ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Friday 24 August 2007

அசை போட்டு அனுபவித்து எழுதியது - குறிப்பு 3

மேல வீதியின் கோடியில், ராமகிருஷ்னா பவனுக்கு அடுத்து ஒரு பிள்ளையார் கோவிலும் உண்டு. சற்றே பெரிய கோவில் தான். எனக்கு மிகவும் பிடித்த கடவுள் பிள்ளையார் தான். காண்பதற்கு எளியவர். வணங்குவதற்கும் எளியவர். உலகின் எல்லா இடங்களிலும், அரச மரத்தடியிலும் ஆற்றங்கரையிலும் கூட அமர்ந்திருப்பவர். கோரிக்கைகளை எளிதில் நிறைவேற்றுபவர். "பிள்ளையாரே !! கவனிச்சுக்க !! " இது போதும்.

இக்கோவிலை அடுத்து புகழ் வாய்ந்த சிவகங்கைப் பூங்கா இருந்தது. பொழுது போக்குவதற்கு சிறந்த இடம். மிகப் பெரிய பூங்கா. பசுமையான இடம். பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இடம். குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் ஏற்ற இடம். அனைத்து வசதிகளும் நிறைந்த இடம். தினமும் மாலை நான்கு மணி முதல் பூங்கா காவலர் வந்து வெளியே அனுப்பும் வரை விளையாடுவோம். கூட்டம் எப்போதும் அதிகமிருக்கும். விடுமுறை தினங்களில் இன்னும் அதிகமிருக்கும்.

அப் பூங்காவில் நடை பயிலுவதற்கும், இளைஞர்கள் தங்கள் நண்பர்களுடன்(நண்பிகளுடன்) இனிய பொழுதை மகிழ்வுடன் களிப்பதற்கும் ஏற்ற இடங்கள் நிறைய இருந்தன. மலர்ச்செடிகள், அரிய தாவரங்கள், அரிய மரங்கள், சிறிய நீர்நிலைகள் என தோட்டத் துறையால் பராமரிக்கப் பட்ட அப்பூங்கா சிறந்த பூங்காக்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. ஒரு சிறிய உடற் பயிற்சி நிலையம் இருந்ததாகவும் நினைவு.

அறிவியல் நிகழ்வுகள் விளக்கமாக விவரிக்கப் பட்டிருக்கும். அறிவியல் வினா விடை விளக்கப் பலகையும் உண்டு. ஒரு சிறிய மிருகக் காட்சிச்சாலையும் இருந்தது.

அப்பூங்காவினுள் ஒரு அழகிய குளம் இருந்தது. சிவகங்கைக் குளம் என்ற பெயரில். அக்குளத்தின் நடுவினில் ஒரு சிறிய மண்டபம் இருந்தது. அம்மண்டபத்திற்கும், பூங்காவின் சற்றே உயரமான ஒரு இடத்திற்கும் விஞ்ச் எனப்படும் தொங்கு வண்டி ஓடிக் கொண்டிருந்தது. வாரம் தவறாமல் அவ்வண்டியில் சென்று மகிழ்ந்ததுண்டு. அக்குளத்தினில் எப்போதும் நீர் நிரம்ப இருக்கும்.

காவல் துறையின் தலைவராக அருள் என்ற பெருமகனார் இருந்த காலத்தில் அத்துறையின் சார்பில் உங்கள் நண்பன் என்ற ஒரு குறும் படம் தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு இலவசமாக காட்டப் பட்டது. அப் படம் காவல் துறையைப் பற்றியும், பொதுமக்கள் - காவல் துறை உறவு பற்றியும், பொதுமக்கள் - காவலர்கள் கடமை மற்றும் உரிமைகள் பற்றியும் எடுக்கப் பட்ட பொதுமக்களுக்கான ஒரு விளக்கப் படம். அக்காலத் திரைப் பட பிரபலங்கள் நடித்த படம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சந்திர பாபு மற்றும் பலர் நடித்த படம். அப்படம் ஒவ்வொரு ஞாயிறன்றும் தவறாது பூங்காவில் திரையிடப் படும். முதல் வரிசையில் மணலில் அமர்ந்து ரசித்துப் பார்த்த படம் - அனைத்து ஞாயிறுகளிலும். காவல் துறையில் சேர வேண்டும் என ஆசைப் பட வைத்த படம்.

