ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Tuesday, 28 August 2007

அசை போட்டு அனுபவித்து எழுதியது - குறிப்பு 4

திலகர் திடலை அடுத்து தஞ்சையின் புகை வண்டி நிலையம் இருந்தது. அது தஞ்சை சந்திப்பு என அழைக்கப் பட்டாலும் அங்கு வந்து போகும் புகை வண்டிகளின் எண்ணிக்கை அக்காலத்தில் குறைவு தான். நான் தஞ்சையில் இருந்த வரை புகை வண்டியில் சென்றதாக நினைவு இல்லை.


நகரில் நகரப் பேருந்துகளும், ஒற்றை மாட்டு வண்டிகளும் நகர் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும். நகரில் எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கு வசதியாக இருக்கும். அம் மாட்டு வண்டியில் வைக்கோல் விரித்து அதன் மேல் ஒரு விரிப்பும் போடப்பட்டிருக்கும். எத்தனை பேர் வேண்டுமானாலும் செல்லலாம். பின் புறம் அமர்ந்து காலைத் தொங்க விட்டுக் கொண்டு பயணம் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும்.


நகரின் அரசு பொது மருத்துவ மனையின் விபத்து மற்றும் அவசரப் பிரிவு இருந்த கட்டடத்தின் பெயர் தாமஸ் ஹால். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் தஞ்சையை விட்டு செல்லும் வரை அதனை நானும் மற்றவர்கள் சொல்லிக் கொடுத்தபடி தாஜ் மகால் என்று தான் அழைத்தேன். அங்கு பல தடவை சென்ற அனுபவம் உண்டு. அடிக்கடி எங்கள் வீட்டில் யாரையாவது ஏதாவது பூச்சி அல்லது தேள் கடித்துவிடும். உடனே தாஜ் மகாலுக்குத் தூக்கிக்கொண்டு ஓடுவார்கள். அந்த மருத்துவ மனையைச் சார்ந்த மருத்துவர்களின் நட்புடன் கூடிய மருத்துவ சிகிச்சை முறை எனக்குப் பிடித்த ஒன்று. தற்கால பொது மருத்துவ மனைகளைச் சார்ந்த மருத்துவர்கள் மருத்துவம் செய்யும் முறை தற்காலச் சூழ்னிலைக்கேற்ப பல மாற்றங்களை அடைந்து விட்டது.


நகரின் பேருந்து நிலையம் நகரின் மையப் பகுதியில் இருந்தது. நகரப் பேருந்துகளும் மற்ற வெளி இடங்களுக்குச் செல்லும் பேருந்துகளும் ஒரே நிலையத்தில் தான் வந்து சென்றன. சில தடவைகள் தஞ்சையில் இருந்து மதுரைக்குப் பேருந்தில் தனியாகச் சென்றதுண்டு. மதுரையின் புகழ் வாய்ந்த பேருந்து டிவிஎஸ் தஞ்சை-மதுரைக்கு 5 மணி நேரத்தில் செல்லும். தஞ்சை - கந்தர்வகோட்டை - புதுக்கோட்டை - திருப்பத்தூர் - மேலூர் - மதுரை என அப் பேருந்து செல்லும். கந்தர்வ கோட்டையில் முந்திரிப் பருப்பு வாங்கிச் சாப்பிடவதற்கென்றே எங்கள் வீட்டில் தனியாக காசு கொடுப்பார்கள். முந்திரிப் பருப்பைத் தவிர வேறு ஒன்றும் வாங்கிச் சாப்பிட மாட்டேன்.

நகரில் காய்கறி அங்காடிகள் பழ அங்காடிகள் மற்ற அங்காடிகள் நிறைந்த பகுதியும் உண்டு. வாரம் ஒரு முறை வீட்டில் உள்ள பெரியவர்களுடன் அவ்வங்காடிகளுக்குச் சென்று தேவையானவற்றை வாங்கி வருவதுண்டு.


நகரில் திரைப்படங்கள் பார்ப்பதற்கு யாகப்பா தியேட்டர் மற்றும் ஞானம் தியேட்டர் சென்றதுண்டு. சம்பூர்ண ராமாயணம் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பரதனாக நடித்த படம். என் டி ராமாராவ் அமைதியாக அழகாக அருமையாக இராமபிரானாக நடித்த படம். பாடல்கள் நிறைந்த படம்.

அக்காலத்தில் கல்கண்டு மறைந்த தமிழ்வாணன் ஆசிரியராக இருந்து வெளியிட்ட வார இதழ். பல துணுக்குகள் நிறைந்த இதழ். மிகக் குறைவான பக்கங்கள் கொண்ட மிக மலிவான இதழ். வாரம் தவறாமல் படிப்பதுண்டு. தமிழ் வாணண் எழுதிய சங்கர்லால் என்ற துப்பறியும் நாவல் மற்றும் சில நாடகங்கள், மற்ற துப்பறியும் நாவல்கள், சிறுகதைகள் என நிறையப் படித்ததுண்டு.


துப்பறியும் நிபுனர் சங்கர்லால் மற்றும் அவரது உதவியாளர் கத்தரிக்காய் ஆகியோர் சங்கர்லாலின் மனைவியுடன் சேர்ந்து துப்பறியும் கதைகள் பல தடவைகள் படித்ததுண்டு. அக்காலத்தில் தமிழிலும் ஆசிரியர்கள் பலர் எழுதிய துப்பறியும் கதைகள் படிப்பதுண்டு. தெருவிளக்கு என்ற மர்மங்கள் நிறைந்த தொடர் கதை ஒரு வார இதழில் தொடர்ந்து படித்ததுண்டு.


வைகுண்ட ஏகாதசி மற்றும் சிவராத்திரி அன்று பரமபத சோபனம், தாயக்கட்டம், ஆடு புலி ஆட்டங்கள் ஆடி மகிழ்ந்ததுண்டு.


அக்காலத்தில் தான் ஆங்கில முறையைப் பின்பற்றி அளவு முறைகள் மாற்றப்பட்டன. அங்குலம், அடி, கஜம், பர்லாங், மைல் என்ற அளவு முறைகள் மில்லி மீட்டர், சென்டி மீட்டர், மீட்டர், கிலோ மீட்டர் என்று தசம முறைக்கு மாறி அந்த இடைப்பட்ட காலத்தில் மக்கள் பட்ட பாடு - புதிய முறைக்கு மாறுவதற்கு மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.


நாணயங்கள் பைசா அணா ரூபாய் என்பது நயா பைசா ரூபாய் என தசம முறைக்கு மாறியதும் அந்த கால கட்டம் தான். ஒரூ ரூபாய் என்பது 100 நயாபைசா என்றும் கால் ரூபாய் என்பது 25 பைசா என்றும் ஒரு அணா என்பது 6 பைசாவாகவும் மாறியது. கால் ரூபாய் எனில் 25 பைசா கொடுக்க வேண்டும். ஆனால் அதே கால் ரூபாய்க்கு நிகரான 4 அணா என்பது 24 பைசா வாகவும் ஒரு குழப்பம் நிலவியதும் அக்காலத்தில் தான். அக் காலத்தில் ஒரு பைசா இரண்டு பைசா அய்ந்து பைசா பத்து பைசா இருபத்துஅய்ந்து பைசா அய்ம்பது பைசா ஒரு ரூபாய் என நாணயங்கள் புதியதாக வந்து பழைய நாணயங்களான காலணா (அதிலும் இரண்டு வகை - ஓட்டைக்காலனா என்பது மிகப் பிரசித்தம்) அரையணா ஒரு அணா இரண்டணா நாலணா எட்டணா ஒரு ரூபாய் ஆகியனவற்றை மாற்றம் செய்தன.


தொடரும்


சீனா - 28082007

Friday, 24 August 2007

அசை போட்டு அனுபவித்து எழுதியது - குறிப்பு 3

மேல வீதியின் கோடியில், ராமகிருஷ்னா பவனுக்கு அடுத்து ஒரு பிள்ளையார் கோவிலும் உண்டு. சற்றே பெரிய கோவில் தான். எனக்கு மிகவும் பிடித்த கடவுள் பிள்ளையார் தான். காண்பதற்கு எளியவர். வணங்குவதற்கும் எளியவர். உலகின் எல்லா இடங்களிலும், அரச மரத்தடியிலும் ஆற்றங்கரையிலும் கூட அமர்ந்திருப்பவர். கோரிக்கைகளை எளிதில் நிறைவேற்றுபவர். "பிள்ளையாரே !! கவனிச்சுக்க !! " இது போதும்.

