ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Tuesday, 14 December 2010

மணல் விளையாட்டு -

அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். அப்படி மணலில் காலைப் புதைத்துக் கொண்டு நடப்பது. அதுவும் கடற்கரையில் பாதங்களில் மணல் துகள்கள் ஒட்டும் படியாக நடப்பது ரொம்பவே பிடிக்கும்.

முதன் முதலில் ஐந்தாவதோ ஆறாவதோ படிக்கும் போது, அப்பா அம்மாவுடன் வந்தது, நினைவுக்கு வந்தது. கடலின் சத்தத்தையும் அலையையும் பார்த்து விட்டு, இவன் பயந்து போய் அம்மாவின் சேலைத் தலைப்புக்குள் மறைந்து கொண்டது இன்னும் நினைவிருக்கிறது. அதற்கப்புறம் பள்ளியில் கூட்டி வந்தார்கள். நண்பர்களோடு கொஞ்சம் தைரியமாய் அப்போது கால் நனைத்தான். அன்று அந்த நீர் ஏற்படுத்திய ஜில்லிப்பை விட மணற்குவியல் ஏற்படுத்திய மிதமான உஷ்ணம் அவனைக் கவர்ந்தது.
அன்றிலிருந்து எதுவென்றாலும் கடலைத் தேடி வந்து விடுவான். முதன் முதலில் கணக்குப் பரீட்சையில் மார்க் குறைந்தது என்று அப்பா பெல்டைக் கழட்டிய போதும் சரி ; பன்னிரண்டாம் வகுப்பில் கணக்கில் அதிக மார்க் வாங்கிய போதும் சரி - இங்குதான் வந்தான். அவனை விட, அவன் மனத்தை விட அந்த மணலுக்கு, அவனைப் பற்றி நன்றாகத் தெரியும். ஒவ்வொரு முறை காலை உள்ளே நுழைக்கும் போதும், தன் எண்ணத்தையும் சேர்த்து உள் வைப்பான். வெளியில் எடுக்கும் போது எல்லாவற்றையும் கொட்டி விட்ட திருப்தியில் மனம் லேசாகி இருக்கும்.

இன்றும் அப்படித்தான். எதையோ சொல்ல நினைத்துத்தான் அங்கு வந்திருந்தான். கைகளை தலைக்கு மேலே கட்டிக் கொண்டு, கால்களை நடை பயில விட்டான். மனத்தில் காட்சி பின்னோக்கிச் சென்றது.

இன்று காலையில் நடந்தது.

"அம்மா டிபன் ஃபாக்ஸ் ரெடியா ? ஆஃபீஸ் கிளம்புறேன்." - பறந்து கொண்டிருந்தான்.

அம்மா, சமையற்கட்டிலிருந்து, இவனை விட வேகமாய், டிபன் ஃபாக்ஸும் கையுமாய் ஓடி வந்தாள். " இந்தா பிடி. தயிர்சாதம். கொட்டிடாமப் பார்த்து வை" என்று சொல்லிக்கொண்டே திரும்பியவள் சட்டென்று திரும்பி " அப்பா கூப்பிடறார். ஏதோ சொல்லணூமாம் போ" என்றாள்.

பெட்டியைத் தூக்கிக் கொண்டு தன் ரூமை விட்டு வெளியே வந்தான். ஹாலில் அப்பா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

"அப்பா ! 8.20 பஸ்ஸை விட்டேன்னா நான் காலி. அந்த முசுடு மானேஜர், என்னை பிரேக் ஃபாஸ்ட் சாப்பிடாத கோபத்தில், சாண்ட் விச்சுன்னு நெனெச்சிக் கடிச்சி முழுங்கிடும். அப்புறம் உங்க ஒரே பையனை நீங்க பாதி பாதியாத்தான் சாயங்காலம் பார்க்கணும். கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்கப்பா " என்ற படி பெட்டியை அவர் பக்கத்தில் வைத்து விட்டு பக்கத்தில் அமர்ந்தான்.

அப்பா சிரித்து விட்டு, "நீயே ண்டா இனிமே பஸ்ஸிலே போய் கஷ்டப்படணும் ? உனக்கு ஒரு வண்டியே வாங்கித் தரேண்டா" என்றார்.

அப்பாவின் தட்டிலிருந்து எடுத்து வாயில் போட்ட இட்லித் துண்டு 'டபக்' என்று வெளியில் வந்தது. "அப்பா ஜோக் அடிக்காம சீக்கிரம் சொல்லுங்க. நான் ஆஃபீஸ் போகனூம் . என்ன திடீர் வண்டி ? ".

அப்போது தான் மதுவைப் பற்றிச் சொன்னார். "பொண்ணு பேரு மது. படிச்சிருக்கு, வேலை பார்க்குது.. கை நிறைய சம்பளம். நேற்றுதான் தரகர் சொன்னார். என்ன சொல்றே ? போட்டோ என் சட்டைப் பையில் இருக்கு. பார்த்துக்க ".

மெதுவாய் எழுந்து, சட்டைப் பைக்குள் கை விட்டு போட்டோவை எடுத்தான். மதுவின் பளீர் சிரிப்பில் கிளீன் போல்டாகி விட்டான். சமையற்கட்டை நோகித் திரும்பி, "அம்மா இட்லி - ரியலி சூப்பர்" என்று சங்கேத பாஷையில் சம்மதம் சொல்லி விட்டு வந்தான்.

பஸ்ஸைப் பிடித்துப் பயணம்செய்து இப்போது ஈரக் காற்றை அனுபவித்துக் கொண்டு இருக்கிறான்.

குனிந்து ஒரு பிடி மண்ணைக் கண்மூடி எடுத்தான். அதை மறு கையில் கொஞ்சம் கொஞ்சமாய்க் கொட்டத் தொடங்கினான். புத்தனுக்கு போதி மரம் போல இவனுக்கு இந்த விளையாட்டு. மனத்தில் பத்து எண்ணும் வரை அள்ளிய கையில் மணல் தங்கினால் நினைத்தது நடக்கும். இல்லை என்றால் இல்லை. இந்த விளையாட்டு இவனை என்றும் கை விட்டதில்லை. இவனும் விளையாட்டின் விதி முறைகளை இது வரை மீறியதே இல்லை. வெகு ஜாக்கிரதையாக எண்ணினான்.

காற்று படுவேகமாய், பலமாய் வீசிக் கொண்டிருந்தது.

வீட்டில் ஒரே பரபரப்பு. காலையில் அம்மாவும் அப்பாவும் இவன் எழுவதற்குள் வெளியே கிளம்பத் தயாராகி விட்டார்கள். பல் விளக்கிக் கொண்டே வந்தவன், "என்னம்மா, சீக்கிரம் கிளம்பிட்டே ? ".

" கல்யாணத்துக்குப் பொண்ணுக்குப் புடவை எடுக்க வேணும்ல. அதான் காஞ்சிபுரம் போறோம். அங்கே புடவை எல்லாம் சரியான விலையில் கிடைக்குமாம். பக்கத்து வீட்டுக் காமாட்சி சொன்னா. அவ பொண்ணுக்கு இப்பத்தானே கல்யாணம் முடிச்சா " என்றாள் அம்மா.

"ஓ ஷாப்பிங்கா ... ம்ம்ம் .. மறுமகளுக்குப் புடவை எடுக்கிற ஜோரில எனக்குப் பெட் காஃபி கட்டா ? போங்க போயி நல்ல காபி கலர்லே புடவை எடுங்க ! "

"போடா, உனக்கு எப்பவுமே விளையாட்டுதான்" - இருவரும் கிளம்பினார்கள்.

தரகர் தகவல் சொன்ன அடுத்த வாரமே . பெண் பார்த்துப் பேசி முடித்தாயிற்று. இன்னும் ஒரு மாதத்தில நல்ல நாள் இருப்பதாய்ப் பெரியவர்கள் சொல்ல, நிச்சயிக்கப்பட்டு விட்டது. அவளின் பளீர் சிரிப்பு இன்னும் நினைவில் இருந்தது.

நினைத்ததெல்லாம் நடப்பதில்லை. ஆஃபீஸில் ஏகப்பட்ட வேலை. போக முடியவில்லை. வீட்டிற்கு வரும் போது எரிச்சலாய் வந்தான். "அம்மா ! காஃபி" சமையற்கட்டில் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த பாலை விட வார்த்தையில் கொதிப்பு அதிகம். அம்மா காஃபியோடு ஒரு கவரையும் நீட்டினாள். கல்யாணப் பத்திரிகை.

