரை ஒருவர் நம்ப மாட்டோம். கணக்குத் தெரியாது. யார் தீபாவளி யன்று வெடி வெடித்தாலும் அனைவருமே அவ்வெடி தன்னுடைய பங்கிலிருந்து தான் திருடப்பட்டது என்று மனப்பூர்வமாக நம்புவோம். உடனே அடி தடி சண்டை தான். பெரியவர்கள் குறுக்கிட்டு இரண்டு போடு போட்டு இருவருமே அழத் தொடங்கி அவரவர்களுக்குப் பிடித்த பெரியவர்களிடம் சென்று ஆறுதல் பெற்று, அவர்களின் பங்கிலிருந்து (???), நிவாரணம் பெற்று மகிழ்ந்ததும் அக்காலமே.
மறு நாள் அனைவருமே அம்மஞ்சள் மாறாத புத்தாடைகளை பெருமையுடன் அணிந்து, ராஜ நடை போட்டு பள்ளிக்குச் சென்று நண்பர்களுக்குக் காண்பித்து, ஒப்பு நோக்கி, உயர்வு தாழ்வு கண்டு, மகிழ்ந்தது தற்கால மழலையர் முதல் இளஞர் வரை இழந்த ஒன்று. அக்காலத்தில், விழாக்களின் கொண்டாட்டங்கள், அதனால் விளையும் மகிழ்ச்சிகள், குதூகலமாக, கூட்டமாக திரைப் படம் பார்த்தது, ஒன்றாக உண்டது, ஒன்றாக விளையாடியது, ஒன்றாக உறங்கியது, அனைத்துமே இக்காலத்தின் கட்டாயத்தில் இழந்த நட்டங்கள்.
தீபாவளி அன்று வீட்டிற்கு வரும் உறவினர்களில் பெரியவர்கள் அனைவரின் காலிலும் விழுந்து கும்பிட்டு, ஆசிகள் பெற்று, அத்துடன் காசுகளும் பெற்றதும் உண்டு. காசுக்காகவே சும்மா சும்மா காலில் விழுவோம். பரிசுகளோ ஆசிகளோ பெரியவர்களிடம் பெறும் போது காலில் விழுந்து வணங்கும் நல்ல பழக்கம் இன்றும் தொடர்கிறது.
மலரும் நினைவுகளாக அசை போட்ட நிகழ்வுகள், திரும்ப இளமைப் பிராயத்திற்குச் செல்லும் வசதி இல்லையே என நினைக்கத் தூண்டுகிறது.
---------------------------------------------