ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Tuesday 14 December 2010

மணல் விளையாட்டு -

அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். அப்படி மணலில் காலைப் புதைத்துக் கொண்டு நடப்பது. அதுவும் கடற்கரையில் பாதங்களில் மணல் துகள்கள் ஒட்டும் படியாக நடப்பது ரொம்பவே பிடிக்கும்.

முதன் முதலில் ஐந்தாவதோ ஆறாவதோ படிக்கும் போது, அப்பா அம்மாவுடன் வந்தது, நினைவுக்கு வந்தது. கடலின் சத்தத்தையும் அலையையும் பார்த்து விட்டு, இவன் பயந்து போய் அம்மாவின் சேலைத் தலைப்புக்குள் மறைந்து கொண்டது இன்னும் நினைவிருக்கிறது. அதற்கப்புறம் பள்ளியில் கூட்டி வந்தார்கள். நண்பர்களோடு கொஞ்சம் தைரியமாய் அப்போது கால் நனைத்தான். அன்று அந்த நீர் ஏற்படுத்திய ஜில்லிப்பை விட மணற்குவியல் ஏற்படுத்திய மிதமான உஷ்ணம் அவனைக் கவர்ந்தது.
அன்றிலிருந்து எதுவென்றாலும் கடலைத் தேடி வந்து விடுவான். முதன் முதலில் கணக்குப் பரீட்சையில் மார்க் குறைந்தது என்று அப்பா பெல்டைக் கழட்டிய போதும் சரி ; பன்னிரண்டாம் வகுப்பில் கணக்கில் அதிக மார்க் வாங்கிய போதும் சரி - இங்குதான் வந்தான். அவனை விட, அவன் மனத்தை விட அந்த மணலுக்கு, அவனைப் பற்றி நன்றாகத் தெரியும். ஒவ்வொரு முறை காலை உள்ளே நுழைக்கும் போதும், தன் எண்ணத்தையும் சேர்த்து உள் வைப்பான். வெளியில் எடுக்கும் போது எல்லாவற்றையும் கொட்டி விட்ட திருப்தியில் மனம் லேசாகி இருக்கும்.

இன்றும் அப்படித்தான். எதையோ சொல்ல நினைத்துத்தான் அங்கு வந்திருந்தான். கைகளை தலைக்கு மேலே கட்டிக் கொண்டு, கால்களை நடை பயில விட்டான். மனத்தில் காட்சி பின்னோக்கிச் சென்றது.

இன்று காலையில் நடந்தது.

"அம்மா டிபன் ஃபாக்ஸ் ரெடியா ? ஆஃபீஸ் கிளம்புறேன்." - பறந்து கொண்டிருந்தான்.

அம்மா, சமையற்கட்டிலிருந்து, இவனை விட வேகமாய், டிபன் ஃபாக்ஸும் கையுமாய் ஓடி வந்தாள். " இந்தா பிடி. தயிர்சாதம். கொட்டிடாமப் பார்த்து வை" என்று சொல்லிக்கொண்டே திரும்பியவள் சட்டென்று திரும்பி " அப்பா கூப்பிடறார். ஏதோ சொல்லணூமாம் போ" என்றாள்.

பெட்டியைத் தூக்கிக் கொண்டு தன் ரூமை விட்டு வெளியே வந்தான். ஹாலில் அப்பா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

"அப்பா ! 8.20 பஸ்ஸை விட்டேன்னா நான் காலி. அந்த முசுடு மானேஜர், என்னை பிரேக் ஃபாஸ்ட் சாப்பிடாத கோபத்தில், சாண்ட் விச்சுன்னு நெனெச்சிக் கடிச்சி முழுங்கிடும். அப்புறம் உங்க ஒரே பையனை நீங்க பாதி பாதியாத்தான் சாயங்காலம் பார்க்கணும். கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்கப்பா " என்ற படி பெட்டியை அவர் பக்கத்தில் வைத்து விட்டு பக்கத்தில் அமர்ந்தான்.

அப்பா சிரித்து விட்டு, "நீயே ண்டா இனிமே பஸ்ஸிலே போய் கஷ்டப்படணும் ? உனக்கு ஒரு வண்டியே வாங்கித் தரேண்டா" என்றார்.

அப்பாவின் தட்டிலிருந்து எடுத்து வாயில் போட்ட இட்லித் துண்டு 'டபக்' என்று வெளியில் வந்தது. "அப்பா ஜோக் அடிக்காம சீக்கிரம் சொல்லுங்க. நான் ஆஃபீஸ் போகனூம் . என்ன திடீர் வண்டி ? ".

அப்போது தான் மதுவைப் பற்றிச் சொன்னார். "பொண்ணு பேரு மது. படிச்சிருக்கு, வேலை பார்க்குது.. கை நிறைய சம்பளம். நேற்றுதான் தரகர் சொன்னார். என்ன சொல்றே ? போட்டோ என் சட்டைப் பையில் இருக்கு. பார்த்துக்க ".

மெதுவாய் எழுந்து, சட்டைப் பைக்குள் கை விட்டு போட்டோவை எடுத்தான். மதுவின் பளீர் சிரிப்பில் கிளீன் போல்டாகி விட்டான். சமையற்கட்டை நோகித் திரும்பி, "அம்மா இட்லி - ரியலி சூப்பர்" என்று சங்கேத பாஷையில் சம்மதம் சொல்லி விட்டு வந்தான்.

பஸ்ஸைப் பிடித்துப் பயணம்செய்து இப்போது ஈரக் காற்றை அனுபவித்துக் கொண்டு இருக்கிறான்.

குனிந்து ஒரு பிடி மண்ணைக் கண்மூடி எடுத்தான். அதை மறு கையில் கொஞ்சம் கொஞ்சமாய்க் கொட்டத் தொடங்கினான். புத்தனுக்கு போதி மரம் போல இவனுக்கு இந்த விளையாட்டு. மனத்தில் பத்து எண்ணும் வரை அள்ளிய கையில் மணல் தங்கினால் நினைத்தது நடக்கும். இல்லை என்றால் இல்லை. இந்த விளையாட்டு இவனை என்றும் கை விட்டதில்லை. இவனும் விளையாட்டின் விதி முறைகளை இது வரை மீறியதே இல்லை. வெகு ஜாக்கிரதையாக எண்ணினான்.

காற்று படுவேகமாய், பலமாய் வீசிக் கொண்டிருந்தது.

வீட்டில் ஒரே பரபரப்பு. காலையில் அம்மாவும் அப்பாவும் இவன் எழுவதற்குள் வெளியே கிளம்பத் தயாராகி விட்டார்கள். பல் விளக்கிக் கொண்டே வந்தவன், "என்னம்மா, சீக்கிரம் கிளம்பிட்டே ? ".

" கல்யாணத்துக்குப் பொண்ணுக்குப் புடவை எடுக்க வேணும்ல. அதான் காஞ்சிபுரம் போறோம். அங்கே புடவை எல்லாம் சரியான விலையில் கிடைக்குமாம். பக்கத்து வீட்டுக் காமாட்சி சொன்னா. அவ பொண்ணுக்கு இப்பத்தானே கல்யாணம் முடிச்சா " என்றாள் அம்மா.

"ஓ ஷாப்பிங்கா ... ம்ம்ம் .. மறுமகளுக்குப் புடவை எடுக்கிற ஜோரில எனக்குப் பெட் காஃபி கட்டா ? போங்க போயி நல்ல காபி கலர்லே புடவை எடுங்க ! "

"போடா, உனக்கு எப்பவுமே விளையாட்டுதான்" - இருவரும் கிளம்பினார்கள்.

தரகர் தகவல் சொன்ன அடுத்த வாரமே . பெண் பார்த்துப் பேசி முடித்தாயிற்று. இன்னும் ஒரு மாதத்தில நல்ல நாள் இருப்பதாய்ப் பெரியவர்கள் சொல்ல, நிச்சயிக்கப்பட்டு விட்டது. அவளின் பளீர் சிரிப்பு இன்னும் நினைவில் இருந்தது.

நினைத்ததெல்லாம் நடப்பதில்லை. ஆஃபீஸில் ஏகப்பட்ட வேலை. போக முடியவில்லை. வீட்டிற்கு வரும் போது எரிச்சலாய் வந்தான். "அம்மா ! காஃபி" சமையற்கட்டில் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த பாலை விட வார்த்தையில் கொதிப்பு அதிகம். அம்மா காஃபியோடு ஒரு கவரையும் நீட்டினாள். கல்யாணப் பத்திரிகை.

"சீக்கிரம் எழுந்திருங்க ! மணி ஏழு ஆச்சு ! ஆஃபீஸுக்குப் போக வேண்டாமா " மது அவனைப் போட்டு உலுக்கினாள். சட்டென்று எழுந்தான். கொஞ்சம் நேரம் தூங்கினால் அவள் போடும் சத்தத்தில் கட்டடமே கலங்கும். அக்கம் பக்கத்து முகங்கள் எல்லாம் திரும்பிப் பார்க்கும். வேகமாய் எழுந்து பாத்ரூமை நோக்கிச் சென்றான். குளித்து விட்டு வந்ததும் காஃபி வந்தது.

அவன் பெட்காஃபி சாப்பிட்டு பத்து வருடங்கள் ஆகின்றன. மதுவுக்குப் பிடிப்பதில்லை.
"ஏங்க இன்னிக்கு இந்த காபி கலர் புடவை கட்டவா ? நல்லாயிருக்கும் " புடவையத் தோளீல் போட்டு, அழகு பார்த்துக் கொண்டே வந்து நின்றாள்.

டைனிங் ஹாலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் "ம்ம்ம் ... நல்லாருக்கு ... கட்டு" என்றான். அந்தப் புடவை அம்மா காஞ்சிபுரம் போய் எடுத்து வந்தது. புடவை மட்டுமே இங்கு இப்போது வீட்டில் இருந்தது. அமாவும் அப்பாவும் இப்பொது இல்லை. என்ன பாடு படுத்தி இருக்கிறாள் அவர்களை.

அம்மாவின் கைப்பக்குவம் ஞாபகம் வந்தது. உருளைக் கிழங்குப் பொரியல் ஊரையே தூக்கும். முதன் முதலில் மது அவர்கள் வீட்டில் சாப்பிட்டது நினைவிற்கு வந்தது.

"மது ! அம்மா சமையல் ஆளையே தூக்கும் ! அதுவும் உருளைக் கிழங்கு கேட்கவே வேண்டாம் ! அம்மா இன்னும் கொஞ்சம் அவளுக்குப் போடும்மா ! "

"இல்லம்மா ! போதும் . கிழங்கு உடம்புக்கு நல்லது இல்ல . வாய்வு. வுட்டுடுங்க.. போதும் ! " மது மறுத்தாள்.

அன்றிலிருந்து எல்லாமே மறுக்கப்பட்டது. சாப்பாட்டு விஷயத்தில் இருந்து, உடையணியும் விஷயத்தில் இருந்து., அம்மா அப்பாவை தங்களோடு வைத்துக் கொள்வது வரை. ஒரு நாள் அதுவரை புகைந்து கொண்டிருந்த விஷயம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

"ஏங்க, அண்ணா நகர்லே ஒரு ஃபிளாட். ரெண்டு ரூம். ஒரு பெட்ரூம் ஒரு கிச்சன். இருபத்து நாலு மணி நேரமும் தண்ணி வரும். என்ன சொல்றீங்க ? "

நடு ஹாலில் இருந்து கொண்டு, பூஜை அறையிலிருந்த அம்மா அப்பாவுக்குக் கேட்கும் படியாகக் கத்தினாள். ரொம்ப நாளாக இதை எதிர் பார்த்தாலும், அப்படி அவள் திடீரென்று கேட்டதும் அதிர்ந்து போய் விட்டான். சுமார் முக்கால் மணி நேரம் தனிக் குடித்தனம் போனால் தான் ஆயிற்று, தனக்கு என்று ஒரு வீடு, தனக்கு என்று சந்தோஷங்கள், தன் பிள்ளை, தன் கணவன், என்று எல்லாம் தனியாய் வேண்டும். யாரையும் சேர்த்துக் கொள்ள முடியாது என்றாள். பெற்றோருக்குத் தனியாய் மாதா மாதம் பணம் அனுப்புவதாய்ச் சொன்னாள். அப்போதுதான் புரிந்தது. அவளுக்குப் பணம் பிரச்னை இல்லை. மனிதர்களே பிரச்னை என்று. வந்த நாள் முதலே அவளுக்கு ஏனோ அவர்களைப் பிடிக்க வில்லை. அதன் விளைவுதான் அந்தச் சண்டை. இவனும் முடிந்த வரை வாதிட்டுப் பார்த்தான்.

கடைசியாக் அவள் ...."நானும் குழந்தைகளும் வேணும்னா எங்க கூட வாங்க, இல்லன்னா இருக்கவே இருக்கு கோர்ட்...." என்று சொன்ன போது, அவளை இடை மறித்து, "பளார்" என்று உலகமே அதிரும்படி ஒரு அறை விட்டான்.

அன்றோடு பிரச்னை முடிந்தது. அடுத்த ஆறு மாதத்தில் இவன் தனியானான். முதலில் அப்பா, பின் அம்மா. வருடா வருடம் அம்மாவின் திதியன்று மட்டும் மானசீகமாய் மன்னிப்புக் கேட்டுக் கொள்வான்.

அதன் பிறகு எத்தனை மாற்றங்கள். மது பிடிவாதமாய் வீட்டைக் காலி செய்து, அன்ணா நகருக்குக் குடி வந்தாள். இவனும் மனம் அப்பாவையேச் சுற்றி வரும் என்று விட்டுக்கொடுத்து விட்டான். வீடு போயிற்று. உறவு போயிற்று. எல்லாவற்றிற்கும் மேலாக ரொம்ப வருடங்கள் ஆயிற்று-அவனுள் இந்த மணற்குவியலின் உஷ்ணம் பரவி !

விட்டு விட்டான் எல்லாவற்றையும். தன் கனவுகள், தன் சந்தோஷங்கள் அத்தனையும் இபோதெல்லாம் அவன் எந்த முடிவு எடுப்பதற்கும் போதி மரத்தைத் தேடுவது இல்லை. கையில் மணல் அள்ளுவதும் இல்லை. நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விடுவான். மது தான் முடிவெடுப்பாள்.

"என்னங்க - நான் பாட்டுக்கு கரடியாய்க் கத்தறேன். நீங்க பாட்டுக்கு எங்கேயோ பாத்துக் கிட்டு இருக்கீங்க" மது அவனைக் கலைத்தாள்.

"ம்.. சாரி ஏதோ ஞாபகம். என்ன சொல்லு"

"சாய்ங்காலம் பீச்சுக்குப் போகலாங்க. ரவி ஆசைப்படறான். அவன் ஃப்ரெண்ட் போயிட்டு வந்தானாம். ஸோ, சீக்கிறம் வந்துருங்க"

ரவிக்குப் பத்து வயது. ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறான். மதுவின் ஹாண்ட்பேக்கையும் அவன் கையையும் பிடித்துக் கொண்டு ஜாலியாய் மணலில் கால் புதைத்து நடந்தான். அவனோ மகனின் கால்களையே பார்த்துக் கொண்டு வந்தான்.

கொஞ்ச தூரம் நடந்து சென்று கரைக்குச் சற்றுத் தொலைவில் அமர்ந்தார்கள்.

"வந்து ரொம்ப வுர்ஷம் ஆச்சுலைங்க. எங்கே - நேரமே இருக்க மாட்டேங்குது" மது சொல்லிக் கொண்டிருந்தாள்.

"ஆமா ரொம்ப வருஷம் ஆச்சு"

அவனுக்கு ஞாபகம் இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன் கடைசியாய் கண் மூடி மணல் அள்ளியது. நன்றாக நினைவிருக்கிறது.

திடீரென்று எண்ணும் சத்தம் அவனைக் கலைத்தது, திரும்பிப் பார்த்தான். ரவி கையில் மண் அள்ளி எண்ணிக் கொண்டிருந்தான். அவன் சட்டென்று, அணைந்து விடாமிலிருக்க விளக்கைக் காற்றிலிருந்து காப்பது போல, தன் இரு கைகளையும் மகனின் கைகளுக்கருகில்கொண்டு சென்றான்.

"சீக்கிரம் எண்ணுடா. மணல் காத்துல பறந்து கையிலேர்ந்து தீர்ந்திடப் போகுது" என்றான் பழைய ஞாபகத்தில்.
காற்று படு வேகமாய், பலமாய் வீசிக் கொண்டிருந்தது !....
....................................................................

Thursday 9 December 2010

யார் கூறியது இது ?

When I asked God for strength
He gave me difficult situations to face

When I asked God for brain and brawn
He gave me puzzles in life to solve

When I asked God for happiness
He showed me some unhappy people

When I asked God wealth
He showed me how to work Hard

When I asked God for favors
He showed me opportunities to work hard

When I asked God for peace
He showed me how to help others

God gave me NOTHING I wanted
He gave me everything I needed

எங்கோ படித்தது - யார் கூறியது ?

Wednesday 8 December 2010

சங்கமம் 2010 - ஈரோடு
அன்பு நண்பர்களே !

அருமை நண்பர் ஈரோடு கதிர் நம்மை எல்லாம் அன்புடன் அழைத்திருக்கிறார் - சங்கமம் 2010 - ஈரோட்டிற்கு.

சென்ற ஆண்டு சிறப்பாக நடைபெற்ற சங்கமத்தில் நாம் கலந்து மகிழ்ந்தோம். இனியதொரு நிகழ்ச்சி. அதன் அடிப்படையில் இவ்வாண்டும் ஈரோட்டினைச் சார்ந்த பதிவர்கள் வருகிற டிசம்பர் 26ம் நாள் காலை 11 மணியில் இருந்து மாலை வரை சங்கமம் 2010 - சிறப்பாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதன் முழு விபரம் காண சுட்டுக :http://www.erodekathir.com/2010/12/2010.html

பதிவர்கள் வாசகர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.

