ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Tuesday 21 October 2008

வள்ளுவம் வாழ்வின் வழி காட்டி


மாநில அளவில் ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் நடத்திய பாரதி - வள்ளுவர் விழாவின் தொடர்பாக நடந்த பேச்சுப் போட்டியில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ஆர்.வெங்கட்ராமன் அவர்களிடம், பள்ளிக்கான சுழற் கேடயமும், போட்டியாளர்க்கான பண முடிப்பும், பெற்ற என் செல்ல மகளின் பேச்சு.
( 1993)





-----------------------------------------------------------------------------------------------

நடுவர் உள்ளிட்ட அவையினரை வணங்கி மகிழ்கிறேன்.



இந்த உலகத்தில் எந்த ஒரு மனிதனும் எதையும் எளிதில் வேதம் என்று ஒத்துக் கொள்ள மாட்டான். ஆனால் உலகம் முழுவதும் ஒன்றை பொது மறையாக ஏற்றுக் கொண்டுள்ளதென்றால் உண்மையில் அந்த மனிதனின் சிந்தனை பாராட்டுக்குரியதே ! பாயில் படுத்து நோயில் விழும் மனித வாழ்க்கையில் இன்பங்கள் சேர்க்கவும் துன்பங்கள் நீக்கவும் துணை புரிவது வள்ளுவமே ஆகும். உண்மையில் அந்நூல் வாழ்வின் வழி காட்டியே !



மனிதனாகப் பிறந்தவன், அன்போடு வாழ வேண்டும் ! அறிவோடு திகழ வேண்டும் ! பகுத்தறிவோடு பழக வேண்டும் ! பண்பில் உயர வேண்டும் ! புனிதனாய் மாற வேண்டும் ! வாழ்வில் உயர்வதற்கு இவை மட்டும் போதாது - அவன் உண்மையைப் பேச வேண்டும் ; பொய்மையை நீக்க வேண்டும் ; நட்பில் உயர வேண்டும் ; நல்லதைக் கொள்ள வேண்டும் ; அல்லதைத் தவிர்க்க வேண்டும் ; வையத்து வாழ்வாங்கு வாழ வேண்டும் !



இன்றைய சமுதாயத்தில் மனிதன் அன்பின்றி, அறிவின்றி, நட்பின்றி, நேர்மையின்றி, நன்னெறியின்றி, வாழும் முறை தவறி, வழி காட்டும் துணையின்றித் தட்டுத் தடுமாறுகின்றான். அதற்கு வள்ளுவம் காட்டும் வழி தான் என்ன ?




அன்பாயிரு - அதற்காக நீ வருந்த வேண்டியதில்லை !

இன்சொல் பேசு - இதற்காக உன் நா துன்பப்படுவதில்லை !

பொறுமையாயிரு - அது உன்னைப் பொன் போல் உயர்த்தும் !

எதிரியை எளிதில் நம்பி விடாதே !

பகைவனின் கண்ணீரைப் பார்த்து பக்கம் சாய்ந்து விடாதே !

வணங்கும் கைகளுக்குள் வாளும் மறைந்திருக்கும் !

சொல் வேறு செயல் வேறு பட்டார் தொடர்பு கொள்ளாதே !

அது கனவிலும் இன்னாது !

வலிமை அறியாது வாள் வீசாதே -அது உன்னையே வீழ்த்தி விடும் !

கூற்றத்தைக் கைதட்டி அழைத்து ஆக்கத்தை இழக்காதே !

அன்பில் உயர்ந்து நில் !

என்பும் பிறர்க்கென்று சொல் !

வெற்றுடலாய் நடமாடி வேடிக்கைப் பொருளாகி விடாதே !


என்றெல்லாம் வள்ளுவம் காட்டும் வழி நாம் வாழ்வில் உயர

நல் வழியே !




அடுத்து அறிவு ! அது அற்றங்காக்கும் கருவி ! பகைவராலும் உள்ளழிக்கலாக அரண் என்று வள்ளுவர் அதற்குத் தரும் விளக்கம் அழகானது ! எப்பொருள் எத்தன்மைத் தாயினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு ! எதிரதாக் காக்கும் அறிவினார்க்கில்லை அதிர வருவதோர் நோய் - என்பதெல்லாம் அறிவிற்கு வள்ளுவர் தரும் முடிவு !




சிந்தித்துச் செயல்படு ! வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் ! அதனால் வெள்ளம் வருமுன் அணை போடு ! என்று அவர் நம் வாழ்க்கைக்குத் தரும் எச்சரிக்கை - நல்வாழ்வுப் பாதைக்கோர் பச்சை விளக்கு ! இன்னும் அவர் கூறும் வாழ்க்கை விளக்கங்கள் நம்மை எல்லாம் மெய் சில்ர்க்க வைக்கின்றன !



