ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Wednesday 9 February 2011

அன்பிற் சிறந்த தவமில்லை.

Dear Sury,

To day the function went on well. Especially the lecture by the Chief Guest was wonderful and he mesmerised the audience and made the hall as PIN DROP SILENCE. My wife (SELVI SHANKAR - Nick name : MEYYAMMAI - real name ) has written a small note on his speech in TAMIL which is given below.

She is a blogger. She is a retired Tamil Teacher, after putting 34 years service from a famous school owned by INDIAN EXPRESS GROUP, chennai. The founder Ramnath Goyenka had started the school in his wife's name - MOONGIBAI GOYENGA GIRLS HIGHER SECONDARY SCHOOL at Chennai.

அன்பிற் சிறந்த தவமில்லை :

பிப்ரவரித்திங்கள் ஆறாம் நாள் ஞாயிறு அன்று மாலை 06:30 மணிக்கு, அரவிந்த் மருத்துவமனை அரங்கத்தில் மதுரை வாசகர் வட்டத்தின் ஆறாவது ஆண்டுவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அப்பொழுது சென்னையைச் சார்ந்த திரு கிருஷ்ண ஜெகநாதன் என்பவர் அன்பிற் சிறந்த தவமில்லை ( பாரதியின் சொற்கள் ) என்ற தலைப்பினில், ஏறத்தாழ 75 நிமிடங்கள் அழகு தமிழில், சிறந்த உச்சரிப்பினில், ஏற்ற இறக்கங்களுடன், பல எடுத்துக்காட்டுகளுடன், பாரதி, வள்ளூவன், கம்பன், எனப் பலரின் பாடல்களில் இருந்து அருமையான வரிகளை மேற்கோள் காட்டிப் பேசி, அவையோரைக் கவர்ந்தார்.
அவரது பேச்சினில் நான் உணர்ந்தவை இவை.

ஒரு நல்ல மாலைப் பொழுது, செவிக்கினியதாய், செந்தமிழின் சுவை நிறைந்ததாய், தெய்வத்தன்மை பொருந்தியதாய் அமைந்தது. அந்த அமிழ்தின் இனிய ஆன்ற பொழுது அண்டத்தைக் கண் முன்னே கொண்டு வந்தது. நாமும் நம் ஆசைகளும் நமக்கு எவ்வளவு பெரியதாய்த் தெரிகின்றன. ஆனால் உலகமும், சுற்றுக் கோள்களூம், கோள்களின் சுற்றுப் பாதைகளூம், நம் பூமியும், பூமியில் நம் நாடும், நம் இருப்பிடமும், அவ்விடத்தில் நாமும் என்றால் அந்த ஒரு புள்ளியிலும் புள்ளியாய் இருக்கின்ற நம்மில் தான் எத்தனை நினைவுகள் - நிகழ்வுகள்! அவை ஆசையாய் இல்லாமல் அன்பாய் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை, அழகாக, ஆழமாக, அருமையாக விளக்கினார்.

இந்த உலகத்தில் அன்பு - காட்டப்படவேண்டிய ஒரு உணர்வு. ஆசை கொள்ளுகின்ற மனிதன் வெளிப்படுத்துகின்ற உணர்வு அன்பு. அவ்வுணர்வு பரந்து விரிந்து அனைவரிடமும் செலுத்தப்படுகின்ற போது, உணர்வது அருள் வடிவாகின்றது. தனக்கு வேண்டும் என்று தன்னலங் கருதும் போது வெளிப்படுவதே ஆசை. பிறர்க்குக் கொடுத்து உதவுகின்ற போது தோன்றுவது அன்பு. அனைவரிடமும் செலுத்தப்படுகின்ற போது உணர்வது அருள். இவ்வுலகில் ஆசை உள்ளவன் மனிதன். அன்பு கொண்டவன் இல்லறத்தான். அருள் பெற்றவன் ஆன்றோன்.

உயிரற்ற பொருட்கள் விளம்பரப்படுத்தப்பட வேண்டும். உணர்வுகள், உறவுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அருள் உணரப்பட வேண்டும் - உணர்த்தப்பட வேண்டும். ஆனால் இன்றோ பொருட்கள் அறிமுகமும் உறவுகள் ஒதுக்கப்படுவதும் நடக்கிறது. மக்கள் ஆசைக்கு அடிமையாகி உறவுகளைத் துறந்தும் உணர்வுகளை வெளிப்படுத்தியும் இயந்திர மயமாகி உள்ளனர்.

அன்பு வீட்டிலிருந்து துவங்க வேண்டும். கணவன் - மனைவி - மக்கள் - பெற்றோர் - உடன் பிறந்தார் என்று படர வேண்டும். பின்னர் அயலார் நட்பு என்று விரிய வேண்டும். ஏழை - ஏதிலி என்று செயல்பட வேண்டும். நினைவு - சொல் - செயல் எல்லாம் ஒன்றாக இருந்தால் உலகம் உருப்படும். குடும்பம் - அயலார் - தம் ஊர் - தம்மக்கள் - தம் நாடு என்று அன்பு விரிய வேண்டும்.

குற்றம் கண்ட இடத்து சுட்டிக் காட்ட வேண்டும். தட்டிக் கேட்க வேண்டும். அகிம்சையைக் கையாள நல்ல உளவலிமை வேண்டும். அன்பு காட்ட, இரக்கம் காட்ட, வீரம் வேண்டும். அன்பு அறத்திற்கு மட்டும் துணையல்ல, மறத்திற்கும் அன்பு தான் துணை. அந்த அன்பு அறத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். அறத்தை அடிப்படையாயக் கொண்டது நம் நாடு. பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம் என்றான் பாவேந்தன் பாரதி. அறத்தை எடுத்துச் சொல்ல இந்த உலகில் உயர்ந்து நிற்கும் ஒரே நாடு நம் பாரத நாடு. நம் உணர்வு, உறவு, கலாச்சாரம், பண்பாடு - இவை தான் நம்மைப் பாரில் உயர்த்துவன. ஆனால் நம் பண்பாடு காலத்தால் தேய்ந்து கொண்டே வருகிறது.

தனி மனிதனின் வாசிப்பு அவனைத் திருத்துகிறது. அவன் மனத்தைத் திருத்துகிறது. சுற்றியுள்ள மக்களைத் திருத்துகிறது. இரக்கம் நம் உள்ளத்தில் பிறப்பது. ஏழை என்றாலும் ஏற்ற குணம் உண்டு. படிப்புத்தான் எல்லாவற்றையும் தருமென்றால் இன்றைக்கு, படித்தோர் மலிந்துள்ள நம் நாட்டின் நிலை என்ன ? பண்பாடு அழிந்து கொண்டிருக்கின்ற இளைய சமுதாயம் ஏன் ? வாழ்க்கையைப் படிக்கின்ற மக்கள் நம் நாட்டில் இருக்கின்றார்களா ? அதனால் தான் அன்றிருந்த நல்ல சமுதாயம் இன்றில்லை. மென்பொருள் வல்லுனர்கள் மலிந்துள்ள நம் நாட்டின் பண்பாடு எங்கேயோ போய்விட்டது. இவை எல்லாம் ஏன் ?

படிக்க வேண்டும் - நல்ல நூல்களை கைகளில் எடுத்துப் படிக்கும் போது நம் உள்ள உணர்வுகள் வெளிப்படும். பார்ப்பதாலோ கேட்பதாலோ அவ்வுணர்வுகள் காட்சி அளவில் தான் காணப்படும். கருத்துணர்ந்து படிக்கையில் காட்சிகள் உணரப்படும். அப்படி நூல்கள் படிக்கும் பழக்கத்தை வளரும் சமுதாயத்திற்கு அறிமுகப் படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் அன்புடையவர்களாக, அருளுடையவர்களாக வளர்வார்கள். நாடும் உலகில் உயர்ந்து நிற்கும். நாட்டுணர்வுக்கு அடிப்படை வீட்டுணர்வு. வீட்டுணர்வுக்கு அடிப்படை இறையுணர்வு. இறையுணர்வுக்கு அடிப்படை நல்ல நூல்களைக் கற்றுணரும் கல்வி உணர்வு. எனவே கற்க ! கற்பவை கற்க ! கசடறக் கற்க ! கற்ற பின் நிற்க ! நாட்டை நிலை நிறுத்துக ! நாடு வாழ நாமும் வாழ்வோம். -----


நல் வாழ்த்துகள்
நட்புடன் சீனா