ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Monday 11 February 2013

மதுரை வாசகர் வட்டம் - 8ம் ஆண்டு நிறைவு விழா

அன்பின் மதுரை வாசகர் வட்ட உறுப்பினர்களே !

நேற்று மாலை ( 10.02.2013 ) நடந்த மதுரை வாசகர் வட்டத்தின் 8ம் ஆண்டு நிறைவு விழாவில் சென்னை ராமகிருஷ்ணா மடத்தினைச் சார்ந்த சுவாமி விமூர்த்தானந்தர் சிறப்பு விருந்தினராய் ஆற்றிய சிறப்புரையின்   ஒரு பார்வை. 

தலைப்பு : STOP CHASING MONEY;START ACQUIRING WEALTH


                     பணத்தைத் துரத்தாதே ! செலவத்தைச்  சேர் - இது நம் மனத்திற்கு இடும் கட்டளை. பணமும் செல்வமும் வாழ்க்கையில் நம்மைப் பந்தாடுகின்றன. எது பணம் எது செல்வம் என்பதை அறிவதற்கே நமக்கு மனத் தெளிவு வேண்டும். செல்வம் என்பது சிந்தையின் நிறைவு. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கமுடையான் இடத்து என்ற செல்வத்தின் வரையறையை மிக இயல்பான சொற்களால் எளிமையான நடையில் கேட்பவர் மனம் கொள்ளுமாறு இனிமையாகப் பேசினார்.  சொல் நடையில் ஒரு அதிகாரமோ சொல்லாட்ட்சியில ஒரு ஆணவமோ இல்லாமல் அரிய கருத்துகளை எளிமையாய அவர் வெளிப்படுத்திய தன்மை இதுதான் துறவு என்பதை உணர்த்தியது.  அடக்கமும் அன்பும் ஆழமான அறிவும் நிறைந்த சொற்களால் அவர் நிறையக் கருத்துகளை எடுத்துரைத்தார். 

அவர் உரையின்  நோக்கம்  கேட்பவர்களைச் சென்றடைய வேண்டும் என்ற கருத்தினையேச் சுற்றிச் சுற்றி வந்தது. வாழ்க்கைக்குப் பொருள் வேண்டும் - அதனால் பொருளைத் தேடு - பொருளே வாழ்க்கை அல்ல - போதுமென்ற மனமே பொன் செய்ய்யும் மருந்து - தேவைகளை நிறைவு செய்யப் பொருளீட்டினால் அது மன நிறைவைத் தரும். அளவுக்கு மீறி ஆசைப்பட்டு பேராசையாய்ப் பொருளீட்டினால் அது பெரும் துன்பத்தைத் தந்து விடும்..  அளவான செல்வம் நிறைவான மனத்தைத் தருகிறது. அதற்கு ஒரு அழகான நிகழ்ச்சியாய் எட்டு ரூபாய் சேர்க்கிற ஒருவன் அதில் தானமும் செய்து தருமமும் செய்து எதிர் காலத்திற்கும் திட்டமிட்டு நிகழ் காலத்திலும் நிறைவோடு வாழ்கின்ற வாழ்க்கையை அவர் தெளிவாக எடுத்துரைத்தார். 

படிப்பு, பண்பு, அறிவு, பணம், புகழ், பேர், புனிதம், புண்ணியம் என்ற எட்டையும் பெறுவதே வாழ்க்கை. அதற்குப் பணம் ஒரு கருவி. அவ்வளவே.   அது அளவுக்கு மீறினால் கொம்பேற்றிக் கொள்ளும் ( “ப” பி” ஆகும் ). நம்முடைய பெயரும் படிப்பால் பண்பால் அறிவால் உயர வேண்டும். பெயரும் புகழும் பணமும் நல்வழியில் நல்லவற்றைச் செய்ய உதவ வேண்டும். 

பாம்பாட்டிகள் நிறைந்திருந்த இந்தியா இப்பொழுது எலி பிடிப்பவர்கள் நிறைந்த நாடாகி விட்டது - ( IT People use MOUSE ) என்று காலத்திற்கேற்ற நகைச் சுவையோடு வளரும் இந்தியாவை, வளர்கின்ற இந்தியாவை வெளிப்படுத்தினார். வளர்ச்சி சீராக இருக்க வேண்டும் - அது அளவிற்கு மேல் வீங்கி உடலின் வீக்கமாக மாறிவிடக் கூடாது.  செல்வம் சேர்வது அதிகமாகின்ற போது ஆணவமும் வளர்ந்து விடுகின்றது. பணம் வேண்டுமானால் சமபாதிப்பவனுடையதாக் இருக்கலாம் ஆனால் அதனைக் கொண்டு அவன் செய்கின்ற செயல் அடுத்தவர்களுக்குத் துன்பம் தராததாக இருக்க வேண்டும். அளவிற்கு மீறி ஆடம்பர ஆணவத்தோடு உணவுப் பொருட்களை வீணாக்குவது மிகப் பெரிய குற்றம். உணவென்பது உலகத்திற்குச் சொந்தமானது - பொதுவானது - அதனைத் தனி ஒரு மனிதன் வீணடிக்கக் கூடாது என்பதை உணவு விடுதிக்குச் சென்று கண்ணில் கண்டதை எல்லாம் வாங்கி உண்ணாமல் மேசையிலேயே அரைகுறையாய் வீணடிக்கின்ற செல்வச் சீமான்களீன் செயலைச் சுட்டிக் காட்டினார். 

ஈட்டுகின்ற பொருள் தமக்கும் பிறர்க்கும் இனபத்தைத் தரவேண்டும். நல்வழியில் ஈட்ட வேண்டும் - நல்லதைச் செய்ய உதவ வேண்டும். இது பொருள் தேடும் முறை. இப்படித் தேடும் பொருளே செல்வமாக மாறும். 
செல்வத்தைத் தேடும் செயலில் விடாமுயற்சி வேண்டும் என்பதற்கு விறகு வெட்டியின் கதையை விளக்கமாகக் கூறி - நீ காட்டிற்குள் செல் - இன்னும் சந்தனக் காட்டிற்குள் செல் - வெள்ளிச் சுரங்கத்தைப் பார் - இன்னும் சென்று தங்கச் சுரங்கத்தைப் பார் - இதற்கும் மேலே சென்று வைரச் சுரங்கத்தைப் பார் - என்று விடாமுயற்சியோடு செயல்படும்  மனிதனுக்கு  எழு ! விழித்தெழு ! குறிக்கோளை அடையும் வரை போராடு !  என்ற விவேகானந்தரின் வீர உரையை எடுத்துக் காட்டினார். தேடுகின்ற ஒரு பொருட்செல்வம் நமக்கு நன்மையும் வளமும் பெயரும் புகழும் நன்மக்களும் வீரமும் கொடையும் கல்வியும் பயனும் ஆகிய பிற செலவ்ங்களை எல்லாம் தந்து விடும். எனவே இத்தகையச் செல்வத்தைச் சேர்க்க வேண்டும் - பொருளைத் தேடலாம் - ஆனல் அதனைத் துரத்தும் ஆசையை அடக்க வேண்டும் என்ற நோக்கத்தை அழுத்தமாக எடுத்துரைத்தார்.  

இக்கருத்துகளை எல்லாம் கூறிய அவர் நான் ஒரு பேச்சாளன் அல்லன் - எனது நோக்கம் நான் கூறுவது கேட்பவரைச் சென்றடைய வேண்டும் என்பதே ! தொண்டரொடு கூட்டுக் கண்டாய் என்ற தொடருக்கு அடக்கத்தின் விளைநிலமாய் துறவியின் சொற்கள் அமைந்தது. உள்ளத்தைத் தொட்டது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் : செல்வி ஷங்கர் @ மெய்யமை சிதம்பரம். 

நல்வாழ்த்துகள் 
நட்புடன் சீனா @ சிதம்பரம்.