ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Wednesday, 12 December 2012

டெங்கு ஒழிப்பு - விழிப்புணர்வுக் கூட்டம் - தெருமுனைக் கூட்டம்

அன்பின் நண்பர்களே !

மதுரை மாநகரில் சந்தைப் பேட்டையில் உள்ள டாக்டர் T.திருஞானம் துவக்கப் பள்ளியைச் சார்ந்த மழலைச் செல்வங்கள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு சரவணன் அவர்களின் தலைமையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம்  தெரு முனைக் கூட்டமாக தினந்தோறும் மாலையில் நடத்துகின்றனர். அக்கூட்டத்தில் கலந்து கொண்டு மகிழ்ந்தோம். அக்கூட்டங்களைப் பற்றிய ஒரு பார்வை.



இன்னும் நம் நாட்டில் தெருமுனைக் கூட்டங்கள் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய செய்திகள் எத்தனை எத்தனையோ இருக்கின்றன. அதில் இப்பொழுது நம்மை எல்லாம் பாடாய்ப் படுத்திக் கொண்டிருப்பது டெங்குக் கொசு. அதை நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லை. என்ன செய்தாலும் அது நம்மைப் பாதித்துக் கொண்டே தான் இருக்கிறது. எப்படி இந்தப் பாதிப்பை பாலம் போட்டுத் தாண்டலாம் என பள்ளிப் பருவத்து பச்சிளம் குழந்தைகள் பால் மனம் மாறா மொழிகளில் வடித்தெடுப்பது நம் நெஞ்சத்தை எல்லாம் தொட்டுச் செல்கிறது.




ஒருஏழைக்குத் தான் தெரியும் அந்த வறுமையின் வலி. அதைப் போல் வளர்கின்ற பிஞ்சுகள் வானத்தை வில்லாய் வளைக்க வட்டமிட்டு, கை கொட்டி, கால் தட்டி, கண்கள் சுழற்றி, தம் சின்னஞ்சிறு பாதங்கள் மண்ணிலும் புழுதியிலும் பதித்து, புதிய பாடமெழுதப் பாடுகின்ற பாடல்கள் நம் பாட்டை எல்லாம் போக்கி விடும் !.

மெலிந்த உருவமும் துள்ளுகின்ற கண்களும் துடிக்கின்ற பார்வையுமாய் பாட்டெழுதிப் பாடமாய்ப் படிக்கின்ற போது சந்தத் தமிழும் துள்ளி விளையாடுகின்றது.

குப்பையைக் கொட்டாதே ! நீரினைத் தேக்காதே ! மக்கும் குப்பையைத் தனியே போட்டு வை ! மக்காக் குப்பையை ஒதுக்கி வை ! சுற்றுப் புறத்தைத் தூயமையாய் வை ! மறந்தும் மண் வளத்தைக் கெடுக்கும் குப்பைகளைக் கொட்டித் திரியாதே ! நீர் தேக்கும் தொட்டிகளை மூடி வை ! கழுவி வை ! காலத்தே அவற்றைத் தூய்மை செய் !

இவ்வாறு சின்ன்ஞ் சிறு செல்வங்கள் தெருவெல்லாம் பாடி முழக்கமிடும் அவர்களின் முனைவை என்னென்று சொல்வது ?!. எண்ணத்தால் எப்படி வடிப்பது ?!. எங்கெல்லாம் பரப்புவது ?!. ஓடி விளையாடும் பாப்பாக்கள் ஓடி ஓடி உண்மையை உரைக்கின்றனர்.! உங்களைக் காக்க, டெங்குவை ஒழிக்க கொசுக்களை ஒழிப்போம் ! சுற்றுச் சூழல் காப்போம் ! என்று சூளுரைக்கின்றனர்.

ஏழெட்டு வயதுச் சிறுவர் சிறுமியர் ஏற்றமுடன் ஆடிப் பாடி அனைவரையும் தன் வயப்படுத்துகின்றனர்.! தெருக்களில் செல்வோர் சிறிது நேரத்தில் கூடி விடுகின்றனர்.! குழந்தைகளீன் குரல் ஒசையில் ஏதோ உள்ளதென்று ஏக்கத்துடன் நின்று உன்னிப்பாய்க் கவனித்துச் செல்கின்றனர். நினைத்ததை நடத்தியே முடிக்கும் இளம் சிட்டுக்கள் டெங்கு இல்லா சுற்றுப்புறத்தை படைத்துக் காட்டுகின்றனர்.! நாமும் நயமாய்ப் பயமாய் சொல்லிப் பார்த்தால் நாடே நோயின்றி வளம் பெறுமென்று எண்ணுகின்றனர். இயங்கட்டும் இவர்களின் எண்ணங்கள். எல்லாரும் டெங்கின்றி வாழட்டும் வளமுடன் !

செல்வி ஷங்கர் ( திருமதி சீனா ) 

Thursday, 9 August 2012

சென்னையில் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா

அன்பின் நண்பர்களே

சென்னை வாழ் பதிவர்கள் ஒன்று கூடி - சிந்தித்து - பல ஆலோசனக் கூட்டங்கள் நடத்தி - வருகிற 26ம் நாள் - ஞாயிறன்று - சென்னையில் திரு விழா கொண்டாடுவதெனத் தீர்மானித்து - அதற்கான ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்து வருகின்றனர்.

அருமை நண்பர் மது மதி அழைப்பிதழகளை அனைவருக்கும் அனுப்பி வருகிறார்.


அழைப்பு கிடைத்த நண்பர்களும் மற்ற நண்பர்களும் திரு விழாவில் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்புடைய பதிவுகள் :


சென்னையில் சந்திப்போம் நண்பர்களே

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா