ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Tuesday, 27 May 2008

சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்

நண்பர்களே, பேசும் பொழுது சிறிது நேரம் மட்டுமே பேசி, அதற்குள் சில கருத்துகளையோ, எண்ணங்களையோ மற்றவர்க்குப் புரியும் வண்ணம் எடுத்துரைப்பது எவ்வளவு கடினம் தெரியுமா ?

ஒரு புகழ் பெற்ற பேச்சாளர் ஒரு பொதுக்கூட்டத்துக்குச் சென்றார். அங்கு அவர் பேச்சாளராக அழைக்கப் படவில்லை. பார்வையாளராகத் தான் சென்றிருந்தார். கூட்ட மேடை நெருங்கிய உடன், அங்கு குழுமியிருந்த மக்கள் இவரை அடையாளம் கண்டு, இவரைப் பேசுமாறு வேண்ட, மேடை ஏறி, தாம் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என வினவினார். மக்களோ எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுங்கள் எனக் கூற, பேச்சாளரோ, அதிக நேரம் பேச அழைத்தீர்கள் என்றால் நான் எளிதாகப் பேசி விடுவேன். ஒரு பிரச்னையுமில்லை. ஆனால் பத்து மணித்துளிகள் மட்டுமே பேசவேண்டுமெனில், அதற்கு நான் ஒரு மாத காலம் சிந்தித்து, பிறகு தான் மேடை ஏற வேண்டும் எனக் கூறினார். காரணம் என்ன வெனில், என்ன வேண்டுமானாலும் பேசலாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம் என்றால் அது எளிது. கை வந்த கலை. ஆனால் குறிப்பிட்ட நேரமே, அதுவும் குறைந்த நேரமே பேச வேண்டுமெனில், அது கடினமான செயல்.

ஏனெனில் குறைந்த நேரத்தில் ஒரு கருத்தினை, ஒரு எண்ணத்தை, ஒரு பொருளினைப் பற்றிப் பேச வேண்டுமெனில், அதற்கு அதிகம் பயிற்சி வேண்டும். குறித்த காலத்தில், பேச வேண்டியவைகளை எல்லாம் பேச வேண்டும். பொருள் புரியப் பேச வேண்டும். கேட்பவர் மனதில் தைக்குமாறு பேச வேண்டும். அது அனுபவத்தில் தான் வரும். திட்டமிட்டால் தான் வரும்.

நண்பர்களே !! பேசிப்பழகுக !! பொருள் புரியப் பேசுக !!

அன்புடன் ..... சீனா
------------------------