இக்கோவிலை அடுத்து புகழ் வாய்ந்த சிவகங்கைப் பூங்கா இருந்தது. பொழுது போக்குவதற்கு சிறந்த இடம். மிகப் பெரிய பூங்கா. பசுமையான இடம். பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இடம். குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் ஏற்ற இடம். அனைத்து வசதிகளும் நிறைந்த இடம். தினமும் மாலை நான்கு மணி முதல் பூங்கா காவலர் வந்து வெளியே அனுப்பும் வரை விளையாடுவோம். கூட்டம் எப்போதும் அதிகமிருக்கும். விடுமுறை தினங்களில் இன்னும் அதிகமிருக்கும்.

அப் பூங்காவில் நடை பயிலுவதற்கும், இளைஞர்கள் தங்கள் நண்பர்களுடன்(நண்பிகளுடன்) இனிய பொழுதை மகிழ்வுடன் களிப்பதற்கும் ஏற்ற இடங்கள் நிறைய இருந்தன. மலர்ச்செடிகள், அரிய தாவரங்கள், அரிய மரங்கள், சிறிய நீர்நிலைகள் என தோட்டத் துறையால் பராமரிக்கப் பட்ட அப்பூங்கா சிறந்த பூங்காக்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. ஒரு சிறிய உடற் பயிற்சி நிலையம் இருந்ததாகவும் நினைவு.

அறிவியல் நிகழ்வுகள் விளக்கமாக விவரிக்கப் பட்டிருக்கும். அறிவியல் வினா விடை விளக்கப் பலகையும் உண்டு. ஒரு சிறிய மிருகக் காட்சிச்சாலையும் இருந்தது.

அப்பூங்காவினுள் ஒரு அழகிய குளம் இருந்தது. சிவகங்கைக் குளம் என்ற பெயரில். அக்குளத்தின் நடுவினில் ஒரு சிறிய மண்டபம் இருந்தது. அம்மண்டபத்திற்கும், பூங்காவின் சற்றே உயரமான ஒரு இடத்திற்கும் விஞ்ச் எனப்படும் தொங்கு வண்டி ஓடிக் கொண்டிருந்தது. வாரம் தவறாமல் அவ்வண்டியில் சென்று மகிழ்ந்ததுண்டு. அக்குளத்தினில் எப்போதும் நீர் நிரம்ப இருக்கும்.

காவல் துறையின் தலைவராக அருள் என்ற பெருமகனார் இருந்த காலத்தில் அத்துறையின் சார்பில் உங்கள் நண்பன் என்ற ஒரு குறும் படம் தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு இலவசமாக காட்டப் பட்டது. அப் படம் காவல் துறையைப் பற்றியும், பொதுமக்கள் - காவல் துறை உறவு பற்றியும், பொதுமக்கள் - காவலர்கள் கடமை மற்றும் உரிமைகள் பற்றியும் எடுக்கப் பட்ட பொதுமக்களுக்கான ஒரு விளக்கப் படம். அக்காலத் திரைப் பட பிரபலங்கள் நடித்த படம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சந்திர பாபு மற்றும் பலர் நடித்த படம். அப்படம் ஒவ்வொரு ஞாயிறன்றும் தவறாது பூங்காவில் திரையிடப் படும். முதல் வரிசையில் மணலில் அமர்ந்து ரசித்துப் பார்த்த படம் - அனைத்து ஞாயிறுகளிலும். காவல் துறையில் சேர வேண்டும் என ஆசைப் பட வைத்த படம்.

தஞ்சையில் அரசியல் கூட்டங்கள், மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு திறந்த வெளித் திடல் நகரின் மத்தியில் திலகர் திடல் என்ற பெயரில் இருந்தது. அத்திடலில் மிகுந்த அரசியல் பொதுக் கூட்டங்கள் நடை பெறும். அக் கூட்டங்களுக்குத் தவறாமல் செல்வதுண்டு. கட்சி பேதம் பாராமல் அனைத்துக் கூட்டங்களுக்கும் செல்வதுண்டு.

நிகழ்ச்சிகள் இல்லாத நேரத்தில், சிறுவர்களும் இளைஞர்களும் விளையாடும் விளையாட்டுத் திடலும் அது தான். பட்டம் விடுவதில் போட்டா போட்டி. வித விதமான வண்ண மயமான சிறியதும் பெரியதுமான பட்டங்கள் பலப்பல வானில் பறந்து கொண்டே இருக்கும். அதற்கான நூலைத் தயாரிப்பது என்பது ஒரு பெரிய கலை. மற்ற பட்டத்தின் நூலுக்குச் சற்றேனும் குறைவில்லாமல் அந்த நூலை அறுக்கக் கூடிய வகையில் தொழில் நுட்பத்துடன் மாஞ்சா எனச் சொல்லப் பட்ட பசையுடன் நூல் தயாரிக்கப் படும். பட்டம் விடுவதில் போட்டிகளும் உண்டு - பரிசுகளும் உண்டு - நடுவர் தீர்ப்புகளும் உண்டு - தீர்ப்புகளுக்கு மேல் முறையீடுகளும் உண்டு - திருப்திஅடையாத குழுவினர் ஜன்மப் பகை பாராட்டி வம்சத்தையே திட்டித் தீர்ப்பதும் உண்டு. மறு நாள் தோளில் கை போட்டு நட்புடன் பழகுவதும் உண்டு.

மற்றும் அங்கு ஆங்கிலப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கிரிக்கெட் ஆடுவதும் உண்டு. கை கால்களில் மட்டை கட்டிக் கொண்டு, கைகளில் உறையும் அணிந்து வெள்ளை நிற உடைகளில் அரிச்சுவடி கூட தெரியாமல் கிரிக்கெட் விளையாடி பந்தா காட்டுவதுமுண்டு. அவர்களின் எதிரிகளாகக் கருதப்படும் தமிழ் படிக்கும் நண்பர்கள் கிரிக்கெட்டுக்கு எதிராக கிட்டிப் புள் விளையாடுவார்கள். கிட்டியும், புள்ளும் தயாரிக்கும் விதமே தனி. இவ் விளையாட்டிற்கு, மதிப்புப் புள்ளிகளும் நேரடி வர்ணணைகளும் கூடஉண்டு. கிட்டிப்புள் கிரிக்கெட்டிற்குச் சற்றும் சளைத்தது அல்ல என நிரூபிப்பதில் அதிக கவனம் செலுத்துவர். சண்டை கருத்து வேற்பாடு எல்லாம் திடலில் மட்டும் தான் - திடலை விட்டு வெளியேறி பூங்காவிற்குச் சென்றால் அங்கு அனைவரும் நண்பர்கள் தான்.

கிரிக்கெட் கிட்டிப்புள் தவிர சிறுவர்கள் ஆடுவது சடுகுடு மற்றும் கோலிக்குண்டு ஆட்டம். பெண்களோடு சேர்ந்து பாண்டி ஆடுவதும் உண்டு.


தொடரும்

சீனா - 24082007

Thursday, 23 August 2007

அசை போட்டு அனுபவித்து எழுதியது - குறிப்பு 2

தஞ்சைத் தரணியில் எங்கள் இல்லம் அமைந்த மேலவீதியின் ஒரு கோடியில் உள்ள சங்கர நாராயணர் கோவிலுக்கு அடுத்து ஒரு உணவகம் ராமகிருஷ்ணா பவன் என்ற பெயரில் இருந்தது. அதன் உரிமையாளர் மகாதேவ அய்யர். அவருக்கு சங்கர நாராயணன், மகாலெட்சுமி, ரமணி என மூன்று மழலைச் செல்வங்கள். அதில் கடைக்குட்டி ரமணி எனது வகுப்புத் தோழன். மற்றுமொரு வகுப்புத் தோழனான தெற்கு வீதியில் இருந்த சந்திரசேகரனோடு சேர்ந்து நாங்கள் பழகிய அந்த இனிய நாட்களை மறக்கவே முடியாது.

மேலவீதியில் எங்கள் இல்லத்திற்கு 4 இல்லம் தள்ளி தோழன் ரமணி இல்லம். அவனது இல்லத்திற்கு அடுத்து குமர கான சபா என்ற பெயரில் ஒரு அரங்கம் இருந்தது. அதில் வாரம் ஒரு நாடகம் நடக்கும். நாடகம் தவிர பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். மிகுந்த நிகழ்ச்சிகள் இலவசமாக நடைபெறும். அவற்றை எல்லாம் தவறாமல் தோழர்களோடு கண்டு மகிழ்ந்ததுண்டு. கட்டண நிகழ்ச்சிகளை தோழன் ரமணி இல்ல மொட்டை மாடியில் இருந்து அரங்கத்தின் மேற்கூரையை ஒட்டிய இடைவெளியில் பார்த்து மகிழ்ந்தது உண்டு. அப்போது கிட்டும் சிறு (பெரு?) மகிழ்ச்சியை இப்போது நினைத்தாலும் மகிழ்வாக இருக்கிறது.

அரங்கத்தினை அடுத்து தஞ்சை மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைமையகம் இருந்தது. அக்கட்டிடத்தில் ஒரு பெரிய தோட்டமும் இருந்தது. அதில் ஒரு வயதான குண்டுமணி மரமும் இருந்தது. காலையில் எழுந்து தோட்டத்தில் கொட்டிக் கிடக்கும் குண்டுமணி களைப் பொறுக்கி வீடு முழுவதும் வைத்திருந்தோம். பல்லாங்குழி விளையாடுவதற்கும் மற்றும் பல வகையில் பயன்படுத்துவோம். எனது தங்கை இரு குண்டுமணிகளை இரு மூக்கிலும் அடைத்துக்கொண்டு, மறு நாள் அவை பழுத்து மூச்சு விட முடியாமல் திணறி, வங்கிக்கு எதிரில் இருந்த குடும்ப மருத்துவரிடம் சென்று அவைகளை சிரமப்பட்டு எடுத்தது நினைவில் இருக்கிறது. அம்மருத்துவர் புற்று நோயால் மரணம் அடைந்ததும் வருத்தமடைய வைக்கிறது.

நாங்கள் தாயார் வழித் தாத்தா, பாட்டி, தாய், தந்தை, இருஅண்ணன்கள், இரு தங்கைகள், மற்றும் இரு தம்பிகளுடன்கூட்டுக் குடும்பமாக இருந்தோம். கூட்டுக்குடும்பம் தற்காலத்தில் இயலாது. இல்லம் முழுவதும் எங்கள் வயலில் இருந்து வந்த நெல் மூட்டைகளும், தேங்காய்களும், புளியம்பழங்களும் நிறைந்திருக்கும். நெல் மூட்டைகளை அவிழ்த்து குதிரில் கொட்டிவைப்பார்கள். பிறகு குதிரின் கீழே உள்ள சிறு கதவு வழியாக எடுத்து பெரிய பெரிய அடுப்பில் உள்ள பெரிய பெரியஅண்டாவில் அவிப்பார்கள். அவித்த நெல்லை நடை முழுவதும் பரத்தி காயப் போடுவார்கள். அவித்த நெல்லின் மணம் நம்மைச் சுற்றி சுற்றி வரும். புளியம்பழங்களை உடைத்து புளியங் கொட்டைகளை மலை போல குவித்து வைப்போம். யார் எத்தனை கொட்டைகள் எடுத்தோம் என்பதில் போட்டா போட்டி போடுவோம்.

தோட்டத்தில் இரு அழகான பசுக்களும் - அவற்றின் இரு கன்றுகளும் இருக்கும். அவைகளுடன் விளையாடி மகிழ்ந்த காலம் பசுமையாக நினைவில் நிற்கிறது. பசுக்கள் கன்றுகள் ஈனும் போது கதறும் கதறல்கள் மனதை வருத்தும். அவ்வருத்தத்தை மறந்து சீம்பால் குடிக்கப் போட்டி போடுவோம். தோட்டத்தில் ஒரு பெரிய கிணறு உண்டு. அது வற்றிப் பார்த்ததே இல்லை. அதில் நீர் இறைத்து குளிக்கும் சுகமே சுகம். அவ்வப்போது வாளி உள்ளே விழுந்து விடும். அக்கம் பக்கம் சென்று செம்பை அடகு வைத்து பாதள கரண்டி வாங்கி வந்து வாளி வெளியே எடுக்கும் வைபவம் அடிக்கடி நடக்கும்.

இல்லத்தின் நடுவினில் ஒரு பெரிய திறந்த வெளி முற்றம் ஒன்றுஇருக்கும். அதன் நாலு மூலைகளிலும் மழைத் தண்ணீர் பிடிப்பதற்கு பெரிய அண்டாக்கள் இருக்கும். சில அறைகளை அடுத்து சமையலறை இருக்கும். அங்கு எப்போது போனாலும் உண்ணுவதற்கு ஏதேனும் இருந்து கொண்டே இருக்கும். குடிப்பதற்கு எப்போதும் மோர் உண்டு.

பழைய இனிய நினைவுகளை அசை போடுவதில் உள்ள இன்பம் வேறு எதிலும் கிடைக்காது.

தொடரும்

சீனா - 23082007

Wednesday, 22 August 2007

அசை போட்டு அனுபவித்து எழுதியது - குறிப்பு 1

ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பதாம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 16ம்நாள் (அலுவலக குறிப்புகளின் படி) புகழ் வாய்ந்த தஞ்சை மாவட்டத்தின் தலைநகராம் தஞ்சைத் தரணியின் முக்கிய வீதியான மேல வீதியில் உள்ளதிருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த நாங்குனேரியில் உள்ள வானமாமலை மடத்துக்குச் சொந்தமான ஒரு சிறு வீட்டில் அடியேன் இம்மண்ணில்அவதரித்தேன்.

அங்கு அறுபத்து மூன்றாம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் வரை ஒடி விளையாடி படித்து பின்னர் மதுரைக்குச் சென்றேன். அங்கு தஞ்சையில் எங்கள்வீட்டிற்க்கு இரண்டாம் இடத்தில் புகழ் வாய்ந்த காஞ்சி சங்கரமடம் இருந்தது. அம்மடத்தில் காலை மாலை வேத பாராயண வகுப்புகள் நடக்கும் - சிறு வயதில் - 10 வயது வரை என நினைக்கிறேன் - அவ்வகுப்பில் அனைத்துநண்பர்களும் படித்த காரணத்தால் - வகுப்பிற்கு வெளியே விளையாண்டு கொண்டிருப்பேன். காதில் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர என மந்திரங்கள் தொடங்கி அனைத்து பாராயணங்களும் காதில் விழும்.நண்பர்கள் உரத்த குரலில் முழு ஈடுபாட்டுடன் கூறும் வேதச் சொற்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.


காஞ்சி மடாதிபதி பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சுவாமிகள் பட்டணப் பிரவேசம் அடிக்கடி செய்வார்கள். பசு, ஒட்டகம், குதிரை, யானை என மிகஅதிக எண்ணிக்கையில் பின் தொடரும் பிராணிகளும் - முன்னே பாராயணங்களுடனும் இசையுடனும் வேத விற்பன்னர்களும் மற்றவர்களும் அணிவகுக்க நடுவினிலே பல்லக்கிலே சுவாமிகள் வருவது காணக் கண் கோடி வேண்டும்.


தற்போதைய மடாதிபதி பட்டத்திற்கு வந்த உடன் இங்கு பெரியவருடன்பட்டணப் பிரவேசம் செய்த காட்சியும் நினைவுக்கு வருகிறது. ஸ்ரீ ராம ஜயம்எனும் அரிய மந்திரத்தை 1008 தடவைகள் எழுதி சமர்ப்பித்து பெரியவரிடம் ஆசி பெற்றதும் உண்டு. ஒரு ஆரஞ்சு அல்லது சாத்துக்குடி மற்றும் ஒரு துளசி மாலை பரிசாக பெற்றதுமுண்டு. பெரியவரின் படம் எங்கள் பூஜை அறையில் நிரந்தரமாக இருக்கும்.


பெரியவர் செய்யும் சந்திர மொளீஸ்வரர் பூஜை மிகப் பெரிய அளவில் 15 தினங்களுக்கு அதி விமரிசையாக நடக்கும் - அனைத்து நாட்களிலும் முடிந்தவரை கலந்து கொண்டது உண்டு. அப்போது அங்கு காவலுக்கு வரும் காவல் துறையைச் சார்ந்த காவலர்களிடம் நட்பு கொண்டு அவர்களுக்கு வேண்டிய சிறு சிறு உதவிகள் செய்து மடத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லும் உரிமை பெற்றதும் உண்டு. 15/30 தினத் திருவிழா கொண்டாடும் மட்டற்ற மகிழ்ச்சி இன்று யாருக்கும் கிடைக்காது.

ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு முறை இம்மகிழ்ச்சி கிட்டும். மற்ற நாட்களில் மடத்திற்கு ஒருவரும் வர மாட்டார்கள். மடத்துக் செயலாளர் எங்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் தான் குடி இருந்தார். மடத்துக்கும் எங்கள் வீட்டிற்கும் நடுவில் அவரது வீடு.

மடத்தின் முன் கதவுகள் மற்ற நாட்களில் அடைத்திருக்கும். அவரது வீட்டின் உட்புறமாகச் சென்று தோட்டத்தின் வழியாக சென்று மடத்தின் பெரிய -உண்மையிலேயே மிகப் பெரிய - இடங்கள் முழுவதும் நானும் என்நண்பர்களும் ஓடி விளையாடி மகிழ்ந்த காலங்கள் இன்னும் பசுமையாகநினைவிலே நிற்கின்றன.

பல ஆண்டுகளுக்கு அம்மந்திரங்கள் மனதில் இருந்து அகலவில்லை - காலப்போக்கிலே பல்வேறு காரணங்களினால் - பல்வேறு சூழ் நிலைகளினால் தற்போது சுத்தமாக நினைவில் இல்லை - பெரியவர்களிடம் அபிவாதெயே கூறி ஆசி பெற்றதெல்லாம் நினைவில் இன்னும் நிற்கின்றன.
தஞ்சையில் மேல வீதியில் வீட்டிற்கு எதிரே கணேஷ் பவன் - அய்யர் கடை - சிற்றுண்டிச் சாலை - நல்ல நட்பு - அக்காலத்தில் அய்யர் என்பது மிக மரியாதையான சொல் -கல்லாவில் அமர்வது முதல் சமையல் கட்டு வரைசெல்லும் உரிமை பெற்றவன் நான்.

மேல வீதியின் ஒரு கோடியில் சங்கரநாராயணர் கோவில் - அரணும் அரியும் ஒன்றாகக் காட்சி அளிக்கும்கோவில் - மற்ற கோடியில் காமாட்சி அம்மன் கோவில். ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் - கோவிலுக்குச் செல்லாத நாளே கிடையாது. தற்போது கோவிலுக்குச் செல்லும் நாளே கிடையாது - ஆண்டின் சில முக்கியதினங்கள் தவிர.

தஞ்சையில் ஆண்டு முழுவதும் திருவிழா தான். கொண்டாட்டம் தான்.முக்கியத் திருவிழாக்கள் -தேர்த்திருவிழா - பல்லக்கு - திருவையாரின் முத்துப்பல்லக்கு பிரசித்தம் - தஞ்சைத் தெருக்களிலே சிறுவர்களின் சப்பரங்கள் புடை சூழ அசைந்து அசைந்து அது வரும் அழகே அழகு - மற்றும் பச்சைக் காளி பவளக்காளி திருவிழா - பசுமையான நினைவுகள் - அசை போட ஆனந்தம்.

நவராத்திரி ஒன்பது தினமும் பல்வேறு வீடுகளுக்கு நண்பர் படை சூழ சென்று பல்வேறு வகையான கொலுவினைக் கண்டு களித்து அவர்கள் தரும் தின்பண்டங்களுக்காவே சென்று - அக்காலம் பொற்காலம் - எவ்வளவு பொம்மைகள் - எவ்வளவு விதமான கொலுக்கள் - தெற்கு வீதியில் உள்ள ஒரு பெரிய வீட்டில் தத்ரூபமாக பெரிய அளவில் சரித்திர நிகழ்வுகள்உயிரோட்டத்துடன் சித்தரிக்கப் பட்டிருக்கும். இலண்டன் மாநகர மெழுகு -(Madame Tussot) - கண்காட்சிப் பொம்மைகள் எல்லாம் பிச்சை வாங்க வேண்டும் - அப்போதிருந்த வசதிக்கேற்ப நிஜ மனிதர்களைப் போலவே தேசிங்கு ராஜன் - செஞ்சிக்கோட்டை - மாவீரன் சிவாஜி - ப்ரித்வி ராஜன் சம்யுக்தையைக் கவர்ந்து செல்லும் காட்சி - தத்ரூபமாகச் சித்தரிக்கப் பட்டிருக்கும். அக்குதிரையின் முகத்தில் கண்களில் உள்ள கோபம் வீரம் - ராஜனின் பலவேறு உணர்ச்சிகள் - சம்யுக்தையின் பயங்கலந்த மகிழ்ச்சி-காணக் கண் கோடி வேண்டும் - அம்மகிழ்ச்சி தற்போதைய சிறுவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.


தொடரும்

சீனா - 22082007