ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Tuesday 29 January 2013

டாலர் நகரம் - நூல் வெளியீட்டு (திரு) விழா


27.01.2013 ஞாயிறன்று  திருப்பூரில் நடைபெற்ற  திருப்பூர்ப் பதிவர் நண்பர் ஜோதிஜி யின் டாலர் நகரம்நூல் வெளியீட்டு விழா - ஒரு பார்வை.

ஏறத்தாழ மூன்று மணி நேரம் நடைபெற்ற விழா. நல்ல சிந்தனையைத் தூண்டும் ஒரு பயனுள்ள நிகழ்ச்சி. புத்தகங்கள் மனித மனங்களை புத்தாக்கம் பெறச்செய்கின்றன என்பதை நேரிடையாகக் கண்டேன்.  நமக்குத் தெரிந்ததை நாம் எழுதுகின்றோம் -  இது என்ன எல்லார்க்கும் பயன் படவா போகின்றது என்ற தட்டிக் கழிக்கும் சிந்தனை இன்றி - தான் சிந்தித்ததை எல்லாம் அவ்வப்போது பதிவில் எழுதி அதை ஒரு நூல் வடிவமாக்கிய ஜோதிஜியின் முயற்சியை அனைவரும் பாராட்டினர். 

அந்நூலில் முழுவதும் திருப்பூர் நகரின் தொழில் வளர்ச்சி, அதனால் ஏற்பட்ட விளைவுகள், படைப்பாளியாகத் தன்னுடைய அனுபவம் , தொழில் முனைவராக தன் தொழில் ஈடுபாட்டு வளர்ச்சி, அத்தொழிலின் ஏற்ற இறக்கங்கள்,  அவற்றின் நன்மை தீமைகள், அவற்றைக் களைவதற்கான வழி முறைகள் ஆகியவற்றை தன் பட்டறிவால் உணர்ந்து எழுதி இருப்பதை பாராட்டுரை வழங்கிய அனைவரும் பாராட்டியதோடு, இந்நூல் முழுவதும் 100 விழுக்காடு அவற்றிற்குத் தீர்வு கூற வில்லை - 40, 45 விழுக்காடுகள் தன் அனுபவத்தால் கண்ட தீர்வுகளைக் கூறி இருப்பதும், இதனால் இது பற்றிய தொடர் சிந்தனைகள் எதிர் காலத்தில் இன்னொரு நூல் வடிவமாய்த் தொடரும் என பேச்சாளர்கள் அனைவரும் வாழ்த்தினர்.


 மேடையில் தொகுத்து வழங்கிய வெயிலான்,  நூலாசிரியர் ஜோதிஜி - பதிவர் புதுகை அப்துல்லா,   திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத் தலைவர் கே.பி.கே செல்வராஜ், திருப்பூர் தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் கே.தங்கவேல், , ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் ஞானி ஆகிய சிறப்பு விருந்தினர்கள்  நூலின் படைப்பாளையைப் பாராட்டிப் பல்வேறு பொதுக் கருத்துகளையும் எடுத்துக் கூறியது சிறப்பாய் இருந்தது. 

இடை இடையே தாய்த்தமிழ் மழலையர் பள்ளிச் சிறுமியரின் கவிதைகளும் பாடல்களும் இடம் பெற்றன. புரட்சிகரச் சிந்தனை அமைந்த அப்பாடல்கள் அச்சிறுமியரின் வயதுக்கும் அப்பாற்பட்ட முயற்சி. ஒரு சொல்லில் பாராட்டுகள் என்பதெல்லாம் அவர்களுக்குப் போதாது. வளரும் சிறுமியரின் தொடர் முயற்சி வாழ்த்தி வரவேற்க வேண்டிய ஒன்றாகும். 

தொடரட்டும் இந்நல்முயற்சி - நல்வாழ்த்துகள்.

பதிவர்களையும் வலையுலக நண்பர்களையும் கண்டு உளம் மகிழ உறவாடி மகிழ இந்நூல் வெளியீட்டு விழா துணையாக இருந்தது. படைப்பாளி மேடையில் அமர்ந்திருக்க அவரின் கரங்களைப் போன்ற நட்புகள் சுற்றிச் சுழன்று விழா சிறப்புறச் செயல்கள் புரிந்ததைக் கண்ணாறக் காண முடிந்தது. ஜோதிஜீக்கு நட்பின் துணையும் இந்நூல் வெளியிடுவதற்கு ஊன்றுகோலாய் இருந்ததும் காண முடிந்தது. 

உள்ளக் கருத்துகள் உறுதி பயக்கும் நூலாய் வெளி வரட்டும். நிகழகாலத்தை ஆவணப் படுத்தும் இந்நூல் எதிர் காலத்திற்கு ஓர் வழிகாட்டியாய் அமையும் என்பதை பாராட்டுரை வழங்கிய அனைவரது கருத்தும் வெளிப்படுத்தியது.

நல்ல நூல்களைப் படைப்போம் - உலகிற்கு நல்வழி காட்டுவோம்.

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா