ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Wednesday 2 July 2008

நானானியிடம் தாமரையின் வேண்டுகோள் - பானைக்கதை


அன்பின் பதிவர்களே !

சகோதரி நானானி யானைக்கதை, பூனைக்கதை என எழுதினாலும் எழுதினார். தாமரை என்ற பதிவர் பானைக்கதை வேண்டுமென மறு மொழியில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ராமலக்ஷ்மியோ நானானிக்குத் தெரியாத கதையா - எந்தப் பொருளைக் கொடுத்தாலும் கதை எழுதும் திறமை படைத்தவர் எனச் சான்றிதழ் வழங்கி உசுப்பேத்தி விட்டிருக்கிறார். நானானி எழுதும் முன்னர் நான் எழுதி விடலாம் என ஒரு விருப்பம்.

பானையைப் பற்றி கதை எழுத வேண்டுமெனில் - கதையில் பானை வர வேண்டுமா, பானையைப் பற்றி வரவேண்டுமா, பானையைப் பயன்படுத்தி எழுத வேண்டுமா, பானை தான் கதாநாயகனாக ( நாயகியாகவும் ??) இருக்க வேண்டுமா என பலப்பல ஐயப்பாடுகள் மனத்திலே வந்தன. தாமரை என்ன எதிர்பார்க்கிறார் - ராமலக்ஷ்மி என்ன பரிந்துரைக்கிறார் - நானானி என்ன எழுதப் போகீறார் - எனப் பலப்பல எண்ணங்கள்

அப்புறம் கதை எழுதுவதென்பது அவ்வளவு எளிதா என்ன ? இது வரை ஒரூ கதை கூட எழுதியதில்லையே ( கதை விட்டிருக்கிறேன்) - என்ன செய்வது ? மனம் தடுமாறுகையில், எனதருமைப் பெயர்த்திக்கு, அவள் உறங்கச் செல்லும் முன், நான் வழக்கமாகச் சொல்லும் கதையினை, அவளுக்கு மிகவும் பிடித்த, ரசித்த, திரும்பத் திரும்பக் கூறச் சொல்லி, நான் கூறிய கதையினை இங்கு அப்படியே எழுதி விடலாமென எழுதி விட்டேன்.

சொந்தக்கதையா - சொந்தக்கற்பனையா - படித்ததா - கேட்டதா - சுட்டதா - தெரியாது - நினைவில்லை. ( பரிசு கொடுக்கணும்னு நினைச்சீங்கன்னா இதெல்லாம் நினைக்காதீங்க - எனக்கு, கதை சொன்ன எனக்கு பரிசு கொடுங்க).

அய்யா அய்யா கதெ சொல்லுங்க

அடப் போடி - தூக்கம் தூக்கமா வருது

அம்மம்மா கிட்டே சொல்லிடுவேன் - நீங்க கதெ சொல்ல மாட்டேங்கறீங்கன்னு !

அம்மம்மா கிட்டே எனக்கென்ன பயமா ? போய்ச் சொல்லேன் !

ஏங்க கதெ தானே கேக்குறா - சொல்லுங்களேன் ( தங்க்ஸின் அன்புக் கட்டளை)

ம்ம்ம்ம்ம் - வா வா - இங்கே உக்காரு இப்படி

நானும் நானும் ( அடுத்த பெயர்த்தி)

ஆக படுக்கையில் இரு பக்கமும் இருவரையும் அமர்த்தி கதை சொல்ல ஆரம்பிப்பேன்.

அந்தக் காலத்துலே கிருஷ்ண தேவ ராயர்னு ஒரு ராசா இருந்தாராம். அவர் கிட்டே தெனாலி ராமன்னு ஒரு விகடகவி இருந்தாராம். ஒரு நா அரசவையிலே தெனாலி ராமன் சோகமா இருந்தாராம். ராசா கேட்டாராம் - என்ன சோகம்னு ? - இவரு சொன்னாராம் - என் மக சின்னப்பொண்ணு- குழந்தை - அழுது கிட்டே இருக்கா ன்னாராம் - ராசா உடனே இங்கே அழச்சிட்டு வா - நான் அவளைச் சிரிக்க வைக்கிறேன் அப்படின்னாராம்.

மறு நாள், அரசவைக்கு தெனாலி ராமன் தன் சிறு குழந்தையை அழைத்து வந்தாராம்.

ராசாவிற்கும் குழந்தைக்கும் இடையே நடந்த உரையாடல் :

பாப்பா பாப்பா - ஏம்மா சோகமா இருக்கறே - இங்க பாரு - எப்பவுமே சிரிச்சிக்கிட்டே இருக்கணும் தெரியுமா

ராசா ராசா எனக்கு ஒண்ணு வேணும் அப்பா வாங்கித்தர மாட்டேங்குறார்.

அப்படியா - என்ன வேண்டும் சொல் - பொன்னா ? பொருளா ? நாடா ? நகரமா ? யானையா ? குதிரையா ? விளையாடும் பொருளா ? சொல் சொல்
ம்ம்ம்ம்ம்ம் அதெல்லாம் ஒண்ணுமில்ல - எனக்கு எனக்கு எனக்கு

தயங்காமல் கேள் குழந்தாய்

ஒரே ஓரே ஒரு ஆனை வேணும் .....ம்ம்ம்ம்ம்ம்.......

ஹா ஹா ஹா ஹா இவ்வளவுதானா ? இதற்கென்ன மறுப்பு ? இதோ வருகிறது யானை. யாரங்கே !! ( கை தட்டி) உடனே பட்டத்து யானையை அழைத்து வா !

அய்யா அயயா - ஜாலி ஜாலி - ஆனை வந்துடுச்சி ஆனை வந்துடுச்சி -
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

மறு படி ஏன் அழுகிறாய் குழந்தாய்

எனக்கு எனக்கு எனக்கு எனக்கு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அழாமல் தயங்காமல் கேள் குழந்தாய்

எனக்கு எனக்கு ஒரு பானை வேணும் ....... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஹா ஹா ஹா ஹா இதென்ன கூத்து - யாரங்கே - உடனே உடனே உடனே ஒரு அழகான புதுப் பானை கொண்டு வா !!

பானையும் வந்தது

அய்யா அய்யா அய்யா ஜாலி ஜாலி ஜாலி பானை ஆனை ரெண்டும் வந்துடுச்சி - ஹெ ஹெ ஹெ ஹெ - ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

மறு படி ஏனம்மா அழுகிறாய்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சொல்லி விட்டு அழம்மா - என்ன வேண்டும் கேளம்மா !

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ( அழுகை பெரிதாகிறது)

யாரங்கே இக்குழந்தையின் அழுகையை நிறுத்துபவர்களுக்கு ஆயிரம் பொற்காசு பரிசாகத் தரப்படும்.

( திருவிளையாடல் - தருமி - எவ்வளவு ? ஆயிரமா ஆயிரமாச்சே ஆயிரமாச்சே - எனக்கு இல்லே - இல்லே - இலே - இனி உங்கள் கற்பனைக் குதிரையை இவ்விடத்தில் தட்டி விட்டு உங்கள் மகன் மகள் பேரன் பேத்திக்கு கதை சொல்லும் போது கதை விடுங்கள்)

கடைசியில் யாரும் முன் வராத காரணத்தினாலும், குழந்தை அழுகையை நிறுத்தாத காரணத்தினாலும், மன்னவனே மண்டியிட்டு, குழந்தாய் - கேளம்மா கேள் -என்ன வேண்டும் சொல்லம்மா சொல் எனக் கேட்க,

எனக்கு எனக்கு ----------------- எனக்கு எனக்கு

இப்பவே இப்பவே - இந்த ஆனையெ இந்தப் பானைக்குள்ளே போச்சொல்லு - போகணும் - ஆமா - பானைக்குள்ளே ஆனை வேணும் - ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் - அழுகை தொடர - அனைவரும் அவையை விட்டு தப்பித்து ஓட, மன்னவனோ மயங்கி விழ ...........

அப்புறமென்ன - கதெ முடிஞ்சிடுச்சி - எல்லோரும் வீட்டுக்குப் போங்க
அவ்ளோ தான் !

சீனா ... 02.07.2008