திலகர் திடலை அடுத்து தஞ்சையின் புகை வண்டி நிலையம் இருந்தது. அது தஞ்சை சந்திப்பு என அழைக்கப் பட்டாலும் அங்கு வந்து போகும் புகை வண்டிகளின் எண்ணிக்கை அக்காலத்தில் குறைவு தான். நான் தஞ்சையில் இருந்த வரை புகை வண்டியில் சென்றதாக நினைவு இல்லை.
நகரில் நகரப் பேருந்துகளும், ஒற்றை மாட்டு வண்டிகளும் நகர் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும். நகரில் எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கு வசதியாக இருக்கும். அம் மாட்டு வண்டியில் வைக்கோல் விரித்து அதன் மேல் ஒரு விரிப்பும் போடப்பட்டிருக்கும். எத்தனை பேர் வேண்டுமானாலும் செல்லலாம். பின் புறம் அமர்ந்து காலைத் தொங்க விட்டுக் கொண்டு பயணம் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும்.
நகரின் அரசு பொது மருத்துவ மனையின் விபத்து மற்றும் அவசரப் பிரிவு இருந்த கட்டடத்தின் பெயர் தாமஸ் ஹால். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் தஞ்சையை விட்டு செல்லும் வரை அதனை நானும் மற்றவர்கள் சொல்லிக் கொடுத்தபடி தாஜ் மகால் என்று தான் அழைத்தேன். அங்கு பல தடவை சென்ற அனுபவம் உண்டு. அடிக்கடி எங்கள் வீட்டில் யாரையாவது ஏதாவது பூச்சி அல்லது தேள் கடித்துவிடும். உடனே தாஜ் மகாலுக்குத் தூக்கிக்கொண்டு ஓடுவார்கள். அந்த மருத்துவ மனையைச் சார்ந்த மருத்துவர்களின் நட்புடன் கூடிய மருத்துவ சிகிச்சை முறை எனக்குப் பிடித்த ஒன்று. தற்கால பொது மருத்துவ மனைகளைச் சார்ந்த மருத்துவர்கள் மருத்துவம் செய்யும் முறை தற்காலச் சூழ்னிலைக்கேற்ப பல மாற்றங்களை அடைந்து விட்டது.
நகரின் பேருந்து நிலையம் நகரின் மையப் பகுதியில் இருந்தது. நகரப் பேருந்துகளும் மற்ற வெளி இடங்களுக்குச் செல்லும் பேருந்துகளும் ஒரே நிலையத்தில் தான் வந்து சென்றன. சில தடவைகள் தஞ்சையில் இருந்து மதுரைக்குப் பேருந்தில் தனியாகச் சென்றதுண்டு. மதுரையின் புகழ் வாய்ந்த பேருந்து டிவிஎஸ் தஞ்சை-மதுரைக்கு 5 மணி நேரத்தில் செல்லும். தஞ்சை - கந்தர்வகோட்டை - புதுக்கோட்டை - திருப்பத்தூர் - மேலூர் - மதுரை என அப் பேருந்து செல்லும். கந்தர்வ கோட்டையில் முந்திரிப் பருப்பு வாங்கிச் சாப்பிடவதற்கென்றே எங்கள் வீட்டில் தனியாக காசு கொடுப்பார்கள். முந்திரிப் பருப்பைத் தவிர வேறு ஒன்றும் வாங்கிச் சாப்பிட மாட்டேன்.
நகரில் காய்கறி அங்காடிகள் பழ அங்காடிகள் மற்ற அங்காடிகள் நிறைந்த பகுதியும் உண்டு. வாரம் ஒரு முறை வீட்டில் உள்ள பெரியவர்களுடன் அவ்வங்காடிகளுக்குச் சென்று தேவையானவற்றை வாங்கி வருவதுண்டு.
நகரில் திரைப்படங்கள் பார்ப்பதற்கு யாகப்பா தியேட்டர் மற்றும் ஞானம் தியேட்டர் சென்றதுண்டு. சம்பூர்ண ராமாயணம் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பரதனாக நடித்த படம். என் டி ராமாராவ் அமைதியாக அழகாக அருமையாக இராமபிரானாக நடித்த படம். பாடல்கள் நிறைந்த படம்.
அக்காலத்தில் கல்கண்டு மறைந்த தமிழ்வாணன் ஆசிரியராக இருந்து வெளியிட்ட வார இதழ். பல துணுக்குகள் நிறைந்த இதழ். மிகக் குறைவான பக்கங்கள் கொண்ட மிக மலிவான இதழ். வாரம் தவறாமல் படிப்பதுண்டு. தமிழ் வாணண் எழுதிய சங்கர்லால் என்ற துப்பறியும் நாவல் மற்றும் சில நாடகங்கள், மற்ற துப்பறியும் நாவல்கள், சிறுகதைகள் என நிறையப் படித்ததுண்டு.
துப்பறியும் நிபுனர் சங்கர்லால் மற்றும் அவரது உதவியாளர் கத்தரிக்காய் ஆகியோர் சங்கர்லாலின் மனைவியுடன் சேர்ந்து துப்பறியும் கதைகள் பல தடவைகள் படித்ததுண்டு. அக்காலத்தில் தமிழிலும் ஆசிரியர்கள் பலர் எழுதிய துப்பறியும் கதைகள் படிப்பதுண்டு. தெருவிளக்கு என்ற மர்மங்கள் நிறைந்த தொடர் கதை ஒரு வார இதழில் தொடர்ந்து படித்ததுண்டு.
வைகுண்ட ஏகாதசி மற்றும் சிவராத்திரி அன்று பரமபத சோபனம், தாயக்கட்டம், ஆடு புலி ஆட்டங்கள் ஆடி மகிழ்ந்ததுண்டு.
அக்காலத்தில் தான் ஆங்கில முறையைப் பின்பற்றி அளவு முறைகள் மாற்றப்பட்டன. அங்குலம், அடி, கஜம், பர்லாங், மைல் என்ற அளவு முறைகள் மில்லி மீட்டர், சென்டி மீட்டர், மீட்டர், கிலோ மீட்டர் என்று தசம முறைக்கு மாறி அந்த இடைப்பட்ட காலத்தில் மக்கள் பட்ட பாடு - புதிய முறைக்கு மாறுவதற்கு மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
நாணயங்கள் பைசா அணா ரூபாய் என்பது நயா பைசா ரூபாய் என தசம முறைக்கு மாறியதும் அந்த கால கட்டம் தான். ஒரூ ரூபாய் என்பது 100 நயாபைசா என்றும் கால் ரூபாய் என்பது 25 பைசா என்றும் ஒரு அணா என்பது 6 பைசாவாகவும் மாறியது. கால் ரூபாய் எனில் 25 பைசா கொடுக்க வேண்டும். ஆனால் அதே கால் ரூபாய்க்கு நிகரான 4 அணா என்பது 24 பைசா வாகவும் ஒரு குழப்பம் நிலவியதும் அக்காலத்தில் தான். அக் காலத்தில் ஒரு பைசா இரண்டு பைசா அய்ந்து பைசா பத்து பைசா இருபத்துஅய்ந்து பைசா அய்ம்பது பைசா ஒரு ரூபாய் என நாணயங்கள் புதியதாக வந்து பழைய நாணயங்களான காலணா (அதிலும் இரண்டு வகை - ஓட்டைக்காலனா என்பது மிகப் பிரசித்தம்) அரையணா ஒரு அணா இரண்டணா நாலணா எட்டணா ஒரு ரூபாய் ஆகியனவற்றை மாற்றம் செய்தன.
தொடரும்
சீனா - 28082007