ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Friday 2 January 2009

சென்ற பதிவின் தொடர்ச்சி

அன்பின் நண்பர்களே

சென்ற பதிவின் தொடர்ச்சியாக - சென்ற ஆண்டு எடுத்த சபதத்தினை ஆய்வு செய்ததின் விளைவாக இப்பதிவு. ஒவ்வொரு சபதமாகப் பார்ப்போம்.

1. கடன்வாங்கி யாருக்கும் உதவி செய்யக்கூடாது. குறிப்பாக சொந்தக்காரர்களுக்கு. ( இது வரை கையைச் சுட்டுக் கொள்ளவில்லை)

நண்பர்களே ! உதவி செய்வது சென்ற ஆண்டு தடைப்பட வில்லை. உறவினர்களுக்கும், நட்புக்கும், முன் பின் தெரியாதவர்களுக்கும் உதவி தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. சபதம் நிறைவேறியதாகக் கொள்ளலாம். கடன் வாங்கவில்லை. கையைச் சுட்டுக் கொள்ளவில்லை.

2.போதும் என்ற மனம் சிறந்ததுதான். ஆனாலும் இறைவன் கொடுத்த திறமைகளை நன்றாகப் பயன்படுத்தி மேன்மேலும் உயரவேண்டும்.(எனது தற்போதைய உயரம் 165 செ.மீ தான்).

உயரவில்லை. இன்னும் அதே உயரம் தான் இருக்கிறேன். திறமைகளைப் பயன் படுத்த சந்தர்ப்பம் கிடைக்க வில்லை. செக்கு மாடு மாதிரி அலுவல் பணி ஆளை சுற்ற வைத்து விட்டது. சிறந்த கொள்கையான போதும் என்ற மனம் என்னை அறியாமலேயே வந்து விட்டது.

3. அவ்வப்போது தோன்றும் கவிதைகள், கதைகள் மற்றும் சிறுசிறு எண்ணங்களை வலைப்பதிவில் எழுத வேண்டும். ( எதை எழுதினாலும் மறு மொழி தருவதற்கு ஏற்பாடு பண்ணிடலாம்). யார் வேண்டுமானாலும் படிக்கலாம் - அது அவர்கள் ஹெட் லெட்டர்.

கவிதைகள், கதைகள் எழுத வில்லை - மர மண்டையில் உதிக்க வில்லை. பனியும் ( மார்கழி ) பணியும் உதிப்பதற்கு உதவ வில்லை. பின்னூட்டங்களுக்கு குறைவில்லை. கவிதைகளை ரசித்ததிலும் குறைவில்லை. அன்புடன் என்ற குழுமத்தில் அநேக கவிதைகளை ரசித்து மறு மொழி இட்டதுண்டு. யாருடைய ஹெட் லெட்டரையும் மாற்ற வில்லை ( நான் என்ன கடவுளா - மாற்றுவதற்கு).

4. படிப்பதற்கு சிரமப்படும் மாணவ, மாணவிகளுக்கு முடிந்த உதவியை செய்ய வேண்டும். ( மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இப்போது அதிகம் வருகிறது).

யாரும் என்னை அணுக வில்லை. யாரையும் நானும் தேடிப்போக வில்லை. இருப்பினும் சென்னையில் உள்ள மென்பொருளாளர்களால் நடத்தப்படும் தொண்டு நிறுவனத்தின் மூலமாக ஒரு பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்க உதவினேன். வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல் செய்து வந்த உதவிகள் இப்பொழுது வலைப்பதிவுகள் மூலமாக வெளி வருவது வருந்தத் தக்கதே. பெருமை அடித்துக் கொள்வதாய் நினைக்க வேண்டாம். ஆணடவன் அருளினால் முடிந்தவற்றைச் செய்கிறேன். கொடுப்பதும் அவனே ! கொடுக்க வைப்பதும் அவனே !

5. மற்றவர்க்கு விட்டுக் கொடுத்து, மற்றவர் மனமகிழ, நாமும் மகிழ வேண்டும்.

இது ஓரளவிற்கு நிறைவேறியது. இன்னும் பூரண சரணாகதி அடைய வில்லை. விட்டுக் கொடுத்திருக்கிறேன். மற்றவர் மனம் மகிழ, நானும் மகிழ்ந்திருக்கிறேன். விட்டுக் கொடுத்தவர் கெட்டுப் போவதில்லை என அலுவலக நண்பர் ராஜூ அடிக்கடி கூறுவார்.

6. 2007ல் மறு மொழிகள் அதிகம் எழுதியாகி விட்டது. பதிவுகள் மிகக் குறைவாகவே எழுதி இருக்கிறேன். இக்குறையை களைய வேண்டும்.

களைந்த மாதிரி தான். மறு மொழிகள் குறையவில்லை. அன்புடன் குழுமத்திலும் வலைப்பூக்களிலும் மறு மொழிகளுக்குப் பஞ்சமில்லை. வஞ்சனை இல்லாது மறு மொழிகள் இட்டிருக்கிறேன். பதிவுகள் குறைவுதான். ஆனாலும் சபதம் நிறைவேறியது. 2007ல் இட்ட பதிவுகளை விட 2008 ல் அதிகப் பதிவுகள் வெளியாயிற்று.

7. தொலைபேசிக் கட்டணம் மாதம் 2000 வருகிறது ( இணையத்தில் அதிக நேரம் செலவிடுவதால்). சக பதிவர், எனது துணைவி, ( வலை மொழியில் தங்கமணி) இது அதிகம் எனவும், குறைக்க வேண்டும் எனவும் கூறி இருக்கிறார். கவனிப்போம்.

சகபதிவர்களின் ஆலோசனைப்படி இணையக் கற்றையில் நல்ல திட்டத்தினைத் தேர்ந்தெடுத்து பயன் படுத்துகிறேன். மாதம் 500 ரூபாய்க்குள் அடக்கி விட்டேன். ஆக நிறைவேறிய பட்டியலில் இதைச் சேர்க்கலாம்.

8. போதாதா ஏழு - சபதமில்லாமல் ஒன்று. துளசி தளம் முழுவதும் படித்து விட வேண்டும்.

இது சபதமில்லை. எனவே கவலை இல்லை. ஆனாலும் துளசி தளத்தில் அதிகப் பதிவுகள் படித்தேன். மறு மொழிகள் இட்டேன். துளசி தான் கூற வேண்டும். சரியா தவறா என்று.

சரி - சுய பரிசோதனை முடிந்தது. ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ( அப்ரைசல் இப்படித்தான் பூசி மெழுகி எழுதுவோம்).

இதைச் செய்தேன் அதைச் செய்தேன் என சுய தம்பட்டமமடித்து, தலைக்கனம் அதிகமாகி விட்டதாக உணர்கிறேன். தவறு தான். ஆனால் அப்ரைசல் செய்ததை எழுத வேண்டும் இல்லையா.

சரி சரி ரொம்பப் போரடிக்காமாப் போய்யான்னு என் இளவட்ட பதிவுலக நண்பர்கள் கூவுறாங்க..... 2009 சபதங்கள் யாருமே எனக்குத் தெரிந்து பதிவு போடலே ! அதனாலே நானும் போடலே !

நாளைக்குப் பாப்போமா - வரட்டா

நட்புடன் சீனா