ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Wednesday, 22 August 2007

அசை போட்டு அனுபவித்து எழுதியது - குறிப்பு 1

ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பதாம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 16ம்நாள் (அலுவலக குறிப்புகளின் படி) புகழ் வாய்ந்த தஞ்சை மாவட்டத்தின் தலைநகராம் தஞ்சைத் தரணியின் முக்கிய வீதியான மேல வீதியில் உள்ளதிருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த நாங்குனேரியில் உள்ள வானமாமலை மடத்துக்குச் சொந்தமான ஒரு சிறு வீட்டில் அடியேன் இம்மண்ணில்அவதரித்தேன்.

அங்கு அறுபத்து மூன்றாம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் வரை ஒடி விளையாடி படித்து பின்னர் மதுரைக்குச் சென்றேன். அங்கு தஞ்சையில் எங்கள்வீட்டிற்க்கு இரண்டாம் இடத்தில் புகழ் வாய்ந்த காஞ்சி சங்கரமடம் இருந்தது. அம்மடத்தில் காலை மாலை வேத பாராயண வகுப்புகள் நடக்கும் - சிறு வயதில் - 10 வயது வரை என நினைக்கிறேன் - அவ்வகுப்பில் அனைத்துநண்பர்களும் படித்த காரணத்தால் - வகுப்பிற்கு வெளியே விளையாண்டு கொண்டிருப்பேன். காதில் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர என மந்திரங்கள் தொடங்கி அனைத்து பாராயணங்களும் காதில் விழும்.நண்பர்கள் உரத்த குரலில் முழு ஈடுபாட்டுடன் கூறும் வேதச் சொற்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.


காஞ்சி மடாதிபதி பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சுவாமிகள் பட்டணப் பிரவேசம் அடிக்கடி செய்வார்கள். பசு, ஒட்டகம், குதிரை, யானை என மிகஅதிக எண்ணிக்கையில் பின் தொடரும் பிராணிகளும் - முன்னே பாராயணங்களுடனும் இசையுடனும் வேத விற்பன்னர்களும் மற்றவர்களும் அணிவகுக்க நடுவினிலே பல்லக்கிலே சுவாமிகள் வருவது காணக் கண் கோடி வேண்டும்.


தற்போதைய மடாதிபதி பட்டத்திற்கு வந்த உடன் இங்கு பெரியவருடன்பட்டணப் பிரவேசம் செய்த காட்சியும் நினைவுக்கு வருகிறது. ஸ்ரீ ராம ஜயம்எனும் அரிய மந்திரத்தை 1008 தடவைகள் எழுதி சமர்ப்பித்து பெரியவரிடம் ஆசி பெற்றதும் உண்டு. ஒரு ஆரஞ்சு அல்லது சாத்துக்குடி மற்றும் ஒரு துளசி மாலை பரிசாக பெற்றதுமுண்டு. பெரியவரின் படம் எங்கள் பூஜை அறையில் நிரந்தரமாக இருக்கும்.


பெரியவர் செய்யும் சந்திர மொளீஸ்வரர் பூஜை மிகப் பெரிய அளவில் 15 தினங்களுக்கு அதி விமரிசையாக நடக்கும் - அனைத்து நாட்களிலும் முடிந்தவரை கலந்து கொண்டது உண்டு. அப்போது அங்கு காவலுக்கு வரும் காவல் துறையைச் சார்ந்த காவலர்களிடம் நட்பு கொண்டு அவர்களுக்கு வேண்டிய சிறு சிறு உதவிகள் செய்து மடத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லும் உரிமை பெற்றதும் உண்டு. 15/30 தினத் திருவிழா கொண்டாடும் மட்டற்ற மகிழ்ச்சி இன்று யாருக்கும் கிடைக்காது.

ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு முறை இம்மகிழ்ச்சி கிட்டும். மற்ற நாட்களில் மடத்திற்கு ஒருவரும் வர மாட்டார்கள். மடத்துக் செயலாளர் எங்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் தான் குடி இருந்தார். மடத்துக்கும் எங்கள் வீட்டிற்கும் நடுவில் அவரது வீடு.

மடத்தின் முன் கதவுகள் மற்ற நாட்களில் அடைத்திருக்கும். அவரது வீட்டின் உட்புறமாகச் சென்று தோட்டத்தின் வழியாக சென்று மடத்தின் பெரிய -உண்மையிலேயே மிகப் பெரிய - இடங்கள் முழுவதும் நானும் என்நண்பர்களும் ஓடி விளையாடி மகிழ்ந்த காலங்கள் இன்னும் பசுமையாகநினைவிலே நிற்கின்றன.

பல ஆண்டுகளுக்கு அம்மந்திரங்கள் மனதில் இருந்து அகலவில்லை - காலப்போக்கிலே பல்வேறு காரணங்களினால் - பல்வேறு சூழ் நிலைகளினால் தற்போது சுத்தமாக நினைவில் இல்லை - பெரியவர்களிடம் அபிவாதெயே கூறி ஆசி பெற்றதெல்லாம் நினைவில் இன்னும் நிற்கின்றன.
தஞ்சையில் மேல வீதியில் வீட்டிற்கு எதிரே கணேஷ் பவன் - அய்யர் கடை - சிற்றுண்டிச் சாலை - நல்ல நட்பு - அக்காலத்தில் அய்யர் என்பது மிக மரியாதையான சொல் -கல்லாவில் அமர்வது முதல் சமையல் கட்டு வரைசெல்லும் உரிமை பெற்றவன் நான்.

மேல வீதியின் ஒரு கோடியில் சங்கரநாராயணர் கோவில் - அரணும் அரியும் ஒன்றாகக் காட்சி அளிக்கும்கோவில் - மற்ற கோடியில் காமாட்சி அம்மன் கோவில். ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் - கோவிலுக்குச் செல்லாத நாளே கிடையாது. தற்போது கோவிலுக்குச் செல்லும் நாளே கிடையாது - ஆண்டின் சில முக்கியதினங்கள் தவிர.

தஞ்சையில் ஆண்டு முழுவதும் திருவிழா தான். கொண்டாட்டம் தான்.முக்கியத் திருவிழாக்கள் -தேர்த்திருவிழா - பல்லக்கு - திருவையாரின் முத்துப்பல்லக்கு பிரசித்தம் - தஞ்சைத் தெருக்களிலே சிறுவர்களின் சப்பரங்கள் புடை சூழ அசைந்து அசைந்து அது வரும் அழகே அழகு - மற்றும் பச்சைக் காளி பவளக்காளி திருவிழா - பசுமையான நினைவுகள் - அசை போட ஆனந்தம்.

நவராத்திரி ஒன்பது தினமும் பல்வேறு வீடுகளுக்கு நண்பர் படை சூழ சென்று பல்வேறு வகையான கொலுவினைக் கண்டு களித்து அவர்கள் தரும் தின்பண்டங்களுக்காவே சென்று - அக்காலம் பொற்காலம் - எவ்வளவு பொம்மைகள் - எவ்வளவு விதமான கொலுக்கள் - தெற்கு வீதியில் உள்ள ஒரு பெரிய வீட்டில் தத்ரூபமாக பெரிய அளவில் சரித்திர நிகழ்வுகள்உயிரோட்டத்துடன் சித்தரிக்கப் பட்டிருக்கும். இலண்டன் மாநகர மெழுகு -(Madame Tussot) - கண்காட்சிப் பொம்மைகள் எல்லாம் பிச்சை வாங்க வேண்டும் - அப்போதிருந்த வசதிக்கேற்ப நிஜ மனிதர்களைப் போலவே தேசிங்கு ராஜன் - செஞ்சிக்கோட்டை - மாவீரன் சிவாஜி - ப்ரித்வி ராஜன் சம்யுக்தையைக் கவர்ந்து செல்லும் காட்சி - தத்ரூபமாகச் சித்தரிக்கப் பட்டிருக்கும். அக்குதிரையின் முகத்தில் கண்களில் உள்ள கோபம் வீரம் - ராஜனின் பலவேறு உணர்ச்சிகள் - சம்யுக்தையின் பயங்கலந்த மகிழ்ச்சி-காணக் கண் கோடி வேண்டும் - அம்மகிழ்ச்சி தற்போதைய சிறுவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.


தொடரும்

சீனா - 22082007

14 comments:

Anonymous said...

I enjoyed reading your post. You wrote so well. Please keep posting.

Rumya

cheena (சீனா) said...

நன்றி ரும்யா - தமிழில் எழுதப் பழகுங்களேன் !!

மா.கலை அரசன் said...

சீனா சார் தங்களின் உங்களின் மலரும் நினைவுகள் படிக்கப்படிக்க இனிமை. கொடுத்துவைத்தவர் நீங்கள் சிறுவயதில் இறைவனையும் பெரியவரையும் தரிசிக்கும் பாக்கியம் நன்கு பெற்று இருக்கின்றீர்கள்...
தொடரட்டும்...
வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

நன்றி கலை அரச !! தொடர ஆசை தான் - நேரமின்மை - சீக்கிரமே தொடர்கிறேன்

குமரன் (Kumaran) said...

1950 - அப்ப எங்க அம்மா வயசு உங்களுக்கு. :-)
அடடா ஒரு நாள் முந்தி படிச்சிருந்தா பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லியிருகக்லாமே. இப்பவும் ஒன்னும் தப்புல்லை. பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா.
அலுவலகக் குறிப்புகளின் படின்னு சொல்லியிருக்கீங்களே? அப்ப உண்மையான பிறந்த நாள் வேறயா? :-)
//காஞ்சி மடாதிபதி பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சுவாமிகள் பட்டணப் பிரவேசம் அடிக்கடி செய்வார்கள். பசு, ஒட்டகம், குதிரை, யானை என மிகஅதிக எண்ணிக்கையில் பின் தொடரும் பிராணிகளும் - முன்னே பாராயணங்களுடனும் இசையுடனும் வேத விற்பன்னர்களும் மற்றவர்களும் அணிவகுக்க நடுவினிலே பல்லக்கிலே சுவாமிகள் வருவது காணக் கண் கோடி வேண்டும்.
//

ஆகா கொடுத்து வைத்தவர் நீங்கள். பெரியவரின் தரிசனத்தை கனவில் மட்டுமே பெற்றிருக்கிறேன்.

cheena (சீனா) said...

நண்ப குமரா !!

பிறந்த நாள் வாழ்த்தும் கொண்டாட்டமும் எங்கள் தலை முறையில் அவ்வளவாக இல்லை. இருப்பினும் இக்காலத்தில் பேரன் பேத்திகள் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லும் போது எல்லாம் மகிழ்வாகத் தானிருக்கிறது.

தங்களின் வாழ்த்துக்கும் நன்றி.

காஞ்சிப்பெரியவரை மறக்க முடியுமா என்ன! இதயத்தில் ஆழப் பதிந்தவர்.
அவரது படத்தைப் பர்ர்க்கும் போதெல்லாம் மனம் அமைதி பெறும்.

மங்களூர் சிவா said...

//
சீனா சார் தங்களின் உங்களின் மலரும் நினைவுகள் படிக்கப்படிக்க இனிமை. கொடுத்துவைத்தவர் நீங்கள் சிறுவயதில் இறைவனையும் பெரியவரையும் தரிசிக்கும் பாக்கியம் நன்கு பெற்று இருக்கின்றீர்கள்...
தொடரட்டும்...
வாழ்த்துக்கள்.
//
ரிப்பீட்டேய்

cheena (சீனா) said...

நன்றி சிவா!! தொடர ஆசை தான் - நேரமின்மை - சீக்கிரமே தொடர்கிறேன்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பல ஆண்டுகளுக்கு அம்மந்திரங்கள் மனதில் இருந்து அகலவில்லை - காலப்போக்கிலே பல்வேறு காரணங்களினால் - பல்வேறு சூழ் நிலைகளினால் தற்போது சுத்தமாக நினைவில் இல்லை//

மந்திரச் சொல் தான் ஞாபகம் இல்லை! அதான் மந்திர நினைவு ஞாபகம் இருக்கே சீனா சார்! அதுல தான பதிவே மணக்குது! சூப்பர்!

//கோவிலுக்குச் செல்லாத நாளே கிடையாது. தற்போது கோவிலுக்குச் செல்லும் நாளே கிடையாது //

ஹா ஹா ஹா
இங்கேயும் இதே கதை தான்! ஒரு வேளை பதிவு போடறதே, கோயில் போறா மாதிரி ஆயிரிச்சோ! அடக் கடவுளே! நான் சீக்கிரமாத் திருந்தோணும்! :)

//திருவையாரின் முத்துப்பல்லக்கு பிரசித்தம் - தஞ்சைத் தெருக்களிலே சிறுவர்களின் சப்பரங்கள் புடை சூழ அசைந்து அசைந்து அது வரும் அழகே அழகு//

முத்துப் பல்லாக்கு ஒரு முறை தான் பார்த்துள்ளேன்! சம்பந்தப் பெருமானுக்கு ஈசன் தந்ததாகச் சொல்வார்கள்! அதன் நடை அழகே அழகு!

சரி...கோமதியம்மன் பதிவில் இருந்து இங்கிட்டு வந்தேன்!
பிறந்த நாள் வாழ்த்தாகச் சொல்லாமல் அன்பு நாள் வாழ்த்தாக இப்போ சொல்லலாம் அல்லவா?
வாழ்த்துக்கள் சீனா சார்! :)

cheena (சீனா) said...

அருமை நண்ப கேயாரெஸ்,

வழக்காமாக நீண்ண்ண்ண்ண்ண்ட பதிவு போடும் நீங்கள் நீண்ட மறு மொழியும் இட்டிருக்கிறீர்கள். மனம் மகிழ்கிறது. முழுமையாகப் படித்து, பின்னூட்டம் இட்டதற்கு நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவா பற்றிய தங்களின் சிறுவயது அனுபவங்கள் கேட்க மிக மகிழ்ச்சியாக உள்ளது.

எனக்கும் இதுபோலவே 1960 முதல் 1965 வரை [என் 10 முதல் 15 வயது வரை] திருச்சியில் என் வீட்டுக்கு அருகே, நான் படித்த National College High School என்ற மிகப்பெரிய பள்ளியில், [தற்போது இந்திராகாந்தி மகளிர் கல்லூரி என மாற்றப்பட்டு விட்டது] கோடை விடுமுறைகளில், ஸ்ரீ பெரியவாளின் சங்கர மடமே யானை, பசு மாடுகள், ஒட்டகங்கள் உடன் Camp செய்து தினமும் ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரர் பூஜை செய்து தீர்த்தம் வாங்கி அங்கேயே அனைவருக்கும் மதிய விருந்து சாப்பாடு சாப்பிட்டு மகிழ்ந்த அனுபவங்கள் உண்டு.

[சந்யாசிகளுக்கு வெறும் நான்கு சாஷ்டாங்க நமஸ்காரங்கள் மட்டுமே செய்வது வழக்கமாகும். அபிவாதயே சொல்ல வேண்டியது இல்லை. சிறுவயதாகையால் இது உங்களுக்கு ஒருவேளை தெரியாமலே இருந்திருக்கலாம் என்றும் நினைக்கிறேன்.]

பகிர்வுக்கு மிக்க நன்றி.
தகவலுக்கு மிகவும் மகிழ்ச்சி
அன்புடன் vgk

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பெரியவர்களிடம் அபிவாதெயே கூறி ஆசி பெற்றதெல்லாம் நினைவில் இன்னும் நிற்கின்றன.//

ஆமாம். சிறுவயதில் நமக்கு பூணூல் போட்டவுடன், நாம் சந்திக்கும் நம்மைவிடப் பெரியவர்கள் அனைவரையும் விழுந்து நமஸ்கரிக்கச் சொல்வார்கள்.

இவ்வாறு நமஸ்கரித்த பிறகு நம் கைகள் இரண்டினாலும் நம் காதுகள் இரண்டையும் மூடியபடி, சற்றே குனிந்து நின்று பெளயமாக ’அபிவாதாயே’ என்று நம் முன்னோர்களான ரிஷிகள், குலம் கோத்ரம் சூத்ரம் எல்லாம் சொல்லிவிட்டு, நமக்கான பெயரையும் ஸர்மா என்று முடித்துச்சொல்லச் சொல்வார்கள்.

பிறகு அந்தப்பெயரை அந்தப்பெரியோர்களும் திரும்பச்சொல்லி ஆசீர்வதிப்பார்கள்.

இதெல்லாம் அந்தக்காலத்தில் இருந்த நல்ல பழக்க வழக்கங்கள்.

இப்போது மிகவும் குறைந்து கொண்டே வருகிறது, கலி காலத்தின் கோலம்.

பெரியவர்கள் என்று நீங்கள் எழுதியுள்ளதை”ஸ்ரீ காஞ்சி பெரியவா” என்று நான் தவறுதலாகப் புரிந்து கொண்டு சென்ற பின்னூட்டம் கொடுத்து விட்டேன். Sorry Sir.

அன்புடன் vgk

ANBU said...

I did not know that U also born at Thanjavur where I born after 8 years on 19.09.1958 at Nanayakkara Chetti Street, near South Mani Street. Your posting kindled my childhood days at Thanjavur where I lived for 22 years(Till my father's retirement who worked at Viraraghava Higher Secondary School). I will get Tamil Font soon to post comment in Tamil
Anbarasan, K.V.

Asiya Omar said...

ஒரு தரமான கருப்பு வெள்ளை படம் ஆரம்பித்த மாதிரி மிக அருமையான தொடக்கம்.எழுத்து நடை கல்கி,மு.வ போன்றவர்களை நினைவு படுத்துகிறது..மிக்க அருமை..