ஈரோடு பதிவர்கள் குழுமம் சார்பினில் அனைத்துப் பதிவர்களையும் வாசகர்களையும் அன்புடன் அழைக்கிறேன். கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா


Wednesday 24 November 2010

வந்துட்டோமே !

அன்பு நண்பர்களே !

நவமபர் 19 - வெள்ளிக்கிழமை எங்களது மணி விழா சிறப்பாக நடைபெற்றது. மூத்த அருமைச் சகோதரி நானானி அலை பேசியில் அழைத்து முதலில் வாழ்த்தினார். அவரது பேரன் அழகான ஆங்கிலத்தில் சிறு வாழ்த்துக் கவிதை படித்தான். மனம் மகிழ்ச்சிக் கடலில் கூத்தாடியது. நானானிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம்.

நேரிலும் அலைபேசியிலும் மின்னஞ்சலிலும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்களூக்கு மனமார்ந்த நன்றி.

இன்று முதல் இணையத்தில் உலவிடத் திட்டமிட வேண்டும். அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

நட்புடன் சீனா

Saturday 13 November 2010

விடுமுறை விடுமுறை விடுமுறை !

அன்பின் நண்பர்களே !/r

கடந்த அக்டோபர்த் திங்கள் 30ம் நாள் நான் பணி நிறைவு செய்து - அலுவலகப் பணிகளில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டேன். அறுபது வயது ஆனதைக் கொண்டாடும் விதமாக எங்கள் அறுபதாம் ஆண்டு நிறைவு மணி விழா எங்கள் சொந்த ஊரான ஆத்தங்குடியில் எங்கள் இல்லத்தில் வருகிற நவம்பர் 19ம் நாள் வெள்ளிக் கிழமை நடை பெற இருக்கிறது. அனைவரும் வந்திருந்து விழாவினைச் சிறப்பிக்க வேண்டுகிறேன். இவ்விழாத் தொடர்பான் பணிகள் அதிகம் இருப்பதாலும் - ஆத்தங்குடியில் இணையத் தொடர்பு இல்லாத காரணத்தினாலும் இணையத்தில் இருந்து தற்காலிக விடுப்பாக நவம்பர் 25 வரை இணையத்தின் பக்கம் வர இயலாதென நண்பர்களுக்கு அறிவிக்கிறேன்.
பிறகு சந்திப்போம் - அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நன்றி - நட்புடன் சீனா - 98406 24293

Tuesday 2 November 2010

பணி ஓய்வு - வாழ்த்து மடல்

எனது இனிய துணைவியார் திருமதி மெய்யம்மை அவர்கள் சென்னையில் ஒரு புகழ் பெற்ற பள்ளியில் தலைமைத் தமிழாசிரியையாய் 33 ஆண்டுகள் பணியாற்றி = பணி நிறைவு செய்த போது - அவரின் சக ஆசிரியை வாசித்தளித்த வாழ்த்து மடல்.
--------------------------------------------------------------------

எம்முடன் பணியாற்றிய எங்களில் ஒருவர்
எழுத்தும் சொல்லும் (மாணவ) மனங்களில் விதைத்தவர்
இத்திங்களில் எம்மைப் பிரிந்திட நேரும் - உன்
பணி நிறைவாலே வந்தது இந்நேரம்.

பணிகள் செய்ய நீ சளைத்தாய் இல்லை
இன்னமும் நீ களைத்தாய் இல்லை
பாரில் தமிழ் வளர்த்தோர் உண்டு - நீ எம்
பள்ளியில் தமிழ் வளர்த்த அம்மை - இது மெய்

வள்ளுவனும் பாரதியும் சொன்ன சொல்லை
உன் போல் சொல்ல எவரும் இல்லை
பள்ளியில் ஆற்றும் பணிகள் செய்யப்
பயின்றோம் நாங்கள் உன்னைப் பார்த்து.

கடலின் ஆழம் அமைதியைப் போல - உன்
கருத்தின் ஆழம், அமைதியாய் இருப்பாய்
மௌனமாய் இருந்து பணிகள் செய்வாய்
புன்னகையால் எம்மைப் புரிய வைப்பாய்.

வாய் திறந்தாலோ தமிழ் மடை வெள்ளம்
மகிழ்வுடன் நிறையும் கேட்பவர் உள்ளம்
தமிழுக்கு நீ சிறப்பு செய்தாய் அந்தத்
தமிழாலே நீ சிறப்பும் பெற்றாய்.

மூன்று ஆண்டுகள் பணி புரிந்தாலும்
முணுமுணுப்புடன் பணி செய்பவர் உண்டு
முப்பத்து மூன்றை முடித்த பின்னாலும்
முகந்தனில் மலர்ச்சி மறையவில்லை.

உன்னில் சிறியவர் நாங்கள் எனினும்
வாழ்த்துகிறோம் உன்னை நன்னலம் பெறவே
மதுரை மீனாட்சி திருவருளாலே
மண்ணில் மகிழ்வுடன் வாழ்க பல்லாண்டு.

ஆக்கம் : ஆங்கில ஆசிரியைWednesday 13 October 2010

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - ஜெரி


அனபு நண்பர் ஜெரி ஈசானந்தாவிற்கு இன்று பிறந்த நாள்.

இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

Monday 16 August 2010

அந்தோணி முத்து மருத்துவ மனையில்

அன்பு நண்பர்களே

சென்னையைச் சார்ந்த பதிவர் அந்தோணி முத்து இன்று காலை சென்னை பொது மருத்துவ மனையில் வயிற்றில் ஒரு கட்டியின் காரணமாகவும் - வீசிங் பிரச்னையாலும் அனுமதிக்கப் பட்டிருபதாக அறிகிறேன். பொது மருத்துவ மனையில் பணி புரியும் நல்ல உள்ளங்கள் - அவர்களின் நண்பர்கள் - மருத்துவ வசதிகள் உடனடியாகக் கிடைக்க ஏற்பாடு செய்தால் நலமாக இருக்கும்.

அவரைப் பற்றிய இடுகை :

http://blogintamil.blogspot.com/2008/01/blog-post_1562.html

http://cheenakay.blogspot.com/2008/08/blog-post.html

அன்பு நண்பர்களே !

அவரது அலை பேசி எண் : 9962879003

பொது மருத்துவ மனையில் இரண்டாம் தளத்தில் எமெர்ஜென்ஸி வார்டில் அறை எண் 124ல் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

சென்னை வாழ் நண்பர்கள் சென்று பார்த்து இயன்ற உதவிகள் புரிந்தால் நன்றி உடையவனாக இருப்பேன்.

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா


Saturday 24 July 2010

தப்பு

டிசம்பர் 1994 - கணையாழி மாத இதழில் வெளியான ஒரு சிறு கதை. எழுதியவர் எனது இளைய மகள் பிரியா - கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எழுதியது.

சிடுசிடுக்கிற அலாரம்.......
எட்டு மணி .......

எழுந்திருக்க மனசு வரலியா இன்னும் ........
ஃப்ரீப் கேஸில் தண்ணீர் பாட்டிலைத் திணித்துக்கொண்டே - அவருக்கு மட்டும் அது எப்படி சிந்தாமல் இருக்கிறதோ - ஆஃபீஸ் கிளம்புற அவசரத்தில் அப்பா .......

தடி தடியாக நான்கு கம்யூட்டர் புத்தகங்களை இரண்டு கைகளிலும் தூக்கிக் கொண்டு - எப்படி பஸ் ஏறுவாள் ? அக்கா ......

கிளம்பிக் கொண்டு - இல்லை இல்லை - பறந்து கொண்டிருக்கிறார்கள்.

அம்மா மட்டும் தான் பாக்கி. அவசரமாய் டிபன் பாக்ஸை பையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

குட் மார்னிங் அம்மா

ஆமா இதுல ஒண்ணும் கொறச்சலில்ல - எட்டு மணிக்கு எழுந்திறதுக்கு என்ன அலாரம் வேண்டிக் கிடக்கு.

இல்லேனா பத்துக்குத்தானே எழுந்திருப்பேன்

ஆஹா என்ன ஒரு சுறுசுறுப்பு - சரி - ஒழுங்கா காலையும் மத்தியானமும் சாப்டுரு - வேஸ்ட் பண்ணாதே - சமச்சுவைச்சத - ஜூனூன் பாஷையில் அதட்டினார்.

சரி சரி - டாட்டா - சாயங்காலம் சீக்கிரம் வந்துரு

அம்மா செருப்பு மாட்டும் போதுதான் ஞாபகம் வந்தது

அம்மா - என் ஐடெண்டிடி கார்டுக்கு ஃபோட்டோ எடுக்கணும்

போய் எடு

நீயும் கூட வா - எனக்கு ரெண்டு மணிக்குத்தான் காலேஜ் - அதுக்குள்ளே வாங்கிடலாம்

ஏய் ! எனக்கு எட்டரைக்கு ஆஃபீஸ்

அம்மா ... அம்மா ... பர்மிஷன் போடும்மா ... ப்ளீஸ்

சரி வந்து தொலைக்கிறேன் - போய் சீக்கிரம் குளிச்சிட்டு வா - போ

குளித்து விட்டுக் கிளம்பும் போது மணி ஒன்பது. மறக்காமல் அம்மாவின் பர்மிஷன் லெட்டரை எடுத்துக் கொண்டு ஸ்டூடியோவுக்குப் போனோம். உள்ளே எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள் - ஃபோட்டோவில்.

பாஸ்போர்ட் சைஸ் எடுக்கணும்

கொஞ்சம் இருங்க போட்டோ எடுக்கறவர் வந்துருவார்

எவ்ளோ நேரம் ஆகும்

அரை மணி

இன்றுதான் கடைசி தினம் என்பதால் எனக்கு ஃபோட்டோ அவசியமாய்த் தேவைப்பட்டது...... சரிமா, நீ போ - நான் இருந்து வாங்கி வரேன்.

அம்மா முறைத்து விட்டுச் சென்றார். ஒரு ஸ்டூலில் அமர்ந்தேன்

கடைப்பையன் ஒவ்வொரு பொருளாய் தூசி தட்டிக் கொண்டிருந்தான். நான் ஒவ்வொரு ஃபோட்டாவாய்ப் பார்க்கத் தொடங்கினேன்.

ஒரு குழந்தை தன்னை விடப் பெரிய பந்து ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு முகம் முழுவதும் சிரிப்பாய் நின்று கொண்டிருந்தது. அதே குழந்தை பந்தில்லாமல் அம்மா மடியில் இருந்தது - சிரிப்பைத்தான் கானோம்.

இன்னும் நிறைய ஃபோட்டோக்கள். தம்பதி சகிதமாய், தனியாய், சிறியவர் முதல் பெரியவர் வரை என்று எல்லா விதமாயும். ஆனால் அவர்களுக்குப் பின்னால் இருந்த பூங்கா ஒரே விதமாய் இருந்தது. நடுநடுவே யாரோ வந்து நெகடிவ் கொடுத்து டெவலப் செய்யச் சொல்லி .. எப்பொழுது கிடைக்கும் என்று நேரம் கேட்டுச் சென்றார்கள்.

தெருவில், இரண்டு சேட்டுகளை எதிரும் புதிருமாக வைத்துக்கொண்டு, சோனி ரிக்ஷாக்காரன், வயிற்றை எக்கி, மிதித்துக் கொண்டு போனான். டப்பு எக்கட பம்பிஸ்தாரு ? உரத்த குரலில் பேசியபடி கையில் பிளாஸ்டிக் பையுடன் ஒரு கூட்டம் ஊர்ந்து சென்றது.

நான் அருகில் இருந்த செய்தித்தாளைப் படிக்கத் தொடங்கினேன். மணி ஒன்போதரை. என் ஜென்மத்தில் இப்படி ஒரே இடத்தில் உட்கார்ந்ததில்லை.

எப்ப வருவாரு ?

ஸாரி - இப்ப வந்துருவாரு - மென்மையாய்ப் பதில் சொல்லி வேகமாய் உள்ளே சென்றான் கடைப்பையன்.

அப்பொழுது பார்த்து இருவர் உள்ளே நுழைந்தார்கள். என்ன நினைத்தாரோ ஒருவர் இன்னொருவரைப் பார்த்து - சின்னப் பொன்னுகளை எல்லாம் வேலைக்கு வெச்சா இப்படித்தான் - பாரு பேப்பர் படிக்குது. அவர் என்னவோ மெதுவாகத்தான் சொன்னார் - என் காதில்தான் விழுந்து தொலைத்தது.

பாப்பா - என்றார்

இந்த மெட்ராஸில் "பாப்பா" என்று கூப்பிடுவதை எப்பொழுதுதான் நிறுத்துவார்களோ தெரியவில்லை. நான் - அவர் மறுபடியும் வாயைத் திறக்கும் முன்.....

கட ஆள் உள்ளே இருக்காரு - வருவாரு - உட்காருங்க - என்பதற்குள் பையன் வந்து விட்டான்.

என்ன சார் ? சொல்லுங்க ..

வந்தவர் என்னை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு - ப்ரிண்ட் போடனூம் - நெகடிவ் தந்தார்.

சீக்கிரம் வேணும்
எத்தனை காப்பி ?
நாலு
20 குடுங்க
நாலு நாலு பதினாறு தானே - என்ன ஐந்து ரூபாயா ஒண்ணு ?
அர்ஜெண்டுன்னு சொன்னீங்களா - அதான் ஐந்து - மென்மையாக
வேண்டாம் - திருப்பிக் கொடு - ஏதோ தெரிஞ்ச கடைன்னு வந்தா .... திருப்பி வாங்கிக் கொண்டு சென்று விட்டார்.

எப்ப வருவாரு - ஒம்பதே முக்கா ஆச்சே ,,,,
ஃபோன் பண்னி இருக்கேன் - பத்து நிமிஷத்துலே வந்துருவாரு
பக்க்த்துல வேற ஸ்டூடியோ இருக்கா ? முக்கால் மணி நேரம் காத்திருப்பு எரிச்சலாய்க் கேட்க வைத்தது.
ஊஹூம் .. திரும்பவும் நிதானமாய் - பக்கத்துல பியூட்டிஃபுல் ஸ்டூடியோ இருக்கு - ஆனா லீவு
எனக்கு வேணும் - வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கின்றதென்று வந்தேன் - பாரு - நல்லா வேணும். - சரி இன்னொரு பத்து நிமிஷம் தான் - பரவாயில்லை.

ஒரு குடும்பம் வந்து குரூப் ஃபோட்டோ எடுக்கணும் என்றது.
உக்காருங்க சார் - இப்ப வந்துருவாரு - எத்தன காப்பி ? என்ன சைஸ் ? அவர்களைக் கேள்வி கேட்டுக் காத்திருப்பை மறக்கடித்துக் கொண்டிருந்தான்.

அப்படி இப்படி என்று ஒரு வழியாய் பத்தே காலுக்கு வந்தார் ஃபோட்டோ எடுப்பவர். எனக்கு நேர் எதிரில் உட்கார்ந்தார். நிதானமாய் மூக்குப் பொடி டப்பாவைத் திறந்தார். கடை முதலாளி போல - அதுக்குன்னு இப்படியா ?

எனக்குக் கோபமாய் வந்தது

என்னமமா ?
பாஸ்போர்ட் சைஸ்
மேலே போங்க வரேன் . நீங்க சார்
குரூப் - நாலு காப்பி

நான் மேலே சென்று ஃபோட்டோ எடுத்துக் கொண்டு - கீழே வந்து பணம் கட்டினேன். குரூப்பும் எடுத்து முடித்து - பில்லுக்கு நின்றது. பில் போட்டுக் கொண்டிருந்தவர் திடீரென்று நிமிர்ந்து - ஒன்றரை மணி நேரம் ஆச்சு, சீக்கிரம் வாங்கன்னு சொல்லத் தெரியுது - இந்த ஃபானைத் தொடைக்கக் கூடாதா ? மாடு மாடு - சொல்லித் தெரியக் கூடாது - தானாத் தெரியனூம் - மாடு மாடு - என்று கத்தினார்.

யோவ், அவன் இருங்க, இருங்க சொல்லலேன்னா, உன் கடைக்கு ஒரு பய வரமாட்டான். வந்த வுடனே நேரா பொடி டப்பாவுக்குப் போயிட்டே - நீ பேசறியா - கொத்தாய் அவன் சொக்காயப் பிடித்துக் கத்த வேண்டும் போல இருந்தது.

எரிச்சலாய் வெளியில் வந்து எடுத்த ஃபோட்டோவைப் பார்த்தேன். அழகாய்ச் சிரித்துக் கொண்டிருந்தேன். கோபம் - எரிச்சல் - காத்திருந்த நேரம் எதுவும் அதில் தெரியவில்லை.

திரும்பிப் பார்த்தேன். பையன் ஃபேனைத் துடைத்துக் கொண்டிருந்தான். கடையின் பெயர்ப் பலகை அருகில் முதலாளி புகைப்படத்தில் முகமலர வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். கடைப் பெயரைப் படித்தேன்.
ரிஃப்லெக்ஷன் ஸ்டூடியோ - கடை வாசலில் நின்றிருந்த ஒரு சின்ன வாண்டு அருகில் இருந்த தன் அம்மாவிடம் = அமமா ரிஃப்லெக்ஷன்னா பிரதி பலிப்புத்தானே - என்றது.

வேகமாய் அதன் அருகில் சென்று - இல்ல இல்ல அது இல்ல அர்த்தம் - அது தப்பு என்றேன்.

கணையாழி - டிசம்பர் 1994சிடுசிடுக்கிற அலாரம்

Sunday 27 June 2010

செம்மொழி மாநாடு


கோவையில் நடக்கும் செம்மொழி மாநாடு இன்றைய தினத்துடன் நிறைவு பெறுகிறது. இம்மாநாட்டில் தமிழ் இணைய மாநாடும் ஒரு பகுதியாக நடைபெற்றது. அம்மாநாட்டில் நமது பதிவர்கள் பலர் கலந்து கொண்டு உரையாற்றினர். அவர்களில் நமது அருமை நண்பர் லதானந்தும் ஒருவர். அவர் முரசொலி மாறன் அரங்கில், நடந்த வலைப்பூக்கள் பற்றிய அமர்வினில்
வலைப்பூக்கள் பற்றிப் பேசி இருக்கிறார். அதனைப் பற்றிய இடுகை, அவரது பதிவினில் இன்னும் ஓரிரு நாட்களில் வெளி வரும்.

நட்புடன் சீனா


Thursday 27 May 2010

அப்பாவி முரு - திருமணம்


அருமை நண்பன் சிங்கையில் வசிக்கும் அப்பாவி முருவின் திருமணத்திற்குச் சென்று வாழ்த்தி வந்தேன். முதலில் முருகேசனைப் பார்த்தது அவனது புரொஃபைல் படத்தில் - பாவம் போல் அப்பாவியாக இருந்தான். அடுத்து மதுரை பதிவர் சந்திப்பில் ஒரிரு நிமிடங்கள் - ஒரிரு சொல் பரிமாற்றம் - அவ்வளவுதான் - மூன்றாவதாக எங்களின் இனிய இல்லத்திற்கு முரு வந்த போது நீண்ட சந்திப்பு - இப்பொழுது திருமணத்தில் அடுத்த சந்திப்பு - ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒவ்வொரு விதமான தோற்றம். தொடர்ச்சியாக சந்திக்காததால் புதுப் புது தோற்றமாகத் தோன்றும்.

சரி சரி - பில்டப் போதும் - விஷயத்துகு வரேன்

சின்னாளப்பட்டியில் நேற்று முருவுக்கு திருமணம் - காலை 7 மணிக்கு மதுரையில் இருந்து பேருந்தில் புறப்படுவதாக திட்டம் - பேருந்து நிலையத்தில் சென்று காத்திருந்து 08:30க்கு வந்த கா.பா வுடன் சின்னாளப்பட்டி சென்றோம் - அங்கு ரம்யா, கலை, சுரேஷ் ஆகியோர் முதல் நாளே வந்து சிறப்பித்துக் கொண்டிருந்தனர். திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து விட்டு வந்தோம். இனிய அனுபவம்.

மணமக்களுக்கு நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

Thursday 22 April 2010

லதான்ந்தின் கேள்விக்குப் பதில்

நண்பர் லதானந்த் விஜய கோபால் சாமியிடம் கேள்விகள் கேட்டு, பதில்கள் பெற்று, இவரது கருத்தினையும் கூறி ஒரு இடுகை இட்டிருக்கிறார். அதே கேள்விகளுக்கு என்னைப் பதில் எழுதச் சொல்லிக் கேட்டார். இதோ பதில்கள்

லதானந்தின் கேள்வி சிவப்பு வண்ணத்தில்


எனது பதில் நீல வண்ணத்தில்

1. அவசரமாக டாய்லட் போக வேண்டிய தருணத்தில் கழிவறை கிடைக்காமல் திண்டாடியிருக்கிறீர்களா?

ஓஒ ஒன்றிரண்டு சந்தர்ப்பங்கள் உண்டு - பேருந்தில் பயணம் போகும் போது = கண்டதையும் வாங்கித் திண்ணுட்டு - க்டமுடா க்டமுடா கலக்கி - பஸ்ஸூ எப்ப்டா நிக்கும்னு பாத்து இறங்கி ஓடிணா - ஒரு அறை கூட கிடைக்கல - ஒரு மரத்துக்குப் பின்னாலே போயி .... சரி சரி வேணாம் - நல்லாருக்காது ( இதெல்லாம் நடந்து ரொம்ப ரொம்ப வருசம் ஆயிடுச்சு )

2. யாரைப் பார்த்துப் பொறாமைப் படுகிறீர்கள்?

லதானந்தைப் பார்த்து - அவரின் இளமை ததும்பும் மனது - இடுகை இடுகின்ற வேகம் - பல்வேறு தமிழில் எழுதும் திறமை - குசும்பு - பெத்த பசங்க கிட்டே ஃப்ரெண்ட்லியாப் பழகறது - இன்னும் என்ன என்னவோ

3. எதிர்பாராமல் கிடைத்த கிளுகிளு அனுபவம் ஏதாவது?

அந்தரங்கம் புனிதமானது - 20 வயசில பஸ்லே - சென்னை மதுரை - ஸ்டேட் எக்ஸ்பிரஸ் - நான் ரெண்டு பேரு உக்கார்ர சீட்ல தனியா உக்காந்து வந்தேன் - விழுப்புரம் வரைக்கும் யாருமே ஏறல - விழுப்புரம் தாண்டிப் பாத்தா - பக்கத்து சீட்ல ஒரு பாப்பா - காலேஜ் படிக்கற பாப்பா - என்ன பண்றதுன்னு தெரில - நல்ல தூக்கம் டாம் டயர்டு ரெண்டு பேருமே - அப்பப்ப தொடைகள் வெளிப்பக்க உராய்வு - கால்கள் இடிப்பு - தோள்களில் தலை சாய்வு - இப்படியே போச்சு - மதுர வந்துடுச்சி - அவ்ளோதான் - உண்மை உண்மை உண்மை

4. நீங்கள் அசடு வழிந்த ஓர் உண்மைச் சம்பவம் சொல்லுங்களேன்?

எப்பவுமே நடக்கறது தானே ! ஒண்ணா இரண்டா எடுத்துச் சொல்ல !

5. இன்றளவும் உறுத்திக் கொண்டிருக்கும் குற்ற உணர்வு ஏதாவது இருக்கிறதா?

இருக்கிறதே ! சொல்ல இயலாதே !

6. சினிமாவுக்கு பிளாக்கில் டிக்கட் வாங்கிச் சென்றிருக்கிறீர்களா?

முக்கா வாசி அப்படித்தான் - பிளாக்ல தான் வாங்கறது -

7. நீங்கள் மீறியதிலேயே பெரிய சட்ட மீறல் எது?

சைக்கிள் டபுள்ஸ் - அவ்ளோ தான்

8. அனானி கமெண்ட் போட்டிருக்கிறீர்களா? ஆமெனில் யாருக்கு? எப்போது?

அந்த வழக்கமெல்லாம் இல்ல


9. அன்றைய சரோஜாதேவி இன்றைய மஜா மல்லிகா யாருடைய எழுத்து சூப்பர். ஒப்பிடவும்.

ச.தே அதிகம் படித்திருக்கிறேன் -
ம.ம நான் படிச்ச காலத்துல கேள்விப்பட்டதே இல்லையே

10. எனது வலைப்பூவில் லிங்க் தரட்டுமா?

எனக்கொன்றும் ஆட்சபனை இல்லையே

நல்வாழ்த்துகள் லதானந்த்
நட்புடன் சீனா

Sunday 14 March 2010

திருப்பூர் - முயற்சி - ரத்த தானம்

சென்ற ஞாயிறு காலை ஒரு தினசரியின் இணைப்பில் படித்த செய்தி. பகிர வேண்டுமெனத் தோன்றியது.

அன்னிய செலாவணியை ஈட்டித் தருவதில் முன்னிலையில் இருக்கிறது பனியன் நகரமான திருப்பூர். அதே நேரத்தில் சுகாதாரத்திலோ பின் தங்கிக் கிடக்கிறது. வணிக அரங்கில் ஒரு குட்டித் தமிழகமாகத் திகழும் திருப்பூரைச் சுகாதாரத்திலும் முண்ணனிக்குக் கொண்டு வர முயற்சி எடுத்திருக்கிறது ஓர் அமைப்பு. அந்த அமைப்பின் பெயரே "முயற்சி" என்பது தான்.

முயற்சி அமைப்பின் புதுமையான முயற்சி தான் - ஒரு முறை இரத்த தானம் செய்தால் 1.5 இலட்சத்திற்கு ஆயூள் காப்பீடு இலவசமாக வழங்கும் திட்டம்.
திருப்பூர் அரசு மருத்துவ மனையில் குழந்தை திருட்டைத் தடுக்க மருத்துவ மனையில் , இவ்வமைப்பு சி சி டி வி பொருத்தியிருக்கிறது. தொடர்ந்து 1.5 இலட்சத்தில் அரசு மருத்துவ மனையினைச் சுத்தம் செய்திருக்கிறது.

இரத்தம் பற்றாற்குறையினால் சில அறுவைச் சிகிச்சைகள் தள்ளிப் போடுவது அறிந்து இவ்வமைப்பு இரத்த தான முகாம் நடத்தி இரத்தம் தங்கு தடையின்றி கிடைக்க வழி செய்திருக்கிறது.

இத்திட்டத்தை நிறைவேற்றும் வகையில் 640 பேரினை உறுப்பினராக்கி - முகாம்கள் நடத்தி, 500க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து இரத்தம் பெறப்பட்டு உள்ளது. இப்பொழுது இரத்த தானம் செய்பவர்களீன் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.

இரத்த தானம் செய்பவர்களுக்கு ஏதாவது கைமாறு செய்ய வேண்டுமென எண்ணி, பணமோ பொருளோ கொடுத்தால் தானம் செய்பவர்களை அவமதிப்பது போல ஆகிவிடுமே என நினைத்து அவர்களுக்கு ஒரு ஆண்டிற்கான இலவச ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திற்கான பாலிசி வழங்க முன்வந்தனர் முயற்சி அமைப்பின் நிர்வாகிகள்.

இரத்த தானம் செய்பவர்கள் ச்மூகத்தில் மிகவும் குறைவு. அதே நேரத்தில் தானம் செய்பவர்கள் விபத்துகளில் பாதிக்கப்பட்டால் வறுமை காரணமாக உயிர் இழக்கும் சூழல் ஏற்படுகிறது. அதே போல் சிலர் நோயின் கொடுமையாலும் துயரப்படுகின்றனர். எனவே இவர்களுக்கு 1.25 இலட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு பாலிசியும் 25 ஆயிரம் மதிப்புள்ள மருத்துவக் காப்பீடு பாலிசியும் இவ்வமைப்பினர் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

ஒரு முறை இரத்த தானம் செய்தாலே போதும். இந்தக் காப்பீடு வசதி அளிக்கப்படும். மருத்துவ மனைகளில் 24 மனி நேரம் தங்கி செஇகிசை பெறும் நோய்களுக்கு மருத்துவக் காப்பீடு பாலிசி கை கொடுக்கும். இரத்த தானம் செய்யும் பழக்கம் அதிகரிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இத்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஊரிலும் ஒரு "முயற்சி" அமைப்பு தோண்றினால் போதும் - இரத்த தானத்தில் தமிழகம் முதலிடத்துக்கு வந்து விடும்.


நண்பர்களே ! இரத்த தானம் செய்யுங்கள் !

நல்வழ்த்துகள்

நட்புடன் சீனா

Monday 1 March 2010

ஊமை நெஞ்சங்கள் !!!!!

தமிழ் அரசி - 22.11.1992 வார இதழில் அறிமுக எழுத்தாளர் வரிசை எண் : 3ல் - எனது செல்ல மகள் - இளைய மகள் எழுதிய கதை ஒன்று பிரசுரமானது. அவ்வறிமுகத்தையும் அக்கதையையும் இங்கு பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அறிமுகம் :

சென்னை சௌகார்பேட்டையில், மூங்கிபாய் கோயங்கா பெண்கள் மேல்நிலைப்பள்ளீயில் '+2' முதலாண்டு பயிலும் செல்வி பிரியா, கடந்த 1992 மார்ச்சில் நடைபெற்ற பொதுத்தேர்வில், பள்ளியிலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றதுடன், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசுகள் பல பெற்றதும் உண்டு.

பிரியாவின் தந்தை வங்கிப் பணியாளர் - தாய் தமிழாசிரியை.

பிரியாவின் முதல் கதை "ஊமை நெஞசங்கள்" மனித மனங்களை நன்றாகப் படித்து, உணர்ந்து, தந்தையையும் மகளையும் வெகு இயல்பாகவே பேச விட்டிருக்கிறார்.

வாழ்த்துகள் !

இனி கதை :

பாரதி :

அலாரம் அடித்தது.

சே ... ! அதுக்குள்ளெ விடிஞ்சிடுச்சா ? இனிமே எழுந்து, குளிச்சு, சமைச்சு, டிபன் பாக்ஸில் கட்டி, காலேஜுக்குக் கிளம்பி ..... ?

அலாரம் கடிகாரத்தைக் கண்டு பிடித்தவன் மேல் கோபம் கோபமாய் வந்தது. வேறு வழி இல்லாமல், படுக்கையிலிருந்து எழுந்தேன்.

எதிர்ச் சுவர்ப் படத்தில் அம்மா சிரித்துக் கொண்டிருந்தாள்.

எனக்கு மட்டும் ஏம்மா சிரிப்பே வரமாட்டேங்குது ? எப்படி வரும் ? காலையிலே எழுந்தப்புறம் இந்த வீட்டுக்குள்ளே நான் பார்க்கிற ஒரே முகம் அப்பா முகம்தான். அதைப்பார்த்தாலே கோபம் பொத்துக்கிட்டு வருது. அப்புறம் எங்கேயிருந்து சிரிப்பு வரும் ? சலிப்புடன் திரும்பினேன்.

அழகிய சூரியன் மறையும் காட்சி சுவரில் ஓவியமாய்த் தொங்கியது.

சூரியன் மறைந்ததனால் கறுத்த ... சே ! எதைப் பார்த்தாலும் இந்தக் கவிதை மட்டும் தோணிருமே ....

எனக்குக் கவிதை என்றாலே பிடிப்பதில்லை. அப்பா எழுத ஆரம்பித்ததிலிருந்து ! மூன்று வருஷங்களுக்கு முன் அம்மா போன பின், எழுத ஆரம்பித்தவர்தான் ... இன்னும் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார். எழுத ஆரம்பித்தால் சகல*மும் மறந்து சோகம் அவரைச் சூழ்ந்து விடும்.

சுந்தரேசன் :

கட்டிலில் படுத்திருந்த எனக்கு மனம் ஏனோ கனத்தது. ஜானகி ! ... மனம் பூரா ஜானகி சூழ்ந்திருந்தா, கனக்காம என்ன செய்யும் ?

"சீக்கிரம் எழுந்திருங்க. நேரமாச்சு. காபி போட்டு வெச்சுருக்கேன். ஆறிடப் போவுது. " என்று எழுப்புவதிலிருந்து, "இவ்வளவு நேரம் ஆஃபீஸிலே என்ன பண்ணிட்டிருந்தீங்க ? இப்ப வந்து லைட்டப் போட்டுக்கிட்டு, கொட்டக் கொட்ட முழிச்சிக்கிட்டு ஆஃபீஸ் ஃபைலப் பாத்துக்கிட்டு இருக்கீங்களே? "என்று செல்லமாய்த் திட்டி, இரவு தூங்கும் வரை என்னைப்பற்றியே நினைத்துக்கொண்டு இருந்த அவளுக்கு,எப்படி என்னை விட்டுப் போக மனசு வந்தது ?

மூணு வருஷம் ஆச்சு ! அவள் போய் ! ஆனா எனக்குமட்டும் இன்றும் வாழ்ந்து க்கிட்டுருக்கா ! .... கவிதையாய் .... ? வேகமாய் எழுந்து பேப்பரையும் பேனாவையும் எடுத்தேன் !

பாரதி :

அப்பாவைத் தவிர்த்து ரூமை விட்டு வெளியே வந்தேன். தேதிப் படம் கிழிக்காமலிருந்தது. கிழித்தேன். எனக்குள் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது. இன்று ஞாயிற்றுக் கிழமை. காலேஜ் லீவ். இந்த மூன்று அறை வீட்டுக்குள்ளேயே , அப்பா முகத்தைப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியது தான். வாச்ற்கதவைத் திறந்து பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தேன். வரும்போது பார்த்தேன். ரூம் கதவு மூடி இருந்தது. அப்பா இன்னும் எழுந்திருக்க வில்லை போலிருக்கிறது. பாக்கெட்டையும் துடைப்பத்தையும் எடுத்துக் கொண்டு வாசலுக்குச் சென்றேன். ஒரு கோலத்தைப் போட்டு விட்டு உள்ளே வந்தேன். ரூம் கதவு திறந்திருந்தது. அப்பா சோஃபாவில் அமர்ந்திருந்தார். ஹூம். - இதுல ஒண்ணும் கொறச்சலில்ல - எழுந்த உடன் காஃபி வந்துடணும் - அதில் அவர் உடகார்ந்திருந்தார் என்றால் காஃபி வேணும்னு அர்த்தம். நானாக அர்த்தம் பண்ணிக் கொண்டதுதான் அதுவும் !

எனக்குப் பத்திக் கொண்டு வந்தது. ஒரு நாளாவது, என்னம்மா ? - காலேஜா ? - லீவு போடேன் - வெளியில போலாம் - சாப்பிட்டியா ? - ரொம்ப நேரம் கண் விழிக்காதெ ! - உடம்பு கெட்டுடும். நோட்ஸ் கேட்டியே - இந்தா - முப்பது சொன்னான் - 27க்கு வாங்கினேன் - இப்படி ஏதாவது சொல்ல மாட்டாரா ? - சரி. அதுவும் வேண்டாம். வீட்டுல ஒருத்தி இருப்பதாவது நினைவிருக்க வேண்டாமா ? பேசி மூணு வருஷம் ஆச்சு ! என்னதான் நினைச்சிக் கிட்டு இருக்காருன்னு தெரில ! இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பாத்திரணும். மனம் தவித்தது !

சுந்தரேசன் :

காஃபி வந்தது. குடித்து விட்டுக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டு சென்று விட்டாள்.

என மகள் பாரதியை நினைக்கும் போது பெருமையா இருக்கும். ஜானகி போனதிலிருந்து என்னிடம் எதையும் எதிர்பார்க்காதவள். இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்காதவள். தன் தேவைகளைத் தானே பூர்த்தி செய்து கொள்பவள்.

அவளுக்கு அதிகம் பேசினால் பிடிக்காது. எப்போதும் படித்துக் கொண்டிருப்பாள். இரவு பகலென்று பார்க்க மாட்டாள். தனக்கு வேண்டிய புத்தகங்களைக் கூட தானே வாங்கிக் கொள்வாள். என்னைத் தொந்தரவு செய்யக்கூடதென்ற நினைப்போ என்னவோ ?. நான் அவள் போக்கில் அவளை விட்டு விட்டேன். பாவம்.. தாயில்லாப் பெண். அவள் சுதந்திரத்தை ஏன் பறிக்க வேண்டும் ?.

பாரதி :

முடிவு செய்து விட்டேன். இன்றிரவு பேசித் தீர்த்துவிடுவதென்று. ந்றுக்கிக் கொண்டிருந்த கத்தரிக் காயை அப்படியே விட்டு விட்டு, அவர் எதிரில் போய் நின்றேன். கவனிக்க வில்லை "அப்பா ! ".

சுந்தரேசன் :

நிமிர்ந்த எனக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியுமாய் இருந்தது. என் மகள் என்னை "அப்பா ! " என்று மூணு வருஷத்துக்கு அப்புறமாய்க் கூப்பிடுகிறாள் . என்னம்மா ? சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்று கேட்டேன் !

பாரதி :

இவரென்ன - தன் பெண் ஊமை என்று நினைத்துக் கொண்டாரா ? ஒரு வார்த்தை பேசியதற்கே இப்படி ஆச்சரியமாய்ப் பார்க்கிறாரே !

"உங்க கிட்டே கொஞ்சம் பேசணும் அப்பா ! "

"தாரளமா ! என்னம்மா வேணும் ? "

இந்தக் கேள்வியக் கேட்க இப்பொழுதுதான் தோன்றியதா ? இவ்வளவு நாட்களாக அடக்கி வைத்திருந்ததைக் கொட்டி விட்டேன் :

"இதைக் கேட்க இப்பவாவது தோணிச்சே அப்பா ! : ஒரு நாளாவது என் கிட்டே பேசி இருப்பீங்களா ? அம்மா போய்ட்டான்னா - அவ கூட சேந்து நானுமா போய்ட்டேன் ? போனவங்களுக்கு வருத்தப் படறீங்களே - இருக்கறவங்களுக்கு கவலைப்பட்டீங்களா ? உங்க மக என்ன பெரிய ஞானின்னு மனசில நினைப்பா ? எதையுமே உங்க கிட்டே கேக்காம, பேசாம, ஊமையா எல்லாத்தயும் செஞ்சிகிட்டு இருக்க ? அப்படி இருந்தா, பைத்தியம் தான் பிடிக்கும் ! அதனாலே தான் இன்னைக்குக் கேக்கறேன் - ஏன் பேசமாட்டேங்கறீங்க ?

சுந்தரேசன் :

எனக்குத் துக்கம் தொண்டைய அடச்சிது .

பாரதி :

உங்க மனைவிய நாந்தான் அனுபிச்சுட்டேன்னு நினைக்கிறீங்களா ? நான் என்னப்பா பண்ண முடியும் ? அமமாவுக்கு ஹார்ட் அட்டாக் - போதிய வசதி இல்ல . ஆப்பரேஷனுக்கு. அதுக்காகத் தெனந்தெனம் நான் சாகனூமா ? பிளீஸ் அப்பா ! என்னச் சித்திரவத பண்ணாதீங்க ! அழுதே விட்டேன் !

சுந்தரேசன் :

காலடியிலே பூமி நழுவியது. இவ்வளவு உணர்ச்சிகளா பாரதி மனசில ! சே ... ! எப்படி அரக்கத்தனமா நடந்து கிட்டு இருந்திருக்கேன் ! எம்பொண்ணய புரிஞ்சிக்க முடியலியே என்னால..... ! எனன் அப்பா நான் ? அழுது கொண்டிருந்த மகளை ஆதரவாய் அணைத்துக் கொண்டேன்.

பாரதி ! இத்தன வருஷம் நாம ரெண்டு பேரும் நடக்கிறது என்னன்னு தெரிஞ்சிக்காம இருந்திட்டோம். சத்தியமா சொல்றேம்மா ! நான், நீ நெனெக்கிற மாதிரி இல்ல ! நீ எதயும் எதிர்பாக்காதவன்னு நெனெச்சது தப்புதான். ஆனா ஒண்ணு - இந்த ஊமை நாடகம் தொடர - இனி - நிச்சயமா நான் விட மாட்டேன். - என்ன நம்பும்மா - என்ன நம்பு !

பாரதி :

எனக்கு ஏதோ புரிந்தது - ஏதோ புரியவில்லை - ஆனால், என் அப்பா எனக்குக் கிடைத்து விட்டார் என்பது மட்டும் தெளிவாகவே புரிந்தது !

----------------------------

நட்புடன் சீனா .


Sunday 14 February 2010

வணக்கம் ..... ! சொல்லுங்க ....... !

காலாற - மெதுவா - மகிழ்ச்சியோட நடக்கற கலையே ஒரு தனிக்கலை. ஆமாம் - மனத்திற்கு ஒரு அழகுணர்ச்சியைத் தருவது நடைப்பயிற்சிதான். தன்னை மறந்து - கைகளை வீசி - காற்றை இழுத்து - ஆழமாய் மூச்சு விட்டு - கண்கள் சுற்றுச் சூழலைப் பார்த்து - சுவையோடு நடை போடுவது ஒரு தனி இன்பம் தான். அதிலும் கூடவே துணையாக துணைவியும் நடப்பது தனி சுகம்தான்.

நம்மை விட்டுப் பிரியாமல் இருப்பது இப்போது எல்லாம் அலைபேசிதான் ! ஒன்று கையின் அணைப்பில் இருக்கும் இல்லை எனில் நெஞ்சின் அணைப்பில் இருக்கும். அலைபேசியின் அழைப்பு நடக்கும் போதும் நம்மைத் தட்டி எழுப்பும் ! பின்னால் வருவது துணையே ஆயினும், அருகில் வருவது அயலாரே ஆயினும் அதற்கு வேறுபாடு கிடையாது !

வணக்கம் ! சொல்லுங்க ..... ! என்று கணீர்க் குரல் - வந்த அலைபேசி அழைப்புக்குப் பதில் கூறும் முகமாகப் பேசிய சொற்கள். இக்குரலைக் கேட்டதும் அருகே வந்த பெரியவர் சற்றே வியப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த பார்வையைச் செலுத்தி புன்னகை பூத்தார் ! தடுமாறி நடந்த பெரியவர் சற்றே கையமர்த்தி நின்று " இப்பொழுது எல்லாம் நல்ல தமிழில் யார் பேசுகிறார்கள் ? உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ் ! உலகின் முதன்மையான 108 மொழிகளில் முதன்மையானது தமிழ் ! இக்காலத்தில அதை மறந்து விட்டனர் இத்தலைமுறையினர். எங்கே தமிழ் ? அதைக் கேட்பதே அரிதாக உள்ளது " என்றார் அப்பெரியவர்.

அவர் யார் என்பது எங்களுக்குத் தெரியாது ! நாங்கள் யார் என்பது அவருக்குத் தெரியாது ! இவ்வளவு நன்றாகத் தமிழ் பேசுகிறீர்களே ! நான் ஒரு தமிழ்க் கூட்டத்திற்குத் தான் சென்று கொண்டிருக்கிறேன் என்றார்.

அவருக்கு வயது 82 ! தள்ளாமை நடையில் தெரிந்தது ! ஆனாலும் தூயமையான வெள்ளுடையில் கையில் ஒரு பையுடன் நடந்தார் ! சற்றே உயரமான தோற்றமுடையவர்
! இப்பொழுதெல்லாம் எதுவும் நினைவில் நிற்பது இல்லை - மறந்து போய் விடுகிறது எனக்கூறி எங்கள் பெயரை இரண்டு மூன்று முறை கேட்டு நினைவு படுத்திக் கொண்டார். தன் பெயர் சண்முகக் கனி என்றார். எங்கள் அடுக்ககத்தில் புதிதாகக் குடி வந்திருப்பதாகவும் கூறினார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நேர நடைப்பயிற்சியில் தான் அவரைச் சந்தித்தோம். தமிழறிஞர்களின் மாலை நேரக் கூட்டத்திற்கு தனியே சென்று கொண்டிருந்தார். வணக்கம் , சொல்லுங்க ! என்ற அலைபேசியில் பேசிய தமிழ்ச் சொற்களுக்கே அவர் மயங்கி விட்டார்.