கற்றதைச் சொல்லாதவன் காகிதப்பூ ! அறிவில்லாதவனின் அழகு மண்ணால் செய்த மாண்புறு பாவை ! கற்றறிவின்றி ஆன்றோர் அவைபுகல் எல்லைக் கோடின்றி விளையாடும் விளையாட்டு ! கற்றிருந்தால் நீ மனிதன் ! இல்லையெனில் விலங்கு ! நெஞ்சுரம் இருந்தால் நீ மனிதன் ! இல்லையெனில் மரம். இப்படி அவர் அறியாமையைச் சாடி அறிவைப் புகட்டி வாழ்வுக்குத் தரும் விளக்கம் - அது மனித வாழ்க்கைக்கோர் கலங்கரை விளக்கம் !




அடுத்து அன்பு - அது வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவை. அந்த அன்பில்லாதாவன் என்புதோல் போர்த்திய விலங்கு ! அவனால் பயன் ஒன்றுமில்லை ! மனிதனின் அன்பு விருந்தினை மென்மையாக நோக்க வேண்டும் ! அது உலகத்தோடு ஒட்டி உறவாட உதவ வேண்டும் ! உள்ளத்தே பொங்கி எழும் சினத்தை அடக்க வேண்டும் ! இன்னா செய்தார்க்கும் இனியவே செய்தல் வேண்டும் ! இன்பத்துள் இன்பம் விழையாது துன்பத்துள் துன்பம் துடைக்க வேண்டும் ! அன்பால் ஆண்டவனைப் பணிய வேண்டும் ! அவன் ஆதி பகவன் ! அறவாழி அந்தணன் என்று அவர் ஆன்மீகத்திற்குத் தரும் விளக்கம் ஒன்றே போதும் அவர் சாதிச் சளுக்கறுக்கும் சான்றோர் என்பதற்கு ! சமயப் பிணக்கறுக்கும் ஆன்றோர் என்பதற்கு ! இதை விடச் சிறந்த வாழ்க்கை வழிகாட்டி வேறென்ன இருக்க முடியும் !




மனித வாழ்க்கையில் கொடுத்து வாழும் பண்பு உயர்வானது ! எனவே உன்னால் முடிந்தால் கொடு ! இல்லை எனில் அடுத்தவன் கொடுப்பதைத் தடுக்காதே ! அது பாவம் ! அந்தப் பாவம் தீர்க்க வழியே இல்லை !




சினம் கொள்ளாதே !

அது சேர்ந்தாரைக் கொல்லும் !

அறம் செய்ய நீ ஆன்றோனாக வேண்டாம் !

மனத்துக்கண் மாசிலனாகு - அது போதும் !

கொல்லா நலத்தது நோன்பு !

பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு !

எதையும் ஏற்றுக் கொள் !

தோல்விகள் இயற்கை !

எவரிடமும் கை ஏந்தாதே - அது இழிவு !

முடியாதென்று முடங்கிக் கிடக்காதே !

தக்க காலமும் இடமும் அறிந்து செயல்படு - இந்த உலகத்தையே உன்னால் பெற முடியும் !

இதனை இதனான் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடு !

தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் !

எனைவகையான் தேரியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் !




சிந்தித்துச் செயலாற்று !

ஒழுக்கம் தவறாதே !

சொன்ன சொல் பிறழாதே !

அன்பாயிரு !

அறிவாயிரு !

பண்பாயிரு !

வெற்றி கொள் !

வேடந்தவிர் !

செய்தொழில் போற்று !

சோம்பலை அகற்று !

கொடுத்து வாழ் !

கெடுத்து வாழாதே !

உண்மை பேசு !

உயர்ந்து வாழ் !

அச்சமே கீழ்களது ஆசாரம் !

தன்மானம் இழக்காதே !

தன்னிலையில் தாழாதே !

தாழ்வு வந்துழி உயிர் வாழாதே !

வறுமையை நினைத்து துவளாதே !

வாய்ப்புகள் இருக்கு தயங்காதே !




இப்படி எல்லாம் வள்ளுவன் காட்டும் என்னை எங்கேயோ இழுத்துச் செல்கின்றது !




நீ ஒராண்டு திட்டமிட்டால் தானியங்களை விதை !

நீ பத்தாண்டுகள் திட்டமிட்டால் மரங்களை நடு !

நீ நூறாண்டுகள் திட்டமிட்டால் மனிதர்களை உருவாக்கு - என்றான் ஓர் அறிஞன். ஆனால் வள்ளுவனோ ஆயிரம் ஆண்டுகள் திட்டமிட்டு ஆன்றோர்களை அல்லவா உருவாக்கி உள்ளான். அதனால் தான் அவன் தெய்வப்புலவன் திருவள்ளுவன். அவன் வள்ளுவமும் குன்றின் மேலிட்ட விளக்கு ! இந்தக் குன்றின் மேலிட்ட விளக்குக்கு நம் குவலயமே சாட்சி ! இந்த ஒரு மாட்சிமை போதாதா தெய்வப் புலவரின் திருவள்ளுவத்திற்கு !




வாருங்கள் தீபத்தை ஏற்றுவோம் ! திருக்குறள் போற்றுவோம் ! உள்ளிருள் நீக்குவோம் !




வருகிறேன் !

வாய்ப்பிற்கு நன்றி !

வணக்கம் !


--------------------------------------------------------

ஆக்கம் : செல்வி ஷங்கர்


ஒலிவடிவம் :





------------------------------------------------------