ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Sunday, 14 February 2010

வணக்கம் ..... ! சொல்லுங்க ....... !

காலாற - மெதுவா - மகிழ்ச்சியோட நடக்கற கலையே ஒரு தனிக்கலை. ஆமாம் - மனத்திற்கு ஒரு அழகுணர்ச்சியைத் தருவது நடைப்பயிற்சிதான். தன்னை மறந்து - கைகளை வீசி - காற்றை இழுத்து - ஆழமாய் மூச்சு விட்டு - கண்கள் சுற்றுச் சூழலைப் பார்த்து - சுவையோடு நடை போடுவது ஒரு தனி இன்பம் தான். அதிலும் கூடவே துணையாக துணைவியும் நடப்பது தனி சுகம்தான்.

நம்மை விட்டுப் பிரியாமல் இருப்பது இப்போது எல்லாம் அலைபேசிதான் ! ஒன்று கையின் அணைப்பில் இருக்கும் இல்லை எனில் நெஞ்சின் அணைப்பில் இருக்கும். அலைபேசியின் அழைப்பு நடக்கும் போதும் நம்மைத் தட்டி எழுப்பும் ! பின்னால் வருவது துணையே ஆயினும், அருகில் வருவது அயலாரே ஆயினும் அதற்கு வேறுபாடு கிடையாது !

வணக்கம் ! சொல்லுங்க ..... ! என்று கணீர்க் குரல் - வந்த அலைபேசி அழைப்புக்குப் பதில் கூறும் முகமாகப் பேசிய சொற்கள். இக்குரலைக் கேட்டதும் அருகே வந்த பெரியவர் சற்றே வியப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த பார்வையைச் செலுத்தி புன்னகை பூத்தார் ! தடுமாறி நடந்த பெரியவர் சற்றே கையமர்த்தி நின்று " இப்பொழுது எல்லாம் நல்ல தமிழில் யார் பேசுகிறார்கள் ? உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ் ! உலகின் முதன்மையான 108 மொழிகளில் முதன்மையானது தமிழ் ! இக்காலத்தில அதை மறந்து விட்டனர் இத்தலைமுறையினர். எங்கே தமிழ் ? அதைக் கேட்பதே அரிதாக உள்ளது " என்றார் அப்பெரியவர்.

அவர் யார் என்பது எங்களுக்குத் தெரியாது ! நாங்கள் யார் என்பது அவருக்குத் தெரியாது ! இவ்வளவு நன்றாகத் தமிழ் பேசுகிறீர்களே ! நான் ஒரு தமிழ்க் கூட்டத்திற்குத் தான் சென்று கொண்டிருக்கிறேன் என்றார்.

அவருக்கு வயது 82 ! தள்ளாமை நடையில் தெரிந்தது ! ஆனாலும் தூயமையான வெள்ளுடையில் கையில் ஒரு பையுடன் நடந்தார் ! சற்றே உயரமான தோற்றமுடையவர்
! இப்பொழுதெல்லாம் எதுவும் நினைவில் நிற்பது இல்லை - மறந்து போய் விடுகிறது எனக்கூறி எங்கள் பெயரை இரண்டு மூன்று முறை கேட்டு நினைவு படுத்திக் கொண்டார். தன் பெயர் சண்முகக் கனி என்றார். எங்கள் அடுக்ககத்தில் புதிதாகக் குடி வந்திருப்பதாகவும் கூறினார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நேர நடைப்பயிற்சியில் தான் அவரைச் சந்தித்தோம். தமிழறிஞர்களின் மாலை நேரக் கூட்டத்திற்கு தனியே சென்று கொண்டிருந்தார். வணக்கம் , சொல்லுங்க ! என்ற அலைபேசியில் பேசிய தமிழ்ச் சொற்களுக்கே அவர் மயங்கி விட்டார்.

அங்கேயே ஒரு ஓரமாக நின்று எங்களுடன் சில மணித்துளிகளைச் செலவிட்டு உரையாடி மகிழ்ந்தார். பல தமிழறிஞர்கள் பெயரை எல்லாம் கூறி அவருக்கு உள்ள தொடர்பினைப் பகிர்ந்து கொண்டார். பேராசிரியர் சக்திவேல் என்பவரைக் குறிப்பிட்டு அவர் பேசிய போது - நான் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள நாடார் மகாஜன சங்கம் எஸ் வெள்ளைச்சாமி நாடார் கல்லுரியில் நான் படித்த காலத்தில் முதல்வராக இருந்த பேராசிரியர் சக்திவேலை நினைவு கூர்ந்தேன். அவரைத்தான் அவரும் குறிப்பிட்டதாகக் கூறி மகிழ்ந்தார். அங்கு தமிழாசிரியராக இருந்த பேராசிரியர் சொல்விளங்கும் பெருமாள் - அவரது துணைவியார் பேராசிரியை சக்தி பெருமாள் பற்றிப் பல செய்திகளை பகிர்ந்து கொண்டோம்.

துணவியை - ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியை என அறிமுகப் படுத்தியதும் அவர் முகத்தில் மலர்ந்த சிரிப்பும் அடைந்த மகிழ்ச்சியும் சொல்ல இயலாது.
மதுரைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் மற்றும் பல தமிழ் அறிஞர்களைப் பற்றிப் பேசினார்.

துணைவி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் பயின்றவர் என அறிமுகப் படுத்தியதும் அவர் அடைந்த மகிழ்ச்சி எழுத்தில் வடிக்க இயலாது. வெள்ளை வாரணர் உள்ளிட்ட பல தமிழ்ப் பேராசிரியர்களைப் பற்றி நினைவு கூர்ந்தார். முனைவர் வ.சுப. மாணிக்கனார் மற்றும் பல துணைவேந்தர்களைப் பற்றிப் பேசினார்.

பயின்றது தமிழ் ! பயிற்றுவித்தது தமிழ் ! என்றதும் வாழ்க வளமுடன் ! என வாழ்த்தினார். எங்களுக்கோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி !

நட்புடன் சீனா
-------------------