அங்கேயே ஒரு ஓரமாக நின்று எங்களுடன் சில மணித்துளிகளைச் செலவிட்டு உரையாடி மகிழ்ந்தார். பல தமிழறிஞர்கள் பெயரை எல்லாம் கூறி அவருக்கு உள்ள தொடர்பினைப் பகிர்ந்து கொண்டார். பேராசிரியர் சக்திவேல் என்பவரைக் குறிப்பிட்டு அவர் பேசிய போது - நான் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள நாடார் மகாஜன சங்கம் எஸ் வெள்ளைச்சாமி நாடார் கல்லுரியில் நான் படித்த காலத்தில் முதல்வராக இருந்த பேராசிரியர் சக்திவேலை நினைவு கூர்ந்தேன். அவரைத்தான் அவரும் குறிப்பிட்டதாகக் கூறி மகிழ்ந்தார். அங்கு தமிழாசிரியராக இருந்த பேராசிரியர் சொல்விளங்கும் பெருமாள் - அவரது துணைவியார் பேராசிரியை சக்தி பெருமாள் பற்றிப் பல செய்திகளை பகிர்ந்து கொண்டோம்.

துணவியை - ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியை என அறிமுகப் படுத்தியதும் அவர் முகத்தில் மலர்ந்த சிரிப்பும் அடைந்த மகிழ்ச்சியும் சொல்ல இயலாது.
மதுரைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் மற்றும் பல தமிழ் அறிஞர்களைப் பற்றிப் பேசினார்.

துணைவி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் பயின்றவர் என அறிமுகப் படுத்தியதும் அவர் அடைந்த மகிழ்ச்சி எழுத்தில் வடிக்க இயலாது. வெள்ளை வாரணர் உள்ளிட்ட பல தமிழ்ப் பேராசிரியர்களைப் பற்றி நினைவு கூர்ந்தார். முனைவர் வ.சுப. மாணிக்கனார் மற்றும் பல துணைவேந்தர்களைப் பற்றிப் பேசினார்.

பயின்றது தமிழ் ! பயிற்றுவித்தது தமிழ் ! என்றதும் வாழ்க வளமுடன் ! என வாழ்த்தினார். எங்களுக்கோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி !

நட்புடன் சீனா
-------------------


Monday 25 January 2010

ஒரு விழிப்புணர்வு நிகழ்வு - மதுரைப் பதிவர்கள்


அன்பின் சக பதிவர்களே !

மதுரையில் உள்ள தமிழ்ப் பதிவர்கள் ஒன்று கூடி ஒரு விழிப்புணர்வு - பொது நல நிகழ்வு ஒன்றை நிகழ்த்த விரும்பினர். அதனைச் செயலாக்க ஒரு கருததரங்கத்தைக் கூட்டி உள்ளனர்.

வளரும் தலை முறையினரை நல்வழிப் படுத்த, பெற்றோர்க்கும் ஆசிரியர்க்கும் பயனுள்ள கூட்டத்தை நடத்த இருக்கின்றனர்.

இதில் மனநல மருத்துவர் ஷாலினி அவர்கள் கலந்து கொண்டு கருத்துகளை பரிமாற உள்ளார். குழந்தைகளுக்கு நல்ல தொடுகை - அல்லாத தொடுகை - எவை என்பதை உணர்த்தும் படியாக பாதுகாவலராகிய பெற்றோர்க்கும் ஆசிரியர்க்கும் இக்கருத்தரங்கம் பயனளிக்கும்.

எனவே விருப்பமுள்ளவர்களை கலந்து கொள்ள மதுரைப் பதிவர்கள் அழைக்கின்றோம். மற்றும் நிறுவனங்களிலிருந்தும் தங்களது ஆர்வலர்களை அனுப்பலாம். இவர்கள் அனைவரும் சமூக நலம் கருதி நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற 29.01.2010 க்கு முன்னதாக விருப்பத்தினைத் தெரிவித்தால் நலமாக இருக்கும்.

அனுமதி இலவசம் !

நாள் : 31.01.2010 ஞாயிறு
காலம் : மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை
இடம் : அமெரிக்கன் கல்லூரி ( செமினார் ஹால் )
கருத்தரங்க ஆய்வர் : மன நல மருத்துவர் ஷாலினி
M.B.B.S., Ph.D., F.R.P.S.
Consultant Psychiatrist
"MIND FOCUS"
Psychiatric Services and Research Foundation

தகவலுக்கும் முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ள :

தருமி : 9952116112
சீனா : 9840624293
கார்த்திகைப் பாண்டியன் : 9842171138
ஸ்ரீ : 9360688993

நல்வாழ்த்துகள்.
நட்புடன் சீனா.
மதுரை தமிழ்ப் பதிவர்கள் .

Sunday 3 January 2010

அன்ன தான மகிமை

அன்பின் பதிவர்களே

கர்ணனைப் பற்றி பல கதைகள் கேட்டிருக்கலாம் - படித்திருக்கலாம்

இதோ ஒன்று

அன்னதான மகிமையை விளக்கும் கதை

கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட - தான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்தவன். தானத்திற்கே பெயர் பெற்றவன். தானம் என்றால் என்ன என்பதை உலகிற்குக் காட்டியவன். அவன் இறந்ததும் கண்ணனால் சுவர்க்கத்துக்கு அனுப்பப்பட்டவன்.

அங்கு சென்று சகல வசதிகளுடன் இருந்தும் அவனுக்கு ஏனோ பசி அடங்கவில்லை. எப்பொழுதும் வயிற்றுப்பசி இருந்து கொண்டே இருந்தது. அவனும் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போனான். பிறகு சுவர்க்கத்தின தலைவனிடம் சென்று கேட்டான். நான் எவ்வளவு தான தருமங்கள் செய்திருக்கிறேன் - எனக்கு ஏன் இக்கொடிய தண்டனை - எனக்கு ஏன் இப்படிப் பசிக்கிறது எனக் கேட்டான்.

தலைவனோ - கர்ணா நீ பூவுலகில் வாழ்ந்த காலத்தில் பொன்னும் பொருளும் மனியும் ஏன் உன்னுயிரும் தானமாகக் கொடுத்து பெரும் புகழ் பெற்றவன். ஆனால் சிந்தித்துச் சொல் - எப்போழுதாவது யாருக்காகவாது அன்ன தானம் செய்திருக்கிறாயா - எனக் கேட்டான்.

கர்ணனுக்கு அன்ன தான செய்ததாக நினைவு இல்லை. அன்ன தானம் செய்யாததால் தான் இப்பொழுது வயிற்றுப்பசி அடங்க வில்லை எனவும் கூறக் கேட்டான். அப்படியானால் இதற்கு என்ன தான் வழி எனக் கேட்ட போது - தலைவன் கூறினான் - உனது வலது கை ஆள் காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் - பசி அடங்கி விடும் என்றான்.

கர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. விரலைச் சப்பினால் பசி அடங்குமா - என்ன இது என ஐயப்பாடு இருந்தாலும் - வேறு வழி இல்லை என வலது கை ஆள் காட்டி விரலை வாயில் வைத்து சப்ப - பசி உடனே அடங்கிற்று.

ஒன்றும் புரியாத கர்ணன் - இது எப்படி மாய மந்திரம் எனக் கேட்க - தலைவன் கூறினான் - அன்பின் கர்ணா - நீ பூவுலகில் வாழும் போது உன்னிடம் ஒரு வறியவன் பசியுடன் வந்து எங்கு அன்னதானச் சத்திரம் இருக்கிறதென்று கேட்க - நீயும் உனது வலது கை ஆள்காட்டி விரலால் இதோ இப்பக்கம் செல்க என வழி காட்டினாய். அந்த புண்ணியச் செயல் - நற்செயல் உனக்கு இப்பொழுது உதவுகிறது எனக் கூற -கர்ணனும் அன்ன தான மகிமையை உணர்ந்தான்.

பதிவர்களே - நாமும் பிறந்த நாள் - திருமண நாள் - என்று கொண்டாடும் போதெல்லாம் - முதியோர் இல்லங்களில் வாழ்பவர்கள் - அனாதை இல்லங்களில் வாழ்பவர்கள் - வறியோர் இவர்களுக்கெல்லாம் அன்ன தானம் செய்தால் அவர்கள் பெறும் மகிழ்ச்சியானது நமக்கும் மகிழ்ச்சியினையும் புண்ணியத்தைனையும் தரும் .

வாருங்கள் அன்ன தானம் செய்வோம் - இனிய புத்தாண்டில் இச்செயலைச் செய்வோம்

அனைவருக்கும் இனிய இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்

அன்புடன் - நட்புடன் சீனா