ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Wednesday 24 November 2010

வந்துட்டோமே !

அன்பு நண்பர்களே !

நவமபர் 19 - வெள்ளிக்கிழமை எங்களது மணி விழா சிறப்பாக நடைபெற்றது. மூத்த அருமைச் சகோதரி நானானி அலை பேசியில் அழைத்து முதலில் வாழ்த்தினார். அவரது பேரன் அழகான ஆங்கிலத்தில் சிறு வாழ்த்துக் கவிதை படித்தான். மனம் மகிழ்ச்சிக் கடலில் கூத்தாடியது. நானானிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம்.

நேரிலும் அலைபேசியிலும் மின்னஞ்சலிலும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்களூக்கு மனமார்ந்த நன்றி.

இன்று முதல் இணையத்தில் உலவிடத் திட்டமிட வேண்டும். அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

நட்புடன் சீனா

Saturday 13 November 2010

விடுமுறை விடுமுறை விடுமுறை !

அன்பின் நண்பர்களே !/r

கடந்த அக்டோபர்த் திங்கள் 30ம் நாள் நான் பணி நிறைவு செய்து - அலுவலகப் பணிகளில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டேன். அறுபது வயது ஆனதைக் கொண்டாடும் விதமாக எங்கள் அறுபதாம் ஆண்டு நிறைவு மணி விழா எங்கள் சொந்த ஊரான ஆத்தங்குடியில் எங்கள் இல்லத்தில் வருகிற நவம்பர் 19ம் நாள் வெள்ளிக் கிழமை நடை பெற இருக்கிறது. அனைவரும் வந்திருந்து விழாவினைச் சிறப்பிக்க வேண்டுகிறேன். இவ்விழாத் தொடர்பான் பணிகள் அதிகம் இருப்பதாலும் - ஆத்தங்குடியில் இணையத் தொடர்பு இல்லாத காரணத்தினாலும் இணையத்தில் இருந்து தற்காலிக விடுப்பாக நவம்பர் 25 வரை இணையத்தின் பக்கம் வர இயலாதென நண்பர்களுக்கு அறிவிக்கிறேன்.
பிறகு சந்திப்போம் - அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நன்றி - நட்புடன் சீனா - 98406 24293

Tuesday 2 November 2010

பணி ஓய்வு - வாழ்த்து மடல்

எனது இனிய துணைவியார் திருமதி மெய்யம்மை அவர்கள் சென்னையில் ஒரு புகழ் பெற்ற பள்ளியில் தலைமைத் தமிழாசிரியையாய் 33 ஆண்டுகள் பணியாற்றி = பணி நிறைவு செய்த போது - அவரின் சக ஆசிரியை வாசித்தளித்த வாழ்த்து மடல்.
--------------------------------------------------------------------

எம்முடன் பணியாற்றிய எங்களில் ஒருவர்
எழுத்தும் சொல்லும் (மாணவ) மனங்களில் விதைத்தவர்
இத்திங்களில் எம்மைப் பிரிந்திட நேரும் - உன்
பணி நிறைவாலே வந்தது இந்நேரம்.

பணிகள் செய்ய நீ சளைத்தாய் இல்லை
இன்னமும் நீ களைத்தாய் இல்லை
பாரில் தமிழ் வளர்த்தோர் உண்டு - நீ எம்
பள்ளியில் தமிழ் வளர்த்த அம்மை - இது மெய்

வள்ளுவனும் பாரதியும் சொன்ன சொல்லை
உன் போல் சொல்ல எவரும் இல்லை
பள்ளியில் ஆற்றும் பணிகள் செய்யப்
பயின்றோம் நாங்கள் உன்னைப் பார்த்து.

கடலின் ஆழம் அமைதியைப் போல - உன்
கருத்தின் ஆழம், அமைதியாய் இருப்பாய்
மௌனமாய் இருந்து பணிகள் செய்வாய்
புன்னகையால் எம்மைப் புரிய வைப்பாய்.

வாய் திறந்தாலோ தமிழ் மடை வெள்ளம்
மகிழ்வுடன் நிறையும் கேட்பவர் உள்ளம்
தமிழுக்கு நீ சிறப்பு செய்தாய் அந்தத்
தமிழாலே நீ சிறப்பும் பெற்றாய்.

மூன்று ஆண்டுகள் பணி புரிந்தாலும்
முணுமுணுப்புடன் பணி செய்பவர் உண்டு
முப்பத்து மூன்றை முடித்த பின்னாலும்
முகந்தனில் மலர்ச்சி மறையவில்லை.

உன்னில் சிறியவர் நாங்கள் எனினும்
வாழ்த்துகிறோம் உன்னை நன்னலம் பெறவே
மதுரை மீனாட்சி திருவருளாலே
மண்ணில் மகிழ்வுடன் வாழ்க பல்லாண்டு.

ஆக்கம் : ஆங்கில ஆசிரியை