ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Thursday 23 August 2007

அசை போட்டு அனுபவித்து எழுதியது - குறிப்பு 2

தஞ்சைத் தரணியில் எங்கள் இல்லம் அமைந்த மேலவீதியின் ஒரு கோடியில் உள்ள சங்கர நாராயணர் கோவிலுக்கு அடுத்து ஒரு உணவகம் ராமகிருஷ்ணா பவன் என்ற பெயரில் இருந்தது. அதன் உரிமையாளர் மகாதேவ அய்யர். அவருக்கு சங்கர நாராயணன், மகாலெட்சுமி, ரமணி என மூன்று மழலைச் செல்வங்கள். அதில் கடைக்குட்டி ரமணி எனது வகுப்புத் தோழன். மற்றுமொரு வகுப்புத் தோழனான தெற்கு வீதியில் இருந்த சந்திரசேகரனோடு சேர்ந்து நாங்கள் பழகிய அந்த இனிய நாட்களை மறக்கவே முடியாது.

மேலவீதியில் எங்கள் இல்லத்திற்கு 4 இல்லம் தள்ளி தோழன் ரமணி இல்லம். அவனது இல்லத்திற்கு அடுத்து குமர கான சபா என்ற பெயரில் ஒரு அரங்கம் இருந்தது. அதில் வாரம் ஒரு நாடகம் நடக்கும். நாடகம் தவிர பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். மிகுந்த நிகழ்ச்சிகள் இலவசமாக நடைபெறும். அவற்றை எல்லாம் தவறாமல் தோழர்களோடு கண்டு மகிழ்ந்ததுண்டு. கட்டண நிகழ்ச்சிகளை தோழன் ரமணி இல்ல மொட்டை மாடியில் இருந்து அரங்கத்தின் மேற்கூரையை ஒட்டிய இடைவெளியில் பார்த்து மகிழ்ந்தது உண்டு. அப்போது கிட்டும் சிறு (பெரு?) மகிழ்ச்சியை இப்போது நினைத்தாலும் மகிழ்வாக இருக்கிறது.

அரங்கத்தினை அடுத்து தஞ்சை மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைமையகம் இருந்தது. அக்கட்டிடத்தில் ஒரு பெரிய தோட்டமும் இருந்தது. அதில் ஒரு வயதான குண்டுமணி மரமும் இருந்தது. காலையில் எழுந்து தோட்டத்தில் கொட்டிக் கிடக்கும் குண்டுமணி களைப் பொறுக்கி வீடு முழுவதும் வைத்திருந்தோம். பல்லாங்குழி விளையாடுவதற்கும் மற்றும் பல வகையில் பயன்படுத்துவோம். எனது தங்கை இரு குண்டுமணிகளை இரு மூக்கிலும் அடைத்துக்கொண்டு, மறு நாள் அவை பழுத்து மூச்சு விட முடியாமல் திணறி, வங்கிக்கு எதிரில் இருந்த குடும்ப மருத்துவரிடம் சென்று அவைகளை சிரமப்பட்டு எடுத்தது நினைவில் இருக்கிறது. அம்மருத்துவர் புற்று நோயால் மரணம் அடைந்ததும் வருத்தமடைய வைக்கிறது.

நாங்கள் தாயார் வழித் தாத்தா, பாட்டி, தாய், தந்தை, இருஅண்ணன்கள், இரு தங்கைகள், மற்றும் இரு தம்பிகளுடன்கூட்டுக் குடும்பமாக இருந்தோம். கூட்டுக்குடும்பம் தற்காலத்தில் இயலாது. இல்லம் முழுவதும் எங்கள் வயலில் இருந்து வந்த நெல் மூட்டைகளும், தேங்காய்களும், புளியம்பழங்களும் நிறைந்திருக்கும். நெல் மூட்டைகளை அவிழ்த்து குதிரில் கொட்டிவைப்பார்கள். பிறகு குதிரின் கீழே உள்ள சிறு கதவு வழியாக எடுத்து பெரிய பெரிய அடுப்பில் உள்ள பெரிய பெரியஅண்டாவில் அவிப்பார்கள். அவித்த நெல்லை நடை முழுவதும் பரத்தி காயப் போடுவார்கள். அவித்த நெல்லின் மணம் நம்மைச் சுற்றி சுற்றி வரும். புளியம்பழங்களை உடைத்து புளியங் கொட்டைகளை மலை போல குவித்து வைப்போம். யார் எத்தனை கொட்டைகள் எடுத்தோம் என்பதில் போட்டா போட்டி போடுவோம்.

தோட்டத்தில் இரு அழகான பசுக்களும் - அவற்றின் இரு கன்றுகளும் இருக்கும். அவைகளுடன் விளையாடி மகிழ்ந்த காலம் பசுமையாக நினைவில் நிற்கிறது. பசுக்கள் கன்றுகள் ஈனும் போது கதறும் கதறல்கள் மனதை வருத்தும். அவ்வருத்தத்தை மறந்து சீம்பால் குடிக்கப் போட்டி போடுவோம். தோட்டத்தில் ஒரு பெரிய கிணறு உண்டு. அது வற்றிப் பார்த்ததே இல்லை. அதில் நீர் இறைத்து குளிக்கும் சுகமே சுகம். அவ்வப்போது வாளி உள்ளே விழுந்து விடும். அக்கம் பக்கம் சென்று செம்பை அடகு வைத்து பாதள கரண்டி வாங்கி வந்து வாளி வெளியே எடுக்கும் வைபவம் அடிக்கடி நடக்கும்.

இல்லத்தின் நடுவினில் ஒரு பெரிய திறந்த வெளி முற்றம் ஒன்றுஇருக்கும். அதன் நாலு மூலைகளிலும் மழைத் தண்ணீர் பிடிப்பதற்கு பெரிய அண்டாக்கள் இருக்கும். சில அறைகளை அடுத்து சமையலறை இருக்கும். அங்கு எப்போது போனாலும் உண்ணுவதற்கு ஏதேனும் இருந்து கொண்டே இருக்கும். குடிப்பதற்கு எப்போதும் மோர் உண்டு.

பழைய இனிய நினைவுகளை அசை போடுவதில் உள்ள இன்பம் வேறு எதிலும் கிடைக்காது.

தொடரும்

சீனா - 23082007