ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Tuesday, 12 August 2008

இறைவனின் குழந்தைக்கு நாற்காலி

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.



அன்பின் சக பதிவர்களே !

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் வலைச்சரத்தில் ஒரு பதிவு இட்டிருந்தேன். கடவுளின் குழந்தைக்கு கருணை காட்டுங்கள் என்று வேண்டி இருந்தேன். பிறகு சில திங்களாக பணிச்சுமை காரணமாக மனம் இதில் முழுவதுமாக ஈடுபட்டிருந்தாலும் அன்பர்களைத் தொடர்பு கொள்வதில் சற்றே தாமதம் ஏற்பட்டது.

சூலைத்திங்கள் தொடக்கத்தில் அருமை நண்பர் பாலாவிடம் கேட்ட பொழுது - ரூபாய் 20000 உதவி வந்துள்ளது எனவும் இன்னும் 45000 வேண்டுமெனக் கூறினார். நான்கு சக்கர, மின்சாரத்தினால் இயங்கும் நாற்காலியின் தற்போதைய விலை 65000 ஆகிறது எனவும் கூறினார்.



சூலைத்திங்கள் இறுதிக்குள் எப்படியும் வாங்கி விட வேண்டுமென்று இறைவனைத் தொழுது பணியினைத் துவக்கினேன். அன்பர்களைத் தொடர்பு கொண்டேன். வலைப்பதிவர்கள் மட்டுமின்றி அன்புடன் குழுமத்தின் உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டேன். முன் பின் பார்த்திராத, தொடர்பே இல்லாத அன்பர்கள் சிலரும் நேசக்கரம் நீட்டினர்.

வலக்கை கொடுப்பது இடக்கைக்குத் தெரிய வேண்டாமென, அதிகம் விளம்பரம் வேண்டாமென விரும்பிய நண்பர்கள் அதிகம் கொடுத்தனர். தேவைக்கு அதிகமாகவே உதவிகள் குவிந்தன. கடைசி 24 மணி நேரத்தில் 50 விழுக்காடு உதவி பெறப்பட்டது.


ஏறத்தாழ ரூபாய் 36000 உதவி பெறப்பட்டு அருமை நண்பர் பாலாவிடம் சேர்க்கப்பட்டு, அந்தோணிக்கு ஆகஸ்டுத் திங்கள் 7ம் நாள் அன்று அந்தோணியின் கனவு நாற்காலி வழங்கப்பட்டது.


ஆகஸ்டுத் திங்கள் 10ம் நாள் இலண்டனில் வசிக்கும் அருமை நண்பர் சக்திதாசனும் அவரது மனைவியும் நானும் சென்னையில் உள்ள அந்தோணியின் இல்லம் சென்று நாற்காலியில் மகிழ்வுடன் உலா வரும் அந்தோணியைக் கண்டு மகிழ்ந்தோம். உரையாடினோம். மன மகிழ்வுடன் திரும்பினோம்.


அந்தோணியின் உடல்நிலையைக் கண்டு மனம் வருந்தினோம். இப்பொழுது மன மகிழ்வுடன் வீதிகளில் உலா வரும் அந்தோணியின் உதவி பெறுவதில் உள்ள வலியினையும், என்றாவது ஒருநாள் வாங்கியவற்றைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற வைராக்கியத்தினையும், உறுதியினையும் கண்டு மனம் மகிழ்ந்தோம்.


அன்பர்களே ! இறைவன் மனது வைத்தால் முடியாதது ஒன்றுமில்லை. ஒரே திங்களில் தேவைக்கதிகமாகவே உதவி மழை பொழிந்தது இறைவனின் கருணையால் தான். சில பதிவர்களின் உதவிகளை, பிற்காலத்தில் தேவைப்படும் பொழுது வாங்கிக் கொள்கிறோம் என்று மென்மையாக மறுத்தோம்.


நண்பர்களே ! உதவிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், இச்செயலினை முன் நின்று ஒருங்கிணைத்த நண்பர்கள் சுரேஷ் மற்றும் பாலாவிற்கும் உளங்கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். உதவிய நண்பர்களின் பெயர்கள் வெளியிட அனுமதி இல்லாத காரணத்தினால் வெளியிட இயலவில்லை.


மனம் மகிழ்கிறது நண்பர்களே !


மனமுவந்து உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல இறைவன் எல்லா நலனையும் அளிக்க வேண்டுதலுடன் கூடிய நல்வாழ்த்துகள்.

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

17 comments:

cheena (சீனா) said...

சோதனை ஓட்டம்

சதங்கா (Sathanga) said...

இறைவனின் கருணையில் எல்லாம் இனிதாய் நடக்கும் அவரின் குழந்தைக்கு.

இதற்கு உழைத்த குழுவின் அனைவருக்கும் மனது நிறைந்த வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

அன்பின் சதங்கா

மிக்க மூன்றெழுத்து - வருகைக்கும் கருத்துக்கும்

துளசி கோபால் said...

நல்ல திருப்பணி.

மனம் நிறைந்த பாராட்டு(க்)கள்.

cheena (சீனா) said...

நன்றி துளசி வருகைக்கும் கருத்துக்கும்

Sanjai Gandhi said...

மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. நல்லா பணி சீனா ஐயா. வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

புதுகை.அப்துல்லா said...

உங்கள் முயற்சி உண்மையிலேயே பெரியது அய்யா!தொடரட்டும் உங்கள் திருப்பணி.

NewBee said...

அன்பு சீனா ஸார் , உதவிய நண்பர்கள், அந்தோணி முத்து அவர்கள்

அனைவருக்கும் உளம்கனிந்த வாழ்த்துகள்.

அந்தோணி முத்து அவர்களின் மன உறுதிக்கும்

உதவிய எல்லா நல்லுங்களின் அன்பிற்கும்

இதற்கு உறுதுணையாய் நின்று, ஒருங்கிணைத்து நடத்திய எல்லா அன்பர்களின் உழைப்பிற்கும்

மனம் கனிந்த பாராட்டுகள் பல. :))))

cheena (சீனா) said...

புது வண்டே !

நலமா - விடுமுறையா - நல்வாழ்த்துகள்

ஒருங்கிணைப்பது என்பது அரிய செயல் - அன்பு உள்ளங்களின் உதவியினால் முடிந்தது. அனைவரும் கூடி தேர் இழுத்தார்கள்

cheena (சீனா) said...

நன்றி சஞ்செய் - வருகைக்கும் கருத்துக்கும்

cheena (சீனா) said...

நன்றி புதுகை அப்துல்லா - வருகைக்கும் கருத்துக்கும் உதவிக்கும்

ஜோசப் பால்ராஜ் said...

அய்யா,
ஊர்கூடி தேர் இழுத்தாலும் தேரை செய்தவர் நீங்கள்தான், எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்கிவிட்டால் கலந்துகொள்ள நல்ல உள்ளங்கள் ஆயிரம் பேர் உள்ளார்கள் என்றாலும் தொடங்க ஒருவர் வேண்டுமே.
நீங்களும்,பாலா அண்ணண் போன்றவர்களும் செய்த திருப்பணியை நன்றி என்ற வார்த்தையால் மட்டும் சிறப்பிக்கமுடியாதது. இந்த உதவி அந்தோணி அண்ணணின் மன உறுதியை மேலும் வலுப்படுத்தும் என்பது உறுதி.

உதவி தேவைப்படுவோர் மிக அதிகமாய் உள்ளார்கள். ஒருங்கிணைத்து செயல்பட உங்களை போன்றவர்கள் தேவை. நம்மால் இயன்றவரை பிறருக்கு உதவுவோம். உங்கள் குடும்பத்தாரின் நலனுக்காகவும், மகிழ்சிக்காகவும் இறைவனை வேண்டுகிறேன்.

Tech Shankar said...
This comment has been removed by a blog administrator.
cheena (சீனா) said...

அருமையான கருத்து - உதவி தேவைப்படுவோர் அதிகமாக உள்ளனர் - ஒருங்கிணைப்பாளர் தேவை

நன்றி ஜோசப் பால்ராஜ்

Kavinaya said...

தங்கள் பணி கண்டு மனம் நெகிழ்ந்தது. தங்களுக்கும் அந்தோணி முத்து அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளும் மனமார்ந்த பிரார்த்தனைகளும்.

சுரேகா.. said...

ஆஹா..
மிகமிக அற்புதமான செயல் செய்திருக்கிறீர்கள்!

மனம் நெகிழ்கிறது!

வாழ்த்துக்கள் சார்!

cheena (சீனா) said...

அன்பின் கவிநயா, சுரேகா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி