ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Monday, 1 March 2010

ஊமை நெஞ்சங்கள் !!!!!

தமிழ் அரசி - 22.11.1992 வார இதழில் அறிமுக எழுத்தாளர் வரிசை எண் : 3ல் - எனது செல்ல மகள் - இளைய மகள் எழுதிய கதை ஒன்று பிரசுரமானது. அவ்வறிமுகத்தையும் அக்கதையையும் இங்கு பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அறிமுகம் :

சென்னை சௌகார்பேட்டையில், மூங்கிபாய் கோயங்கா பெண்கள் மேல்நிலைப்பள்ளீயில் '+2' முதலாண்டு பயிலும் செல்வி பிரியா, கடந்த 1992 மார்ச்சில் நடைபெற்ற பொதுத்தேர்வில், பள்ளியிலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றதுடன், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசுகள் பல பெற்றதும் உண்டு.

பிரியாவின் தந்தை வங்கிப் பணியாளர் - தாய் தமிழாசிரியை.

பிரியாவின் முதல் கதை "ஊமை நெஞசங்கள்" மனித மனங்களை நன்றாகப் படித்து, உணர்ந்து, தந்தையையும் மகளையும் வெகு இயல்பாகவே பேச விட்டிருக்கிறார்.

வாழ்த்துகள் !

இனி கதை :

பாரதி :

அலாரம் அடித்தது.

சே ... ! அதுக்குள்ளெ விடிஞ்சிடுச்சா ? இனிமே எழுந்து, குளிச்சு, சமைச்சு, டிபன் பாக்ஸில் கட்டி, காலேஜுக்குக் கிளம்பி ..... ?

அலாரம் கடிகாரத்தைக் கண்டு பிடித்தவன் மேல் கோபம் கோபமாய் வந்தது. வேறு வழி இல்லாமல், படுக்கையிலிருந்து எழுந்தேன்.

எதிர்ச் சுவர்ப் படத்தில் அம்மா சிரித்துக் கொண்டிருந்தாள்.

எனக்கு மட்டும் ஏம்மா சிரிப்பே வரமாட்டேங்குது ? எப்படி வரும் ? காலையிலே எழுந்தப்புறம் இந்த வீட்டுக்குள்ளே நான் பார்க்கிற ஒரே முகம் அப்பா முகம்தான். அதைப்பார்த்தாலே கோபம் பொத்துக்கிட்டு வருது. அப்புறம் எங்கேயிருந்து சிரிப்பு வரும் ? சலிப்புடன் திரும்பினேன்.

அழகிய சூரியன் மறையும் காட்சி சுவரில் ஓவியமாய்த் தொங்கியது.

சூரியன் மறைந்ததனால் கறுத்த ... சே ! எதைப் பார்த்தாலும் இந்தக் கவிதை மட்டும் தோணிருமே ....

எனக்குக் கவிதை என்றாலே பிடிப்பதில்லை. அப்பா எழுத ஆரம்பித்ததிலிருந்து ! மூன்று வருஷங்களுக்கு முன் அம்மா போன பின், எழுத ஆரம்பித்தவர்தான் ... இன்னும் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார். எழுத ஆரம்பித்தால் சகல*மும் மறந்து சோகம் அவரைச் சூழ்ந்து விடும்.

சுந்தரேசன் :

கட்டிலில் படுத்திருந்த எனக்கு மனம் ஏனோ கனத்தது. ஜானகி ! ... மனம் பூரா ஜானகி சூழ்ந்திருந்தா, கனக்காம என்ன செய்யும் ?

"சீக்கிரம் எழுந்திருங்க. நேரமாச்சு. காபி போட்டு வெச்சுருக்கேன். ஆறிடப் போவுது. " என்று எழுப்புவதிலிருந்து, "இவ்வளவு நேரம் ஆஃபீஸிலே என்ன பண்ணிட்டிருந்தீங்க ? இப்ப வந்து லைட்டப் போட்டுக்கிட்டு, கொட்டக் கொட்ட முழிச்சிக்கிட்டு ஆஃபீஸ் ஃபைலப் பாத்துக்கிட்டு இருக்கீங்களே? "என்று செல்லமாய்த் திட்டி, இரவு தூங்கும் வரை என்னைப்பற்றியே நினைத்துக்கொண்டு இருந்த அவளுக்கு,எப்படி என்னை விட்டுப் போக மனசு வந்தது ?

மூணு வருஷம் ஆச்சு ! அவள் போய் ! ஆனா எனக்குமட்டும் இன்றும் வாழ்ந்து க்கிட்டுருக்கா ! .... கவிதையாய் .... ? வேகமாய் எழுந்து பேப்பரையும் பேனாவையும் எடுத்தேன் !

பாரதி :

அப்பாவைத் தவிர்த்து ரூமை விட்டு வெளியே வந்தேன். தேதிப் படம் கிழிக்காமலிருந்தது. கிழித்தேன். எனக்குள் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது. இன்று ஞாயிற்றுக் கிழமை. காலேஜ் லீவ். இந்த மூன்று அறை வீட்டுக்குள்ளேயே , அப்பா முகத்தைப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியது தான். வாச்ற்கதவைத் திறந்து பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தேன். வரும்போது பார்த்தேன். ரூம் கதவு மூடி இருந்தது. அப்பா இன்னும் எழுந்திருக்க வில்லை போலிருக்கிறது. பாக்கெட்டையும் துடைப்பத்தையும் எடுத்துக் கொண்டு வாசலுக்குச் சென்றேன். ஒரு கோலத்தைப் போட்டு விட்டு உள்ளே வந்தேன். ரூம் கதவு திறந்திருந்தது. அப்பா சோஃபாவில் அமர்ந்திருந்தார். ஹூம். - இதுல ஒண்ணும் கொறச்சலில்ல - எழுந்த உடன் காஃபி வந்துடணும் - அதில் அவர் உடகார்ந்திருந்தார் என்றால் காஃபி வேணும்னு அர்த்தம். நானாக அர்த்தம் பண்ணிக் கொண்டதுதான் அதுவும் !

எனக்குப் பத்திக் கொண்டு வந்தது. ஒரு நாளாவது, என்னம்மா ? - காலேஜா ? - லீவு போடேன் - வெளியில போலாம் - சாப்பிட்டியா ? - ரொம்ப நேரம் கண் விழிக்காதெ ! - உடம்பு கெட்டுடும். நோட்ஸ் கேட்டியே - இந்தா - முப்பது சொன்னான் - 27க்கு வாங்கினேன் - இப்படி ஏதாவது சொல்ல மாட்டாரா ? - சரி. அதுவும் வேண்டாம். வீட்டுல ஒருத்தி இருப்பதாவது நினைவிருக்க வேண்டாமா ? பேசி மூணு வருஷம் ஆச்சு ! என்னதான் நினைச்சிக் கிட்டு இருக்காருன்னு தெரில ! இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பாத்திரணும். மனம் தவித்தது !

சுந்தரேசன் :

காஃபி வந்தது. குடித்து விட்டுக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டு சென்று விட்டாள்.

என மகள் பாரதியை நினைக்கும் போது பெருமையா இருக்கும். ஜானகி போனதிலிருந்து என்னிடம் எதையும் எதிர்பார்க்காதவள். இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்காதவள். தன் தேவைகளைத் தானே பூர்த்தி செய்து கொள்பவள்.

அவளுக்கு அதிகம் பேசினால் பிடிக்காது. எப்போதும் படித்துக் கொண்டிருப்பாள். இரவு பகலென்று பார்க்க மாட்டாள். தனக்கு வேண்டிய புத்தகங்களைக் கூட தானே வாங்கிக் கொள்வாள். என்னைத் தொந்தரவு செய்யக்கூடதென்ற நினைப்போ என்னவோ ?. நான் அவள் போக்கில் அவளை விட்டு விட்டேன். பாவம்.. தாயில்லாப் பெண். அவள் சுதந்திரத்தை ஏன் பறிக்க வேண்டும் ?.

பாரதி :

முடிவு செய்து விட்டேன். இன்றிரவு பேசித் தீர்த்துவிடுவதென்று. ந்றுக்கிக் கொண்டிருந்த கத்தரிக் காயை அப்படியே விட்டு விட்டு, அவர் எதிரில் போய் நின்றேன். கவனிக்க வில்லை "அப்பா ! ".

சுந்தரேசன் :

நிமிர்ந்த எனக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியுமாய் இருந்தது. என் மகள் என்னை "அப்பா ! " என்று மூணு வருஷத்துக்கு அப்புறமாய்க் கூப்பிடுகிறாள் . என்னம்மா ? சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்று கேட்டேன் !

பாரதி :

இவரென்ன - தன் பெண் ஊமை என்று நினைத்துக் கொண்டாரா ? ஒரு வார்த்தை பேசியதற்கே இப்படி ஆச்சரியமாய்ப் பார்க்கிறாரே !

"உங்க கிட்டே கொஞ்சம் பேசணும் அப்பா ! "

"தாரளமா ! என்னம்மா வேணும் ? "

இந்தக் கேள்வியக் கேட்க இப்பொழுதுதான் தோன்றியதா ? இவ்வளவு நாட்களாக அடக்கி வைத்திருந்ததைக் கொட்டி விட்டேன் :

"இதைக் கேட்க இப்பவாவது தோணிச்சே அப்பா ! : ஒரு நாளாவது என் கிட்டே பேசி இருப்பீங்களா ? அம்மா போய்ட்டான்னா - அவ கூட சேந்து நானுமா போய்ட்டேன் ? போனவங்களுக்கு வருத்தப் படறீங்களே - இருக்கறவங்களுக்கு கவலைப்பட்டீங்களா ? உங்க மக என்ன பெரிய ஞானின்னு மனசில நினைப்பா ? எதையுமே உங்க கிட்டே கேக்காம, பேசாம, ஊமையா எல்லாத்தயும் செஞ்சிகிட்டு இருக்க ? அப்படி இருந்தா, பைத்தியம் தான் பிடிக்கும் ! அதனாலே தான் இன்னைக்குக் கேக்கறேன் - ஏன் பேசமாட்டேங்கறீங்க ?

சுந்தரேசன் :

எனக்குத் துக்கம் தொண்டைய அடச்சிது .

பாரதி :

உங்க மனைவிய நாந்தான் அனுபிச்சுட்டேன்னு நினைக்கிறீங்களா ? நான் என்னப்பா பண்ண முடியும் ? அமமாவுக்கு ஹார்ட் அட்டாக் - போதிய வசதி இல்ல . ஆப்பரேஷனுக்கு. அதுக்காகத் தெனந்தெனம் நான் சாகனூமா ? பிளீஸ் அப்பா ! என்னச் சித்திரவத பண்ணாதீங்க ! அழுதே விட்டேன் !

சுந்தரேசன் :

காலடியிலே பூமி நழுவியது. இவ்வளவு உணர்ச்சிகளா பாரதி மனசில ! சே ... ! எப்படி அரக்கத்தனமா நடந்து கிட்டு இருந்திருக்கேன் ! எம்பொண்ணய புரிஞ்சிக்க முடியலியே என்னால..... ! எனன் அப்பா நான் ? அழுது கொண்டிருந்த மகளை ஆதரவாய் அணைத்துக் கொண்டேன்.

பாரதி ! இத்தன வருஷம் நாம ரெண்டு பேரும் நடக்கிறது என்னன்னு தெரிஞ்சிக்காம இருந்திட்டோம். சத்தியமா சொல்றேம்மா ! நான், நீ நெனெக்கிற மாதிரி இல்ல ! நீ எதயும் எதிர்பாக்காதவன்னு நெனெச்சது தப்புதான். ஆனா ஒண்ணு - இந்த ஊமை நாடகம் தொடர - இனி - நிச்சயமா நான் விட மாட்டேன். - என்ன நம்பும்மா - என்ன நம்பு !

பாரதி :

எனக்கு ஏதோ புரிந்தது - ஏதோ புரியவில்லை - ஆனால், என் அப்பா எனக்குக் கிடைத்து விட்டார் என்பது மட்டும் தெளிவாகவே புரிந்தது !

----------------------------

நட்புடன் சீனா .


Sunday, 14 February 2010

வணக்கம் ..... ! சொல்லுங்க ....... !

காலாற - மெதுவா - மகிழ்ச்சியோட நடக்கற கலையே ஒரு தனிக்கலை. ஆமாம் - மனத்திற்கு ஒரு அழகுணர்ச்சியைத் தருவது நடைப்பயிற்சிதான். தன்னை மறந்து - கைகளை வீசி - காற்றை இழுத்து - ஆழமாய் மூச்சு விட்டு - கண்கள் சுற்றுச் சூழலைப் பார்த்து - சுவையோடு நடை போடுவது ஒரு தனி இன்பம் தான். அதிலும் கூடவே துணையாக துணைவியும் நடப்பது தனி சுகம்தான்.

நம்மை விட்டுப் பிரியாமல் இருப்பது இப்போது எல்லாம் அலைபேசிதான் ! ஒன்று கையின் அணைப்பில் இருக்கும் இல்லை எனில் நெஞ்சின் அணைப்பில் இருக்கும். அலைபேசியின் அழைப்பு நடக்கும் போதும் நம்மைத் தட்டி எழுப்பும் ! பின்னால் வருவது துணையே ஆயினும், அருகில் வருவது அயலாரே ஆயினும் அதற்கு வேறுபாடு கிடையாது !

வணக்கம் ! சொல்லுங்க ..... ! என்று கணீர்க் குரல் - வந்த அலைபேசி அழைப்புக்குப் பதில் கூறும் முகமாகப் பேசிய சொற்கள். இக்குரலைக் கேட்டதும் அருகே வந்த பெரியவர் சற்றே வியப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த பார்வையைச் செலுத்தி புன்னகை பூத்தார் ! தடுமாறி நடந்த பெரியவர் சற்றே கையமர்த்தி நின்று " இப்பொழுது எல்லாம் நல்ல தமிழில் யார் பேசுகிறார்கள் ? உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ் ! உலகின் முதன்மையான 108 மொழிகளில் முதன்மையானது தமிழ் ! இக்காலத்தில அதை மறந்து விட்டனர் இத்தலைமுறையினர். எங்கே தமிழ் ? அதைக் கேட்பதே அரிதாக உள்ளது " என்றார் அப்பெரியவர்.

அவர் யார் என்பது எங்களுக்குத் தெரியாது ! நாங்கள் யார் என்பது அவருக்குத் தெரியாது ! இவ்வளவு நன்றாகத் தமிழ் பேசுகிறீர்களே ! நான் ஒரு தமிழ்க் கூட்டத்திற்குத் தான் சென்று கொண்டிருக்கிறேன் என்றார்.

அவருக்கு வயது 82 ! தள்ளாமை நடையில் தெரிந்தது ! ஆனாலும் தூயமையான வெள்ளுடையில் கையில் ஒரு பையுடன் நடந்தார் ! சற்றே உயரமான தோற்றமுடையவர்
! இப்பொழுதெல்லாம் எதுவும் நினைவில் நிற்பது இல்லை - மறந்து போய் விடுகிறது எனக்கூறி எங்கள் பெயரை இரண்டு மூன்று முறை கேட்டு நினைவு படுத்திக் கொண்டார். தன் பெயர் சண்முகக் கனி என்றார். எங்கள் அடுக்ககத்தில் புதிதாகக் குடி வந்திருப்பதாகவும் கூறினார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நேர நடைப்பயிற்சியில் தான் அவரைச் சந்தித்தோம். தமிழறிஞர்களின் மாலை நேரக் கூட்டத்திற்கு தனியே சென்று கொண்டிருந்தார். வணக்கம் , சொல்லுங்க ! என்ற அலைபேசியில் பேசிய தமிழ்ச் சொற்களுக்கே அவர் மயங்கி விட்டார்.

அங்கேயே ஒரு ஓரமாக நின்று எங்களுடன் சில மணித்துளிகளைச் செலவிட்டு உரையாடி மகிழ்ந்தார். பல தமிழறிஞர்கள் பெயரை எல்லாம் கூறி அவருக்கு உள்ள தொடர்பினைப் பகிர்ந்து கொண்டார். பேராசிரியர் சக்திவேல் என்பவரைக் குறிப்பிட்டு அவர் பேசிய போது - நான் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள நாடார் மகாஜன சங்கம் எஸ் வெள்ளைச்சாமி நாடார் கல்லுரியில் நான் படித்த காலத்தில் முதல்வராக இருந்த பேராசிரியர் சக்திவேலை நினைவு கூர்ந்தேன். அவரைத்தான் அவரும் குறிப்பிட்டதாகக் கூறி மகிழ்ந்தார். அங்கு தமிழாசிரியராக இருந்த பேராசிரியர் சொல்விளங்கும் பெருமாள் - அவரது துணைவியார் பேராசிரியை சக்தி பெருமாள் பற்றிப் பல செய்திகளை பகிர்ந்து கொண்டோம்.

துணவியை - ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியை என அறிமுகப் படுத்தியதும் அவர் முகத்தில் மலர்ந்த சிரிப்பும் அடைந்த மகிழ்ச்சியும் சொல்ல இயலாது.
மதுரைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் மற்றும் பல தமிழ் அறிஞர்களைப் பற்றிப் பேசினார்.

துணைவி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் பயின்றவர் என அறிமுகப் படுத்தியதும் அவர் அடைந்த மகிழ்ச்சி எழுத்தில் வடிக்க இயலாது. வெள்ளை வாரணர் உள்ளிட்ட பல தமிழ்ப் பேராசிரியர்களைப் பற்றி நினைவு கூர்ந்தார். முனைவர் வ.சுப. மாணிக்கனார் மற்றும் பல துணைவேந்தர்களைப் பற்றிப் பேசினார்.

பயின்றது தமிழ் ! பயிற்றுவித்தது தமிழ் ! என்றதும் வாழ்க வளமுடன் ! என வாழ்த்தினார். எங்களுக்கோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி !

நட்புடன் சீனா
-------------------


Monday, 25 January 2010

ஒரு விழிப்புணர்வு நிகழ்வு - மதுரைப் பதிவர்கள்


அன்பின் சக பதிவர்களே !

மதுரையில் உள்ள தமிழ்ப் பதிவர்கள் ஒன்று கூடி ஒரு விழிப்புணர்வு - பொது நல நிகழ்வு ஒன்றை நிகழ்த்த விரும்பினர். அதனைச் செயலாக்க ஒரு கருததரங்கத்தைக் கூட்டி உள்ளனர்.

வளரும் தலை முறையினரை நல்வழிப் படுத்த, பெற்றோர்க்கும் ஆசிரியர்க்கும் பயனுள்ள கூட்டத்தை நடத்த இருக்கின்றனர்.

இதில் மனநல மருத்துவர் ஷாலினி அவர்கள் கலந்து கொண்டு கருத்துகளை பரிமாற உள்ளார். குழந்தைகளுக்கு நல்ல தொடுகை - அல்லாத தொடுகை - எவை என்பதை உணர்த்தும் படியாக பாதுகாவலராகிய பெற்றோர்க்கும் ஆசிரியர்க்கும் இக்கருத்தரங்கம் பயனளிக்கும்.

எனவே விருப்பமுள்ளவர்களை கலந்து கொள்ள மதுரைப் பதிவர்கள் அழைக்கின்றோம். மற்றும் நிறுவனங்களிலிருந்தும் தங்களது ஆர்வலர்களை அனுப்பலாம். இவர்கள் அனைவரும் சமூக நலம் கருதி நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற 29.01.2010 க்கு முன்னதாக விருப்பத்தினைத் தெரிவித்தால் நலமாக இருக்கும்.

அனுமதி இலவசம் !

நாள் : 31.01.2010 ஞாயிறு
காலம் : மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை
இடம் : அமெரிக்கன் கல்லூரி ( செமினார் ஹால் )
கருத்தரங்க ஆய்வர் : மன நல மருத்துவர் ஷாலினி
M.B.B.S., Ph.D., F.R.P.S.
Consultant Psychiatrist
"MIND FOCUS"
Psychiatric Services and Research Foundation

தகவலுக்கும் முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ள :

தருமி : 9952116112
சீனா : 9840624293
கார்த்திகைப் பாண்டியன் : 9842171138
ஸ்ரீ : 9360688993

நல்வாழ்த்துகள்.
நட்புடன் சீனா.
மதுரை தமிழ்ப் பதிவர்கள் .