ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Tuesday, 29 January 2013

டாலர் நகரம் - நூல் வெளியீட்டு (திரு) விழா


27.01.2013 ஞாயிறன்று  திருப்பூரில் நடைபெற்ற  திருப்பூர்ப் பதிவர் நண்பர் ஜோதிஜி யின் ” டாலர் நகரம்” நூல் வெளியீட்டு விழா - ஒரு பார்வை.

ஏறத்தாழ மூன்று மணி நேரம் நடைபெற்ற விழா. நல்ல சிந்தனையைத் தூண்டும் ஒரு பயனுள்ள நிகழ்ச்சி. புத்தகங்கள் மனித மனங்களை புத்தாக்கம் பெறச்செய்கின்றன என்பதை நேரிடையாகக் கண்டேன்.  நமக்குத் தெரிந்ததை நாம் எழுதுகின்றோம் -  இது என்ன எல்லார்க்கும் பயன் படவா போகின்றது என்ற தட்டிக் கழிக்கும் சிந்தனை இன்றி - தான் சிந்தித்ததை எல்லாம் அவ்வப்போது பதிவில் எழுதி அதை ஒரு நூல் வடிவமாக்கிய ஜோதிஜியின் முயற்சியை அனைவரும் பாராட்டினர். 

அந்நூலில் முழுவதும் திருப்பூர் நகரின் தொழில் வளர்ச்சி, அதனால் ஏற்பட்ட விளைவுகள், படைப்பாளியாகத் தன்னுடைய அனுபவம் , தொழில் முனைவராக தன் தொழில் ஈடுபாட்டு வளர்ச்சி, அத்தொழிலின் ஏற்ற இறக்கங்கள்,  அவற்றின் நன்மை தீமைகள், அவற்றைக் களைவதற்கான வழி முறைகள் ஆகியவற்றை தன் பட்டறிவால் உணர்ந்து எழுதி இருப்பதை பாராட்டுரை வழங்கிய அனைவரும் பாராட்டியதோடு, இந்நூல் முழுவதும் 100 விழுக்காடு அவற்றிற்குத் தீர்வு கூற வில்லை - 40, 45 விழுக்காடுகள் தன் அனுபவத்தால் கண்ட தீர்வுகளைக் கூறி இருப்பதும், இதனால் இது பற்றிய தொடர் சிந்தனைகள் எதிர் காலத்தில் இன்னொரு நூல் வடிவமாய்த் தொடரும் என பேச்சாளர்கள் அனைவரும் வாழ்த்தினர்.


 மேடையில் தொகுத்து வழங்கிய வெயிலான்,  நூலாசிரியர் ஜோதிஜி - பதிவர் புதுகை அப்துல்லா,   திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத் தலைவர் கே.பி.கே செல்வராஜ், திருப்பூர் தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் கே.தங்கவேல், , ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் ஞானி ஆகிய சிறப்பு விருந்தினர்கள்  நூலின் படைப்பாளையைப் பாராட்டிப் பல்வேறு பொதுக் கருத்துகளையும் எடுத்துக் கூறியது சிறப்பாய் இருந்தது. 

இடை இடையே தாய்த்தமிழ் மழலையர் பள்ளிச் சிறுமியரின் கவிதைகளும் பாடல்களும் இடம் பெற்றன. புரட்சிகரச் சிந்தனை அமைந்த அப்பாடல்கள் அச்சிறுமியரின் வயதுக்கும் அப்பாற்பட்ட முயற்சி. ஒரு சொல்லில் பாராட்டுகள் என்பதெல்லாம் அவர்களுக்குப் போதாது. வளரும் சிறுமியரின் தொடர் முயற்சி வாழ்த்தி வரவேற்க வேண்டிய ஒன்றாகும். 

தொடரட்டும் இந்நல்முயற்சி - நல்வாழ்த்துகள்.

பதிவர்களையும் வலையுலக நண்பர்களையும் கண்டு உளம் மகிழ உறவாடி மகிழ இந்நூல் வெளியீட்டு விழா துணையாக இருந்தது. படைப்பாளி மேடையில் அமர்ந்திருக்க அவரின் கரங்களைப் போன்ற நட்புகள் சுற்றிச் சுழன்று விழா சிறப்புறச் செயல்கள் புரிந்ததைக் கண்ணாறக் காண முடிந்தது. ஜோதிஜீக்கு நட்பின் துணையும் இந்நூல் வெளியிடுவதற்கு ஊன்றுகோலாய் இருந்ததும் காண முடிந்தது. 

உள்ளக் கருத்துகள் உறுதி பயக்கும் நூலாய் வெளி வரட்டும். நிகழகாலத்தை ஆவணப் படுத்தும் இந்நூல் எதிர் காலத்திற்கு ஓர் வழிகாட்டியாய் அமையும் என்பதை பாராட்டுரை வழங்கிய அனைவரது கருத்தும் வெளிப்படுத்தியது.

நல்ல நூல்களைப் படைப்போம் - உலகிற்கு நல்வழி காட்டுவோம்.

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா 

Tuesday, 22 January 2013

டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா

டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா 

அன்பின் நண்பர்களே 


வருகிற 27 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரைக்கும் திருப்பூரில் பல்லடம் சாலையில் உள்ள டிஆர்ஜி நவீன கூட்ட அரங்கில் சட்டமன்ற உறுப்பினர்,பிரபல எழுத்தாளர்கள், வலைபதிவர்கள், தொழில் அதிபர்கள்,சுற்றுப்புறச் சூழல் சார்ந்து செயல்படும் சமூக அக்கறை மிக்க ஆர்வலர்கள் மத்தியில் டாலர் நகரம் என்ற நூல் வெளியீட்டு விழா நடக்க இருப்பதால் தங்களை அன்போடு அழைக்கின்றோம்.

இந்த நூல் ஸ்விஸ் ல் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் 4 தமிழ்மீடியா குழுமத்தின் ஒரு அங்கமான 4 தமிழ்மீடியா (படைப்பாய்வகம்) மூலம் வெளிவருகின்றது.

திருப்பூரில் உள்ள தமிழ்வழிக்கல்வியை சிறப்பான செயல்பாடுகளின் மூலம் ஆச்சரியமளிக்கும் பள்ளிக் குழந்தைகளின் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. முதல் முறையாக தமிழ் இணையம், திரட்டிகள் பற்றிய முழுமையான விபரங்கள், வலைப்பதிவுகளின் வளர்ச்சி, மாற்று ஊடகம் குறித்த எண்ணங்கள், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வலைப்பதிவில் எழுதிக் கொண்டிருக்கும் அத்தனை வலைபதிவுகளைப் பற்றிய அறிமுகத்தோடு, அவர்களின் தளம் குறித்த விபரங்களை விழா சிறப்பு மலராக வெளிவர உள்ளது.

அருகில் உள்ள கோவை மற்றும் இதனைச் சார்ந்த மற்ற பகுதிகளின் நண்பர்களின் வேண்டுகோள்களை சிறப்பாக நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

திருப்பூரில் உள்ள பிரபல தொழிலதிபர் சமூக சேவகர், அமெரிக்கா பெட்னா சங்கத்தில் இருக்கும் கேபிகே செல்வா அவர்களின் அறக்கட்டளை மூலம் இந்த விழா நடத்தப்படுகின்றது.இவர் இங்குள்ள பல்வேறு சங்கத்தின் பொறுப்பாளர். கல்விக்காக பல ஆக்கபூர்வமான பணிகளை செய்து கொண்டு வருபவர்.

விழாவுக்காக தங்களின் மேலான ஒத்துழைப்பை வழங்குபவர்கள் தமிழ்ச்செடி, சேர்தளம், தொழிற்களம், கனவு இதழ் பத்திரிக்கை போன்றவர்கள் மூலம் இந்த விழா நடக்க இருக்கின்றது. இந்த விழாவில் வேறு சில நிறுவனங்களும் தங்களின் மேலான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்கள்.

விழாவிற்கான அழைப்பு இணைக்கப்பட்டுள்ள்து.

அனைத்து நண்பர்களையும் விழாவில் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்க வேண்டுகிறேன். 







நண்பர்களே !  

இந்த விழாவிற்கு வருகை தர விரும்புவர்கள் நிகழ்காலத்தில் சிவா அவர்களை தொடர்பு கொள்ளவும். அவரின் அலைபேசி எண் : 97900 36233

திருப்பூரில் சந்திப்போம் நண்பர்களே ! 

நல்வாழ்த்துகள் 
நட்புடன் சீனா

Wednesday, 12 December 2012

டெங்கு ஒழிப்பு - விழிப்புணர்வுக் கூட்டம் - தெருமுனைக் கூட்டம்

அன்பின் நண்பர்களே !

மதுரை மாநகரில் சந்தைப் பேட்டையில் உள்ள டாக்டர் T.திருஞானம் துவக்கப் பள்ளியைச் சார்ந்த மழலைச் செல்வங்கள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு சரவணன் அவர்களின் தலைமையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம்  தெரு முனைக் கூட்டமாக தினந்தோறும் மாலையில் நடத்துகின்றனர். அக்கூட்டத்தில் கலந்து கொண்டு மகிழ்ந்தோம். அக்கூட்டங்களைப் பற்றிய ஒரு பார்வை.



இன்னும் நம் நாட்டில் தெருமுனைக் கூட்டங்கள் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய செய்திகள் எத்தனை எத்தனையோ இருக்கின்றன. அதில் இப்பொழுது நம்மை எல்லாம் பாடாய்ப் படுத்திக் கொண்டிருப்பது டெங்குக் கொசு. அதை நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லை. என்ன செய்தாலும் அது நம்மைப் பாதித்துக் கொண்டே தான் இருக்கிறது. எப்படி இந்தப் பாதிப்பை பாலம் போட்டுத் தாண்டலாம் என பள்ளிப் பருவத்து பச்சிளம் குழந்தைகள் பால் மனம் மாறா மொழிகளில் வடித்தெடுப்பது நம் நெஞ்சத்தை எல்லாம் தொட்டுச் செல்கிறது.




ஒருஏழைக்குத் தான் தெரியும் அந்த வறுமையின் வலி. அதைப் போல் வளர்கின்ற பிஞ்சுகள் வானத்தை வில்லாய் வளைக்க வட்டமிட்டு, கை கொட்டி, கால் தட்டி, கண்கள் சுழற்றி, தம் சின்னஞ்சிறு பாதங்கள் மண்ணிலும் புழுதியிலும் பதித்து, புதிய பாடமெழுதப் பாடுகின்ற பாடல்கள் நம் பாட்டை எல்லாம் போக்கி விடும் !.

மெலிந்த உருவமும் துள்ளுகின்ற கண்களும் துடிக்கின்ற பார்வையுமாய் பாட்டெழுதிப் பாடமாய்ப் படிக்கின்ற போது சந்தத் தமிழும் துள்ளி விளையாடுகின்றது.

குப்பையைக் கொட்டாதே ! நீரினைத் தேக்காதே ! மக்கும் குப்பையைத் தனியே போட்டு வை ! மக்காக் குப்பையை ஒதுக்கி வை ! சுற்றுப் புறத்தைத் தூயமையாய் வை ! மறந்தும் மண் வளத்தைக் கெடுக்கும் குப்பைகளைக் கொட்டித் திரியாதே ! நீர் தேக்கும் தொட்டிகளை மூடி வை ! கழுவி வை ! காலத்தே அவற்றைத் தூய்மை செய் !

இவ்வாறு சின்ன்ஞ் சிறு செல்வங்கள் தெருவெல்லாம் பாடி முழக்கமிடும் அவர்களின் முனைவை என்னென்று சொல்வது ?!. எண்ணத்தால் எப்படி வடிப்பது ?!. எங்கெல்லாம் பரப்புவது ?!. ஓடி விளையாடும் பாப்பாக்கள் ஓடி ஓடி உண்மையை உரைக்கின்றனர்.! உங்களைக் காக்க, டெங்குவை ஒழிக்க கொசுக்களை ஒழிப்போம் ! சுற்றுச் சூழல் காப்போம் ! என்று சூளுரைக்கின்றனர்.

ஏழெட்டு வயதுச் சிறுவர் சிறுமியர் ஏற்றமுடன் ஆடிப் பாடி அனைவரையும் தன் வயப்படுத்துகின்றனர்.! தெருக்களில் செல்வோர் சிறிது நேரத்தில் கூடி விடுகின்றனர்.! குழந்தைகளீன் குரல் ஒசையில் ஏதோ உள்ளதென்று ஏக்கத்துடன் நின்று உன்னிப்பாய்க் கவனித்துச் செல்கின்றனர். நினைத்ததை நடத்தியே முடிக்கும் இளம் சிட்டுக்கள் டெங்கு இல்லா சுற்றுப்புறத்தை படைத்துக் காட்டுகின்றனர்.! நாமும் நயமாய்ப் பயமாய் சொல்லிப் பார்த்தால் நாடே நோயின்றி வளம் பெறுமென்று எண்ணுகின்றனர். இயங்கட்டும் இவர்களின் எண்ணங்கள். எல்லாரும் டெங்கின்றி வாழட்டும் வளமுடன் !

செல்வி ஷங்கர் ( திருமதி சீனா )