இன்று அக்டோபர் இரண்டாம் நாள். மகாத்மா காந்தி பிறந்த நாள். முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாள். கர்ம வீரர் காமராஜ் நினைவு நாள்.
மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில், மகாத்மாவின் 142வது ஜெயந்தி விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. இவ்விழாவில் சிறப்புப் பேச்சாளராக மதுரை மாவட்ட ஆட்சியர் திரு சகாயம் அவர்கள் கலந்து கொண்டு பேசிய பேச்சின் சாராம்சம்.
தெளிவான சிந்தனையுடன், அழகான தமிழ்ச் சொற்களுடன், அருமையான நிகழ்வுகளின் வர்ணனைகளுடன், மருந்துக்குக் கூட ஒரு ஆங்கிலச் சொல் கலக்காமலும், சிறந்த ஒலியுடனும், உச்சரிப்புடனும், கம்பீரமான தோற்றத்துடனும், பிரமிக்கத்தக்க நினைவாற்றலுடனும் திரு சகாயம் அவர்கள் ஆற்றிய உரை பார்வையாளர்களைப் அமைதியுடனும், அசையாமலும் இருக்கச் செய்தது.
உள்ளாட்சித் தேர்தல் பணிகள் துவங்கி, நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் அவரது பேச்சுபொதுவாக காந்திய சிந்தனைகளை முன்னிலைப்படுத்தியும், மதுரை மாவட்டத்தையும் - அங்கு அவரது செயல்களையும் பற்றியே இருந்தது.
ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த காலத்திலேயே கிராமப்புறங்களில் நிலம் தொடர்பான ஆவணங்களும், நில வரிகள் வசூலிப்பும் மாவட்ட ஆட்சியரின் அதிகாரத்தில் தான் இருந்தது. அது அப்படியே இன்றும் தொடர்கிறது. அலுவலர்கள் கிராமந்தோறும் சென்று பிரச்னைகளை அங்கேயே தீர்த்து வருவதும் நடக்கிறது.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப் பட்டதனால் - தேர்தல் தொடர்பான அலுவலர்கள் கிராமங்களிலேயே இருக்க வேண்டும் எனவும் ஏற்படும் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்கவும், தேவை எனில் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு வரவும் அறிவறுத்தப் பட்டிருக்கின்றனர்.
வாக்காளர்களுக்கு பணம், இலவச அன்பளிப்புகள், விருந்து வேட்பாளர்களின் சார்பில் வழங்கப்பட்டால், தேர்தல் ஆணையத்தின் வழி காட்டுதலின் படியும், தமிழகத் தேர்தல் ஆணையரின் அறிவுரைகளின் படியும் - தேர்தல் விதிமுறைகளின் படியும் அவை குற்றமாகக் கருதப்பட்டு- உடனடியாக குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அலுவலர்கள் அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள்.
ஒரு நேர்மையான தேர்தல் நடைபெறும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை,
"இலஞ்சம் தவிர்த்து - நெஞ்சம் நிமிர்த்து " என்ற செய்திப் பலகையினை தன் அறையில் தன் இருக்கைக்கு மேலே மாட்டி வைத்திருக்கும் இவரைப் பாராட்டச் சொற்களே இல்லை. எந்நிலையிலும் மனச் சாட்சிப்படிப் பணியாற்ற வேண்டும் என்ற வேகம் அவரது புயல் வேகப் பேச்சிலிருந்தது. அவரது எளிய தோற்றம் மற்றும் மிடுக்கான ஆற்றல் திறன் அவரை ஒரு வரலாறு படைக்கும் மனிதராக ஆக்குகிறது.
திரு சகாயம் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த போது நடந்த இரு சம்பவங்களையும் அவரது உரையில் எடுத்துரைத்தார்.
ஒரு தடவை அவர் நெடுஞ்சாலையில் அவரது வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, இரு இளைஞர்கள் அவரது வாகனத்தின் முன்பு - சாலையில் தாறுமாறாக வாகனத்தை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தனர். அதைப் பார்த்த இவர் அவர்களை நிறுத்தி - அதிகாரிகளைக் கொண்டு, வாகனம் ஓட்டும் உரிமம் அவர்களிடம் இருக்கிறதா என்றும், அவர்கள் மது அருந்தி இருக்கிறார்களா எனவும் சோதனை இடச் சொல்லி இருக்கிறார். அவர்களிடத்தில் தகுந்த உரிமம் இல்லை எனவும், அவர்கள் மது அருந்தி இருக்கிறார்கள் எனவும் அதிகாரிகள் கூற, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார்.
உடனே அவ்விரு இளைஞ்ர்களில் ஒருவன் இவரை அணுகி ஒரு நூறு ரூபாய் நோட்டினை இவரிடம் நீட்டி - சார் இனிமே பண்ண மாட்டோம் சார் இப்போ
அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க சார்னு கூறினானாம். இலஞ்சத்திற்கு எதிராகப் போராடும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கு ஒரு இளைஞன் 100 ரூபாய் இலஞ்சம் இயல்பாகக் கொடுக்க முயல்கிறான் என்றால் - நம் நாடு இலஞ்சத்தில் எவ்வளவு தூரம் புரையோடிப் போய் இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
மற்றுமொறு சம்பவத்தினையும் அழகாக எடுத்துரைத்தார்.
இவர் வழக்கமாக கிராமங்களில் குறை தீர்க்கும் நாளன்று அங்கேயே தங்கி - குறைகளைக் கேட்டறிந்து, அலசி ஆய்ந்து, தீர்வுகளும் கூறி, குறைகளை அங்கேயே தீர்க்கும் வழக்கமுடையவர். அது போல் ஒரு நாள் இரவு முழுவதும் பொது மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, தகக நடவடிகைகள் எடுத்து விட்டு, அதிகாலையில் கிராமத்தினை விட்டுப் புறப்பட்டுச் செல்லும் வழியில் ஒரு இடத்தில் ஒரு கணவன் மனைவி இருவரும் பருத்தி பறித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து - என்ன இது - ஒரு மாவட்ட ஆட்சியர் கிராமத்து மக்களின் குறைகள் தீர்க்க கிராமத்திற்கே நேரில் வந்து - தங்கி - குறைகளைத் தீர்த்து, அங்கிருந்து செல்லும் வரை இவர்கள் எதனைப் பற்றியும் கவலைப்படாமல் அவர்களது உழைப்பிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களே என வியந்து அவர்களை அழைத்து, என்ன குறை ஒன்றும் இல்லையா எனக் கேட்க, அவர்களும் ஒன்றும் இல்லை என்றும் - எங்கள் வேலைகளைச் செய்கிறோம் எனக் கூற, இவரும் கருமமே கண்ணாய் இருந்த அவர்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினார்.
கணவனோ ஆடை ஒன்றும் அணியாமல் ஒரு கோவணத்துடன் இருந்ததால் - புகைப்படம் எடுக்கத் தயங்க - இவர் வலியுறுத்தி புகைப் படம் எடுத்து - அப்படத்தினை அவரது மாவட்ட ஆட்சியர அலுவலகத்தில் = அவரது அறையின் முன்பு மாட்டி இருந்தாராம். இவர் இதுவரை எடுத்துக் கொண்ட புகைப்படங்களிலேயே - இப்படம் தான் இவரைக் கவர்ந்ததாகவும் - இவரது மனதிற்குப் பிடித்ததாகவும் இருந்ததாம்.
ஆக இவரது பேச்சும் இவரது செய்திகளும் மக்களை நன்கு சென்றடைந்தன.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா