ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Saturday 24 July 2010

தப்பு

டிசம்பர் 1994 - கணையாழி மாத இதழில் வெளியான ஒரு சிறு கதை. எழுதியவர் எனது இளைய மகள் பிரியா - கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எழுதியது.

சிடுசிடுக்கிற அலாரம்.......
எட்டு மணி .......

எழுந்திருக்க மனசு வரலியா இன்னும் ........
ஃப்ரீப் கேஸில் தண்ணீர் பாட்டிலைத் திணித்துக்கொண்டே - அவருக்கு மட்டும் அது எப்படி சிந்தாமல் இருக்கிறதோ - ஆஃபீஸ் கிளம்புற அவசரத்தில் அப்பா .......

தடி தடியாக நான்கு கம்யூட்டர் புத்தகங்களை இரண்டு கைகளிலும் தூக்கிக் கொண்டு - எப்படி பஸ் ஏறுவாள் ? அக்கா ......

கிளம்பிக் கொண்டு - இல்லை இல்லை - பறந்து கொண்டிருக்கிறார்கள்.

அம்மா மட்டும் தான் பாக்கி. அவசரமாய் டிபன் பாக்ஸை பையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

குட் மார்னிங் அம்மா

ஆமா இதுல ஒண்ணும் கொறச்சலில்ல - எட்டு மணிக்கு எழுந்திறதுக்கு என்ன அலாரம் வேண்டிக் கிடக்கு.

இல்லேனா பத்துக்குத்தானே எழுந்திருப்பேன்

ஆஹா என்ன ஒரு சுறுசுறுப்பு - சரி - ஒழுங்கா காலையும் மத்தியானமும் சாப்டுரு - வேஸ்ட் பண்ணாதே - சமச்சுவைச்சத - ஜூனூன் பாஷையில் அதட்டினார்.

சரி சரி - டாட்டா - சாயங்காலம் சீக்கிரம் வந்துரு

அம்மா செருப்பு மாட்டும் போதுதான் ஞாபகம் வந்தது

அம்மா - என் ஐடெண்டிடி கார்டுக்கு ஃபோட்டோ எடுக்கணும்

போய் எடு

நீயும் கூட வா - எனக்கு ரெண்டு மணிக்குத்தான் காலேஜ் - அதுக்குள்ளே வாங்கிடலாம்

ஏய் ! எனக்கு எட்டரைக்கு ஆஃபீஸ்

அம்மா ... அம்மா ... பர்மிஷன் போடும்மா ... ப்ளீஸ்

சரி வந்து தொலைக்கிறேன் - போய் சீக்கிரம் குளிச்சிட்டு வா - போ

குளித்து விட்டுக் கிளம்பும் போது மணி ஒன்பது. மறக்காமல் அம்மாவின் பர்மிஷன் லெட்டரை எடுத்துக் கொண்டு ஸ்டூடியோவுக்குப் போனோம். உள்ளே எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள் - ஃபோட்டோவில்.

பாஸ்போர்ட் சைஸ் எடுக்கணும்

கொஞ்சம் இருங்க போட்டோ எடுக்கறவர் வந்துருவார்

எவ்ளோ நேரம் ஆகும்

அரை மணி

இன்றுதான் கடைசி தினம் என்பதால் எனக்கு ஃபோட்டோ அவசியமாய்த் தேவைப்பட்டது...... சரிமா, நீ போ - நான் இருந்து வாங்கி வரேன்.

அம்மா முறைத்து விட்டுச் சென்றார். ஒரு ஸ்டூலில் அமர்ந்தேன்

கடைப்பையன் ஒவ்வொரு பொருளாய் தூசி தட்டிக் கொண்டிருந்தான். நான் ஒவ்வொரு ஃபோட்டாவாய்ப் பார்க்கத் தொடங்கினேன்.

ஒரு குழந்தை தன்னை விடப் பெரிய பந்து ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு முகம் முழுவதும் சிரிப்பாய் நின்று கொண்டிருந்தது. அதே குழந்தை பந்தில்லாமல் அம்மா மடியில் இருந்தது - சிரிப்பைத்தான் கானோம்.

இன்னும் நிறைய ஃபோட்டோக்கள். தம்பதி சகிதமாய், தனியாய், சிறியவர் முதல் பெரியவர் வரை என்று எல்லா விதமாயும். ஆனால் அவர்களுக்குப் பின்னால் இருந்த பூங்கா ஒரே விதமாய் இருந்தது. நடுநடுவே யாரோ வந்து நெகடிவ் கொடுத்து டெவலப் செய்யச் சொல்லி .. எப்பொழுது கிடைக்கும் என்று நேரம் கேட்டுச் சென்றார்கள்.

தெருவில், இரண்டு சேட்டுகளை எதிரும் புதிருமாக வைத்துக்கொண்டு, சோனி ரிக்ஷாக்காரன், வயிற்றை எக்கி, மிதித்துக் கொண்டு போனான். டப்பு எக்கட பம்பிஸ்தாரு ? உரத்த குரலில் பேசியபடி கையில் பிளாஸ்டிக் பையுடன் ஒரு கூட்டம் ஊர்ந்து சென்றது.

நான் அருகில் இருந்த செய்தித்தாளைப் படிக்கத் தொடங்கினேன். மணி ஒன்போதரை. என் ஜென்மத்தில் இப்படி ஒரே இடத்தில் உட்கார்ந்ததில்லை.

எப்ப வருவாரு ?

ஸாரி - இப்ப வந்துருவாரு - மென்மையாய்ப் பதில் சொல்லி வேகமாய் உள்ளே சென்றான் கடைப்பையன்.

அப்பொழுது பார்த்து இருவர் உள்ளே நுழைந்தார்கள். என்ன நினைத்தாரோ ஒருவர் இன்னொருவரைப் பார்த்து - சின்னப் பொன்னுகளை எல்லாம் வேலைக்கு வெச்சா இப்படித்தான் - பாரு பேப்பர் படிக்குது. அவர் என்னவோ மெதுவாகத்தான் சொன்னார் - என் காதில்தான் விழுந்து தொலைத்தது.

பாப்பா - என்றார்

இந்த மெட்ராஸில் "பாப்பா" என்று கூப்பிடுவதை எப்பொழுதுதான் நிறுத்துவார்களோ தெரியவில்லை. நான் - அவர் மறுபடியும் வாயைத் திறக்கும் முன்.....

கட ஆள் உள்ளே இருக்காரு - வருவாரு - உட்காருங்க - என்பதற்குள் பையன் வந்து விட்டான்.

என்ன சார் ? சொல்லுங்க ..

வந்தவர் என்னை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு - ப்ரிண்ட் போடனூம் - நெகடிவ் தந்தார்.

சீக்கிரம் வேணும்
எத்தனை காப்பி ?
நாலு
20 குடுங்க
நாலு நாலு பதினாறு தானே - என்ன ஐந்து ரூபாயா ஒண்ணு ?
அர்ஜெண்டுன்னு சொன்னீங்களா - அதான் ஐந்து - மென்மையாக
வேண்டாம் - திருப்பிக் கொடு - ஏதோ தெரிஞ்ச கடைன்னு வந்தா .... திருப்பி வாங்கிக் கொண்டு சென்று விட்டார்.

எப்ப வருவாரு - ஒம்பதே முக்கா ஆச்சே ,,,,
ஃபோன் பண்னி இருக்கேன் - பத்து நிமிஷத்துலே வந்துருவாரு
பக்க்த்துல வேற ஸ்டூடியோ இருக்கா ? முக்கால் மணி நேரம் காத்திருப்பு எரிச்சலாய்க் கேட்க வைத்தது.
ஊஹூம் .. திரும்பவும் நிதானமாய் - பக்கத்துல பியூட்டிஃபுல் ஸ்டூடியோ இருக்கு - ஆனா லீவு
எனக்கு வேணும் - வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கின்றதென்று வந்தேன் - பாரு - நல்லா வேணும். - சரி இன்னொரு பத்து நிமிஷம் தான் - பரவாயில்லை.

ஒரு குடும்பம் வந்து குரூப் ஃபோட்டோ எடுக்கணும் என்றது.
உக்காருங்க சார் - இப்ப வந்துருவாரு - எத்தன காப்பி ? என்ன சைஸ் ? அவர்களைக் கேள்வி கேட்டுக் காத்திருப்பை மறக்கடித்துக் கொண்டிருந்தான்.

அப்படி இப்படி என்று ஒரு வழியாய் பத்தே காலுக்கு வந்தார் ஃபோட்டோ எடுப்பவர். எனக்கு நேர் எதிரில் உட்கார்ந்தார். நிதானமாய் மூக்குப் பொடி டப்பாவைத் திறந்தார். கடை முதலாளி போல - அதுக்குன்னு இப்படியா ?

எனக்குக் கோபமாய் வந்தது

என்னமமா ?
பாஸ்போர்ட் சைஸ்
மேலே போங்க வரேன் . நீங்க சார்
குரூப் - நாலு காப்பி

நான் மேலே சென்று ஃபோட்டோ எடுத்துக் கொண்டு - கீழே வந்து பணம் கட்டினேன். குரூப்பும் எடுத்து முடித்து - பில்லுக்கு நின்றது. பில் போட்டுக் கொண்டிருந்தவர் திடீரென்று நிமிர்ந்து - ஒன்றரை மணி நேரம் ஆச்சு, சீக்கிரம் வாங்கன்னு சொல்லத் தெரியுது - இந்த ஃபானைத் தொடைக்கக் கூடாதா ? மாடு மாடு - சொல்லித் தெரியக் கூடாது - தானாத் தெரியனூம் - மாடு மாடு - என்று கத்தினார்.

யோவ், அவன் இருங்க, இருங்க சொல்லலேன்னா, உன் கடைக்கு ஒரு பய வரமாட்டான். வந்த வுடனே நேரா பொடி டப்பாவுக்குப் போயிட்டே - நீ பேசறியா - கொத்தாய் அவன் சொக்காயப் பிடித்துக் கத்த வேண்டும் போல இருந்தது.

எரிச்சலாய் வெளியில் வந்து எடுத்த ஃபோட்டோவைப் பார்த்தேன். அழகாய்ச் சிரித்துக் கொண்டிருந்தேன். கோபம் - எரிச்சல் - காத்திருந்த நேரம் எதுவும் அதில் தெரியவில்லை.

திரும்பிப் பார்த்தேன். பையன் ஃபேனைத் துடைத்துக் கொண்டிருந்தான். கடையின் பெயர்ப் பலகை அருகில் முதலாளி புகைப்படத்தில் முகமலர வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். கடைப் பெயரைப் படித்தேன்.
ரிஃப்லெக்ஷன் ஸ்டூடியோ - கடை வாசலில் நின்றிருந்த ஒரு சின்ன வாண்டு அருகில் இருந்த தன் அம்மாவிடம் = அமமா ரிஃப்லெக்ஷன்னா பிரதி பலிப்புத்தானே - என்றது.

வேகமாய் அதன் அருகில் சென்று - இல்ல இல்ல அது இல்ல அர்த்தம் - அது தப்பு என்றேன்.

கணையாழி - டிசம்பர் 1994







சிடுசிடுக்கிற அலாரம்