"சீக்கிரம் எழுந்திருங்க ! மணி ஏழு ஆச்சு ! ஆஃபீஸுக்குப் போக வேண்டாமா " மது அவனைப் போட்டு உலுக்கினாள். சட்டென்று எழுந்தான். கொஞ்சம் நேரம் தூங்கினால் அவள் போடும் சத்தத்தில் கட்டடமே கலங்கும். அக்கம் பக்கத்து முகங்கள் எல்லாம் திரும்பிப் பார்க்கும். வேகமாய் எழுந்து பாத்ரூமை நோக்கிச் சென்றான். குளித்து விட்டு வந்ததும் காஃபி வந்தது.

அவன் பெட்காஃபி சாப்பிட்டு பத்து வருடங்கள் ஆகின்றன. மதுவுக்குப் பிடிப்பதில்லை.
"ஏங்க இன்னிக்கு இந்த காபி கலர் புடவை கட்டவா ? நல்லாயிருக்கும் " புடவையத் தோளீல் போட்டு, அழகு பார்த்துக் கொண்டே வந்து நின்றாள்.

டைனிங் ஹாலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் "ம்ம்ம் ... நல்லாருக்கு ... கட்டு" என்றான். அந்தப் புடவை அம்மா காஞ்சிபுரம் போய் எடுத்து வந்தது. புடவை மட்டுமே இங்கு இப்போது வீட்டில் இருந்தது. அமாவும் அப்பாவும் இப்பொது இல்லை. என்ன பாடு படுத்தி இருக்கிறாள் அவர்களை.

அம்மாவின் கைப்பக்குவம் ஞாபகம் வந்தது. உருளைக் கிழங்குப் பொரியல் ஊரையே தூக்கும். முதன் முதலில் மது அவர்கள் வீட்டில் சாப்பிட்டது நினைவிற்கு வந்தது.

"மது ! அம்மா சமையல் ஆளையே தூக்கும் ! அதுவும் உருளைக் கிழங்கு கேட்கவே வேண்டாம் ! அம்மா இன்னும் கொஞ்சம் அவளுக்குப் போடும்மா ! "

"இல்லம்மா ! போதும் . கிழங்கு உடம்புக்கு நல்லது இல்ல . வாய்வு. வுட்டுடுங்க.. போதும் ! " மது மறுத்தாள்.

அன்றிலிருந்து எல்லாமே மறுக்கப்பட்டது. சாப்பாட்டு விஷயத்தில் இருந்து, உடையணியும் விஷயத்தில் இருந்து., அம்மா அப்பாவை தங்களோடு வைத்துக் கொள்வது வரை. ஒரு நாள் அதுவரை புகைந்து கொண்டிருந்த விஷயம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

"ஏங்க, அண்ணா நகர்லே ஒரு ஃபிளாட். ரெண்டு ரூம். ஒரு பெட்ரூம் ஒரு கிச்சன். இருபத்து நாலு மணி நேரமும் தண்ணி வரும். என்ன சொல்றீங்க ? "

நடு ஹாலில் இருந்து கொண்டு, பூஜை அறையிலிருந்த அம்மா அப்பாவுக்குக் கேட்கும் படியாகக் கத்தினாள். ரொம்ப நாளாக இதை எதிர் பார்த்தாலும், அப்படி அவள் திடீரென்று கேட்டதும் அதிர்ந்து போய் விட்டான். சுமார் முக்கால் மணி நேரம் தனிக் குடித்தனம் போனால் தான் ஆயிற்று, தனக்கு என்று ஒரு வீடு, தனக்கு என்று சந்தோஷங்கள், தன் பிள்ளை, தன் கணவன், என்று எல்லாம் தனியாய் வேண்டும். யாரையும் சேர்த்துக் கொள்ள முடியாது என்றாள். பெற்றோருக்குத் தனியாய் மாதா மாதம் பணம் அனுப்புவதாய்ச் சொன்னாள். அப்போதுதான் புரிந்தது. அவளுக்குப் பணம் பிரச்னை இல்லை. மனிதர்களே பிரச்னை என்று. வந்த நாள் முதலே அவளுக்கு ஏனோ அவர்களைப் பிடிக்க வில்லை. அதன் விளைவுதான் அந்தச் சண்டை. இவனும் முடிந்த வரை வாதிட்டுப் பார்த்தான்.

கடைசியாக் அவள் ...."நானும் குழந்தைகளும் வேணும்னா எங்க கூட வாங்க, இல்லன்னா இருக்கவே இருக்கு கோர்ட்...." என்று சொன்ன போது, அவளை இடை மறித்து, "பளார்" என்று உலகமே அதிரும்படி ஒரு அறை விட்டான்.

அன்றோடு பிரச்னை முடிந்தது. அடுத்த ஆறு மாதத்தில் இவன் தனியானான். முதலில் அப்பா, பின் அம்மா. வருடா வருடம் அம்மாவின் திதியன்று மட்டும் மானசீகமாய் மன்னிப்புக் கேட்டுக் கொள்வான்.

அதன் பிறகு எத்தனை மாற்றங்கள். மது பிடிவாதமாய் வீட்டைக் காலி செய்து, அன்ணா நகருக்குக் குடி வந்தாள். இவனும் மனம் அப்பாவையேச் சுற்றி வரும் என்று விட்டுக்கொடுத்து விட்டான். வீடு போயிற்று. உறவு போயிற்று. எல்லாவற்றிற்கும் மேலாக ரொம்ப வருடங்கள் ஆயிற்று-அவனுள் இந்த மணற்குவியலின் உஷ்ணம் பரவி !

விட்டு விட்டான் எல்லாவற்றையும். தன் கனவுகள், தன் சந்தோஷங்கள் அத்தனையும் இபோதெல்லாம் அவன் எந்த முடிவு எடுப்பதற்கும் போதி மரத்தைத் தேடுவது இல்லை. கையில் மணல் அள்ளுவதும் இல்லை. நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விடுவான். மது தான் முடிவெடுப்பாள்.

"என்னங்க - நான் பாட்டுக்கு கரடியாய்க் கத்தறேன். நீங்க பாட்டுக்கு எங்கேயோ பாத்துக் கிட்டு இருக்கீங்க" மது அவனைக் கலைத்தாள்.

"ம்.. சாரி ஏதோ ஞாபகம். என்ன சொல்லு"

"சாய்ங்காலம் பீச்சுக்குப் போகலாங்க. ரவி ஆசைப்படறான். அவன் ஃப்ரெண்ட் போயிட்டு வந்தானாம். ஸோ, சீக்கிறம் வந்துருங்க"

ரவிக்குப் பத்து வயது. ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறான். மதுவின் ஹாண்ட்பேக்கையும் அவன் கையையும் பிடித்துக் கொண்டு ஜாலியாய் மணலில் கால் புதைத்து நடந்தான். அவனோ மகனின் கால்களையே பார்த்துக் கொண்டு வந்தான்.

கொஞ்ச தூரம் நடந்து சென்று கரைக்குச் சற்றுத் தொலைவில் அமர்ந்தார்கள்.

"வந்து ரொம்ப வுர்ஷம் ஆச்சுலைங்க. எங்கே - நேரமே இருக்க மாட்டேங்குது" மது சொல்லிக் கொண்டிருந்தாள்.

"ஆமா ரொம்ப வருஷம் ஆச்சு"

அவனுக்கு ஞாபகம் இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன் கடைசியாய் கண் மூடி மணல் அள்ளியது. நன்றாக நினைவிருக்கிறது.

திடீரென்று எண்ணும் சத்தம் அவனைக் கலைத்தது, திரும்பிப் பார்த்தான். ரவி கையில் மண் அள்ளி எண்ணிக் கொண்டிருந்தான். அவன் சட்டென்று, அணைந்து விடாமிலிருக்க விளக்கைக் காற்றிலிருந்து காப்பது போல, தன் இரு கைகளையும் மகனின் கைகளுக்கருகில்கொண்டு சென்றான்.

"சீக்கிரம் எண்ணுடா. மணல் காத்துல பறந்து கையிலேர்ந்து தீர்ந்திடப் போகுது" என்றான் பழைய ஞாபகத்தில்.
காற்று படு வேகமாய், பலமாய் வீசிக் கொண்டிருந்தது !....
....................................................................