ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Friday, 24 August 2007

அசை போட்டு அனுபவித்து எழுதியது - குறிப்பு 3

மேல வீதியின் கோடியில், ராமகிருஷ்னா பவனுக்கு அடுத்து ஒரு பிள்ளையார் கோவிலும் உண்டு. சற்றே பெரிய கோவில் தான். எனக்கு மிகவும் பிடித்த கடவுள் பிள்ளையார் தான். காண்பதற்கு எளியவர். வணங்குவதற்கும் எளியவர். உலகின் எல்லா இடங்களிலும், அரச மரத்தடியிலும் ஆற்றங்கரையிலும் கூட அமர்ந்திருப்பவர். கோரிக்கைகளை எளிதில் நிறைவேற்றுபவர். "பிள்ளையாரே !! கவனிச்சுக்க !! " இது போதும்.

இக்கோவிலை அடுத்து புகழ் வாய்ந்த சிவகங்கைப் பூங்கா இருந்தது. பொழுது போக்குவதற்கு சிறந்த இடம். மிகப் பெரிய பூங்கா. பசுமையான இடம். பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இடம். குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் ஏற்ற இடம். அனைத்து வசதிகளும் நிறைந்த இடம். தினமும் மாலை நான்கு மணி முதல் பூங்கா காவலர் வந்து வெளியே அனுப்பும் வரை விளையாடுவோம். கூட்டம் எப்போதும் அதிகமிருக்கும். விடுமுறை தினங்களில் இன்னும் அதிகமிருக்கும்.

அப் பூங்காவில் நடை பயிலுவதற்கும், இளைஞர்கள் தங்கள் நண்பர்களுடன்(நண்பிகளுடன்) இனிய பொழுதை மகிழ்வுடன் களிப்பதற்கும் ஏற்ற இடங்கள் நிறைய இருந்தன. மலர்ச்செடிகள், அரிய தாவரங்கள், அரிய மரங்கள், சிறிய நீர்நிலைகள் என தோட்டத் துறையால் பராமரிக்கப் பட்ட அப்பூங்கா சிறந்த பூங்காக்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. ஒரு சிறிய உடற் பயிற்சி நிலையம் இருந்ததாகவும் நினைவு.

அறிவியல் நிகழ்வுகள் விளக்கமாக விவரிக்கப் பட்டிருக்கும். அறிவியல் வினா விடை விளக்கப் பலகையும் உண்டு. ஒரு சிறிய மிருகக் காட்சிச்சாலையும் இருந்தது.

அப்பூங்காவினுள் ஒரு அழகிய குளம் இருந்தது. சிவகங்கைக் குளம் என்ற பெயரில். அக்குளத்தின் நடுவினில் ஒரு சிறிய மண்டபம் இருந்தது. அம்மண்டபத்திற்கும், பூங்காவின் சற்றே உயரமான ஒரு இடத்திற்கும் விஞ்ச் எனப்படும் தொங்கு வண்டி ஓடிக் கொண்டிருந்தது. வாரம் தவறாமல் அவ்வண்டியில் சென்று மகிழ்ந்ததுண்டு. அக்குளத்தினில் எப்போதும் நீர் நிரம்ப இருக்கும்.

காவல் துறையின் தலைவராக அருள் என்ற பெருமகனார் இருந்த காலத்தில் அத்துறையின் சார்பில் உங்கள் நண்பன் என்ற ஒரு குறும் படம் தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு இலவசமாக காட்டப் பட்டது. அப் படம் காவல் துறையைப் பற்றியும், பொதுமக்கள் - காவல் துறை உறவு பற்றியும், பொதுமக்கள் - காவலர்கள் கடமை மற்றும் உரிமைகள் பற்றியும் எடுக்கப் பட்ட பொதுமக்களுக்கான ஒரு விளக்கப் படம். அக்காலத் திரைப் பட பிரபலங்கள் நடித்த படம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சந்திர பாபு மற்றும் பலர் நடித்த படம். அப்படம் ஒவ்வொரு ஞாயிறன்றும் தவறாது பூங்காவில் திரையிடப் படும். முதல் வரிசையில் மணலில் அமர்ந்து ரசித்துப் பார்த்த படம் - அனைத்து ஞாயிறுகளிலும். காவல் துறையில் சேர வேண்டும் என ஆசைப் பட வைத்த படம்.

தஞ்சையில் அரசியல் கூட்டங்கள், மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு திறந்த வெளித் திடல் நகரின் மத்தியில் திலகர் திடல் என்ற பெயரில் இருந்தது. அத்திடலில் மிகுந்த அரசியல் பொதுக் கூட்டங்கள் நடை பெறும். அக் கூட்டங்களுக்குத் தவறாமல் செல்வதுண்டு. கட்சி பேதம் பாராமல் அனைத்துக் கூட்டங்களுக்கும் செல்வதுண்டு.

நிகழ்ச்சிகள் இல்லாத நேரத்தில், சிறுவர்களும் இளைஞர்களும் விளையாடும் விளையாட்டுத் திடலும் அது தான். பட்டம் விடுவதில் போட்டா போட்டி. வித விதமான வண்ண மயமான சிறியதும் பெரியதுமான பட்டங்கள் பலப்பல வானில் பறந்து கொண்டே இருக்கும். அதற்கான நூலைத் தயாரிப்பது என்பது ஒரு பெரிய கலை. மற்ற பட்டத்தின் நூலுக்குச் சற்றேனும் குறைவில்லாமல் அந்த நூலை அறுக்கக் கூடிய வகையில் தொழில் நுட்பத்துடன் மாஞ்சா எனச் சொல்லப் பட்ட பசையுடன் நூல் தயாரிக்கப் படும். பட்டம் விடுவதில் போட்டிகளும் உண்டு - பரிசுகளும் உண்டு - நடுவர் தீர்ப்புகளும் உண்டு - தீர்ப்புகளுக்கு மேல் முறையீடுகளும் உண்டு - திருப்திஅடையாத குழுவினர் ஜன்மப் பகை பாராட்டி வம்சத்தையே திட்டித் தீர்ப்பதும் உண்டு. மறு நாள் தோளில் கை போட்டு நட்புடன் பழகுவதும் உண்டு.

மற்றும் அங்கு ஆங்கிலப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கிரிக்கெட் ஆடுவதும் உண்டு. கை கால்களில் மட்டை கட்டிக் கொண்டு, கைகளில் உறையும் அணிந்து வெள்ளை நிற உடைகளில் அரிச்சுவடி கூட தெரியாமல் கிரிக்கெட் விளையாடி பந்தா காட்டுவதுமுண்டு. அவர்களின் எதிரிகளாகக் கருதப்படும் தமிழ் படிக்கும் நண்பர்கள் கிரிக்கெட்டுக்கு எதிராக கிட்டிப் புள் விளையாடுவார்கள். கிட்டியும், புள்ளும் தயாரிக்கும் விதமே தனி. இவ் விளையாட்டிற்கு, மதிப்புப் புள்ளிகளும் நேரடி வர்ணணைகளும் கூடஉண்டு. கிட்டிப்புள் கிரிக்கெட்டிற்குச் சற்றும் சளைத்தது அல்ல என நிரூபிப்பதில் அதிக கவனம் செலுத்துவர். சண்டை கருத்து வேற்பாடு எல்லாம் திடலில் மட்டும் தான் - திடலை விட்டு வெளியேறி பூங்காவிற்குச் சென்றால் அங்கு அனைவரும் நண்பர்கள் தான்.

கிரிக்கெட் கிட்டிப்புள் தவிர சிறுவர்கள் ஆடுவது சடுகுடு மற்றும் கோலிக்குண்டு ஆட்டம். பெண்களோடு சேர்ந்து பாண்டி ஆடுவதும் உண்டு.


தொடரும்

சீனா - 24082007