ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Monday, 11 February 2013

மதுரை வாசகர் வட்டம் - 8ம் ஆண்டு நிறைவு விழா

அன்பின் மதுரை வாசகர் வட்ட உறுப்பினர்களே !

நேற்று மாலை ( 10.02.2013 ) நடந்த மதுரை வாசகர் வட்டத்தின் 8ம் ஆண்டு நிறைவு விழாவில் சென்னை ராமகிருஷ்ணா மடத்தினைச் சார்ந்த சுவாமி விமூர்த்தானந்தர் சிறப்பு விருந்தினராய் ஆற்றிய சிறப்புரையின்   ஒரு பார்வை. 

தலைப்பு : STOP CHASING MONEY;START ACQUIRING WEALTH


                     பணத்தைத் துரத்தாதே ! செலவத்தைச்  சேர் - இது நம் மனத்திற்கு இடும் கட்டளை. பணமும் செல்வமும் வாழ்க்கையில் நம்மைப் பந்தாடுகின்றன. எது பணம் எது செல்வம் என்பதை அறிவதற்கே நமக்கு மனத் தெளிவு வேண்டும். செல்வம் என்பது சிந்தையின் நிறைவு. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கமுடையான் இடத்து என்ற செல்வத்தின் வரையறையை மிக இயல்பான சொற்களால் எளிமையான நடையில் கேட்பவர் மனம் கொள்ளுமாறு இனிமையாகப் பேசினார்.  சொல் நடையில் ஒரு அதிகாரமோ சொல்லாட்ட்சியில ஒரு ஆணவமோ இல்லாமல் அரிய கருத்துகளை எளிமையாய அவர் வெளிப்படுத்திய தன்மை இதுதான் துறவு என்பதை உணர்த்தியது.  அடக்கமும் அன்பும் ஆழமான அறிவும் நிறைந்த சொற்களால் அவர் நிறையக் கருத்துகளை எடுத்துரைத்தார். 

அவர் உரையின்  நோக்கம்  கேட்பவர்களைச் சென்றடைய வேண்டும் என்ற கருத்தினையேச் சுற்றிச் சுற்றி வந்தது. வாழ்க்கைக்குப் பொருள் வேண்டும் - அதனால் பொருளைத் தேடு - பொருளே வாழ்க்கை அல்ல - போதுமென்ற மனமே பொன் செய்ய்யும் மருந்து - தேவைகளை நிறைவு செய்யப் பொருளீட்டினால் அது மன நிறைவைத் தரும். அளவுக்கு மீறி ஆசைப்பட்டு பேராசையாய்ப் பொருளீட்டினால் அது பெரும் துன்பத்தைத் தந்து விடும்..  அளவான செல்வம் நிறைவான மனத்தைத் தருகிறது. அதற்கு ஒரு அழகான நிகழ்ச்சியாய் எட்டு ரூபாய் சேர்க்கிற ஒருவன் அதில் தானமும் செய்து தருமமும் செய்து எதிர் காலத்திற்கும் திட்டமிட்டு நிகழ் காலத்திலும் நிறைவோடு வாழ்கின்ற வாழ்க்கையை அவர் தெளிவாக எடுத்துரைத்தார். 

படிப்பு, பண்பு, அறிவு, பணம், புகழ், பேர், புனிதம், புண்ணியம் என்ற எட்டையும் பெறுவதே வாழ்க்கை. அதற்குப் பணம் ஒரு கருவி. அவ்வளவே.   அது அளவுக்கு மீறினால் கொம்பேற்றிக் கொள்ளும் ( “ப” பி” ஆகும் ). நம்முடைய பெயரும் படிப்பால் பண்பால் அறிவால் உயர வேண்டும். பெயரும் புகழும் பணமும் நல்வழியில் நல்லவற்றைச் செய்ய உதவ வேண்டும். 

பாம்பாட்டிகள் நிறைந்திருந்த இந்தியா இப்பொழுது எலி பிடிப்பவர்கள் நிறைந்த நாடாகி விட்டது - ( IT People use MOUSE ) என்று காலத்திற்கேற்ற நகைச் சுவையோடு வளரும் இந்தியாவை, வளர்கின்ற இந்தியாவை வெளிப்படுத்தினார். வளர்ச்சி சீராக இருக்க வேண்டும் - அது அளவிற்கு மேல் வீங்கி உடலின் வீக்கமாக மாறிவிடக் கூடாது.  செல்வம் சேர்வது அதிகமாகின்ற போது ஆணவமும் வளர்ந்து விடுகின்றது. பணம் வேண்டுமானால் சமபாதிப்பவனுடையதாக் இருக்கலாம் ஆனால் அதனைக் கொண்டு அவன் செய்கின்ற செயல் அடுத்தவர்களுக்குத் துன்பம் தராததாக இருக்க வேண்டும். அளவிற்கு மீறி ஆடம்பர ஆணவத்தோடு உணவுப் பொருட்களை வீணாக்குவது மிகப் பெரிய குற்றம். உணவென்பது உலகத்திற்குச் சொந்தமானது - பொதுவானது - அதனைத் தனி ஒரு மனிதன் வீணடிக்கக் கூடாது என்பதை உணவு விடுதிக்குச் சென்று கண்ணில் கண்டதை எல்லாம் வாங்கி உண்ணாமல் மேசையிலேயே அரைகுறையாய் வீணடிக்கின்ற செல்வச் சீமான்களீன் செயலைச் சுட்டிக் காட்டினார். 

ஈட்டுகின்ற பொருள் தமக்கும் பிறர்க்கும் இனபத்தைத் தரவேண்டும். நல்வழியில் ஈட்ட வேண்டும் - நல்லதைச் செய்ய உதவ வேண்டும். இது பொருள் தேடும் முறை. இப்படித் தேடும் பொருளே செல்வமாக மாறும். 
செல்வத்தைத் தேடும் செயலில் விடாமுயற்சி வேண்டும் என்பதற்கு விறகு வெட்டியின் கதையை விளக்கமாகக் கூறி - நீ காட்டிற்குள் செல் - இன்னும் சந்தனக் காட்டிற்குள் செல் - வெள்ளிச் சுரங்கத்தைப் பார் - இன்னும் சென்று தங்கச் சுரங்கத்தைப் பார் - இதற்கும் மேலே சென்று வைரச் சுரங்கத்தைப் பார் - என்று விடாமுயற்சியோடு செயல்படும்  மனிதனுக்கு  எழு ! விழித்தெழு ! குறிக்கோளை அடையும் வரை போராடு !  என்ற விவேகானந்தரின் வீர உரையை எடுத்துக் காட்டினார். தேடுகின்ற ஒரு பொருட்செல்வம் நமக்கு நன்மையும் வளமும் பெயரும் புகழும் நன்மக்களும் வீரமும் கொடையும் கல்வியும் பயனும் ஆகிய பிற செலவ்ங்களை எல்லாம் தந்து விடும். எனவே இத்தகையச் செல்வத்தைச் சேர்க்க வேண்டும் - பொருளைத் தேடலாம் - ஆனல் அதனைத் துரத்தும் ஆசையை அடக்க வேண்டும் என்ற நோக்கத்தை அழுத்தமாக எடுத்துரைத்தார்.  

இக்கருத்துகளை எல்லாம் கூறிய அவர் நான் ஒரு பேச்சாளன் அல்லன் - எனது நோக்கம் நான் கூறுவது கேட்பவரைச் சென்றடைய வேண்டும் என்பதே ! தொண்டரொடு கூட்டுக் கண்டாய் என்ற தொடருக்கு அடக்கத்தின் விளைநிலமாய் துறவியின் சொற்கள் அமைந்தது. உள்ளத்தைத் தொட்டது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் : செல்வி ஷங்கர் @ மெய்யமை சிதம்பரம். 

நல்வாழ்த்துகள் 
நட்புடன் சீனா @ சிதம்பரம்.   



Tuesday, 29 January 2013

டாலர் நகரம் - நூல் வெளியீட்டு (திரு) விழா


27.01.2013 ஞாயிறன்று  திருப்பூரில் நடைபெற்ற  திருப்பூர்ப் பதிவர் நண்பர் ஜோதிஜி யின் டாலர் நகரம்நூல் வெளியீட்டு விழா - ஒரு பார்வை.

ஏறத்தாழ மூன்று மணி நேரம் நடைபெற்ற விழா. நல்ல சிந்தனையைத் தூண்டும் ஒரு பயனுள்ள நிகழ்ச்சி. புத்தகங்கள் மனித மனங்களை புத்தாக்கம் பெறச்செய்கின்றன என்பதை நேரிடையாகக் கண்டேன்.  நமக்குத் தெரிந்ததை நாம் எழுதுகின்றோம் -  இது என்ன எல்லார்க்கும் பயன் படவா போகின்றது என்ற தட்டிக் கழிக்கும் சிந்தனை இன்றி - தான் சிந்தித்ததை எல்லாம் அவ்வப்போது பதிவில் எழுதி அதை ஒரு நூல் வடிவமாக்கிய ஜோதிஜியின் முயற்சியை அனைவரும் பாராட்டினர். 

அந்நூலில் முழுவதும் திருப்பூர் நகரின் தொழில் வளர்ச்சி, அதனால் ஏற்பட்ட விளைவுகள், படைப்பாளியாகத் தன்னுடைய அனுபவம் , தொழில் முனைவராக தன் தொழில் ஈடுபாட்டு வளர்ச்சி, அத்தொழிலின் ஏற்ற இறக்கங்கள்,  அவற்றின் நன்மை தீமைகள், அவற்றைக் களைவதற்கான வழி முறைகள் ஆகியவற்றை தன் பட்டறிவால் உணர்ந்து எழுதி இருப்பதை பாராட்டுரை வழங்கிய அனைவரும் பாராட்டியதோடு, இந்நூல் முழுவதும் 100 விழுக்காடு அவற்றிற்குத் தீர்வு கூற வில்லை - 40, 45 விழுக்காடுகள் தன் அனுபவத்தால் கண்ட தீர்வுகளைக் கூறி இருப்பதும், இதனால் இது பற்றிய தொடர் சிந்தனைகள் எதிர் காலத்தில் இன்னொரு நூல் வடிவமாய்த் தொடரும் என பேச்சாளர்கள் அனைவரும் வாழ்த்தினர்.


 மேடையில் தொகுத்து வழங்கிய வெயிலான்,  நூலாசிரியர் ஜோதிஜி - பதிவர் புதுகை அப்துல்லா,   திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத் தலைவர் கே.பி.கே செல்வராஜ், திருப்பூர் தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் கே.தங்கவேல், , ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் ஞானி ஆகிய சிறப்பு விருந்தினர்கள்  நூலின் படைப்பாளையைப் பாராட்டிப் பல்வேறு பொதுக் கருத்துகளையும் எடுத்துக் கூறியது சிறப்பாய் இருந்தது. 

இடை இடையே தாய்த்தமிழ் மழலையர் பள்ளிச் சிறுமியரின் கவிதைகளும் பாடல்களும் இடம் பெற்றன. புரட்சிகரச் சிந்தனை அமைந்த அப்பாடல்கள் அச்சிறுமியரின் வயதுக்கும் அப்பாற்பட்ட முயற்சி. ஒரு சொல்லில் பாராட்டுகள் என்பதெல்லாம் அவர்களுக்குப் போதாது. வளரும் சிறுமியரின் தொடர் முயற்சி வாழ்த்தி வரவேற்க வேண்டிய ஒன்றாகும். 

தொடரட்டும் இந்நல்முயற்சி - நல்வாழ்த்துகள்.

பதிவர்களையும் வலையுலக நண்பர்களையும் கண்டு உளம் மகிழ உறவாடி மகிழ இந்நூல் வெளியீட்டு விழா துணையாக இருந்தது. படைப்பாளி மேடையில் அமர்ந்திருக்க அவரின் கரங்களைப் போன்ற நட்புகள் சுற்றிச் சுழன்று விழா சிறப்புறச் செயல்கள் புரிந்ததைக் கண்ணாறக் காண முடிந்தது. ஜோதிஜீக்கு நட்பின் துணையும் இந்நூல் வெளியிடுவதற்கு ஊன்றுகோலாய் இருந்ததும் காண முடிந்தது. 

உள்ளக் கருத்துகள் உறுதி பயக்கும் நூலாய் வெளி வரட்டும். நிகழகாலத்தை ஆவணப் படுத்தும் இந்நூல் எதிர் காலத்திற்கு ஓர் வழிகாட்டியாய் அமையும் என்பதை பாராட்டுரை வழங்கிய அனைவரது கருத்தும் வெளிப்படுத்தியது.

நல்ல நூல்களைப் படைப்போம் - உலகிற்கு நல்வழி காட்டுவோம்.

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா 

Tuesday, 22 January 2013

டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா

டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா 

அன்பின் நண்பர்களே 


வருகிற 27 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரைக்கும் திருப்பூரில் பல்லடம் சாலையில் உள்ள டிஆர்ஜி நவீன கூட்ட அரங்கில் சட்டமன்ற உறுப்பினர்,பிரபல எழுத்தாளர்கள்வலைபதிவர்கள்தொழில் அதிபர்கள்,சுற்றுப்புறச் சூழல் சார்ந்து செயல்படும் சமூக அக்கறை மிக்க ஆர்வலர்கள் மத்தியில் டாலர் நகரம் என்ற நூல் வெளியீட்டு விழா நடக்க இருப்பதால் தங்களை அன்போடு அழைக்கின்றோம்.

இந்த நூல் ஸ்விஸ் ல் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் 4 தமிழ்மீடியா குழுமத்தின் ஒரு அங்கமான 4 தமிழ்மீடியா (படைப்பாய்வகம்) மூலம் வெளிவருகின்றது.

திருப்பூரில் உள்ள தமிழ்வழிக்கல்வியை சிறப்பான செயல்பாடுகளின் மூலம் ஆச்சரியமளிக்கும் பள்ளிக் குழந்தைகளின் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. முதல் முறையாக தமிழ் இணையம்திரட்டிகள் பற்றிய முழுமையான விபரங்கள்வலைப்பதிவுகளின் வளர்ச்சிமாற்று ஊடகம் குறித்த எண்ணங்கள்திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வலைப்பதிவில் எழுதிக் கொண்டிருக்கும் அத்தனை வலைபதிவுகளைப் பற்றிய அறிமுகத்தோடுஅவர்களின் தளம் குறித்த விபரங்களை விழா சிறப்பு மலராக வெளிவர உள்ளது.

அருகில் உள்ள கோவை மற்றும் இதனைச் சார்ந்த மற்ற பகுதிகளின் நண்பர்களின் வேண்டுகோள்களை சிறப்பாக நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

திருப்பூரில் உள்ள பிரபல தொழிலதிபர் சமூக சேவகர், அமெரிக்கா பெட்னா சங்கத்தில் இருக்கும் கேபிகே செல்வா அவர்களின் அறக்கட்டளை மூலம் இந்த விழா நடத்தப்படுகின்றது.இவர் இங்குள்ள பல்வேறு சங்கத்தின் பொறுப்பாளர். கல்விக்காக பல ஆக்கபூர்வமான பணிகளை செய்து கொண்டு வருபவர்.

விழாவுக்காக தங்களின் மேலான ஒத்துழைப்பை வழங்குபவர்கள் தமிழ்ச்செடிசேர்தளம்தொழிற்களம்கனவு இதழ் பத்திரிக்கை போன்றவர்கள் மூலம் இந்த விழா நடக்க இருக்கின்றது. இந்த விழாவில் வேறு சில நிறுவனங்களும் தங்களின் மேலான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்கள்.

விழாவிற்கான அழைப்பு இணைக்கப்பட்டுள்ள்து.

அனைத்து நண்பர்களையும் விழாவில் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்க வேண்டுகிறேன். 







நண்பர்களே !  

இந்த விழாவிற்கு வருகை தர விரும்புவர்கள் நிகழ்காலத்தில் சிவா அவர்களை தொடர்பு கொள்ளவும். அவரின் அலைபேசி எண் : 97900 36233

திருப்பூரில் சந்திப்போம் நண்பர்களே ! 

நல்வாழ்த்துகள் 
நட்புடன் சீனா