தஞ்சையில் அரசியல் கூட்டங்கள், மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு திறந்த வெளித் திடல் நகரின் மத்தியில் திலகர் திடல் என்ற பெயரில் இருந்தது. அத்திடலில் மிகுந்த அரசியல் பொதுக் கூட்டங்கள் நடை பெறும். அக் கூட்டங்களுக்குத் தவறாமல் செல்வதுண்டு. கட்சி பேதம் பாராமல் அனைத்துக் கூட்டங்களுக்கும் செல்வதுண்டு.

நிகழ்ச்சிகள் இல்லாத நேரத்தில், சிறுவர்களும் இளைஞர்களும் விளையாடும் விளையாட்டுத் திடலும் அது தான். பட்டம் விடுவதில் போட்டா போட்டி. வித விதமான வண்ண மயமான சிறியதும் பெரியதுமான பட்டங்கள் பலப்பல வானில் பறந்து கொண்டே இருக்கும். அதற்கான நூலைத் தயாரிப்பது என்பது ஒரு பெரிய கலை. மற்ற பட்டத்தின் நூலுக்குச் சற்றேனும் குறைவில்லாமல் அந்த நூலை அறுக்கக் கூடிய வகையில் தொழில் நுட்பத்துடன் மாஞ்சா எனச் சொல்லப் பட்ட பசையுடன் நூல் தயாரிக்கப் படும். பட்டம் விடுவதில் போட்டிகளும் உண்டு - பரிசுகளும் உண்டு - நடுவர் தீர்ப்புகளும் உண்டு - தீர்ப்புகளுக்கு மேல் முறையீடுகளும் உண்டு - திருப்திஅடையாத குழுவினர் ஜன்மப் பகை பாராட்டி வம்சத்தையே திட்டித் தீர்ப்பதும் உண்டு. மறு நாள் தோளில் கை போட்டு நட்புடன் பழகுவதும் உண்டு.

மற்றும் அங்கு ஆங்கிலப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கிரிக்கெட் ஆடுவதும் உண்டு. கை கால்களில் மட்டை கட்டிக் கொண்டு, கைகளில் உறையும் அணிந்து வெள்ளை நிற உடைகளில் அரிச்சுவடி கூட தெரியாமல் கிரிக்கெட் விளையாடி பந்தா காட்டுவதுமுண்டு. அவர்களின் எதிரிகளாகக் கருதப்படும் தமிழ் படிக்கும் நண்பர்கள் கிரிக்கெட்டுக்கு எதிராக கிட்டிப் புள் விளையாடுவார்கள். கிட்டியும், புள்ளும் தயாரிக்கும் விதமே தனி. இவ் விளையாட்டிற்கு, மதிப்புப் புள்ளிகளும் நேரடி வர்ணணைகளும் கூடஉண்டு. கிட்டிப்புள் கிரிக்கெட்டிற்குச் சற்றும் சளைத்தது அல்ல என நிரூபிப்பதில் அதிக கவனம் செலுத்துவர். சண்டை கருத்து வேற்பாடு எல்லாம் திடலில் மட்டும் தான் - திடலை விட்டு வெளியேறி பூங்காவிற்குச் சென்றால் அங்கு அனைவரும் நண்பர்கள் தான்.

கிரிக்கெட் கிட்டிப்புள் தவிர சிறுவர்கள் ஆடுவது சடுகுடு மற்றும் கோலிக்குண்டு ஆட்டம். பெண்களோடு சேர்ந்து பாண்டி ஆடுவதும் உண்டு.


தொடரும்

சீனா - 24082007

21 comments:

Unknown said...

Dear Appa,

Happy to know ur childhood days.Its funny to know even u have played on streets and ran around parks, which i have been told not to(or to be careful), when u were small.

Havent see thru u like this, heard about u like this thru ur words.

Happy to read.Will make my kiddo read,once he starts reading tamil.

-Love
CP

தருமி said...

ஆஹா! 'உங்கள் நண்பன்' பார்த்த இன்னொருவரைப் பார்ப்பது எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறது!

பள்ளியில் பார்த்தது. ஆனால் அதில் சொன்ன விஷயங்கள் - சாலையின் எப்பக்கம் நடக்க வேண்டும்; எப்படி கடக்க வேண்டும்- என்பதெல்லாம் எப்படி பசு மரத்தாணியாகப் பதிந்து விட்டன? ஒருவேளை அப்போது திரைப்படம் பார்ப்பதே ஒரு அனுபவமாக இருந்ததாலா? தெரியவில்லை.
ஆனால் இப்போது அது போன்ற படங்களை நம் குழந்தைகளுக்கு ஏன் காண்பிப்பதில்லை?

நம் பிள்ளைகளுக்கு நம் இளவயது வாழ்க்கையைத் தெரிந்து கொள்வதில் உள்ள ஆர்வமும், தெரிந்தபின் வரும் ஆச்சரியமும் ஒரு universal விஷயம்தான் போலும்.

cheena (சீனா) said...

நம் பிள்ளைகளுக்கு நமது இளமைப்
பருவத்தினை அறிமுகப் படுத்தி ஆச்சரியத்தில் ஆழ்த்துவது நம் கடமை அல்லவா ?? உலகில் எல்லாப் பிள்ளைகளும் ஒரே மாதிரிதான்

குமரன் (Kumaran) said...

நானும் வியப்போடு தான் உங்கள் மலரும் நினைவுகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

cheena (சீனா) said...

குமரன் (Kumaran) said...

//நானும் வியப்போடு தான் உங்கள் மலரும் நினைவுகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.//

நன்றி குமரா !! எல்லோருக்குமே இளமைக்கால மலரும் நினைவுகள் இனிய நினைவுகள் தான்.

மங்களூர் சிவா said...

//
எல்லோருக்குமே இளமைக்கால மலரும் நினைவுகள் இனிய நினைவுகள் தான்.
//
ஆமாம். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

cheena (சீனா) said...

சிவா !!

நன்றி சிவா நன்றி

வித்யா கலைவாணி said...

ஆகா சின்ன வயசு அனுபவங்கள் நல்லா தான் அசை போடுறீங்க. இப்ப தான் இதைப் படித்தேன்.

cheena (சீனா) said...

நன்றி வித்யா - வருகைக்கும் கருத்துக்கும்

ஆயில்யன் said...

//பூங்காவின் சற்றே உயரமான ஒரு இடத்திற்கும் விஞ்ச்//
எனக்கும் ஆசை அந்த விஞ்சில் போய் வர வேண்டுமென்று பட் அது நிப்பாட்டி நிறைய மாமாங்கம் ஆச்சாம்ல!

cheena (சீனா) said...

வருகைக்கு நன்றி ஆயில்யன் - விஞ்சு நிறுத்திட்டாங்களா - எனக்குத் தெரியாது - தொடர்பில்லை 1963க்குப் பிறகு

ஜமாலன் said...

10-ஆண்டுகளுக்கு முன்பு எனது குடும்பத்துடன் அந்த விஞ்சில் போனோம். அது துருப்பிடித்து கரகரவென்று மைய மண்டபத்திற்கு பொய்விட்டு வருவதற்குள் என் மணைவிக்கு வேர்த்துவிட்டது. இத்தனைக்கும் கீழே தண்ணியே இல்லை. அப்புறம் சென்னை காந்தி பூங்காப்போல இங்கும் செடி மறைவில் ஒரு காதல் ஜோடி தீவிரமாக பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தார்கள். சிரித்ததை மட்டுமதான் நான் பார்த்தேன்.

சிறுவயதில் அந்த பூங்காவில் ஒரு புனுகுப் பூனை பார்த்ததாக நினைவு. தஞ்சையில் ஒவ்வொரு விடுமுறையும் சென்று மறக்காமல் பார்த்துவிட்டு வருவது.. பெரியகோவில். ராஜன் வாயக்கால் அகலி மத்தியில் இருக்கும் அக்கோவிலை பார்த்த மாத்திரத்தில் சோழர்காலத்தில் நம்மை பிரவேசிக்க் செய்துவிடும் அதன் கலைநுட்பம். தஞ்சையைப்பற்றி எழுத எத்தனையோ உண்டு. குறிப்பாக சரபோஜி மஹால்...

நான் சிறுவயதில் தீவிர சிவ பக்தன் என்பதால் இன்றும் அதன் எச்சமாக அக்கோவிலுக்குள் செல்லும் போதெல்லாம் கிடைக்கும் ஒரு மன அமைதியும் பரவசமும் அற்புதமானது.

தோடர்ந்து வரும் பதிவுகளில் உங்கள் மலரும் நினைவுகளை எதிர்பார்க்கிறேன்.

cheena (சீனா) said...

வருகைக்கும் நீண்ட மறு மொழிக்கும் நன்றி ஜமாலன். தஞ்சையைப் பற்றி எழுத எவ்வளவோ இருக்கிறது. எழுதுகிறேன். இன்னும் பணியில் இருப்பதால் நேரமின்மை. அவ்வளவையும் எழுத ஆசை தான். பார்க்கிறேன்

எனது மற்ற இடுகைகளையும் பார்க்க அழைக்கிறேன்.

நன்றி ஜமாலன்.

ஜீவி said...

"உங்கள் நண்பன்" பார்த்த நினைவைப் புதிப்பித்து விட்டீர்கள், நண்பரே! திரையரங்குகளில் கூட, படம் ஆரம்பிப்பதற்கு முன்,்"நீயூஸ் ரீல்" போடுவார்கள் இல்லையா,அதனுடன் இந்த உங்கள் நண்பனையும் சேர்த்துப் போட்டுப் பார்த்த நினைவு இருக்கிறது. "உங்கள் நண்பன்" பார்த்த இன்னொருவனும் இருக்கிறேன் என்று நண்பர் தருமிக்கு சொல்வதற்கும் சந்தோஷமாக இருக்கிறது.

cheena (சீனா) said...

நண்பர் ஜீவி, அக்காலத்தில் உங்கள் நண்பன் பார்ப்பது எங்கள் பொழுது போக்கு - எத்தனை தடவை பார்த்தோம் என்பதற்கு கணக்கே கிடையாது. இன்பம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

குட்டிபிசாசு said...

//"பிள்ளையாரே !! கவனிச்சுக்க !! " இது போதும்.//

பிள்ளையாரே! இவர் மேலும் பல பதிவுகள் எழுதும்படி கவனிச்சுக்க!!

cheena (சீனா) said...

நன்றி குட்டிப் பிசாசு - வருகைக்கும் பிரார்த்தனைக்கும் ( இறை நம்பிக்கை இல்லாத அரூம் பிள்ளையாரிடம் வேண்டுவது - என் நம்பிக்கையை மதித்து தானே- நன்றி)

cheena (சீனா) said...

நன்றி குட்டிப் பிசாசு - வருகைக்கும் பிரார்த்தனைக்கும் ( இறை நம்பிக்கை இல்லாத அருண் பிள்ளையாரிடம் வேண்டுவது - என் நம்பிக்கையை மதித்து தானே- நன்றி)

கண்மணி/kanmani said...

சீனா சார் உண்மையிலேயே பிள்ளையார் தான் சிம்பிளான நல்ல சாமி!10 காசு சூடம் இருந்தாலே போதும்.அதுவும் இல்லைனா நாலு தோப்புக் கரணம்.ஆஹாஹா[போட்டிருக்கீங்களா]

cheena (சீனா) said...

பிள்ளையாருக்கு சூடம் ஏற்றுவதும் தோப்புக்கரணம் போடுவதும் தவிர வேறு என்ன வேலை ( பின்ன எப்படி பரீட்சையிலே பாஸாவதாம்)

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கண்மணி